Thursday, August 06, 2009

பட்டித் தெரு -சிறுகதை


ஜில்லா கலெக்டர் லூஷிங்டன் என்பவரின் காரியதரிசியாக இருக்கும் ஜான் இர்வின் என்பவர் தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிரண்டுக்கு அனுப்பும் மகஜர்:
பிரிட்டிஷ் கம்பெனி ஆளுகைக்கு பாத்தியப்பட்ட எவரும் இனி எந்தவிதமான கட்டடங்களையோ கோட்டைகளையோ கட்டக்கூடாது. அந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது. அதையும் மீறி செயல்படுபவர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாற்காடு ஜில்லாவில் உள்ள ஆதிச்சநல்லூரில் பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிராக ஒரு குழு இயங்குவதாக கலெக்டர் லூஷிங்டனுக்கு ஒரு புகார் மனு வந்துள்ளது. அதில் அந்த குழுவிற்கு அதே ஜில்லாவில் உள்ள கண்டராதித்த சோழபுரத்திலிருக்கும் கம்பெனிக்கு பாத்தியதையான மாடுகள் அடைக்கும் பட்டியிலிருந்து வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரின் அவசரம் புரிந்து அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கண்டராதித்த சோழபுரத்திலிருக்கும் அந்த பட்டியை இடிக்கவும் இதன் மூலம் ஆணை இடப்படுகிறது.

ஜான் இர்வின்.
முகாம்: தெற்கு நாகலாபுரம்
நாள் :21.3.1800.


