Showing posts with label அரசியல்கவிதை. Show all posts
Showing posts with label அரசியல்கவிதை. Show all posts

Tuesday, November 02, 2010

எப்போதும் இறுகும் உங்கள் பிடி


அந்தி மங்க
தங்கள் கூடு நோக்கி
திரும்பிக் கொண்டிருக்கின்றது
கருநாரைக் கூட்டம்

வாஞ்சையோடு
ஓடிவரும்
அக்குழந்தையை
வாரி அணைக்கிறீர்கள்

பிரியத்தால்
பின் மெல்ல
இறுகுகின்றது உங்கள் பிடி

சூழும் இருளில்
இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டு
அல்லித் தண்டென
மெல்லச் சரிகிறது அது

வாளின் கூர்மையொத்த
நிலைத்த
அதன் விழிகளை
பார்க்க முடியாமல்
முகம் திருப்பிக் கொள்ளும்
உங்களுக்கு
அப்போது முளைத்திருக்கின்றன
கடைவாயில் இருபற்கள்
வெளித் துருத்திக் கொண்டு

இனி
கண்ணாடியில்
முகம் பார்க்கையில்
நீங்கள் மட்டுமாவது
பயப்படாதிருக்க
முயற்சி செய்யுங்கள்
அதுபோதும்.

Friday, October 29, 2010

ஜாக்கிரதை நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்


கவிதையெழுதுவது
குற்றமென
அறிவிக்கப்படுகிறது
திடீரென்று

அனைத்து மாநில எல்லைச் சாவடிகளும்
வருவோரையும் போவோரையும்
கவிஞர்கள் அல்ல என
உறுதி செய்து கொண்ட பிறகே
தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கின்றன

தபால் நிலையங்கள்
தந்தி அலுவலகங்கள்
தனியார் கூரியர் நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் தொலைபேசிகள்
கவிதைகளைப்
பரிமாற்றம் செய்ய
முற்றாக மறுத்துவிடுகின்றன
இந்த ஆண்டின்
எந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன

உரைநடை ரூபத்தில் கவிதைகள்
ஏதாவது
வெளிவருகிறதாவென்று கவனிக்க
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுவிட்டது

கவிஞர்களை ஒடுக்குவதற்கான
அவசரச்சட்டமும் தயார் நிலையில்
கவிதை மற்றும்
கவிஞர்கள் குறித்தான தகவல்களை
அந்தந்த அரசுகள் அரக்கத்தனமாக
அழித்தொழிக்கின்றன

இங்கிருந்தோ
அல்லது வெளிநாடுகளிலிருந்தோ வரும்
கவிஞர்களுக்கான ஆதரவுக் குரல்களின்
முனைகள் உடனுக்குடன் மழுங்கடிக்கப்படுகின்றன

எல்லாம் வழக்கம் போலவே
நடந்து முடிகிறது

கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
அவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை

Sunday, October 10, 2010

ஸ்தனங்கள் இடறும் இரவு


சனிப்பிணம் துணைத்தேடி
வளமோட்டுப் பாறையேறி
கோட்டான் ஒலி கேட்கும்
வாசியம்மன் குறிசுவைக்க
ஐயனாரப்பனுக்கேனிந்த
அவசரம்

கள்ளக் கூடலுக்கு
காட்டேரி துணைபோக
தீவட்டி கொண்டு
சாரிபோகும் கன்னிமார்கள்

பச்சபுள்ளா குளம் தாண்டி
சரடென இழையும்
குறியொலி கேட்டு
கோணமலைப் பிள்ளையார்
குன்றேறிப் பார்ப்பார்

ஈசானத் திக்கில்
சிவனும் தயார் நிலையில்

கந்தவேல் முருகன்
கையாலாகாதவனா

திசையெங்கும் ஏதிரொலிக்கும்
குறிகளின் ஓலம்

பின்
திப்பக்காடு தாண்டி
சூரியப் பிரவேசம்

Friday, September 24, 2010

நாசக்காரர்கள் ஜாக்கிரதை


இறுதி செய்யப்பட்ட
அன்பின் வார்த்தைகள்
அறிவிக்கின்றன
ஓர் நாசக்காரனின் வருகையை
அடையாளப்படுத்தியதோடு
முடிவடைவதில்லை
உங்கள் செயல்பாடு

தொடர் தாக்குதலை
மேற்கொள்ளும் எவரும்
எதன் பொருட்டும் சோர்ந்துவிடாதீர்கள்

கருணையோடு அளிக்கப்படும்
சிறு அவகாசம்
நாசக்காரனுக்கு அளித்துவிடக்கூடும்
புதிய உற்சாகத்தை

நாசக்காரனென
அழைக்கப்படும் ஓர் நபர்
அவசியம் அவ்வாறு
இருந்தாக வேண்டிய
எந்தக் கட்டாயமும் இல்லையெனும்
சிறு விளக்கத்தை மட்டும்
மனதில் கொள்ளும் நீங்கள்
பிறகு
எதுபற்றியும்
யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது.

Saturday, September 04, 2010

திருவாளர் ‘ழா’ கடைசியாக வந்துகொண்டிருக்கிறார்


உங்களுக்கு
திருவாளர் ‘ழா’ வைத் தெரிந்திருக்க
நியாயம் இல்லை
சட்டென
அடையாளம் காணவும்
முடியாது அவரை

இருப்பினும்
எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்
அவர் புகழை
ஆளுமையை
தலைமைப் பண்பை.

பார்த்த நொடியில் உங்கள்
குணத்தைக் கூறும்
வல்லமை அவரிடம்
அதிகம் உண்டு.

நாத்திகத்தின் பக்கம் நின்று
நகம் கடித்துக்கொண்டிருக்குமவர்
ஆத்திகத்தின் பக்கமிருக்கும்
உங்களின்
கடும்நோய் தீர்க்க
வேப்பிலை கொண்டு
அவ்வப்போது
பாடமும் அடிப்பார்.

அதீத துல்லியத்துடன்
ஆடையுடுத்துமவர்
தலைக்கவசத்துடன் தான்
எப்போதும்
நகர்வலம் வருவார்.


அவரது அடிப்பொடியொருவர்
கழுத்துப்பட்டையை
கையில் கொடுத்து
அணிந்தால் அழகாவீரெனச் சொன்னார்.

கழுத்துப்பட்டையை
கட்டும் முயற்சியில்
குரல்வளை அறுந்து
தன் இன்னுயிர் துறந்தார்
எல்லாம் தெரிந்த திருவாளர் ‘ழா’

இப்போது திருவாளர் ‘ழா’
பிணமாக
பின்னால் வந்து கொண்டிருக்க
தீச்சட்டியுடன்
முன்னேறிக்கொண்டிருக்கிறார்
‘ழா’ வாக மாறத் துடிக்கும்
நம்மில் ஒருவர்