”இந்த ஓலையைப் படிச்சப்புறமுமா பட்டிய இடிக்கனம்னு உங்களுக்கு தோணுது?” என ஆதங்கத்தோடு தங்கமுத்து நாட்டார் அவர்களைப் பார்த்துக் கேட்டார். பிரிட்டீஷ்காரர்களால் அனுப்பப்பட்ட பழுப்பேறியிருந்த அவ்வோலையை பத்திரமாக காப்பாற்றிவந்ததன் வலியை அவரது கேள்வியில் உணரமுடிந்தது. அதற்கு வடிவுடையம்மை ரியல் ஏஜென்சியின் அதிபரும் ஆளும் கட்சியின் ஒன்றிய செயலாளருமான ராமகிருஷ்ணன் கோபத்துடன் நாட்டாரைப் பார்த்து சொன்னார்: “அந்த ஓலைய வச்சிகினு நாக்குதான் வழிக்க முடியும்” அவரின் இந்த பேச்சை கேட்ட நாட்டாக்காரருக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது. உயிரைக் கொடுத்து போராடி வெள்ளையனிடமிருந்து காத்த அந்த பட்டியை நினைத்து கண்கலங்கினார்.ஆனால் ஒன்றிய செயலாளர் பட்டியை எப்படியும் இடித்தே தீர்வதென உறுதியாக இருந்தார். தாழ்ந்த குரலில் மீண்டும் நாட்டாக்காரரே பேசினார்: ”ஏந்தம்பி உங்க மனைப் பிரிவுல வர்ற தெருவ கொஞ்சம் தள்ளி ஓடப் பக்கமா மாத்திப் போட முடியாதா?”. அதற்கு “ஓடப் பக்கமா போட்டா எந்த நாயி வந்து வாங்கும்?” என சிடுசிடுத்த ஒன்றிய செயலாளர், “இவ்ளோ பணம் போட்ட ஒழைப்ப ஓடையிலா கொண்டு போடச்சொல்ற? பட்டிய இடிச்சி நெரவினாதான் மன எடுப்பா தெரியும்” என கோபத்தில் பொரிந்து தள்ளினார்.இனி அவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று உணர்ந்த நாட்டார் அமைதியாக நின்றார். அவர்களும் சிறிது நேரம் இருந்துவிட்டு காரில் ஏறிச் சென்றனர். என்ன செய்தாலும் இம்முறை பட்டியை இடிப்பதிலிருந்து காப்பாற்ற முடியாது என அவர் உள்மனம் எண்ணியது.இக்கட்டான இத்தருணத்தில் ஷண்முக முதலியார் தன் பக்கத்தில் இல்லையே என நொந்து கொண்டார்.கூடியிருந்த கூட்டம் பலவாறாகப் பேசியபடி கலைந்து சென்றது.ஓர் மௌன சாட்சியைப் போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பட்டியை நாளை இடிக்கப்போகிறார்கள் என்ற செய்தியை கேள்வி பட்டதிலிருந்து வேம்பிவீட்டு அகிலாண்டத்தால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. பட்டிக்கும் அவளுக்குமான ஒரு தோழமை அவளை துடுக்குறச் செய்தது.”திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்று மறுநாளே பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்தபோது கூட நீ இந்த அளவிற்கு கஷ்டப் பட்டதில்லையே?”, என எதிர் வீட்டு தங்கம்மா கேட்ட போது, இப்ப எதுக்கு அந்த கதய கிண்டற? என அகிலாண்டம் திரும்ப கேட்டாள். ஷண்முகத்தின் மீதான தன் காதலையும்,அதை அவர் வேண்டாமென மறுத்ததையும் அறிந்த ஒற்றை சாட்சியாக வீற்றிருக்கும் பட்டியின் சித்திரம் அவள் மனதில் வெவ்வேறு எண்ணவோட்டங்களை ஏற்படுத்தியது. சிறைவாசம் முடிந்து அவர் விடுதலை பெற்று வந்தபோது ஷண்முகம் தன்னிடம் சொன்ன,” இனி எந்த பொம்பளைக்கும் என் வாழ்க்கையில எடம் இல்லை அகிலாண்டம், நீ போய் உம் புருஷனோட சந்தோஷமா இரு. பட்டதெல்லாம் போதும்” எனும் வார்த்தைகள் அவளின் காதுகளில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒலித்துக் கொண்டே இருப்பதை அவளால் நன்கு உணரமுடிந்தது. கோடை கத்திரி வெய்யிலைக்கூட பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் அலைந்தவள் கடைசியாக வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த புங்கை மரத்தின் கீழ் காலைநீட்டி போட்டபடி அப்படியே அமர்ந்தாள்.அவளுக்கு மூச்சு வாங்கியது. வெம்மையின் அடர்த்தி அவளுக்கு நீர்சுருக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பாத்திரம் கழுவ பானையில் வைத்திருந்த தண்ணீரைச் சாய்த்து குடித்தாள். பின் எழுந்து சிறுநீர் கழிக்க தோட்டத்திலிருந்த மாட்டுகொட்டகை நோக்கிச் சென்றவள் மாட்டு கொட்டகைக்கு கிழக்கே கம்பீரமாக நின்றுகொண்டிருந்த பட்டியையே பார்த்தாள்.கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட பட்டியின் சுவர்களில் ஆலமரம் நன்றாக வேர்விட்டு வளர்ந்திருந்தது.ஆங்காங்கே நிறைய குற்றுச்செடிகள் வளர்ந்து காற்றின் வேகத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருந்ததன. “எப்படி இருந்த கட்டடம் இப்படி சீர்கொலஞ்சி கெடக்கே” என மனதிற்குள் நினைத்துக்கொண்டே சிறுநீர் கழிக்க கீழே அமர புதரிலிருந்து ஒரு பாம்பு வளைந்து நெளிந்து சர சரவென பட்டி நோக்கிச் சென்றது. சிறுநீரை அடக்கி கொண்டு பயந்தபடி பாம்பு பாம்பு எனக் கத்திக்கொண்டே தெருவிற்கு ஓடிவந்தாள்.
”இந்த கண்றாவிக்குதான் இத இடிங்கனு சொல்றோம். ஆனா அந்த பள்ளத்தெரு ஷண்முகம் மொதலியாரு நா உசுரோட இருக்குறமுட்டும் இத இடிக்க உடமாட்டேன்னு சொல்றாரு” என்று சின்ன கணக்கமூட்டு ரங்கசாமி அகிலாண்டத்தைப் பார்த்து கோபத்துடன் சொன்னார்.அகிலாண்டத்திற்கு படபடப்பு சற்று அடங்கி இருந்தது.அவள் ரங்கசாமியைப் பார்த்து சொன்னாள்: ”ஆவூன்னா அத இடுச்சி தர மட்டமாக்கிடனம் உங்களுக்கு. இத தவிர வேர எதுவும் தெரியாதா ஒங்களுக்கு?”’ அவளின் கேள்வி ரங்கசாமியின் முகத்தை இறுக்கமாக்கியது. அவருக்கு மூக்கு நுனி வியர்த்து கோபத்தின் ரேகைகள் பரவத்தொடங்கியது. தன் பாட்டி வயதையொத்த அகிலாண்டத்திடம் அவரால் நேருக்கு நேராக பேசமுடியாமல் எக்கேடாவது கெட்டு நாசமா போங்க. எனக்கென்ன வந்தது? என்று மனதிற்குள் கருவிக்கொண்டார். ஆனாலும் நாளை யார் தடுத்தாலும் எப்படியாவது பட்டியை இடித்துவிடவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டார். சூரியன் மெல்ல மேற்கு நோக்கிச் சரியத் தொடங்கியிருந்தது.
பள்ளத்தெரு ஷண்முக முதலியாருக்கு நாளை பட்டியை இடிக்கப்போகும் சங்கதி காற்று வாக்கில் வந்து சேர்ந்தபோது அவருக்கு மனது கனத்தது. தெருத் திண்ணையில் கிடந்த கயிறு கட்டிலில் ஆசுவாசப் படுத்திக்கொள்ள சற்று நேரம் தலை சாய்த்தவருக்கு பட்டி குறித்த பழைய சித்திரங்கள் மனத்திரையில் தோன்ற ஆரம்பித்தன.
தாது வருஷ பஞ்சம் தன் கோரமுகத்தை காட்டிக்கொண்டிருந்த நேரமது.ஏரியில் மாடுகளை மேய்த்து விட்டு ஷண்முகம் வீடு திரும்பும் போது இருட்ட ஆரம்பித்திருந்தது.சனிமரப்பான் ஓடை வழியாக மாடுகளை ஓட்டிவந்து பட்டியில் கட்டிவிட்டு தவிடும் தண்ணீரும் கொண்டுவர வீட்டுத் தோட்டத்திலிருந்த மாட்டு கொட்டகைக்குச் சென்றான். மரக்காலில் தவிட்டையும் குடத்தில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு பட்டிக்கு வந்து தொட்டியில் தவிட்டைக் கொட்டி தண்ணீரை ஊற்றி கரைத்து மாடுகளை குடிக்கச் செய்து பின் அவற்றை மீண்டும் முளைக்குச்சியில் கட்டிவிட்டு நிமிர்ந்தபோது ஷண்முகத்திற்கு தண்டுவடத்தில் சுளீர் என வலி தோன்றி மறைந்தது.கூலமான வைக்கோல்களை ஒதுக்கி தள்ளிவிட்டு வைக்கோல் புடுங்கிவர வைக்கோல் போரை நோக்கி நடந்தான். அவனுக்கு நன்றாக வியர்த்த்து. இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்துக் கொண்டான். போரில் வைக்கோலை புடுங்கி பந்துபோல சுற்றி எடுத்துக் கொண்டு பட்டிக்குள் நுழைந்தபோது இருட்டில் வேறு யாரோ மாட்டை கட்டிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆனால் யார் என சட்டென்று அடையாளம் காணமுடியாததால் அவன் கேட்டான்: “ யாரது?” . அதற்கு இருளில் இருந்து பதில் வந்தது: “ அம்மாக்கண்ணு”. புதுவீட்டில் மாடு மேக்கும் அம்மாக்கண்ணுதான் உள்ளே இருப்பது என்று தெரிந்ததும் ஒருவித புது தெம்புடன் வைக்கோலை எடுத்துச்சென்று மாடுகளிடம் போட்டுவிட்டு அவ்ளைப்பார்த்துக் கேட்டான்: ”இன்னா இந்நேரத்துல வந்து மாட்ட கட்ற?”. அதற்கு அவள் சலிப்பாக சொன்னாள்: “வாசியாத்தா கோயில் ஏரிக்கு தான் ஓட்டிகினு போனேன். ஆனா இந்த எழவெடுத்த மாடுங்க மதியத்துக்கு மேல வளமோட்டு பாறைக்கா மேச்சலுக்கு கெளம்பிடுச்சிங்க. அங்க இருந்து ஓட்டிகினு வரதுக்குள்ள உசுரு போயி உசுரு வந்துடுது”.
அவள் அலுப்பாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் மெல்ல நடந்து அவளருகில் சென்றான். நன்றாக இருட்டிவிட்டிருந்தது.தெருவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மாடுகள் வைக்கோல் மெல்லும் சத்தம் நன்றாக கேட்ட்து. மூத்திர நெடி வேறு மூக்கைத் துளைத்தது. இருட்டு அவனுக்கு தைரியத்தையும் சுதந்திரத்தையும் கொடுக்க அவன் மெல்ல அவளை தொட்டான். திடீரென அவன் தொடுகையால் அவள் கலவரமடைந்து நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள். அவளின் உடம்பு மெல்ல நடுங்குவதை அந்த அடர்ந்த இருளிலும் அவனால் உணர முடிந்தது. அவனையும் பயம் தொற்றிக்கொண்டு தான் இருந்தது. சிறிது நேரம் அழ்ந்த மௌனம் அங்கு நிலவியது. மாடுகள் கால்களால் தரையை உதைத்தன. பட்டிக்கு வலப்பக்கமிருந்த தென்னை மரத்திலிருந்த பறவைகள் சடசடவென சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்தபோது அவன் மெல்ல அவளிடத்தில் கேட்டான்: “ ஏன் உனக்கு இதுல விருப்பம் இல்லயா?”. அவள் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். மீண்டும் அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்: “ நா கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டியா?”. அவள் மெல்லிய குரலில் அவனிடம் சொன்னாள்: “ சட்டுனு கேட்டா என்ன சொல்றது?”. அவளின் இந்த பதில் அவனுக்கு உள்ளூர சந்தோஷத்தையும் கிளர்ச்சியையும் அளித்தது.மறுபடியும் அங்கே கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. மீண்டும் அவனே கேட்டான்: “நேரம் ஆவுதில்ல.சட்டுனு சொல்லேன்”. அவள் தலை கவிழ்ந்தபடி அவனிடம் கேட்டாள்: “யாராவது வந்துட்டாங்கனா?” என வார்த்தையை இழுத்தாள். அவளின் இந்த கேள்வி அவனுள் காமத்தின் தீயை படரவிட்டது. அவளும் தயாராகவே இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் இனி உரையாடல்கள் இங்கு பயனற்றவை என நினைத்து செயல்பாட்டில் இறங்கத் தொடங்கினான். வைக்கோல் மீது அவளை தள்ளி இறுக்கி அணைத்தான். வளையல்கள் உடையும் சத்த்த்தைக் கேட்க முடிந்தது.அவள் சிணுங்கியபடியே கேட்டாள்:”என்ன காஞ்ச் மாடு கம்புல பூந்த மாதிரி ஆட்டம் போடற? வூட்ல உண்டாகி இருக்காளா?”. “ஆமா .சொகத்த அனுபவிச்சி ரொம்ப நாளாவது”, என்றான். ”அதான பாத்தேன்” எனக் கூறி அவளும் அவனை இறுக்கி முத்தமிட்டாள். அடர்ந்த இருளை போன்று காமமும் அவர்கள் மீது மெல்ல படர்ந்தது.
பட்டியின் சுவற்றிலிருந்த பல்லி ஒரு முறை கத்தி ஓய்ந்தபோது அவன் புரண்டு படுத்தான்.அவள் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டிருக்கும் போதே பால் கறப்பதற்காக கொட்டாகாரமூட்டு சுப்பரமணி பால் சொம்போடு உள்ளே நுழைந்தவர் இருவரையும் பார்த்தார். ஏதும் கேட்காமல் வந்தவழியே திரும்பச் சென்றார். இருவரது உடம்பும் பயத்தால் வெளிறி நடுங்க ஆரம்பித்தது.
“இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். ஈஸ்வரா என்ன ஆகப்போவுதோ. என் ஊட்டுகாரனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் கண்டம் துண்டமா வெட்டிடுவான்” என அவள் பயத்தால் உளற ஆரம்பித்தாள். “உனக்கு மட்டும் தான் பிரச்சனையா எனக்கு இல்லயா? எனக்கும் தான் கொழந்தை குட்டிங்க இருக்கு” என்றான். சற்று நேரம் அங்கு மயான அமைதி நிலவியது.பிறகு அவனே அவளிடம் பேசினான்: “ ஒன்னும் பிரச்சனை வராது. அப்படி எதாவது வந்தா நாம இல்லனு சொல்ல வேண்டியதுதான்.” சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு உள்ளூற நடுக்கமாகவே இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக பட்டியிலிருந்து வெளியேறினர். தெருவில் இன்னும் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நாலைந்து நாய்கள் குரைத்துக்கொண்டே பள்ளத்தெரு நோக்கி ஓடின.
முதல்நாளிரவு பட்டியில் நடந்த சங்கதியை தெருமுனை டீகடையில் அனைவரும் உற்சாகத்துடன் பேசிக்கொண்டனர். ஏற்படப் போகும் பிரளயத்தை உணராது ஷண்முகம் வீட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். செய்தி ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு நவுட்டுகாரமுட்டு அஞ்சலை மூலம் ஷண்முகத்தின் மனைவியை அடைந்த போது மணி எட்டாகியிருந்தது. அவன் பட்டியில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். சாணியை வாறிக்கொட்டிவிட்டு வைக்கோல் கொண்டுவந்து போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது வீட்டில் பாத்திரங்கள் இறைந்துகிடந்தன. அம்மா ஒரு மூலையிலும் மனைவி ஒரு மூலையிலுமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். பிள்ளைகள் ஏதும் விளங்காமல் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பையனை பிடித்து அவன் மனைவி பளார் பளார் என கன்னத்தில் அறைந்தாள்.பையன் வலி தாங்க முடியமால் துடித்ததைக் கண்ட இவன் கோபத்தோடு அவளைப்பார்த்து கேட்டான்: “ ஒனக்கு என்ன புத்திகித்தி கெட்டு போச்சா. கொழந்தய போட்டு ஏன் மாடு மாதிரி அடிக்கற?” அவன் கேள்வியை அவள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவள் பேசாதது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.அவள் பெருஞ்சீற்றத்தோடு அவனைப் பார்த்து கை நீட்டி கேட்டாள்: “ஒரு பொம்பளையைக் கை நீட்டி அடிக்கறயே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” கேட்டு முடித்து அவன் முகத்தை நோக்கிக் காறித்துப்பினாள்.அவளுடைய வார்த்தைகள் அவனுள் கூர்மையான ஊசியைப் போல இறங்கின.அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.அவளை இழுத்துப் போட்டு அடி அடியென அடித்தான்.”புள்ளத்தாச்சிக் காரின்னு கூட பாக்காம போட்டு இப்படி அடிக்கறியே பாவி” என கத்திக் கொண்டே அவனுடைய அம்மா ஓடிவந்து தடுத்தாள்.அவளையும் எட்டி உதைத்தான். ”அடிடா... நல்லா அடி, நா செத்தா தான அவகூட தெனத்துக்கும் படுக்க முடியும்?” என்று அவன் மனைவி கேட்ட கணத்தில் அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.அவனுக்கு நா வறண்டு போனது. பதற்றமும் பயமும் அவனைக் கவ்விக்கொண்டது.தலைசுற்றுவதைப் போன்று உணர்ந்தவன் அப்படியே சக்தியற்றவனாகத் தரையில் அமர்ந்தான்.” ஏன் இப்ப அடிக்க வேண்டியதுதான, பொட்டையாட்டம் ஏன் உக்காந்துட்ட” என்ற அவளின் வார்த்தைகள் அவனது இதயத்தைக் குத்தி ரணமாக்கின.பேச வார்த்தைகள் அற்றவனாக அவனிருந்தான்.இது நாள்வரை பொத்திப் பாதுகாத்து வந்த தன் அந்தரங்கத்தை தன் அம்மாவின் முன்னிலையில் அவள் நெருப்பிட்டுப் பொசுக்கி விட்டாளே என மனதிற்குள்ளாகவே புழுங்கினான்.சுவற்றில் ஆடிக்கொண்டிருந்த கடிகாரத்தின் பெண்டுல சத்தம் கர்ணகொடுரமாக இருந்த்து.அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியாமல் பிள்ளைகள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தனர். யாரும் எதுவும் பேசிக்கொள்ள முடியாதபடி சூழல் இறுக்கமாகவே இருந்த்து. பின் மெல்ல எழுந்து நடந்து தெருத் திண்ணையில் கிடந்த நார்க்கட்டலில் படுத்துக்கொண்டான் அவன்.இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற பயம் அவனைக் கவ்விக்கொண்டது.தெருவில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் செல்லும் சத்தம் கேட்டது.
“அம்மாக்கண்ணு தூக்கு மாட்டிகினாளாம்” என்று தெருவில் யாரோ கத்திக்கொண்டு ஓடியபோது அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. ”கடவுளே அவளுக்கு ஒன்னும் ஆயிடக்கூடாது” என மனதிற்குள் வேண்டிக் கொண்டான். ஆனாலும் பயம் அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. தெருவில் சிலர் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தனர். யாரையும் கேட்க முடியாத இக்கட்டான நிலை. அவளுக்கு என்ன ஆனதோ என தெரிந்துகொள்ளும் பொருட்டு திண்ணையை விட்டு கீழே இறங்கினான். அப்போது வாலிவீட்டு ராமனாதன் அந்த பக்கமாக இருந்து வந்து கொண்டிருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. அவருடைய பார்வை இவனை ஆழ ஊடுருவி துளைத்தது. அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என நினைத்துக் கொண்டு அவரிடம் கேட்டான்: “அம்மாக்கண்ணுக்கு என்னாச்சி, ஒரே சத்தமா இருக்குதே?”. அவர் கைகளை உயரே தூக்கிக் காட்டியபடி சொன்னார்: ” போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுத்துபா. அவளுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்” என்று அவர் சொல்ல சொல்ல அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று அறுபட்டு வீழ்வதை உணர்ந்தான்.எல்லாவற்றுக்கும் தானே காரணம் என நினைக்க நினைக்க மண்டை வெடித்துவிடும் போல இருந்தது அவனுக்கு. வேதனையில் துடிக்கும் அவனைப் பார்க்க அவருக்கு சங்கடமாக இருந்தது. அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அவர் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சாவுதான்னு முடிவெடுத்தா ஊருல பாதி ஜனத்தொகை இருக்காதே” என்று நிறுத்தி அவனை ஒரு முறைப் பார்த்துவிட்டு சொன்னார்: “ இப்ப இருக்கிற நிலயில நீ அங்க போக வேணாம். அவ புருஷங்காரன் வைக்கிறனா தீக்கிறனா பார்னு சத்தம் போட்டுகினு இருக்கான்”. அவர் இப்படி சொன்னது அவனுக்கு மேலும் பயத்தை அதிகப்படுத்தியது. சூழல் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டு வருவதை உணர்ந்தவன் மாரியம்மன் கோயில் தெருவழியாக கழனி நோக்கி நடந்தான். தெரு முனை டீகடையில் இருந்தவர்கள் அவனை பார்த்த விதம் அவனுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது.வேக வேகமாக நடந்து கிணற்று மேட்டை அடைந்தான். பம்ப் செட் அறைக்கு முன் புறம் நிழலுக்காக போடப்பட்டிருந்த கீற்று கொட்டகையின் எறவானத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து பம்ப் செட் அறையை திறந்தான். உள்ளே சென்று வலது புற மாடத்தில் பருத்திக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து முழுவதுமாக குடித்தான். மருந்தின் வாடை அவனுக்கு குமட்டலை ஏற்படுத்த வயிற்றைக் கலக்கிக் கொண்டு வாந்தி வந்தது.மோட்டார் கொட்டகைக்கு வெளியில் வந்து எடுத்தான். அதன் பின்னரும் வாந்தி வருவதைப் போல உணர்ந்தவன் வெளியில் வந்து பருத்திச் செடியிலிருந்த இரண்டு மூன்று சிறிய பருத்தி காய்களை பறித்து வாயில் போட்டு மென்று விழுங்கினான்.குமட்டல் சற்று குறைந்திருந்தது. மீண்டும் உள்ளே சென்று மருந்து பாட்டிலை மூடி முன்பிருந்தது போலவே வைத்து விட்டு பம்பு செட்டைப் போட்டான். கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு பனம் பாயை எடுத்து கீழே போட்டு படுத்துக் கொண்டான். அங்கு இந்நேரம் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ணியவன் எப்படி பார்த்தாலும் இப்பிரச்சினைக்கு நாம் தான் காரணம், ஆக நாமே தான் முடித்து வைக்க வேண்டும் என்றும் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அருந்திய மருந்து மெல்ல அதன் பணியைத் தொடங்கிய போது அவனுக்கு மயக்கம் வருவதைப் போன்று உணர்ந்தான்.கண்கள் செருக ஆரம்பித்தன.
சிறிது நேரத்திற்கு பிறகு பருத்தி எடுக்க வேம்பி வீட்டு அகிலாண்டம் கூடையுடன் ஷண்முகத்தின் கழனிக்கு வந்து சேர்ந்த்தாள்.கீழ்த் தளை ஓரமாக நடந்து வந்து மேல் தளையில் ஏறியவளுக்கு ஆச்சரியம். மடை மாற்றப் படாமல் தண்ணீர் ஒரு பாத்தியிலிருந்து வழிந்து வேறு பாத்திகளுக்கு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தவள் சற்று நேரம் யோசித்தாள். மடை மாற்றாமல் யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள் என யோசித்த படியே மோட்டார் கொட்டகையைப் பார்த்தாள். கதவு ஒருக்களித்து சாத்தியிருப்பதை கண்டவள் பம்பு செட்டை கிளப்பி விட்டுட்டு அங்கு யார் என்ன செய்கிறார்கள் என யோசித்துக் கொண்டே மோட்டார் கொட்டகையை நோக்கி நடந்தாள்.வெளியில் நின்று ”உள்ள யாரு?” என்று கேட்டாள். எந்த பதிலும் வராத்தைக் கண்டு ஒருக்களித்திருந்த கதவைத் தள்ளினாள். அங்கே வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்த ஷண்முகத்தை பார்த்தவள் பயத்தால் ஓங்கி கத்தினாள்: ”யாராவது ஓடிவாங்களேன். ஷண்முகத்துக்கு நொப்பும் நொரையும் தள்ளிகுனு கெடக்கு”. அவன் படுத்து கிடந்த விதம் அவளுக்கு பயத்தை மேலும் அதிகரித்த்து. வெளியில் வந்து மீண்டும் சத்தம் போட்டு கூப்பிட்டாள். பக்கத்து கழனியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர்.முதலில் வந்த கோடியாமுட்டு அப்பர் ஷண்முகத்தை புரட்டி படுக்க வைத்து சுவாசத்தை சோதித்தார்.அவனது வாயிலிருந்து பூச்சி மருந்தின் வாசனை வந்து கொண்டுருந்தது. சுவாசம் ஒரே சீராக வரவில்லை என்பதை உணர்ந்தவர் அவனது தொடையில் பலம் கொண்ட மட்டும் அழுந்த கிள்ளினார். அவன் உடலில் சிறு அசைவும் ஏற்படாததைக் கண்டு அவருக்கு உள்ளூர பயம் ஏற்பட்டது. அதற்குள் அக்கம் பக்கத்திலிருந்து பலரும் வந்து சேர்ந்தனர். அப்பர் பம்ப் செட் அறையை சுற்றும் முற்றும் பார்த்தார்.மாடத்திலிருந்த பூச்சி மருந்து டப்பியை பார்த்தவர் எழுந்து அதை எடுத்து திறந்து பார்த்தார்.அது காலியாக இருந்தது.அவர் கூட்டத்தை பார்த்து சொன்னார். ”ஏம்பா யாராவது ரெண்டு பேர் வாங்க.மருந்து குடிச்சிருக்கிறான்னு நெனைக்கிறேன். கட்டல்ல தூக்கினு தான் போவனும்”. அவர் அவ்வாறு கூறியதும் அங்கிருந்தவர்களுக்கு உள்ளூர பயம் ஏற்பட்டது.மூன்று பேர் அவனை கட்டலில் தூக்கிப் போட்டுக் கொண்டு வேக வேகமாக ஓடினர். கூட்டம் பின்னால் ஓடியது. வெயில் நின்று காய்ந்து கொண்டிருந்தது.
ஷண்முகம் மருந்து குடித்த விஷயம் ஊருக்குள் பரவிய போது அம்மாக்கண்ணுவின் சாவில் கூடியிருந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு பின் இரு தரப்பு பிரச்சனையாக மெல்ல மாறிக் கொண்டிருந்தது.அம்மாக்கண்ணுவின் கணவன் அழுதழுது சோர்ந்து போய் வேப்பமர நிழலில் போடப் பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.ஊர் இரு பிரிவாக பிரிந்து அம்மாக்கண்ணுவின் சாவையும் ஷண்முகம் மருந்து குடித்ததையும் பேசிக்கொண்டது. விஷயமறிந்து ஷண்முகத்தின் மனைவியும் அவனது தாயும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடினர்.அவர்கள் அவ்வாறு ஓடுவதைக் கண்ட ஷண்முகத்தின் குழந்தைகள் ஏதும் புரியாமல் அழுது கொண்டே பின்னால் ஓடினர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெரு மக்களை ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது.
ஷண்முகத்தை மேல்வாலை இருள பூசாரியிடம் கொண்டு சென்றனர்.அவர் பரிசோதித்து விட்டு ஒரு சில மூலிகைகளை கல்லுரலில் நசுக்கி சாறு பிழிந்து அவனது வாயை திறக்கச் சொல்லி ஊற்றினார்.பூசாரி யாரிடமும் எதுவும் பேசாமல் அழ்ந்த யோசனையில் இருந்தார். பின் அப்பரை பார்த்து, “ வாழ மட்ட இருந்தா கொஞ்சம் கொண்டு வாங்க. இடிச்சு சாறு எடுத்து கொடுக்கனும்” என்று சொன்னார்.வாழை மரங்கள் எங்கெங்கு இருக்கும் என சற்று நேரம் யோசித்தவர் தன்னுடன் இன்னொருவரை அழைத்துக் கொண்டு வாசியம்மன் கோயில் பக்கத்தில் இருக்கும் மாந்தோப்புகாரர் கழனி நோக்கி சென்றார்.விஷயம் கேள்விப்பட்டு வாழைமட்டை சாறை இடித்துக் கொண்டு ஊரே திரண்டது.பூசாரி வாழைமட்டை சாற்றை உள்ளுக்கு கொடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கொஞ்சம் பச்சிலைச் சாறைக் கொடுத்தார்.
ஷண்முகம் உடல்தேறி வெளியில் வர இரண்டு வாரகாலம் பிடித்தது.ஊரின் உருவம் முற்றாக மாறிவிட்டதைப்போன்று உணர்ந்தவன் கழனியை நோக்கி நடந்தான். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தேறிய அனைத்து சம்பவங்களும் அவன் மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிமறைந்தன. ஆசுவாசப் படுத்திக்கொள்ள நன்றாக மூச்சை இழுத்து விட்டான். அவனது உடலில் நடுக்கம் ஏற்பட்டு மெல்ல மனம் கலவரம் அடைந்தது. மோட்டார் கொட்டகைக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு வளமோட்டுப் பாறை நோக்கி நடந்தான். வளமோட்டு பாறை பனைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கு ஏன் செல்கிறோம் என்று அவனால் உணரமுடியவில்லை. பாறைக்கும் மேற்கே பனைஓலையால் ஒரு சிறு கொட்டகை போடப்பட்டிருந்தது. அதன் அருகே அமர்ந்து சிலர் மொந்தைகளில் இருந்த கள்ளை அருந்திக் கொண்டிருந்தனர். ஷண்முகமும் கொட்டகையின் அருகில் சென்று அமர்ந்தான். இவனைப் பார்த்த சிலர் முகம் திருப்பிக் கொண்டனர். அவன் எதுகுறித்தும் கவலைகொள்ளாமல் தனக்கும் இரண்டு மொந்தை கள் வேண்டுமென்று கடைகாரரிடம் கேட்டான். கடைகாரருக்கு ஒன்றும் புரியாமல் அவனிடம் கேட்டார்: “ இன்னா ஷண்முகம் எப்பவும் இல்லாத புது பழக்கம்?”. அவரின் கேள்வி அவனை சங்கடப் படுத்தியது. இருந்தும் அவன் சோர்ந்த குரலில் அவரிடம், “மனசு சங்கடமா இருக்குதுனா அதான்...” என இழுத்தான். அவனது நிலையை உணர்ந்தவர் வேறெதுவும் கேட்காமல் கள்ளை மொந்தையில் ஊற்றி தொட்டுக் கொள்ள வறுத்த கருவாடை கொடுத்தார். மொந்தையை வாங்கி வாய் அருகே கொண்டு சென்றவன் முகத்தை சுழித்து பின் கண்களை மூடிக்கொண்டு மடக் மடக்கென குடித்தான். சிலர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கள்ளின் குமட்டலை போக்க அவன் இலையிலிருந்த கருவாட்டை வாயில் போட்டு மென்றான். பனைமரத்தில் ஏறி கள் இறக்குபவர்களையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அடுத்த மொந்தை கள்ளையும் மடக் மடக்கென குடித்து கருவாட்டை தின்றான். லேசாக தலை சுற்றுவதைப் போல இருந்தது அவனுக்கு. காசைக் கொடுத்துவிட்டு தள்ளாட்டத்தோடு நடந்தவனை அங்கிருந்தவர்கள் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தனர்.
மறுநாளும் காலையிலேயே அவன் எழுந்து வளமோட்டு பாறை நோக்கி நடந்தான். முந்தின இரவு வீட்டில் நடந்த சண்டையைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது.சாப்பிட்டுவிட்டு எல்லோரும் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தனர்.அதீத போதை அவனுக்கு உடற்பசியைத் தூண்டியது.திண்ணையில் இருந்து எழுந்தவன் நேராக அவன் மனைவி உறங்கும் சமையலறைக்குச் சென்றான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்து மெல்ல அவளைச் சீண்டினான். பதரியடித்து எழுந்தவள், “என்ன வேணும்” என்றாள். ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே அவளை அவன் இறுக்கி அணைக்க, அவள், “சீ விடு என்னை” என அவனைப் பிடித்து தள்ளினாள். அவள் விளையாட்டிற்காக பிகு செய்கிறாள் என்றெண்ணி மீண்டும் அவளை அணைக்க கிட்டே சென்றான். தள்ளாடி தள்ளாடி அவன் நெருங்குவது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “மரியாதயா தெருவுல போயி படு. கிட்ட வராத. அப்புறம் அசிங்கமாகிடும்” என அவள் சொல்லச் சொல்ல கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு. கோபம் அவனுக்கு வெறியை உண்டாக்கியது. அவன் ஆக்ரோஷத்தோடு அவளை இறுக்கி அணைத்தான்.அவள் அவனைக் காறித் துப்பிக் கொண்டே தன் வலுவையெல்லாம் திரட்டி அவனை காலால் எட்டி உதைத்தாள். அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். தன் ஆண்மை நசுக்கப் பட்டதாக உணர்ந்தவன் கோபம் கொப்பளிக்க அவளிடம்,” அப்ப என்னிது வேண்டாம்னா வேற எவன்து ஒனக்கு கேட்குது” எனக் கேட்டான். அதற்கு அவள் அவனிடம்,”ஒழுங்கு மரியாதையா பேசு. உன்ன மாதிரி நெனச்சிட்டயா என்னையும்” என்று கேட்டது மேலும் அவனை கோபமூட்ட அவன் ஆத்திரத்தோடு ,” எவங்கிட்ட காட்டணம்ணு தோணுதோ அவங்கிட்டயே போ. இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க்க் கூடாது” என சொல்லிக்கொண்டே அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான். “இந்த அக்ரமத்தை கேக்க யாரும் இல்லயா” என கத்திக்கொண்டே அவள் அவனைப் பிடித்து தள்ளினாள். அவன் கதவில் மோதி கீழே சரிந்தான். அதற்குள் சத்தம் கேட்டு அவனுடைய அம்மா எழுந்து ஓடிவந்தாள். “சிவனே அர்த்தராத்திரியிலுமா இப்படி யாராச்சும் சண்டை போடுவாங்க” என மருமகளைப் பார்த்துக் கேட்டாள். பின் அவர்களுக்குள் சண்டை வலுத்தது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மறுநாள் விடியற்காலையிலேயே இனி இந்த குடிகாரனோடு வாழமுடியாது என்று அவன் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவள் தாய் வீட்டிற்கு சென்றாள். எப்படியும் இங்கு வந்துதானேயாக வேண்டும் என்று நினைத்து அவளை தடுக்கவில்லை அவன். நாள் முழுக்க அவன் வளமோட்டு பாறையிலேயே செலவழித்தான். போதை தலைக்கேறிய நிலையில் அவன் தேம்பித்தேம்பி அழுவதைப் பார்த்தவர்கள் அவன் நிலை கண்டு வருந்தினார்கள்.அதீத போதை அவனுக்கு மேலும் தளர்ச்சியைக் கொடுத்தது.சவரம் செய்யாத முகமும் அழுக்கு படிந்த உடையும் அவனை ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாற்றியிருந்தது. பரிதாப்ப் பட்டு அவனுக்கு சிலர் அறிவுரைகளைக் கூறினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலையில் அவன் இல்லாமலிருந்தான். கொஞ்சநாளில் அவன் வளமோட்டு பாறையே கதியென்று கிடக்க ஆரம்பித்தான்.
சித்திரை மாத வாசியாத்தாள் கோவில் பொங்கல் இடும் திருவிழா அன்று காலையிலேயே எழுந்துவிட்ட ஷண்முகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெருமுனையில் இருக்கும் தேநீர்கடைக்குச் சென்று, ஒரு தேநீர் சொல்லிவிட்டு விசுபலகையில் அமர்ந்தான்.எல்லோருடனும் பேசவேண்டும் என அவனது மனம் சலனப்பட்டது. ஆனால் சட்டென்று பேச முடியவில்லை. டீயைக் குடித்துவிட்டு மீண்டும் வீடுநோக்கி நடந்தான். தெருவில் நின்றுகொண்டு அம்மா யாருடனோ சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதை தொலைவில் இருந்தே பார்த்தவன் வேகமாக நடந்தான். அருகில் வந்தவுடன் தன் மாமியாருடன் தான் அம்மா சண்டையிடுகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அவனுடைய குழந்தைகள் என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அழுதுகொண்டிருந்தனர். எதற்காக அம்மா சண்டையிடுகிறாள் என்று அவனால் உணரமுடியவில்லை. அவர்களாகவே சொல்வார்கள் என்று சிறிது நேரம் காத்திருந்தான். அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தோன்றவில்லை.அதற்குமேலும் பொருக்க முடியாமல் அவன் அவர்களிடம் கேட்டான்: “அப்படி என்னதாம்மா பிரச்சனை?” . அவனுடைய இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்தாள்.ஆனால் அவனுடைய மாமியார் வாயிலிருந்து தீ கங்குகள் போல வார்த்தைகள் வந்து விழுந்தன: “கிளிய வளத்து கொறங்குகிட்ட கொடுக்கற மாதிரி எம் பொண்ண உங்கிட்ட கொடுத்தேன். அவ வாழ்க்கய நாசமாக்கிட்டயே நீ நல்ல கதிக்கு போவியா?” மாமியாரின் இந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்லமுடியவில்லை.அதற்குள் கூட்டம் கூடத்தொடங்கியிருந்தது. அவன்,”வாங்க எதா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கலாம்” என்று மாமியாரிடம் சொன்னான்.அதற்கு அவள்,”இங்க குந்தப்போட்டு ஒக்காந்து சாப்பிடவா வந்திருக்கேன், போடா பொட்டக் கமினாட்டி பேச வந்துட்டான்” என சொல்ல அவனுடய அம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.அவள் அவன் மாமியாரைப் பார்த்து “யாரடிப் பார்த்து பொட்டயன்னு சொல்ற, செருப்பு அட்ட வுட்ரும் நாயே. உம்பொண்ணுக்கு அரிப்பெடுத்து எவன் கூடவோ ஓடனதுக்கு இவன் என்னாடி பண்ணுவான். ஆம்புளனா அப்பிடி இப்பிடினுதான் இருப்பாங்க.அந்த நாயில்ல வெந்தத தின்னுட்டு இங்கே கெடந்திருக்கனும். கொழந்தைங்கள வச்சிருக்க துப்பில்ல வந்துட்டா த்தூ” என்று காரித்துப்பிவிட்டு ,”எங்கொழந்தைகளை எங்களுக்கு பாத்துக்கத் தெரியும், ஒழுங்கு மரியாதயா ஊடு போய்ச் சேரு” என ஆத்திரத்தோடு சொன்னாள். அவன் வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு கூனிக் குறுகிப் போனான். அதற்கு மேல் அங்கு அவனால் நிற்க முடியவில்லை. தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அப்போது அவன் மிகவும் வெறுமையாக உணர்ந்தான். வாய் விட்டு அழவேண்டும் போல இருந்தது அவனுக்கு.குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு அவள் மீதான ஆத்திரம் கூடியது.மேலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் அவன் மனதில் புதிய வைராக்கியம் தோன்றி மறைந்தது. அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவர்களை அமரச் செய்து சாப்பிட ஏதாவது இருக்கிறதாவெனப் பார்க்க அடுப்படி நோக்கி நடந்தான். தெருவில் சத்தம் அடங்கியிருந்தது. கூட்டம் களைந்து சென்றபின் அவன் அம்மா உள்ளே வந்தாள். அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஒரு புழுவைப்போல அவன் மனம் துடித்தது. தன் தாயை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாமல் தெருத் திண்ணையில் வந்து அமைதியாக கண்களை மூடிப் படுத்தான்.அவன் மனத்திரையில் தொடர்பற்ற பல காட்சிகள் தோன்றி மறைந்தன. தெருத் திண்ணையில் படுத்திருந்த ஷண்முகத்துக்கு புழுக்கம் தாங்காமல் புரண்டு புரண்டு படுத்தான். அப்போதும் உறக்கம் பிடிக்கவில்லை.வெளியில் வெயில் தகித்துக் கொண்டிருந்தது.துண்டை உதறித் தோலில் போட்டுக்கொண்டு வளமோட்டுப் பாறை நோக்கி நடந்தான்.
அந்த வருடத் தொடக்கத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தான்.அன்றும் வழக்கம் போல வெயில் கொளுத்தியது.அனல் காற்றே எங்கும் வியாபித்திருந்தது. ஒரு மரத்தில் கூட இலைகளின் அசைவைக் காணமுடியவில்லை.மனம் சந்தோஷமாக இருப்பது போல உணர்ந்தவன் குடிக்க நினைத்து வளமோட்டு பாறை நோக்கி நடந்தான்.அவ்வளவாக குடிப்பதில்லை என்றாலும் முற்றாக குடியை அவன் விட்டுவிடவில்லை. எப்படியும் நிறுத்திவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வான். வெயிலின் உக்கிறத்தால் பனந்தோப்பில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.அவர்களைப் பார்த்தவுடன் ஷண்முகத்திற்கு மனம் பாரமாகத் தோன்றியது.வாழ்க்கையை அதன் போக்கில் அணுக நினைத்தது தவறோ என்றும் தான் இதுவரை சரியாக எதையும் அணுகவில்லையோ என்றும் மாறி மாறி யோசித்தான்.வளமோட்டுப் பாறையேறி தெற்கு நோக்கி கீழாக இறங்கி தோப்புக்குள் நுழைந்ததும் அவன் முகத்தில் குளிர்ந்த காற்று படருவதை உணர்ந்தான்.கள் சேந்தும் பானைகளுடன் சிலர் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.இறக்கியவுடனே கள்ளை குடித்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில் சிலர் மரத்தின் கீழே காத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கொட்டகையின் அருகில் அமர்ந்து அங்கு விற்றுகொண்டிருந்த கள்ளை மொந்தைகளில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.நெருக்கடிகளில் இருந்து மீள, குடித்தே ஆகவேண்டும் என்று உணர்ந்தவன் கொட்டகையை நோக்கி நடந்தான்.கடைக்காரரிடம் மூன்று மொந்தை கள்ளையும் தொட்டுக்கொள்வதற்காக அவித்த முட்டையையும் வாங்கிக் கொண்டு வடக்கு புறமிருந்த ஒரு மரத்தடிக்கு சென்றான்.மிதியடிகளை கீழே கழற்றி போட்டு அதன் மீது அமர்ந்து மொந்தையில் இருந்த கள்ளை அப்படியே எடுத்து மடக் மடக் என பாதியளவு குடித்து மொந்தையை கீழே வைத்துவிட்டு முட்டையில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.அப்போதும் அவன் மனத்திரையில் தொடர்பற்ற பல காட்சிகள் தோன்றி மறைவதை உணர்ந்தவன் மீதியிருந்த கள்ளை எடுத்து முழுவதுமாக குடித்தான்.கண்களில் மெல்ல சிவப்பு ஏறத்தொடங்கியிருந்தது.லேசாக தலை சுற்றுவது போல உணர்ந்தவன் தொட்டுக் கொள்ள முட்டையை எடுக்கப் போனவன் பின் பக்கம் சிலரின் பேச்சு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான். கொட்டாகாரமுட்டு சுப்ரமணி சிலருடன் நடந்து வந்துகொண்டிருந்தார்.வெகுநாட்களுக்கு பிறகு அவரை பார்க்க நேர்ந்த்தில் ஷண்முகத்தின் மனதில் பயமும் ஆத்திரமும் ஒரு சேரத் தோன்றியது. ஆனாலும் கண்டும் காணாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். சுப்ரமணியும் அவனை காணாதது போல கடந்து சென்றார்.சுப்ரமணியும் அவருடன் வந்தவர்களும் கொட்டகையின் அருகே சென்று அமர்ந்தனர். அதில் ஒருவர் மட்டும் எழுந்து சென்று கடைக்காரரிடம் மொத்தமாக ஒரு பானைக் கள்ளை வாங்கிவந்து பிளாஸ்டிக் ஜக்கில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தார்.
சுப்ரமணியத்தின் வருகையும் வெயிலின் தாக்கமும் ஷண்முகத்தை இன்னும் அதிகமாகக் குடிக்கத் தூண்டியது. அவன் தள்ளாடியபடி கொட்டகை நோக்கி நடந்தான்.அங்கு சுப்ரமணி தன் சகாக்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு கள்ளை குடித்துக் கொண்டிருந்தது மேலும் ஷண்முகத்தை உஷ்ணப்படுத்தியது.அவரைப் பார்த்து அவன் காறித்துப்பினான்.எச்சில் முகத்தில் பட்டுத் தெரித்த நொடியில் அவர் கோபத்தோடு எழுந்து ,”பொண்டாட்டிய ஊர் மேயவுட்டுட்டு வந்து குடிக்கிற நாயி நீ, எம்மேல காறித்துப்புறயா” என அசிங்கமாகத் திட்டிக் கொண்டே அவனை கீழே பிடித்துத் தள்ளினார்.இவர்களின் சண்டையை விலக்க யாரும் முயற்சிக்காமல் கள்ளைக் குடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர். இன்னும் சிலர் போதையில் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை பரிகாசத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அவர் பிடித்து தள்ளியதில் கொட்டகைப் பக்கமாக விழுந்தான். அவன் அந்தரங்கம் தாக்கப் பட்டதால் கோபம் கொப்பளித்தது.தன்னுடைய இந்த நிலைக்கு இவர் தான் காரணம் என்று நினைத்தான். இத்தனை நாட்கள் மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்திருந்த இயலாமைகள் மொத்தமும் பெருங்கோபமாக உருமாறி அவர் மேல் குவிந்தது.கீழே விழுந்த ஷண்முகத்தை சட்டைசெய்யாமல் சுப்ரமணி அவர்களுடன் அமர்ந்து தள்ளாடியபடியே கள்ளைக் குடித்துக் கொண்டிருந்தார். அவர் மீதான் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அவன் தன் பலத்தையெல்லாம் திரட்டி தள்ளாடி தள்ளாடி எழுந்து கொட்டகையைப் பார்த்தான். எறவானத்தில் சாணைத் தீட்டப்பட்டு பளபளவென இருந்த பாலை சீவும் கொடுவாளைப் பார்த்தான். அடுத்த நொடி அவனுக்கு ஆக்ரோஷம் பொங்கியது.பெருங்கோபத்தோடு கொடுவாளை எடுத்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்து சுப்ரமணியின் பின்புறமாகச் சென்று வலுகொண்ட மட்டும் ஓங்கி கழுத்தைப் பார்த்து வெட்டும் வரை யாரும் கவனிக்காமல் போதையின் பிடியில் உளரியபடி இருந்தனர். சுப்ரமணியின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட அவர் அமர்ந்திருந்த வாக்கிலேயே தரை நோக்கிச் சரிந்தார்.எல்லோர் மீதும் ரத்தம் பட்டுத்தெரித்தது. நடந்து முடிந்த பயங்கரத்தின் தீவிரம் புரிந்து அனைவரும் உறைந்தனர். தன்னிலிருந்த குரோதம் முழுவதுமாக வடிந்த வெறுமையில் ஷண்முகம் தேம்பித் தேம்பி அழுதான்.
தெருவில் நாய்கள் அதிக சத்தத்தோடு குறைத்துக் கொண்டு ஓடியபோது ஷண்முக முதலியாருக்கு கடந்த கால நிகழ்வின் தொடர்பு அறுந்த்து.அவையெல்லாம் நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆயினும் இப்போதும் உடம்பு படபடப்பதை உணர்ந்தவர் புரண்டு படுத்தார்.இந்தமுறை யார் என்ன செய்தாலும் பட்டியை காப்பாற்ற முடியாதென அவரது உள்மனம் தொடர்ந்து அவருக்கு கூறிக்கொண்டே இருந்தது.அந்த சிந்தனைகளில் இருந்து விடுபடமுடியாமல் தவித்தவர் மெல்ல எழுந்து ஒரு சுருட்டை பற்றவைத்து இழுத்தார்.சிறிது நேரம் தெருவையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவர் மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டார்
ஊருக்குள்ளிருந்து வந்த பெரும் சத்த்த்தைக் கேட்டு ஷண்முக முதலியாருக்கு லேசாக விழிப்பு வந்தது.சத்தம் மேலும் அதிகரிக்கவே தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு சத்தம் கேட்கும் திசை நோக்கி நடந்தார். மணியகாரர் தெருவில் தான் பெரும் கூச்சலும் சத்தமும் கேட்டது.பட்டிக்கு தான் ஏதோ ஆபத்து என உணர்ந்தவர் இனம் புரியாத வலியால் துடித்தார். அதற்குமேல் அவரால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.பள்ளத்தெருவில் இருந்து திரும்பி மெல்ல மணியம் தெருவிற்குள் நுழைந்து பட்டித்தெருவைப் பார்த்தவருக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது. எந்திரங்களின் உதவியுடன் பட்டியை இடித்து வாறிக்கொண்டிருந்தனர் சிலர். நாட்டாரும் அகிலாண்டமும் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். என்ன செய்தும் அவர்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அகிலாண்டம் ஆத்திரத்தில் ஒன்றிய செயலாளரைப் பார்த்து, போங்கடா நீங்களும் ஒங்க கேடு கெட்ட அரசியலும்” என்று கத்தினாள். அதை அவன் கேட்கமுடியாதபடி எந்திரத்தின் சத்தம் ஓங்கி ஒலித்தது. அடர்ந்த அவ்விரவிலும் இடிபாடுகளில் இருந்தெழும் புழுதி வானில் வென்மேகமெனத் திரண்டது.மக்கள் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். பாதுகாப்பிற்காக நிறைய காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். ஒன்றிய செயலாளர் அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளருடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் விஷயம் பரவி கூட்டம் சேரத்தொடங்கியது.ஷண்முக முதலியாரால் ஒன்றும் பேச முடியவில்லை.அப்படியே குள்ளு வாத்தியார் வீட்டுத் திண்னையில் அமர்ந்தவர் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டார்: “பாவிங்களா வெள்ளக் காரன்கிட்ட இருந்து கூட காப்பாத்திட்டோம்.உங்க கிட்ட இருந்து முடியலயேடா”. அவருக்கு மூச்சு வாங்கியது.சுருட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டு மெல்ல நடந்தார். இடிபாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.
பட்டி இருந்த இடம் சமப் படுத்தப்பட்டு பட்டித்தெருவையும் மணியம்தெருவையும் இணைத்து சாலைப் போடப்பட்டது. பட்டி இருந்த இடத்தில் ஒரு சிறு பூங்கா ஏற்படுத்தப்பட்டு புதிய நகர் உதயமானது.நாளடைவில் பட்டித்தெரு எனும் பெயர் மெல்ல வழக்கொழிந்து அந்த ஒன்றிய செயலாளர் சார்ந்த கட்சித்தலைவரின் பெயரால் அழைக்க அறிவுருத்தப்பட்டது.

Thursday, July 16, 2009

மயானக்கொள்ளை-சிறுகதை


“எப்படியும் இன்னும் அர மணி நேரத்துல கரவம் கௌம்பிடும்டா”
என்று வேலாயுதம் நாராயணனிடம் சொன்னபோது இருவருக்கும் போதை தலைக்கேறி இருந்தது. பேச முடியாதபடி நா குழறியது. கண்கள் மேல்நோக்கி செருக ஆரம்பித்தன. மரம் இழைக்கும் எந்திரத்தின் தொடர் இரைச்சல் அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்தபோது அவர்கள் மரப்பட்டறை வைத்து நடத்தும் முத்தை நொந்து கொண்டனர்.
“குடிக்க உங்களுக்கு எடம் கொடுக்கறதே தப்பு. ஒழுங்கா குடிச்சிட்டு போவீங்களா?” என்று முத்து முனகலுடன் கூறியதை நாராயணன் கேட்டுவிட்டு சொன்னான்.
“ஒன்ன யார்ரா டாஸ்மாக் பக்கத்துல பட்றயை வைக்க சொன்னது?”
போதை தலைக்கேறிய அவர்களை என்ன செய்வதென்று முத்துவுக்குப் புரியவில்லை. நாராயணன் தன் கால்சட்டை பையில் வைத்திருந்த பீடிக் கட்டில் இருந்து ஒன்றை எடுத்துப்பற்றவைத்தான். பீடி புகை பிடிக்காமல் வேலாயுதம் லுங்கியை உதறிக்கொண்டே எழுந்தான்.
“டேய் எத்தன தடவ சொல்றது. எங்கூட இருக்கிறப்ப பீடி புடிக்காதேன்னு” எனக் கேட்டபடியே வேலாயுதம் தலையில் அடித்துக்கொண்டே தள்ளாடிக்கொண்டு நடந்தான். அவனைப் பின்தொடர்ந்து நாராயணனன் சென்றான். இருவரும் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த முத்து அவர்களைப் பார்த்து கூறினான்.
“டேய் போய் அய்யா வூட்டு மோட்டார் கொ ட்டகையில படுங்க. அப்புறமா கோவிலுக்கு போகலாம்.” அவன் பேச்சு அவர்களை எட்டவே இல்லை. ஏதோ யோசித்தப்படி நாராயணனை பார்த்து சொன்னான் வேலாயுதம்.
“மச்சி பன்னன்டு மணிக்குள்ள ஒரு பொணம் விழும் பாரு” அதற்கு சிரித்துக்கொண்டு பீடியை இழுத்து விட்டபடி கேட்டான்.
“ஏன்டா குடிச்சிட்டு ஒலர்ற?”
“ஆமாண்டா. இவுரு காந்திக்கு பக்கத்துட்டு காரு.”
என்று நாராயணனை பார்த்து நக்கலடித்துக்கொண்டே மீண்டும் வேலாயுதம் பேசினான்.
“நா சொல்றது ஒனக்கு வேடிக்கையாதான் இருக்கும். நடக்கும் போது பாக்கதான போற”
“போன வருஷம் மயான கொல்லைக்கு தண்ணி டேங்க் இடிஞ்சி உழுந்து செத்தாங்களே அதனால சொல்றயா?”
“அது மட்டுமில்ல. அதுக்கு முந்தன வருஷ மயானகொல்லையன்னிக்கு நம்ம செட்டியார் வூட்டு நரசிம்மத்துக்கு என்ன ஆச்சு?” என்று வேலாயுதம் கேட்கும் போதே நாராயணின் மனத்திரையில் சம்பவங்கள் கோர்வையாக சுழலத் தொடங்கின.
மயானத்திலிருந்து கரகம் திரும்பிக்கொண்டிருந்தது. ஒரு சில்வர் உண்டியை குலுக்கியபடி வந்து கொண்டிருந்தார் செட்டியார் வீட்டு நரசிம்மன். ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல வளர்த்தி சாலையில் இருபுறமும் ஓடியோடி உண்டியல் வசூல் செய்து கொண்டிருந்தவர் ஷபி கடை அருகில் வந்ததும் குடித்துவிட்டு ஆடிக்கொண்டு வந்த வேலாயுதத்தையும் நாராயணணையும் அழைத்தார். தனக்கு வயித்தை வலிக்கிறதெனக் கூறி உண்டியலை வேலாயுதத்திடம் கொடுத்துவிட்டு வடக்கு திரும்பி ஓடையை நோக்கி சென்றார். ஆடிக்கொண்டே வேலாயுதம் உண்டியல் குலுக்கத் தொடங்கினான். கபாலமேந்தியவர்கள் கோவில் அடிக்கு வந்து சேர்ந்தனர். “பத்து வச்சா... இருபது... ஐம்பது வச்சா... நூறு ...” என சூதாட்டம் களைகட்டியிருந்தது.
சீக்கிரமே வந்து விடுவதாக சொன்ன நரசிம்மனை காணாது அலுத்துக்கொண்டான் வேலாயுதம். உண்டியலை எடுத்துக்கொண்டு கோனார்வீட்டு ரங்கசாமியிடம் சென்று நீட்டினான்.
“எத்தினி வேலைய தாண்டா நா செய்யமுடியும்? நரசிம்மன் எங்க? அதுக்குள்ள எத்திகிட போய்ட்டானா?” என அவனை பொரிந்து தள்ளினார். அவனுக்கும் கோபம் மூக்கு நுனிவரை வந்தது. அடக்கிக் கொண்டு கூனமுட்டு சோமுவிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டான்.
மாலை ஐந்து மணியிருக்கும். சேகர் ஓட்டலில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவன், பெட்ரோல் பங்க் நோக்கி மக்கள் கூட்டம் ஓடுவதை கண்டு, தேனீரை சீக்கிரம் குடித்து முடித்து அவர்களை தொடர்ந்து ஓடி கூட்டத்தில் ஒருவரை கேட்டான்?
“என்ன அங்க?”
“செட்டியார்வூட்டு நரசிம்மன் செத்து கெடக்கராறாம்.”
என கூறிக்கொண்டே அவர் ஓடினார். அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடலில் நடுக்கம் பரவியது. நாக்கு வரண்டு போனது. இருந்தும் பயத்தினூடே அவன் அவரிடம் கேட்டான்.
“எங்க?”
“மணிகாரமூட்டு சண்முகம் கிணத்துல”
என்று அவர் கூறியதும், மணிக்காரமூட்டு கிணத்துக்கு ஏன் போவனும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
பெட்ரோல் பங்கிலிருந்து கீழே இறங்கி வரப்பு வழியாக ஓடிய கூட்டம் கிணற்றை சுற்றி நின்று கொண்டிருந்தது. கூட்டத்தை விலக்கி அவன் கிணற்றின் உள்ளே பார்த்தான். சலனமேயில்லாமல் நரசிம்மன் உடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது. பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர். மாடு மேய்க்கிற அம்மாக்கண்ணு மட்டும் சொன்னாள்.
“மசான கொல்லை இல்ல அதான் ஆள இங்கு இட்டாந்து ஜோலிய முடிச்சிருச்சி.”
அவளது வார்த்தைகள் அவன் மனதில் பயத்தை கசியவிட்டிருந்தது. மயானக் கொல்லைக்கும் ஒருவன் இறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் அன்று இரவு அவனது பாட்டி அவனிடம் சொன்னாள்.
“கரவம் எறங்கறதுக்குள்ள எப்படியாவது காவு வாங்கிடும்டா.”
பயத்துடனேயே அவன் அவளிடம் கேட்டான்.
“எல்லா மசான கொல்லையிலுமா பொணம் விழும்?”
அவள் “ஆமாம்” என்று உறுதியாக தலையாட்டிய விதம் அவனுக்குள் மீண்டும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

“ஏம்பா எங்க போயிட்டீங்க? அங்க ரங்கசாமி அண்ணன் உங்களை தேடிட்டிருக்கார்.” என செட்டுக்காரர் அவர்களைப் பார்த்து உரக்கக் கேட்டதும் தான் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பினார். இருவரது கண்களும் பயத்தால் நிரம்பியிருந்ததை காணமுடிந்தது. தள்ளாட்டத்துடன் நடந்து அவர்கள் கோயிலை வந்தடைந்தபோது கோனார் வீட்டு ரங்கசாமி அவர்களைப் பார்த்து சத்தமாகச் சொன்னார்.
“நல்ல நாளு அதுவுமா இப்படியா குடிச்சிட்டு வரது. போங்கடா.. போயி வெள்ள குளத்தாரூட்ல கரவம் ஜோடிக்க பூ வாங்கிட்டு வாங்க”
அவர் பேச்சுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் சந்து வழியாக பூ வாங்க நடந்தனர். கோயிலில் உடுக்கையும் பம்பையும் சப்தமெழிப்பிக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் வெள்ளக்குளத்தை அடைந்தபோது வேலாயுதம் சொன்னான்.
“டேய் நாம இன்னைக்கி குடிச்சிருக்க கூடாதுடா?”
அவன் முடிப்பதற்கு முன்பாக நாராயணன் கூறினான்.
“டேய் அந்த கோனாமுட்டு ஆளு சொல்றார்னா கவல படுற. அவுரும்தாண்டா வூத்தினு இருக்காரு”.
“போடா, பொய் சொல்லாத” என்றான் வேலாயுதம்.
“நான் ஏன் பொய் சொல்லனும், நீ வேணா அவர வூதச் சொல்லேன் பார்ப்போம்.”
அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டே வெள்ள குளத்தார் வீட்டை அடைந்தனர். அங்கு பூக்காரர் மனைவி தான் இருந்தாள். இவர்களைப் பார்த்து முகஞ்சுளித்தவள் “பூ வாங்க வந்திருக்கிற மொகரைங்களை பாரு”, என முனகிக் கொண்டே உள்ளே சென்று பூப் பந்துகளை கொண்டு வந்து வேண்டா வெறுப்பாக மண் திண்ணையில் வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள். வேலாயுதத்திற்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. நாராயணன் அவனை சாந்தப்படுத்தி, அழைத்துக் கொண்டு வந்தான். ஆனாலும் வேலாயுதம் பூக்காரர் வீட்டை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே வந்தான். கால்கள் போதையில் பின்னிக் கொள்ள தொடங்கின. அவன் ஆத்திரம் தீராமல் காரித் துப்பிக் கொண்டே நாராயணனிடம், “பெரிய உத்தமியாட்டம் காட்டிக்கிறா. வண்டிக்கார சுப்ரமணி கூட ஓடனவதானே அவ?”எனக் கூறி மீண்டும் காரித்துப்பினான்.
“டேய் விடுரா. இதுலாம் சாதாரணம்” என நாராயணன் நா குழறியபடியே அவனை அடக்கினான்.
அவர்கள் ஆடிக்கொண்டே வருவதை கோயில் பந்தலடியில் இருந்தவர்கள் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். சிலர் அவர்களைச் சுட்டிக் காட்டி கிண்டலாக ஏதோ கூறி சிரித்தனர். அவர்கள் பூப்பந்தை பூசாரியிடம் கொடுத்து விட்டு பந்தலடிக்கு வந்தனர். அவர்கள் அங்கிருப்பதை விரும்பாத கோனார் வீட்டு ரங்கசாமி அவர்களிடம் சொன்னார்.
“டேய் போய் அரசமரத்தடியில் படுங்க. கரவம் கௌம்பறப்ப கூப்பிடுரோம்.”
அதற்கு வேலாயுதம் கூறினான்.
“இப்படிதான் மாமா போனதடவையும் சொன்னீங்க. ஆனா நாங்களா எந்திரிச்சு பாக்கறப்ப புளிய மரத்தடியில் டிராமா இல்ல நடந்துகினு இருந்தது.” என்று அவன் சொன்னதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வெயில் உக்கிரமாக காய்ந்து கொண்டிருந்தது.
“கபாலம் ஏந்தும் பக்தர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக பந்தலடிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டவுடன் பந்தலடியில் கும்பல் சேரத் தொடங்கியது. வெடிச்சத்தம் கேட்டு வேலாயுதமும் நாராயணனும் எழுந்து கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்னும் போதை குறைந்திருக்கவில்லை அவர்களுக்கு. நாராயணனை பார்த்து வேலாயுதம் கேட்டான்.
“யார்றா மூத்திரம் விடுர மாதிரி வானம் உடறது? மேலவே போக மாட்டுது?”
அதை கேட்ட நாராயணனுக்கு குபுக்கென சிரிப்பு வந்துவிட்டது. இருந்தும் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலாயுதத்திடம் கூறினான்.
“டேய் சத்தமா பேசாத. நவுட்டுகாரமுட்டு சுந்தரம் தான் விடுறார்.”
“ஆமா அவுரு பெரிய அண்ணாதொரை மயில்சாமி. அவரு காதுல கேட்டுட்டா, ராக்கெட்ட இந்த பக்கம் திருப்பிடுவாரு போடா போக்கத்தவனே.” என்று வேலாயுதம நாராயணனை பரிகாசம் செய்து கொண்டே கோவிலுக்கு வந்து சேர்ந்தான். கரகம் வேப்பிலையாலும் பூவாலும் ஜோடிக்கப்பட்டிருந்தன. உச்சி வெயில் மண்டையை பிளந்தது. பம்பை உடுக்கை காரர்கள் உச்ச ஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தனர். சிலர் அருள் வந்து அவர்களின் வாசிப்புக்கேற்றபடி ஆடிககொண்டிருந்தனர் . கபால மேந்தியவர்கள் மத்தியில் ஓர் இறுக்கம் மெல்ல பரவத் தொடங்கியபோது வேலாயுதத்தை நாராயணன் கேட்டான்.
“ஏன்டா, இன்னாவோ பன்னன்டு மணிக்குள்ள ஒரு பொணம் விழும்னு சொன்னே”
அவன் கேள்விக்கு வேலாயுதம் மிகவும் இறுக்கமான முகபாவத்துடன் பதில் சொன்னான்.
“பொணம் விழாம மேல ஏறுன கரவம் கீழ எறங்காது பாத்துகுனே இரு”
இம்முறை வேலாயுதத்தின் பதில் நாராயணனுக்கு உள்ளூர பயத்தை ஏற்படுத்தியது. பயம் மெல்ல உடலெங்கும் பரவத் தொடங்கியபோது கரகம் புறப்படத் தொடங்கியது. தெரு அகலத்துக்கும் பரவியிருந்தது கபால மேந்தியவர்கள் கூட்டம். சாமி வந்து சிலர் ஆடிக்கொண்டு முன்னால் சென்றனர். நரம்புகள் புடைக்க வாத்தியக்காரர்கள் பம்பை உடுக்கையை வாசிக்கத் தொடங்கினர். அவர்களின் வாசிப்பு சாமி வந்து ஆடிக்கொண்டிருப்பவர்களை முறுக்கேற்றியது.
நாராயணனும் வேலாயுதமும் கூட்டத்திற்கு முன்னால் நடந்து சென்றனர். அவர்களைப் பார்த்து ரங்கசாமி சத்தமாக சொன்னார்.
“டேய் அந்த வாணத்த வாங்கி வுடுங்கடா. பாவம் அவுரு எம்மா நேரம் தான் வுடுவாறு?”
அதற்கு அவர்கள் இருவரும், “நாங்களா அவர வுடச்சொன்னோம்?” என்றனர்.
“சரிடா, போங்க போயி வாங்கி வுடுங்கடா” எனும் அவரின் கட்டளைக்கு அவர்கள் அமைதியாகி நவுட்டுகாரர் வீட்டு சுந்தரத்திடமிருந்து வாணங்களை வாங்கி விட ஆரம்பித்தனர்.
கரகம் திருவண்ணாமலை சாலையிலிருந்து முருகன் கோயில் தெருவுக்குள் நுழைந்தது. வழி நெடுக்க தரையில் தண்ணீர் ஊற்றியிருந்தும் பாதை வெயிலால் தகித்தது. எங்கும் அனல் பரவிக்கிடந்தது. கால் வைக்க முடியவில்லை. கூட்டம் தேங்கிவிடாதபடி மெல்ல ஓடிக்கொண்டே இருந்தபோது நாராயணன், வேலாயுதத்திடம் கேட்டான்.
“இன்னாடா இவ்ளோ வெயில் லயும். வெடி புஸ் புஸ்னு போவுது. மருந்த சரியா காய வைக்கலயோ?”
“நானும் அதாண்டா நெனைக்கிறேன்.” என அவன் பதில் அளித்தான்.
“அப்ப மருந்த காயவச்சா தான் கரகம் எறங்கறப்ப வேட்டு வைக்க முடியும்.” என்று நாராயணன் சொல்ல அதற்கு வேலாயுதம் அவனிடம் சொன்னான்.
“சரி நாவேணா போயி மருந்த காய வைக்கிறேன். கரவத்து கூடவே நீ போயிட்டு வா.”
“சரிடா,” என்று வாணங்களை வாங்கிக் கொண்டான் நாராயணன். கூட்டத்திலிருந்து மெல்ல விலகி நல்லாப்பாளையம் சாலை வழியாக கோயில் நோக்கி நடந்தான் வேலாயுதம்.
கோயிலிலும் கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஊஞ்சல் ராட்டினங்களில் பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்தனர். தண்ணீர் பந்தலில் நீர்மோர் வினியோகம் நடந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பந்தலடியும் வெயிலால் தகித்தது. பம்பை உடுக்கைச் சத்தம் இப்போது ஓடைப் பாலத்தை தாண்டி கேட்டது.
சகடை நிறுத்தமிடத்திற்கு சென்று வேலாயுதம் வேட்டு வைக்கப்பயன்படும் இரண்டு இரும்பு குழல்களையும் காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு எதிரே வியாபித்திருந்த புளிய மரத்தடிக்கு வந்து, குழல்களில் மருந்தை கிடித்துப்பார்த்தான். மருந்து சொத சொதவென இருந்தது. சற்று நேரம் யோசித்தவன், மருந்தை சுற்றி எடுத்துக்கொண்டு கோயிலுக்கு பக்கத்தில் உள்ள குளக்கரைக்கு சென்று, செய்தித்தாளை விரித்து அதில் மருந்தை பரப்பி காயவைத்தான். வெயிலில் மருந்து தகதகத்து. அவன் இரு கைகளாலும் மருந்தை கிளறி விட்டான்.
கபால மேந்தியவர்கள் மயானத்திலிருந்து திரும்பிக் கொண்டிருப்பதை பம்பை உடுக்கை சத்தத்தை கொண்டு அறியமுடிந்தது. கரகத்திற்கு முன் நடந்து கொண்டே வாணங்களை விட்டுக் கொண்டு வரும் நாராயணக்கு சட்டென “கரகம் எறங்குறதுக்குள்ள ஒரு பொணம் விழும்பாரு,” எனும் வேலாயுதத்தின் குரல் காதில் ஒலிக்க அவனுக்கு உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. இருந்தாலும் பின்னால் ஓடிவரும் மக்கள் கூட்டத்தை பார்த்த நொடி அவனுள் பரவசம் தொற்றிக்கொள்ள வாணங்களை வேக வேகமாக விட்டெறிந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கரவம் வந்துடும்” என யாரோ இருவர் சொல்லிக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். பந்தலடியில் கூட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. கலர் பாயாசம் விற்கும் முதியவரிடம் சிறுவர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலின் மீதும், ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீதும் சிலர் ஏறி, கரகத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த அரசமரத்திலிருந்த குரங்குகள் ஊராட்சி மன்ற அலுவலக மதில் சுவருக்குத் தாவிக்கொண்டிருந்தன.
வேலாயுதம் மருந்தை காயவைத்துவிட்டு கரகத்துக்காக காத்துக்கொண்டருந்தபோது கரகம் திருவண்ணாமலை சாலையிலிருந்து தெற்கு நோக்கி திரும்பியது. அணையை உடைத்துக்கொண்டு பாயும் வெள்ளம்போல் மக்கள் கூட்டம் கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தது.கூட்டத்திற்கு முன் வாணத்தை விட்டபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த நாராயணனுக்கு வேலாயுதத்தைப் பார்த்ததும் அவன் சொன்ன வார்த்தைகள் மனத்திரையில் குமிழிட்டது. மனது கலவரப்படுவதை உணர்ந்த அவன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பந்தலடியில் நின்றிருந்த வேலாயுதத்தை நெருங்கினான். அப்போது வேலாயுதம் நாராயணனிடமிருந்து வாணங்களை வாங்கி நாலாதிசையிலும் விட்டான். வாணங்கள் சர்சர்ரென விண்ணில் பாய்ந்து வெடித்துச் சிதறின. வேலாயுதம் வாணம் விட்டுக் கொண்டிருக்க நாராயணன் பாப்பான்குளத் தெருவழியாக சாராயக் கடை நோக்கி நடந்தான்.
கரகம் பந்தலடிக்கு வந்ததும் கூட்டம் இருப்பு கொள்ளமுடியாமல் தவித்தது. பம்பை உடுக்கை சத்தங்கள் பீறிட்டு மேலெழுந்தன. சாமி வந்து பலர் ஆடி கொண்டிருந்தனர். வேலாயுதம் வாணங்களை அருகில் நின்றிருந்த சந்துவீட்டு முனுசாமியிடம் கொடுத்துவிட்டு, மருந்து காய வைத்திருந்த இடத்திற்கு சென்று மருந்தை எடுத்துக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தான். வேட்டு விடும் குழலை எடுத்து சிறிது செங்கற்பொடி கொண்டு அடைத்து விட்டு மருந்தை வைத்து அழுத்தமாகக் கிடித்தான். இரண்டு குழல்களிலும் மருந்தை கிடித்து வெடி வைக்க ஏதுவாக வைத்து விட்டு கூட்டத்தை பார்த்து “வேட்டு வைக்க போறேன் ஒதுங்கி நில்லுங்க” என கூறிக்கொண்டே மருந்தில் நெருப்பை வைத்தான். சர்ரென சீறிப்பாய்ந்த நெருப்பு குழல்நோக்கி சென்ற அடுத்த நொடி நிலம் அதிரும்படி வெடித்தது. மரத்திலிருந்த குரங்குகளும் பறவைகளும் வேகவேகமாக ஓடி மறைந்தன. கரும்புகை சூழ சற்று நேரம் அங்கு என்ன நடக்கிறது என்றே அறிய முடியாமல் இருந்தது.
புகை மண்டலம் ஓய்ந்த பின் சந்துவீட்டு முனுசாமிக்கு வாணம் விடவேண்டும் எனும் ஆசைவந்தது.பந்தலடியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்கம் பக்கமிருந்த மெத்தை வீடுகள் மீதெல்லாம் மக்கள் நின்று கொண்டிருந்தனர். வேட்டு வைக்கும் குழல்களை சிறுவர்கள் கால்களால் உருட்டி உருட்டி பார்ப்பதைக் கண்ட வேலாயுதம் அவர்களை விரட்டினான். காய வைத்திருந்த மருந்து மீது புளிய மரநிழல் விழுந்ததை அடுத்து சூரிய ஒளிபடும் இடத்திற்கு செய்தித்தாளில் இருந்த வெடி மருந்தை இழுத்து விரல்களால் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். முனுசாமிக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. மனசுக்குள் ஒரு வித படபடப்புடனேயே ஒரு வாணத்தை எடுத்து நெருப்பை பொருத்தினான். அடுத்த நொடி அது சீறிப்பாய என்ன செய்வதென்று தெரியாத அவன் வானத்தை புளிய மரத்தை நோக்கி விட்டெறிந்தான். வானம் புளிய மரத்தில் பட்டு தெறித்து திரும்பி வேலாயுதம் காயவைத்துக்கொண்டிருந்த வெடி மருந்து மீது விழுந்து வெடித்து சிதறிய நொடி அங்கு பெரும் தீப்பிழம்பென பற்றி எரிந்தது.வேலாயுதம் மீதும் மளமளவென பரவிய நெருப்பைக் கவனிக்காமல் கூட்டம் பந்தலடியிலிருந்து நாலா திசைநோக்கியும் சிதறியது. சிறிது நேரத்திற்கு பின் தான் வெடிமருந்தில் சிக்கிக்கொண்டிருக்கும் வேலாயுதத்தை முனுசாமியால் உணரமுடிந்தது. பெரும் சீற்றத்தோடு எரிந்துகொண்டிருக்கும் வெடி மருந்தின் மீதே விழுந்தான் வேலாயுதம். புளிய மர உயரத்திற்குப் பரவி எரியும் தீயை நெருங்கவே அனைவரும் பயந்தனர். கடைசியில் கூனமுட்டு சோமு தண்ணீர் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஒடிவரும் போதுதான்கோயிலுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் குடங்களோடு ஓடிவந்தனர். அப்போது முற்றாக எரிந்து கரிக்கட்டையாகியிருந்தான் வேலாயுதம்.
சாராயக் கடையில் மூக்கு முட்ட குடித்துவிட்டு பக்கத்திலிருந்த மர இழைப்பு பட்டறைக்கு வந்த போது சால்னா கடை பலராமன் அவனிடம் சொன்னார்.
“ஏய் உங்கூட்டாளி வாணம் வெடிச்சி நெருப்புல உழுந்திட்டான்னு ஊரே ஒரே அலாரா கெடக்கு. நீ இன்னாடான்னா குடிச்சிக்கினு இருக்கிறே” இந்த வார்த்தைகளை கேட்ட நாராயணனுக்கு சப்த நாடியும் ஒடிங்கிப்போனது. ஒவ்வொரு மயானக்கொள்ளையின்போதும் இறந்தவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக அவனது மனத்திரையில் குமிழிட அவனுள் நடுக்கம் பரவியது. சட்டென அவனது போதை அறுந்து விழ தள்ளாட்டத்துடனே கோயிலடி நோக்கி ஓடினான். புளிய மரத்தின் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்திருப்பதையும், கூட்டம் கூடி இருப்பதையும் கண்டவன் பெருங் குரலோடு “ஐயோ, நான் தான் அவன கொன்னுட்டேன்,” என தலையில் அடித்துக்கொண்டு அழுதான். சிதறி ஓடியிருந்த கூட்டம் பந்தல்நோக்கி வரத் தொடங்கியிருந்தது. உக்கிரமான வெயில் பந்தலடியை ஒரு மயானத்தை போல மாற்றிக் காட்டிக்கொண்டிருந்தது.

Saturday, June 20, 2009

ஒருநாளும் நாம் திரும்பப்போவதில்லை


மதியம் 2.30 மணி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது தொலைபேசி அழைப்பு. எழுந்து தொலைபேசியை காதில் பொருத்தி, “யார் பேசரது?” என்றேன்.
“வணக்கம், கூகை பதிப்பகத்திலிருந்து பேசுறோம். நீங்க நடுக்கோம்பை நாராயணசாமி சார் தானே?” எனக் கேட்டு அவர்கள் என் பதிலுக்காக காத்திருந்தனர்.
கூகை பதிப்பகம் என்றதும் என்னுள் சந்தோஷம் பீரிட்டது. தமிழின் ஆகப்பெரிய பதிப்பகத்திடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. பெரிய கிரக்கத்தை ஏற்படுத்தியது. கலையாத கனவுகளோடு அவர்களிடம் பேசினேன்.
“ஆமா, நாராயணசாமி தான். உங்களுக்கு என்ன வேணும்?”
மீண்டும் அந்த இனிய பெண் குரல் பேசியது.
“கொஞ்ச நேரம் காத்திருங்க சார். எங்க எடிட்டர் உங்களுடன் பேசுவார்.”
நான் தொலைபேசியை காதிலேயே வைத்திருந்தேன். இனிய நாதசுர இசைக்கு பின் கரகரவென்ற ஆண்குரல் பேசியது.
“வணக்கம் சார்.”
நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. என் அறை சுழல்வதாகத் தோன்றிய போது மீண்டும் அவர் பேசினார்.
“சார் இந்த வருடம் புக் ஃபேருக்கு பத்து எழுத்தாளர்களோட நூறு புக் போடறதா திட்டம். உங்களோட ஒர்க்ஸ் எல்லாத்தையும் போடறதா ஐடியா இருக்கு. நீங்க என்ன நினைக்கறீங்க?”

அவர் சொல்லச் சொல்ல என் கீழிருந்த தரை மெல்ல நகரத் தொடங்கியது. ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. மூச்சில் உஷ்ணம் கூடியிருந்தது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை வார்த்தைகளை விழுங்கிய படியே பேசத் தொடங்கினேன்.
“ரொம்ப சந்தோஷம் சார். என்ககு இது பெரிய அங்கீகாரம் சார். ஆனா பத்து புக் போடற அளவுக்கு எங்கிட்ட மெட்டீரியல் இல்லைங்களே சார்.”
அவர் இடைமறித்து பேசினார்.
“அதப்பத்திலாம் நீங்க கவலைப் படாதீங்க. நீங்க எழுதின எல்லாத்தையும் உடனடியா எங்களுக்கு அனுப்பி வைங்க மத்தத நாங்க பாத்துக்கிறோம்.”
அவரது பேச்சு எனக்கு தெம்பை கொடுத்தாலும், சில ஐயங்களையும் ஏற்படுத்தியது. சிறிது நேரம் யோசித்தபடியிருந்தேன். மீண்டும் அவரே பேசினார்.
“என்ன யோசிக்கறீங்க? தயக்க மில்லாம படைப்புகளை உடனடியா அனுப்புங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்.”
மிகுந்த உரிமையோடு பேசினார். எனக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. புதிய தெம்புடன் அவரிடம் பேசினேன். “சரிங்க சார். அனுப்பிச்சிடுறேன். அப்புறம் ஒன்னு உங்க கிட்ட கேட்கலாமா சார்?”
“ம். தாராளமா கேளுங்க” என இயல்பாக பேசினார்.
“என் படைப்புகளை படிச்சிறுக்கீங்களா சார்.”
“ஃ படிச்சிருக்கேனே, சல்லிகைல வந்த முயல்கதை ரொம்ப நல்லா இருந்திச்சே.”
“சார் அது முயல்கதை இல்லை. காட்ட பத்தின கதை.”
“ஃ அப்படியா? காட்ல எதாவது முயல் பத்தி எழுதி இருந்தீங்களா?”
“இல்லைங்க சார். சிங்கமும் நரியும் பத்தின கதை”
“அப்படியா, சந்தோஷம். ஆனா உங்க கதை பத்தி நெறய பேர் எங்கிட்ட சொன்னாங்க. யங் ரைட்டர்ஸ்ல உங்க கிட்ட ஒரு ஃபுளோ இருக்கு. அப்புறம் உங்க கதைய படிக்கறப்ப எனக்கு ஹெமிங்வே தான் ஞாபகத்துக்கு வரார் தெரியுங்களா?“
அவர் பேச பேச எனக்கு மெல்ல சிறகுகள் முளைக்க ஆரம்பித்தது. அதுநாள் வரை எனக்கு உவப்பானதாக இருந்த மின்விசிறியின் இயக்கம் கர்ண கொடூரமாக இருந்தது. ஜனாதிபதி மாளிகையின் படிகளில் ஏறி விருது வாங்குவது போலவும், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவது போன்றும் பலவித எண்ணங்கள் மின்னி மின்னி மறைந்தன. சிறிது ஆசுவாசத்திற்கு பின் மீண்டும் அவரிடம் பேசினேன்.
“ரொம்ப சந்தோஷங்க சார்.....”
“பரவாயில்லை. உடனே நீங்க அனுப்பிடுங்க. எனக்கு ஓவர்சீஸ் கால் ஒன்னு வருது. வச்சிடட்டுங்களா சார்” என்று அவர் துண்டு துண்டாக பேசி தொலைபேசியை வைத்தார்.
என்னால் அதில் இருந்து சுலபத்தில் விடுபடமுடியவில்லை. ஏதோ அகாயத்தில் மிதப்பது போன்று உணர்ந்தேன். உடல் முழுக்க சந்தோஷத்தின் உஷ்ணம் பரவியிருந்தது. மெல்ல எழுந்தேன். ஆனால் எனக்கு அது துள்ளல் போன்று தோன்றியது. என் அலமாரியைத் திறந்து சில கோப்புகளை எடுத்து அவற்றில் இருந்த என் எழுத்துக்களைத் தடவிப் பார்த்தேன் எழுத்துகள் பொன்னாக மின்னின. சந்தோஷத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறிது நேரத்திற்கு பின் என் சேகரிப்புகள் அனைத்தையும் ஒரு பெரிய கட்டாக கட்டி, வண்டியில் வைத்துக்கொண்டு கூரியர் அலுவலகம் நோக்கி விரையும் என்னை என் மனைவி விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஒருவாரம் கடந்திருக்கும் நிலையில் என் பெயருக்கு ஒரு பார்சல் கடிதம் வந்து சேர்ந்தது. பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நான் உடனடியாக அதை திறந்து பார்த்தேன். உள்ளே தனித்தனியாக எட்டு கட்டுகளும் ஒரு கடிதமும் இருந்தது. தனித்தனியாக இருந்தவற்றை எடுத்துப் பார்த்தேன். அவை பிழைதிருத்த அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் என் பெயரை பார்த்தபோது எனக்குள் சந்தோஷம் குமிழிட்டது. நீண்ட நேரம் அவற்றையே புரட்டிப் புரட்டி பார்த்தேன். தான் அனுப்பியவற்றை தரம் பிரித்து இவ்வளவு நேர்த்தியாக நூலாக்கியிருக்கும் எடிட்டரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
பின் அந்த கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். எடிட்டரின் கையெழுத்து கிறுக்கலாக இருந்ததால் வாசிக்க கடினமாக இருந்தது.

20-11-2008
அன்பினிய நாராயணசாமி சாருக்கு,
வணக்கம், உங்கள் நூல்களை கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் படைப்புகளை இனி தொடர்ந்து நாங்களே வெளியிட தீர்மானித்துள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு தேவை. மேலும் நீங்கள் அனுப்பிய உங்கள் எழுத்தாக்கங்களை கீழ்கண்டவாறு பிரித்து தட்டச்சு செய்து உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். பிழைத்திருத்தி அனுப்பவும்.
1. நாவல்
2. சிறுகதை
3. நீங்கள் வாசித்த புத்தகங்கள்
4. உங்களின் இசை ரசனை
5. திரைப்படங்கள்
6. மொழிபெயர்ப்பு கதைகள்
7. கல்வி முறை பற்றிய கட்டுரைகள்
8. பாலியல் கதைகள்.

மேலும் இது தவிர இன்னும் இரண்டு தலைப்புகளான, பயணக் கட்டுரைகள் ஒன்றும் பிற மொழி எழுத்தாளர் பற்றிய கட்டுரை ஒன்றும் தயாராகிவிட்டால் நமது திட்டம் முற்றிலும் வெற்றி. ஆகவே அனுப்பாடமல் இருக்கும் மற்ற பிரதிகளையும் அனுப்பி உதவுங்கள்.
கடிதம் கண்டதும் முடிந்தால் தொலைபேசியில் அழையுங்கள்.

என்றும் அன்புடன்
கானாடுகாத்தான்
(கூகைக்காக)

பத்து புத்தகங்கள் வெளியாகப்போகும் மகிழ்ச்சி. துள்ளிக் குதித்தபடி மனைவியிடம் கடிதத்தை கொடுத்தேன். என் நடையில் அப்போது கம்பீரம் கூடியிருந்தது. பின் என் செல்பேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
“வணக்கம் சார். ரொம்ப சந்தோஷம் இவ்ளோ சீக்கிரம் அனுப்பிச்சிட்டீங்களே.”
“எதையும் கச்சிதமாக முடிச்சிடனும் சார். அப்பதான் தீவிரமா இயங்க முடியும். புரூப் பாத்து சீக்கிரம் அனுப்பிச்சிடுங்க.”
“சரிங்க சார். அப்புறம் அந்த ரெண்டு தலைப்புல புக் போடறதுக்கு எங்கிட்ட மெட்டீரியல் கிடையாதே” நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை அலட்சியம் செய்வது போல அவர் வெகு சாதாரணமாகக் கேட்டார்.
“என்ன அந்த பயண கட்டுரைவும், அயல் எழுத்தாளர் பற்றியும் தானே?”
“ஆமா, சார்.”
“நீங்க எங்கயும் வெளியில டூர் போனது கிடையாதா?”
“சின்ன வயசுல என் பாட்டி கூட ராமேசுரம், கன்னியாகுமரின்னு போய் இருக்கேன். அதுக்கப்புறம் எங்கயும் போனது கிடையாது சார்.”
“ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்க பிரண்ட்ஸ் கூட எங்கலாம் போவீங்க?”
“தெனத்துக்கும் காலையில வீரங்கிபுரம் ஏரிக்கு காலார நடந்து வெளிய போவம் சார்.”
“இதுதான்யா நமக்கு முக்கியம். ஒரு எழுத்தாளன் எங்க போனாலும் அது பயணம் தான்யா. அத பத்தி எழுது. அதுதான் நிக்கும்.”
அவர் சொல்ல சொல்ல எனக்கு நண்பர்களுடன் நடந்து செல்வதும், ஏரிப்பாறையில் அமர்ந்து ஊர்கதை பேசுவதுமான காட்சிகள் மனத்திரையில் விரிவு கொண்டன. மேலும் அவரின் பேச்சு ஒரு புது வித தெம்பையும் அளித்தது. பின் நான் அவரிடம் கேட்டேன்.
“சார். அப்புறம் அயல்மொழி எழுத்தாளர் பற்றி ஒரு கட்டுரை தொகுப்பு.....”
என நான் இழுத்தேன். புரிந்து கொண்டவராய் அவர் தொடர்ந்தார்.
“அதப்பத்தியும் கவலைப் படாதீங்க. உட்டி பத்ரிக்கையில உங்க பழைய கடிதம் ஒன்று வந்தது நினைவு இருக்கா?”
“ஆமாம் சார். எப்பவோ எழுதனது. அரை வேக்காட்டுத் தனமா இருக்கும் சார். அயல்மொழி எழுதத்தாளர்கள் பற்றி என் சந்தேகத்தை கேள்வியா கேட்டிருப்பேன்.”
“அதே தான்யா. அந்த கடிதம் தான்.”
“சார் அது வெறும் வார்த்தை குப்பை சார்.”
“போயா...போ, அது ரொம்ப முக்கியமான ரைட் அப். அத இன்னும் டெவலப் செஞ்சி ஒரு புக்கா போட்டுடலாம்.“
நான் புரியாமல் அவரிடம் கேட்டேன்.
“எப்படி சார் டெவலப் பன்றது?”
“அதபத்தி நீ ஏன்யா கவலைப்படுற? நெட்ல இருந்து ஒரு இருபது பக்கம் டவுன் லோட் செஞ்சி அனுப்புரோம். படிச்சிட்டு உன் கருத்தை எழுதி அனுப்புயா அது போதும்.”
“சரிங்க சார்.”
“அப்புறம் கல்வி பற்றி ஒரு புக் போடறம்ல, அதுக்கு கொஞ்சம் பக்கம் கொறையுது. நாவல்ல இருந்து எடுக்கலாம்னு பாத்தா அப்புறம் அதுக்கு பக்கம் கொறஞ்சிடும்.”
“நாவல் தான் ரொம்ப பெருசாச்சே சார்.”
“அதுல கொஞ்சம் எடுத்து தான் சிறுகதைகளாக்கி சிறுகதை தொகுப்பை முடிச்சோம். இனி அதுல கைவைக்க முடியாது. வீட்ல நீங்க வேறெதுவும் எழுதி வச்சிருக்கீங்களா?”
“சார் நெறைய கவிதைங்க வெச்சிறுக்கேன். வேனும்னா அனுப்புறேன். கவிதை தொகுப்பு ஒன்னு போட்டுடலாமே”

“இல்லைங்க சார். கவிதைக்கு இப்ப சேல்ஸ் இல்லை. அதுவுமில்லாம லைப்ரரி ஆர்டரும் கெடக்கமாட்டுது”
என சொல்லி முடித்தார். இருபுறமும் சிறிது நேரம் மௌனம் அடைத்துக்கிடந்தது பின் அவரே பேசினார்.
“வீட்ல கவிதை தவிர வேற எதாவது எழுதி வச்சிருக்கிங்கலா?”
“இப்ப வீட்டில இருக்கிறது என் பாடக்குறிப்பேடும் என் பொண்ணுடைய ஹோம் ஒர்க் நோட்டுகளும் தான் சார்.”
நான் சிரித்துக் கொண்டே கூறினேன். ஆனால் அவர் படு சீரியசாக என்னிடம் சொன்னார்.
“உடனே அவற்றை அனுப்பிடுங்க. அதயும் சேத்து கல்வி சம்பந்தமான அந்த தொகுப்ப முடிச்சா அதுக்கு ஒரு கூடுதல் வெயிட் கிடைச்சிடும்.”
அவரின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்கு புரியாமல் மறுபடி கேட்டேன்.
“சார் உண்மையிலேயா?”
“அமாம் யா, உடனடியா அனுப்பு. நாள் நெருங்கிடுச்சி.”
எனக் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்தார். அடுத்த நொடியில் இருந்து நான் வேக வேகமாக இயங்கினேன். என் பாடக் குறிப்பேடுகளையும், என் மகளின் எல்.கேஜி, யுகேஜி நோட்டு புத்தகங்களையும் அன்றே கூரியரில் அனுப்பி வைத்தேன். இரவு பகல் பாராது எழுதி எழுதி என் பயண அனுபவங்களை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைத்தேன்.



இரண்டு வாரங்கள் முடிந்து விட்டிருந்த அன்று பருவ மழை கூடிப் பெய்யத் தொடங்கியிருந்தது. எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே அடைப்பட்டிருக்க வேண்டி வந்தது. மதியம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது கூகை பதிப்பகத்திலிருந்து என்னை அழைத்தனர். இனிய ஒரு பெண்குரல் ஒலித்தது.
“சார் அழைப்பிதழும் உங்க புத்தகங்களின் ரேப்பர் டிசைனும் பின் அட்டை குறிப்புகளும் அனுப்பி வச்சமே கிடைச்சிடுதா?”
“இன்னும் இல்லைங்களே”
”அப்ப நாளக்கி இல்ல நாளன்னிக்கி கெடச்சுடும். அப்புறம் மார்க்வெஸ் பத்தி அனுப்பின கட்டுரைய படிச்சிட்டு ஒரு ரைட்அப் கேட்டிருந்தோம். இன்னும் நீங்க அனுப்பல. சீக்கிரம் அனுப்பிச்சிட்டா பைன்டிங்குக்கு அனுப்பிடலாம்.”
“நீங்க அனுப்பின கட்டுரைய படிக்கவே முடியலைங்க. சுலபத்துல அர்த்தம்புரிய மாட்டேங்குது. முயற்சி பண்றேன்.”
“ட்ரை பண்ணுங்க சார். அப்புறம் உங்களுக்கு தெரிஞ்ச வேற எங் ரைட்டர்ஸ் நம்பர் இருந்தா சார் அனுப்ப சொன்னாங்க.”
திடீரென்று வேறு எழுத்தாளர்களின் தொலைபேசி எண்களை ஏன் கேட்கிறார்கள் என மனம் வேகமாக யோசிக்க தொடங்கியது. நம்மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டதோ என்றும் நினைத்தப்படியே அவரிடம் கூறினேன்.
“நான் அனுப்புரேங்க....”
”ரொம்ப நன்றி சார்.”
அந்த இனிய குரல் தொலைபேசி இணைப்பை துண்டித்தது. முதன் முதலாக நெருக்கடியாக உணர்ந்தேன். அவர்கள் அனுப்பிய கட்டுரையைப் படிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரு பத்தியைப் படிப்பதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. முடியாது என்றும் கூற முடியாத நிலை. இவ்வளவு பெரிய பதிப்பகம். நம்முடைய இத்தனை நூல்களை ஒரே நேரத்தில் கொண்டு வருகிறது. கொஞ்சம் இணக்கமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும் என மனதில் எண்ணவோட்டங்கள் சுழன்றபடியிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழும், புத்தங்கள் குறித்தான அட்டை படங்களும் பின் அட்டை குறிப்புகளும் வந்து சேர்ந்தபோது மீண்டும் என்னை பதற்றம் கவ்விக்கொண்டது. அன்று எடிட்டர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து பின் கட்டுரைப் பற்றி கேட்டார். விரைவில் அனுப்பி வைக்கச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.
எனக்கு சங்கடமாக இருந்தது. அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத என் நிலைகண்டு நானே நொந்து கொண்டேன். அவர்களின் அழைப்பிதழையும், நூல் பற்றிய குறிப்புகளையும் படிக்கவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு நூல்பற்றியும் மிகவும் உயர்ந்த அபிப்ராயத்தை எழுதியிருந்தார் எடிட்டர். எனக்கே என் எழுத்து மீதான மரியாதை கூடியது. அழைப்பிதழில் என் பெயரை கொட்டை எழுத்தில் பார்த்த என் மனைவி அன்றிலிருந்து அந்தரத்தில் கால்பாவி நடக்கத் தொடங்கினாள்.
இரவு உறங்கப்போகும்போது என் மனைவி என் புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்புகளை வாசித்துவிட்டு என்னிடம் கேட்டாள்.
“எப்படிங்க உங்க புத்தகத்த பத்தி இவ்லோ உயர்வா எழுதியிருக்காரு?”
அவள் கிண்டலுக்கு கேட்கிறாளா எனத்தோன்றியது. அவளது முகத்தை உற்று பார்த்தேன். ஏதும் வித்தியாசம் தென்படாத நிலையில் அவளிடம் நான் சொன்னேன்.
“அவரு பெரிய படிப்பாளி டி. ஒரே ராத்திரியில போரும் அமைதியும் படிச்சி முடிச்சார்னா பாத்துக்கோயேன்.”
இப்போது என் மனைவியின் கண்களில் அச்சரியம் மின்னியது. ஆனாலும் வியப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டாள்.
“எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தா கூட, எப்படி இன்னும் முடிக்காத ரெண்டு புத்தகத்த பத்தி குறிப்பு எழுத முடியும்?”
அப்போதுதான் எனக்கும் உரைத்தது. நாம் இன்னும் இரு புத்தகங்களுக்கு தேவையான கையெழுத்து பிரதியையே அனுப்பவில்லை. அதற்குள் எப்படி குறிப்புகள் எழுத முடியும் எனும் கேள்வி எனக்குள்ளாகவே பூதகரமாக உருபெற தொடங்கியது. இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவியிடம் கூறினேன்.
“போடி போக்கத்தவளே. அவரு புத்தகத்த ஒரு தடவ பார்த்தா போதும். அத பத்தி டக்குனு சொல்லிடுவார் டி.”
அனாலும் என் மனைவி என் பதிலில் சமாதானம் கொள்ளாமலயே உறங்கச் சென்றாள். எனக்கு தான் இரவு, அடர்ந்த வனமாக தோன்றியது.
மறுநாள் பதிப்பகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. கட்டுரை கேட்டு தான். என்னால் பேசமுடியாமல் தவித்தேன். அவர்கள் கொஞ்சம் கோபத்தோடு இருப்பதாக உணர முடிந்தது. தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டு உழல்வதாகப்பட்டது. புத்தகம் போட ஏன் ஒத்துக்கொண்டோம் என்றும் தோன்றியது. நாளுக்கு ஒன்றென இருந்த அவர்களின் அழைப்பு ஒரு மணிக்கு ஒரு முறை என்றான போது எனக்கு கைபேசியை கண்டாலே பயம் ஏற்படத் தொடங்கியிருந்தது. என் மனைவியை அவர்களுக்கு பதில்கூற சொன்னேன். இதனால் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் மௌனம் சாதித்தாலும் கூட அவர்கள் என்னை அழைப்பதை நிறுத்தவில்லை. நேராக வந்து விடுவார்களோ என்றும் பயந்து நடுங்கினேன். இந்த நேரம் தான் என்றில்லாமல் எல்ல நேரங்களிலும் தொலைபேசி ஒலிக்கவே என் மனைவியும் மகளும் வேறு அறையில் தூங்கப் பழகிக்கொண்டனர். தொலைபேசி அழைப்புகள் என்னை நீடித்த பயத்திலேயே வைத்திருந்தன.
ஒரு நாள் மாலை வேளை நானும் எனது நண்பனும் கூட்ரோட்டில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது என் செல்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன், கூகை பதிப்பகம் என்றிருந்தது. அழைப்பை என் நண்பனின் செல்பேசிக்கு மாற்றி, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் தொலைபேசி ஒலிக்க, எடுத்து அவர்களுடன் பேசினான்.
யார் நீங்க?
“சார் நாங்க கூகை பதிப்பகத்திலிருந்து பேசுறோம் நடுக்கோம்பை நாராயணசாமி சார் தாங்களே”
“இல்லைங்க சார். நான் அவரோட பிரண்ட்”
“பரவாயில்லைங்க சார். நீங்களும் எழுத்தாளரா?”
அவனுக்கு ஏதும் புரியவில்லை. எந்த பதிலையும் கூறும் நிலையிலும் அவன் இல்லை. மெல்ல அவன் ஓர் எழுத்தாளராக அந்த நிமிடத்திலிருந்து உருக்கொள்வதாகத் தோன்றியது.
சில நாட்களுக்கு பின் காலை நடையின்போது தானும் கதைகள் எழுதுவதாகவும் மொழிப்பெயர்ப்பு செய்வதாகவும் கூறி என்னை பார்த்து கண் சிமிட்டினான்.
பறவைகள் அங்கு மிங்குமாக திரியத் தொடங்கின. சூரியன் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது.


இணைப்பு : 1
நூல் வெளியிடு 2009
கூகை பதிப்பகம், 18, தட்டாவட்டி சாலை, பேர் பெரியாங்குப்பம் .605 701 . email: koogai@gmail.comwww.koogai.com

நடுக்கோம்பை நாராயணசாமியின் பத்து நூல்கள்

1. வாசித்து முடித்த வரிகள்

ஆசிரியர் தன் பால்யத்திலிருந்து இதுவரை வாசித்து முடித்த உலகின் அதி முக்கியமான நூறு புத்தகங்களைப் பற்றிய விரிவான பதிவு. உலக இலக்கிய போக்குகளை நுட்பமான முறையில் எழுதிச் செல்லும் ஆசிரியர் இடையிடையே அவ்வப்பொழுது செயல்பட்ட இலக்கிய அரசியலையும் கராறாக விமர்சிக்கிறார். எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் நூலகத்தில் அவசியம் இடம் பெற வேண்டிய நூல் இது.
480 பக்கங்கள் விலை ரூ 240


2. நெடிய இரவின் பிடியில் உறங்கும் கோடம்பாக்கம்

உலகின் அதி உன்னத திரைப்படங்களைப் பற்றி பேசும் மிக முக்கிய புத்தகம். உலகத்திரைப்படங்களின் துணை கொண்டு ஆசிரியர் மிகவும் நடுநிலையாக இந்திய, தமிழ் திரைப்படங்களை அலசியிருக்கும் கட்டுரை நூலின் பெரும் பலம். நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள நைஜிரிய இயக்குனர் ‘லால் சலாம் ஜிம்போ’ வின் நேர்காணல் புத்தகத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.
280 பக்கங்கள் விலை ரூ 120

3. அல் ஜீப்ராவையும் அமீபாவையும் நாம் ஏன் கற்க வேண்டும்? (கல்வியியல் சிந்தனைகள்)

இன்றைய கல்வி முறையை கூர்மையாக விமர்சனம் செய்யும் நூல் இது.மனநோயாளிகளின் கூடாரமாகிவிட்ட நமது கல்விச்சாலைகளை தனது மாணவப் பருவ கண்கொண்டு அணுகும் ஆசிரியர், அவரின் பாடக்குறிப்பேடுகளின் உதவியுடன் இன்றைய திட்டங்களை ஆய்வு செய்வதால் ஓர் அய்வறிக்கையை வாசிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதே நூலின் பலத்திற்கு ஓர் சான்று.
200 பக்கங்கள் விலை ரூ 110

4. துளையிலிருந்தெழும் பேரிசை

சமீபத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான இசை நூல் இது . கென்ய, அரேபிய, நைஜிரிய இசைக்கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசுவதுடன் பல்வேறு இசை வடிவங்களையும், அக்கலைஞர்களையும் பற்றி விரிவாக அலசுகிறது இந்நூல். தமிழ் மெல்லிசை வடிவங்களின் போதாமைகள் குறித்தும் ஓர் விரிவான கட்டுரை உண்டு. மொராக்கோ இசைக்கலைஞர் ஜும்போ செம்பேன் அவர்களின் நேர்காணலும், இசைக்குறிப்புகளும் அடங்கிய மிக முக்கிய தொகுப்பு இது.
340 பக்கங்கள் விலை ரூ 180

5. காத்தாயி சொன்ன காரிருள் கதைகள் (பாலியல் கதைகள் ஒரு நூறு )

இன்றைய நவீன வாழ்வில் பெருஞ்சிக்கலாக உருக்கொண்டிருக்கும் காமம், கடந்த நூற்றாண்டுகளில் எப்படி அணுகப்பட்டது என்றும், அப்போது புழக்கத்திலிருந்து இப்போது இல்லாமல் போன மிக நுட்பமான நூறு பாலியல் கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. காமத்துக்கும் உளவியலுக்குமான நுட்பமான ஓர் கட்டுரை முனைவர் பால் பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது. அனைவரும் வாசிக்க வேண்டிய ஓர் அரிய தொகுப்பு இது,
600 பக்கங்கள் விலை ரூ. 350

6. அந்த பாறை வளர்ந்து கொண்டே இருக்கிறது (மொழி பெயர்ப்பு சிறு கதைகள் )

மதம் இனம் தேசியம் எனும் கற்பிதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு, அதிலேயே உழலும் நமது எழுத்துக்களுக்கு மத்தியில் இது போன்ற கதைகளின் வரவே நம் இலக்கியப் பரப்பை மேலும் விரிவுபடுத்தும். தற்கால உலக இலக்கியத்தின் போக்கை இக்கதைகள் வழி அறிய முடிகிறது. மேலும் கதை சொல்லுதலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் துல்லியமாக பதிவு செய்கிற இந்நூலை ஆசிரியர் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார்.
184 பக்கங்கள் விலை ரூ. 110

7. கூந்தலில் நீர்மை கொண்ட ஜக்கம்மாவின் கதை
ஜக்கம்மா எனும் பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் மூன்று நூற்றாண்டுகளில் பயணிக்கிறார். காலந்தோறும் பெண்களின் அவலங்களை பேசும் நூல், இடையிடையே பெண்கள் செய்த தந்திரங்கள், படுகொலைகள், அட்சி கவிழ்ப்புகள் அகியவற்றையும் விவரிக்கிறது. எனவே நாவலுக்கு ஓர் சமகால அரசியல் படிமம் கிடைத்து விடுகிறது. பெண்களை மையமாகக் கொண்டு தமிழில் இது போன்ற ஓர் விரிவான நாவல் இதுவரை எழுதப்படவேயில்லை என்பதை உரத்துக் கூறலாம். தொன்மத்தை ஆசிரியர் நேர்த்தியாக கையாண்டிருப்பது நாவலின் மற்றுமொரு பலம். பெண்களின் அரசியலை விரிவான தளத்தில் பதிவு செய்திருக்கும் இந்நாவல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
720 பக்கங்கள் விலை ரூ. 430

8. ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை (சமீபத்திய சிறுகதைகள்)

2000க்கு பின் எழுதிய பதினாறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நுண்ணிய விவரிப்புகள், கதை கூறலில் நவீனத் தன்மை, வசனங்களின் கச்சிதம் அனைத்தும் கூடிய நேர்த்தியான கதைகள் அடங்கியிருக்கின்றன. தொகுப்பின் அகச் சிறந்த கதைகளான “பொம்மியக்காவின் உதிரம்” “ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை”, “ஜடாயுவின் துண்டான இறக்கை” மூன்று கதைகளையும் அவசியம் படித்தேயாக வேண்டும். இது உண்மை. இதில் எழுத்தாளரின் புனைவெழுத்தின் வேகம் பெரும் வீச்சோடு வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
192 பக்கங்கள் விலை ரூ. 110

9. நடுக்கோம்பையும் நாகலிங்க மரமும் (பயணக் கட்டுரைகள்)

அடிப்படையில் தன்னை ஓர் பயணி என அறிமுகப் படுத்திக் கொள்ளும் எழுத்தாளரின் இதுவரை வெளியான பயணக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு. நம் தேசத்தை குறுக்கும் நெடுக்குமாக அலைந்து அனுபவித்து சேகரித்த அரிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளும் களமாக விரிவு கொள்கிறது நூல். ஆசிரியர் எடுத்த கலை நுட்பத்துடன் கூடிய புகைப்படங்கள் நூலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. பயணம் நமக்கு நிறைய கற்றுத் தருவதைக் கட்டுரைகளின் வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். நிச்சயம் நம்மை பயணிக்கத் தூண்டும் ஓர் நூல்.
220 பக்கங்கள் விலை ரூ. 130

10. கண்டாச்சிபுரத்தில் பறக்கும் தும்பிகளைப் பற்றி கார்சியா காப்ரியேல் மார்க்வெஸ் எழுதாதது ஏன்? (புனைவெழுத்தின் மீதான அரசியல் கட்டுரைகள்)

நோய்க்கூறான சமூகத்தில் வாழ நேர்ந்து விட்ட அவலத்தில் துடிக்கும் எழுத்தாளனின் வெளிப்பாடுகளில் அரசியல் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் புனைவெழுத்தில் கட்டமைக்கப்படும் நுண் அரசியலையும், ஜாதி அடையாளங்களையும் ஓர் எழுத்தாளன் கண்டிப்பாக அடையாளப்படுத்தி அலட்சியப்படுத்தவும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட பனிரெண்டு எழுத்தாளர்களின் கூர்மையான கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. மொழிபெயர்ப்புகள் மூலம் நிகழ்த்தபடும் அரசியலும், அதன் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும் எழுத்தாளர்களின் பட்டியல் கொண்டுள்ள அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன கட்டுரைகள், அவசியம் அனைவரும் வாசித்து அறிய வேண்டிய நூல்.
130 பக்கங்கள் விலை ரூ. 80


இணைப்பு : 2
நூல் வெளியிடு 2009
நூல் வெளியீட்டு அரங்கு - மூன்று

நடுக்கோம்பை நாராயணசாமியின் பத்து நூல்கள்

நாள் : 15.1.2009 திங்கள், மாலை 5.00 மணி

இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை.

தலைமை : திரு.பெர்முடாஸ் பெரைரோ, கலாசார அமைச்சர், மொரிஷியஸ்,
முன்னிலை : திருமதி.அமிர்தானந்த கட்டாரியா, இ.ஆ.ப. ஒரிஸ்சா,
வரவேற்புரை : கவிஞர் திரு. கானாடு காத்தான்

பங்கேற்பு :
எழுத்தாளர் திரு. அண்டோனியா முழக்கோ, கீன்யா
எழுத்தாளர் திரு. பாஸ்பைண்டர் வெரோனிகா, கூபா
இசைஅறிஞர் திரு. சால் ஜமைக்கா டெரி, மொராக்கோ
நடிகர் திரு. இயான் கீமேட் பிளமிங், இங்கிலாந்து
நடிகர் திரு. ஹென்றி போர்டு மூர், அயர்லாந்து
திரு. பிரேமானந்தா கணேசலிங்கம், இலங்கை
திருமதி. இட்லியான அட்வுஸ், துணைவேந்தர், அமெரிக்கா
செல்வி. ஓமனக்குட்டி அப்பசன், கேரளா
நீதியரசர் திரு. விட்டாலோ பென்ஜமின், உலக பன்னாட்டு நிறுவனம், ஜெனிவா.
வேந்தர் திரு. அருளானந்தம், ஏசிடி பல்கலைக்கழகம், மைசூர்.
இயக்குனர் திரு. விட்டோரி நைரி மோல், போலந்து.

வெளிவரும் நூல்கள்
. வாசித்து முடித்த வரிகள் . நெடிய இரவின் பிடியில் உறங்கும் கோடம்பாக்கம் . அல் ஜீப்ராவையும் அமீபாவையும் நாம் ஏன் கற்க வேண்டும்? . துளையிலிருந்தெழும் பேரிசை . காத்தாயி சொன்ன காரிருள் கதைகள் . அந்த பாறை வளர்ந்து கொண்டே இருக்கிறது . கூந்தலில் நீர்மை கொண்ட ஜக்கம்மாவின் கதை . ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை . நடுக்கோம்பையும் நாகலிங்க மரமும் . கண்டாச்சிபுரத்தில் பறக்கும் தும்பிகளைப் பற்றி கார்சியா காப்ரியேல் மார்க்வெஸ் எழுதாதது ஏன்?

நன்றியுரை : எழுத்தாளர் திரு. நடுக்கோம்பை நாராயணசாமி

உங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும் :கூகை பதிப்பகம், 18, தட்டாவட்டி சாலை,பேர் பெரியாங்குப்பம் .605 701. email: koogai@gmail.comwww.koogai.com

Tuesday, May 05, 2009

எல்லாம் திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறது


ஒரு எழுத்தாளனாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னால் ஏதாவது பங்காற்ற முடியுமா என யோசிக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த தேர்தலை எதிர்கொள்வதில் நமக்கு ஏற்படும் பெரிய சிக்கலே யார் எதிரி, யார் தோழன் என உணரமுடியாததே. ஒரே விதமான சொற்களையே அனைவரும் பயன்படுத்துகின்றனர்.உச்சரிக்கும் விதத்தைக்கொண்டே ஒருவர் வேற்று முகாமை சார்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. இளம் வயதில் நண்பர்களுடன் விளையாட்டாக சண்டைபோட்டுக்கொண்டு பிறிந்து மீண்டும் சேரும் போது ஒருவித கூச்சமும் நெருடலும் ஏற்பட்டு சங்கடப்பட்டிருக்கிறது மனம். அவ்வாறான நமக்கு நம் அரசியல்வாதிகளைப் பார்த்தால் சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது.ஐந்தாண்டுகள் ஒரு அணியில் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு கடைசி நொடியில் சிரித்த முகத்தோடு எந்த வித நெருடலோ கூச்சமோ சிறிதும் இன்றி எதிர் அணிக்கு தாவவும் ஒரு திறன் வேண்டுமல்லவா?. அதற்காக நம் அரசியல்வாதிகளை அவசியம் நாம் பாராட்டித்தானாகவேண்டும். ஒரு புனைவெழுத்தாலனைக் காட்டிலும் கூடுதலான கற்பனைத்திறத்தோடு அவர்கள் மக்களிடம் பல வினோதமான கதைகளை உருவாக்கி தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகின்றனர்.
பிய்ந்து தொங்கும் உங்கள் கூறை வீட்டின் சாணம் மெழுகாத தரையில் அமர்ந்து உங்களோடு சேர்ந்து கம்பங்கூழைக் குடிக்க ஆசைப்படும் அந்த நபர் உங்கள் தொகுதியின் ஏதாவது ஒரு அணியின் வேட்பாளராக இருக்கலாம். ஐந்தாண்டுகள் தொகுதிப் பக்கமே திரும்பி பார்க்காத உங்கள் உறுப்பினர் நீங்கள் தேனீர் அருந்தும் கடையில் உங்களுடன் உரையாடிக்கொண்டே தேனீர் அருந்தும் அதிசயத்தையும் நீங்கள் காண நேரலாம். வானம் பார்த்த பூமியில் மழைக்கு ஏங்கி காராமணிச்செடிகளைப் பார்த்து பெருமூச்சு விடும் உங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓடோடி வரக்கூடும். உங்களூர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்துகூட இதுவரை நீங்கள் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுவந்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் அதிசயம் நிகழும்.இந்த காட்சிகளை ஒரு எழுத்தாளனாக உள்வாங்கும் போது ஏற்படும் மனநெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவே மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு” எனும் வடிவேலுவின் நகச்சுவைதான் நம் அரசியல்வாதிகளை பற்றி நினைக்கும்போது எனக்கு ஏற்படுகிறது.
உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இக்காலகட்டத்தில் மிகவும் லாபகரமான சந்தையாக இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகழ்கிறது.தேனீர் கடைகளில் சர்வசாதாரணமாக புழங்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பதன் மூலமாக நமது ஜனநாயகத்தின் இன்றைய போக்கைப் புரிந்து கொள்ளமுடியும். தங்கி இருக்கும் இடத்திலிருந்து பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு ஒருமுறை சென்று திரும்ப நம் தலைவர்கள் செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?. சுமார் அறுபதாயிரம் ரூபாய். ஆனால் இவர்கள் தான் நம் ஏழைப்பங்காளர்கள்.எல்லாம் காலத்தின் கட்டாயம்.இந்த சூழலில் இடதுசாரிகள் யார், திராவிட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யார் என்பதை கண்டுணர முடியாதபடி எல்லோரும் சலிப்பான அரசியல் மொழிகளையே பேசிவருகின்றனர். மக்கள் ஜனநாயகத்தால் கட்டப்பட்ட நமது இந்தியாவை முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கித் திருப்பிய பெருமை அனைத்துக் கட்சி தலைவர்களுக்குமே உண்டு. வேட்பாளர்களின் நேர்காணலின் போது அவர்களிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதுதான். இந்த கேள்வியில் அடங்கியிருக்கும் அரசியலைக் கொண்டு நம்முடைய இன்றைய தேர்தலை புரிந்துகொள்வது மிக சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
குடும்ப அரசியலை யார் யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் அனைவரும் அதே சாக்கடையில் வீழ்ந்து தங்களது பச்சோந்தித் தனத்தை தமிழகத்திற்கு உணர்த்தியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாகிறோம். மக்களவை இடங்களோடு தன் மகனுக்காக மாநிலங்களவை இடத்தை சிறிதும் கூச்சமின்றி கேட்டுப் பெரும் மருத்துவர் ராமதாஸை இந்த விஷயத்தில் யாராளும் விஞ்சமுடியாது. தலைவர்களின் இம்மாதிரியான தடித்தனமான போக்கிற்கு முதல் காரணம் தொடர்ந்து அவர்களின் அடிவருடிகளாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட அக்கட்சித் தொண்டர்கள்தான். சுய லாப நோக்கங்களுக்காக நம் தலைவர்கள் மிக மோசமான தொண்டர்களையே தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் அவர்களால் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிகிறது.
ஈழத்தமிழர் பிரச்சனை இந்த தேர்தலில் பிரதான இடம் வகிக்கும் எனத் தெரிந்தவுடன் தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்ட கூத்துகளுக்கு அளவே கிடையாது. யுத்தமென்று வந்தால் சிலர் கொல்லத்தான் படுவார்கள் என்றும் அங்கு நடப்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் பேசிவந்த அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா திடீரென இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுதான் இதுவரை அரங்கேற்றப்பட்டதிலேயே முக்கிய கூத்தாகும். மனிதச்சங்கிலி, ரயில் மறியல், கடை அடைப்பு போன்றவைகள் கூத்திற்கு வலுசேர்ப்பவைகளாகவே பயன்பட்டன. தினம் தினம் இலங்கையில் செத்து மடியும் தமிழர்களின் பிணங்களைக் கொண்டு இங்கு அரசியல் செய்யும் நம் தமிழகத் தலைவர்கள் நிச்சயம் கொலைகார சிங்களவெறியன் ராஜபக்‌ஷேவைவிடவும் மிகக் குரூரமானவர்கள்.
ஒரு எழுத்தாளனாக இந்த அசிங்கங்களைக் கடந்து செல்வது நிச்சயம் இயலாத காரியமே.தேர்தல் பிரச்சாரங்களையும் நம்முடைய தலைவர்களின் மேடைமுழக்கங்களையும் எதிர்கொள்ள நிச்சயம் தனித்திறன்வேண்டும்.அத்திறனைப் பெற நாம் எல்லாவற்றையும் இழந்து சூடு சுரணை அற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனாலும் எத்தனை நாட்கள்தான் மழையில் நனையும் எருமை மாட்டைப் போன்று அமைதியாகப் பொருத்துக்கொண்டிருக்க முடியும்?. நம் தலைவர்களின் தடித்தனங்களுக்கும் குரூரங்களுக்கும் எதிராக நம் குரலை ஒரு சிறிய அளவில் கூட உயர்த்த தயங்குவோமாயின் நம்மைவிடவும் கீழானவர்கள் வேறெவரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நெருக்கடியான இந்த அரசியல் சூழலில் நிச்சயம் உங்களின் கருத்துக்களும் எதிர்வினைகளும் இன்னும் கூடுதலான பல வாசல்களைத் திறக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

ஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்


செங்காந்தள் நிறமொத்த
அவள் பின்னால்தான்
அவர் சென்றதாக
மாடவீதி மக்கள் பேசிக்கொண்டனர்

அகாலத்தில் அவர்
அவ்வாறு சென்றது
அதிர்ச்யையேற்படுத்த
மடவிளாகச் சாமியாரை
மண்டியிட்டது
அர்ச்சகர் கூட்டம்

ஊர் என்ன பழிக்குமோ
நாடென்ன பேசுமோவென
அச்சத்தில் இருந்தார்
குரு மகாசன்னிதானம்

திருக்காப்பிட்ட பின்
தேவடியா மகனுக்கு
தெருவில் என்ன வேலையென்று
ஓர் கூட்டம்
கத்திச் சென்றது

கையும் களவுமாக
பிடிபட்டவுடன்
குனிந்த தலை நிமிராது
கருவறை நோக்கிச் சென்றார்
எல்லாம் அறிந்த
இராமநாதீஸ்வரர்

எள்ளும் கொள்ளும் வெடிக்க
ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்
உடனுறையும்
ஞானாம்பிகை

மரு நாளிலிருந்து
மடிமீது
அவளை அமரவைத்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்
அவர்
அன்றிலிருந்து தான்
அவருக்கு
சுய இன்பப்பழக்கம்
ஏற்பட்டிருக்குமென
குரு மகாசன்னிதானம்
கூறத்தொடங்கினார்

உடனுறையும்
ஞானாம்பிகைக்கு
எந்தக் கேடும்
இப்போது
இல்லை.

இறுதியில் நீ பூங்கொத்துடன் வருகிறாய்-கவிதை


வெகுநாட்களாக
நிரப்பப்படாமலிருக்கிறது
பிரியத்தால் வேயப்பட்ட
என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது
உன் வருகையை எதிர்பார்த்து
பகிர்ந்து வைக்கப்படும்
ஒரு கோப்பை தேனீர்
ஒரு கோப்பை மது
(நஞ்சு எப்போதும் பகிர்ந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது)

நீண்ட என் அழைப்புகள்
ஓர் காத்திருப்பை முன்னிறுத்தி
விசும்பலாகி
மெல்லக் கரைகின்றன

கிழக்கிலிருந்து புறப்பட்டு
மேற்கில் சென்று ஒடுங்குகின்றன
பகல்கள்
ஒரு வயோதிகனைப்போல

அனேக இரவுகளில்
பெரும் புயலென
உருக்கொள்கிறது
தனித்து விடப்பட்டதன் துக்கம்

பிரளயத்திற்குப்
பிறகான ஓர் அந்தியில்
நீ வந்து அமர்கிறாய்
பசிய பூங்கொத்துடன்
இனி எப்போதுமே
நிரப்ப முடியாதபடிக்கு
காலியாகிவிட்ட என் இருக்கையை உணராது
(ப்ரியத்துக்கு...)

புன்னகையின் உள்ளர்த்தம்-கவிதை


தான்
ஒரு யானையால்
வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை
காவலர்கள் முன்னிலையில்
மீண்டுமொரு முறை கூற வேண்டியிருந்தது
அந்த எரும்புக்கு

சாட்சியம் உள்ளதா
என்ற காவலரிடம்
தன் வயிற்றைக் காட்டி
யானையின் கருவை
தான் சுமந்துகொண்டிருப்பதாக்க் கூறியதும்
சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுக்கு

எல்லா இடங்களிலும்
புன்னகைக்கும் இதழ்களின் இடையே
ஒரு புழுவைப்போல நெளிந்தபடி இருக்கின்றன
சிலரின் பரிதவிப்புகள்.

Thursday, April 23, 2009

புனைவின் கலை-1


பேட்டியாளர்:நீங்கள் ஆங்கிலத்தில் வாசித்த முதல் புத்தகம் எது?
ஹாருகி முரகாமி:ரோஸ் மேக் டொனால்டு எழுதிய “தி நேம் ஈஸ் ஆர்ச்சர்”(The name is Archer).அப்புத்தகத்திலிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.ஒருமுறை வாசிக்கத் தொடங்கிவிட்டால் இடையில் என்னால் நிறுத்த முடியாது.அதே கால கட்டத்தில் டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவெஸ்கியையும் வாசிப்பதில் பெருவிருப்பமிருந்தது. நீண்டதும், வாசிக்க வாசிக்க பக்கங்கள் வளரக்கூடியதுமான அப்புத்தகங்களை, வாசிப்பதை என்னால் நிறுத்த முடிவதில்லை.தாஸ்தாயெவெஸ்கியும் ரேமண்ட் சாண்ட்லெரும்(Raymond Chandler) ஒரே தன்மையினராகவே எனக்கு தோன்றுகின்றனர்.இப்போதுகூட என் புனைகதை எழுத்தில் என் தனித்துவமான முயற்சி என்பது தாஸ்தாயெவெஸ்கியையும் சாண்ட்லரையும் ஒன்றிணைத்து ஒரே புத்தகத்தில் கொண்டுவருவதுதான்.அதுதான் என் இலக்கு.

ஆங்கிலத்தில்: ஜான் ரே
தமிழில்: காலபைரவன்
நன்றி: தி பாரிஸ் ரிவிவ்.

இப்போதுதான் நீங்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் -கவிதை


எப்படி ஓட்டினாலும்
விழாத இருசக்கர மோட்டார் சைக்கிளை
தயார் செய்துவிட்டீர்கள்
வாழ்த்துகள்

பின் விதவிதமாக ஓட்டிப் பார்க்கிறீர்கள்
கைகளை விட்டு
கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டு
எழுந்து நின்றபடி
எப்படி ஓட்டினாலும்
வாகனம் விழுவதாக இல்லை

சில நாட்களில்
உங்கள் வாகனத்தின் திசையிலோ
அல்லது
எதிரிலோ
எந்த வாகனமும் வருவதில்லை
கொஞ்ச நாட்களில்
தனிமையில் ஓட்டுவது
உங்களை சலிப்படையச் செய்கிறது

பின்னர்
அது வாகனம்தானா என்ற ஐயம்
மெல்ல எழுகிறது
குற்றவுணர்ச்சிக்கு நீங்கள் ஆட்படுகிறீர்கள்
வாகனம் பற்றிய கவலை உங்களை
அலைக்கழிக்கிறது

இன்று எப்படியாவது
விழுந்தே ஆவதென
தீர்மானத்துடன் ஓட்டும் நீங்கள்
சிறு கல் தடுக்கி
தூக்கி தூர எறியப்படுகிறீர்கள்
எந்த சலனமுமற்று
அதன் திசைவெளியில் பயணிக்கின்றது
உங்கள் வாகனம்

Wednesday, April 15, 2009

மரணம்-கவிதை


ஒரு நல்ல ஆசிரியரைப் போல
கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல
நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல
நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல
தன் வேலையை
மிக கச்சிதமாகவும்
பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்
செய்து முடிக்கின்ற
மரணத்தை
நாம் ஏன்
தவறாகப் புரிந்துகொள்கிறோம்

Tuesday, April 07, 2009

பெருமூச்சின் வெப்பம் படிந்த கதைகள்


எதார்த்தத் தளத்திலும் கனவும் கற்பனையும் குழைந்த புனைவுத் தளத்திலும் சரிசமமான அளவில் படைப்பு முயற்சிகளில் ஆர்வத்துடன் சமீப காலமாக இயங்கிவரும் கால பைரவன் முக்கியமான ஓர் இளம் படைப்பாளி. அவர் சித்தரித்துக் காட்டும் புற உலகம் பெரும்பாலும் நம் பார்வையில் நித்தமும் படக் கூடிய ஒன்றுதான். மருத்துவமனைகள், கலவரம் நடக்கும் சாலைகள், நகரப் பேருந்து, பனைகள், எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட பார், மண்ணால் மூடப்பட்ட கிணறு, மாட்டுத் தொழுவம், பள்ளிக்கூடம் என்பவை கதைகள் நடக்கும் ஒருசில களங்களாகக் காட்டப்படுகின்றன. பழகிய இடங்களைப் பற்றி மிகக் குறைவான வாக்கியங்களையே காலபைரவன் பயன்படுத்துகிறார். குறைவான வரிகளாலேயே இடம்சார்ந்த குறிப்புகள் தரப்பட்டுக் களம் அமைக்கப்பட்டுவிடுகிறது. கதைக் களத்தை நிறுவுவதற்கான முயற்சிகளுக்கு அழுத்தம் தருவதைவிடக் கதை மாந்தர்களின் நெஞ்சுக்குள் நுழைந்துவரும் முயற்சிகளுக்கு அழுத்தம் தருவதில் காலபைரவன் ஆர்வமுடன் இயங்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. 'புலிப்பாணி ஜோதிடர்' என்னும் தலைப்பில் அவருடைய சிறு கதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வந்துள்ளன. தொகுப்பின் எல்லாக் கதைகளையும் மனத்துக்குள் ஒரு முறை அசைபோட்டுப் பார்க்கும்போது அவரது கதைகளின் உலகத்தைப் பெருமூச்சுகளின் வெப்பமடர்ந்த ஒன்றாக உருவகித்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது.

'பனைகளின் காலம்' சிறுகதையை அவருடைய எழுத்தாற்றலுக்கான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இக்கதையில் பனைகள் ஒரு பெண்ணின் மனத்தில் தன் தந்தையின் படிமமாகப் பதிந்திருப்பதும் அதே மரங்கள் பணத்தின் படிமமாக மட்டுமே ஒரு பேரனின் மனத்தில் தங்கிப்போயிருப்பதும் மிக அழகாக முன்வைக்கப்படுகின்றன. தன் தாய்க்குத் தந்தையின் மீது இருக்கும் அளவற்ற பாசத்தை அவள் மகன் நிச்சயம் உணர்ந்திருக்கக்கூடும். பனைகளின் அருகில் உட்கார்ந்து அப்பாசத்தை மீட்டி அதன் இசையில் அவள் ஆழ்ந்துவிடுவதைப் பற்றியும் அறிந்திருக்கக்கூடும். அறிந்தும்கூட ஏன் அப்பனைகளை வெட்டினான் என்னும் கேள்வி சிறுகதையை இன்னும் நெருக்கமாகப் பார்க்க உதவக்கூடும். பனைகளின் காலம் வேறு, பணத்தின் காலம் வேறு என்ற அப்பட்டமான உண்மையை எதார்த்த வாழ்வில் புரிந்துகொண்டவனாக இருக்கிறான் அவன். அவளுக்குப் புரியாத உண்மை அவனுக்குப் புரிந்துவிடுவதற்குக் காரணம், பணத்தின் காலத்தில் அவன் காலூன்றி வாழ்வதுதான் என்று தோன்றுகிறது. ஒரு தாயின் உணர்வுகளை ஒரு மகனால் மதிக்கத் தெரியாத சூழல் ஏன் இந்த உலகில் உருவாகிறது? தாயாக இருந்தாலும் அவளை ஒரு பெண்ணாக மட்டுமே ஓர் ஆண் பார்க்கிறான் என்பது காரணமாக இருக்க முடியுமா? ஒரு பெண்ணின் மனம் என்பது ஓர் ஆணால் எப்போதும் அறிந்துகொள்ள முடியாத ரகசியக் குகைதானா? விரிவடையும் இக்கேள்விகள் கதையை நல்ல அனுபவமுள்ளதாக மாற்றிவிடுகின்றன.

பாவண்ணன் பார்வையில்-இளம் படைப்பாளி காலபைரவன்

கடக்க முடியாமையின் துயரம் -"விலகிச் செல்லும் நதி"- காலபைரவன் சிறுகதைகள்


கனவும் கற்பனையும் குழைந்த சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் மிகுந்தவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலபைரவன் தன் இரண்டாம் தொகுதியிலும் அதேவகையிலான சிறுகதைகளை மேலும் சிறப்பான முறையில் படைத்துள்ளார். இச்சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது 'கடக்க முடியாமையின் துயரம்' என்னும் பொதுஅம்சம் இக்கதையுலகில் இயங்குவதைக் காணமுடிகிறது. கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின்
அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது, சாதி உணர்வைக் கடப்பது, அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறாக காலபைரவன் பயன்படுத்துகிறார். இத்தகு தளமாற்றம் காலபைரவன் சிறுகதைகளில் இயங்கும் வசீகரத்துக்கு பெரிதும் துணைநிற்கிறது.



'கடக்க முடியாத இரவு' தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகச் சொல்லலாம். ஆண், பெண் உறவில் உள்ள நிராகரிப்பின் துயரத்தை முன்வைத்து விரிகிறது இச்சிறுகதை. மனைவியின் தொடர்ச்சியான விலகலைத் தாங்கிக்கொள்ளவும் விலகலுக்கான முதற்காரணம் என்னவென புரிந்துகொள்ளவும் இயலாத கணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. ஊராரின் பார்வையிலும் அவன் நண்பர்கள் பார்வையிலும் அருவியில் குளிக்கப்போய் கால்சறுக்கி விழுந்ததால் நிகழ்ந்த மரணமாகவே அது காட்டப்படுகிறது. தொடக்கத்தில் அவன் மனைவிகூட அப்படித்தான் நம்புகிறாள். ஆனால் மறுநாள் அலுவலகத்தில் அவளுக்குத் தரப்படும் கடிதத்தின் மூலமாக அவன் தானாகவே அம்மரணத்தைத் தேடிக்கொண்டான் என்கிற உண்மை புரிகிறது. அன்பையும் உறவையும் உடலின்பத்தையும் காலமெல்லாம் யாசித்தவனுடைய மரணம் அவள் மனத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. அவன் கேட்டவை அனைத்தையும் வாரி வழங்கும் ஆவல் அவள் நெஞ்சில் பொங்கித் ததும்பத் தொடங்குகிறது. துரதிருஷ்டவசமாக அவற்றை ஏற்றுக்கொள்ள அவன் உயிருடன் இல்லை. உருட்டிக்கொடுத்த சோற்றுருண்டையை முகம்திருப்பி நிராகரித்தும் உடலின்பத்துக்காக நெருங்கி அணைத்தபோது விலகிப்போ எனச் சொல்லி நிராகரித்தும் தைக்கிற சொற்களை உதிர்த்தும் அவள் நடந்துகொண்டவிதம் கடக்கமுடியாத ஒன்றாக இரவுகளை மாற்றிவிடுகின்றன. அனைத்தையும் வழங்குவதற்கான மனநிலையை அவள் அடையும் தருணத்தில் அவனில்லாமல் தனித்துவிடப்பட்ட சூழலில் கடக்கமுடியாத ஒன்றாகவே மீண்டும் இரவுகள் மாறிவிடுகின்றன. ஒருபக்கம் அறியாமையின் மூர்க்கத்தாலும் அல்லது தெளிவின்மையின் குழப்பத்தாலும் கடக்கமுடியாத சுமையாக முடிந்த இறந்த கால இரவுகள். இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியும் விருப்பமும் கூடிவந்தபோதும் பகிர்ந்துகொள்ள துணையின்றி கடக்கமுடியாத வேதனையில் பாரமாகும் நிகழ்கால இரவுகள். மனித சமூகம் காமத்தைப் புரிந்துகொள்ள முடியாத புதிராக ஏன் சிக்கலாக்கிக்கொள்கிறது என்ற கேள்வியோடு எஞ்சும் புள்ளி சிறுகதையில் வாசக இடைவெளிக்கான முக்கியமான கட்டம்.



'ஆற்றைக் கடத்தல்' தொகுப்பில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை. ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளுக்கு ஒரு புதிய விளையாட்டை ஆடுவதற்காகக் கற்றுத் தருகிறார். வழக்கமான விளையாட்டை ஆடிஆடிக் களைத்த பிள்ளைகளுக்கு, அந்த அலுப்பைக் கடக்கும் விதமாக கற்பனை கலந்த ஒரு புதிய விளையாட்டைக் கற்பித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். கட்டாந்தரையில் ஒரு வட்டத்தை வரைந்து பிள்ளைகளை அதைச் சுற்றி நிற்கச் சொல்கிறார். வட்டப்பாதைக்கு உள்ளே இருப்பதுதான் கற்பனை ஆறு. பிள்ளைகள் வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். விசில் சத்தம் எழும் தருணத்தில் கோட்டிலிருந்து விலகி ஆற்றில் நிற்பவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும். இதுதான் ஆட்டத்தின் விதி. ஆற்றில் இறங்கி நிற்பவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றியபடி ஆட்டம் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. இது ஆசிரியர் தொடங்கிவைத்த கற்பனை. இரண்டு மூன்று சுற்றுகளில் பிள்ளைகளும் அக்கற்பனையில் மூழ்கிவிடுகிறார்கள். நிஜமான ஆறாகவே அந்த வட்டத்தை நினைத்து அதில் பயணம் செய்யும் கற்பனையில் பிள்ளைகள் தனியே ஈடுபடும்போது கற்பனையில் சூடு பிடிக்கிறது. கற்பனைக்குள் இன்னொரு கற்பனை. அது இன்னொரு உலகமாக விரிகிறது. ஆசிரியர் கற்பனையில் மாணவர்கள் ஒவ்வொருவராக வட்டத்திலிருந்து விலகி வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் கற்பனையில் ஊர் மக்கள் புகாருக்கும் கோபத்துக்கும் ஆளாகி பதில்பேச இயலாத பலவீனமாக ஆளாக தலைகுனிந்து நிற்கிறார். இந்த விசித்திரம் வழங்கும் ஆனந்தம் மகத்தானது. அலுப்பின் புள்ளியிலிருந்து விந்தையும் விசித்திரமும் இணைந்த புள்ளியை நோக்கிக் கடந்துபோகிறது கதையுலகம்.



கன்னிமார்கள் பற்றிய தொன்மக் கதைக்கரு இரண்டு சிறுகதைகளில் இடம்பெறுகிறது. 'பச்சபுள்ளாகுளம்', 'சாரிபோகும் கன்னிமாரர்கள்' ஆகியவை அச்சிறுகதைகள். மானுடகுலத்தின் தீராத பசியான காமமே இக்கதைகளின் கருப்பொருள். பச்சபுள்ளாகுளம் சிறுகதையில் ஆண் பெண்ணாக மாறி குளத்திலேயே நின்றுவிடுகிறான். பெண் ஆணாக மாறி ஊரைநோக்கி திம்புவதுமான கற்பனை உற்சாகமாக திருப்பமாக உள்ளது. பேராசிரியருக்கும் கன்னிக்கும் இடையிலான நடவடிக்கைகள் ஒருவரையொருவர் வீழ்த்த கையாளும் தருணங்கள் அருகருகே முன்வைக்கப்படும்பொழுது கதை தன் உச்சத்தைநோக்கிச் செல்கிறது. உச்சத்தில் இருவரில் ஒருவருடைய மரணத்தை வாசக மனம் எதிர்பார்க்கும்போது, எதிர்பாரத திருப்பமாக மேற்சொன்ன உருவமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அச்சமும் வசீகரமும் ஒருங்கே கொண்ட அம்சம் காமம். ஊகம் செய்ய இயலாத முடிவைக் கொண்டது அது. எதிர்இணையின் விழைவுக்குத் தகுந்த முறையில் ஈடுகொடுக்க இயலாமல்போய்விடுமோ என்கிற அச்சம் ஆட்டிப்படைக்காத மனமே இல்லை. இந்த அச்சத்திலிருந்து மீளத் தெரியாத ஆண்மனம், பெண்ணை பேயாக மாற்றி ஒடுக்கும் தந்திரத்தில் இறங்கிவிட்டது. அதிகாரியாக உருமாறும் பெண் எதிர்நடவடிக்கையின் ஓர் அடையாளம் என்றே சொல்லலாம். இனிமேல், எந்தத் தந்திரதத்தில் இறங்கும் ஆண்மனம் என்பது பெரிய புதிர். மாறிமாறி நிகழ்கிற, இந்தத் தந்திர விளையாட்டுகள் நிறைந்தததாகக் காணப்படுகிறது சமூகவரலாறு.



காலபைரவனுடைய கற்பனையாற்றல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இல்லாததை இருப்பதுபோல நம்பும் பிள்ளைப்பருவ விளையாட்டுகளில் இருந்து இந்தக் கற்பனையை எடுத்துக்கொள்கிறார் காலபைரவன். குழந்தைகளின் உப்புவிளையாட்டு, கூட்டாஞ்சோறு, ரயில் விளையாட்டு, கப்பல் விளையாட்டு, அப்பா அம்மா விளையாட்டு ஆகியவற்றில் இடம்பெறும் கற்பனை அம்சங்களில் சில துளிகளை கனவோடும் கலையம்சத்தோடும் குழைத்து கதைக்கான கருவை அவர் கண்டடைந்துவிடுகிறார். 'விலகிச் செல்லும் நதி' மனிதனுடன் நிகழ்த்தும் ஆட்டம் மிகவும் உற்சாகம் தரும் ஆட்டம். புராணத்தன்மை படிந்த கோயில், காடு, நதி, தெய்வம் என்ற பின்னணியில் அந்த ஆட்டமே கதையில் இடம்பெறும்பொழுது நதி படிமத்தன்மையை அடைகிறது. மனிதனின் நம்பிக்கையையும் முயற்சிகளையும் குலைத்துவிட்டு விலகிச் செல்கிற நதி எது என்கிற கேள்வி சிறுகதையை பல கோணங்களில் விரிவடையவைக்கிறது.



கதைமொழியில் காலபைரவனுக்குள்ள கவனமும் இயல்புத்தன்மையும் அக்கறையும் அவர்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. புலிப்பாணி ஜோதிடர் தொகுப்பும் விலகிச்செல்லும் நதி தொகுப்பும் அதற்குச் சான்றாக உள்ளன.


(விலகிச் செல்லும் நதி – கால பைரவன், மருதா வெளியீடு, அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-92. விலை. ரூ. 60)

-பாவண்ணன்