Sunday, August 29, 2010

வேட்டை


மழைவிட்ட பின் அவர்கள், நெற்றி விளக்கு, சில்லாக்கோல், கைத் தடிகளுடன் புறப்பட்டனர். நன்கு ஊறியிருந்த தரை சொத சொதவென்று இருந்தது. தெருவில் மழைநீர் கிழக்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் கவனமாக பாதங்களை வைத்தனர். அப்படி இருந்தும் சேற்றுக்குள் கால்கள் உள்வாங்கின. மின்சாரம் தடைப்பட்டிருந்தது. எங்கும் இருள் வியாபித்திருந்தது. இடது தோல்பட்டையில் மாட்டியிருந்த பேட்டரியை கழற்றி வலது புறம் மாட்டியவாறே கணேசன், ராமசாமியைப் பார்த்து கேட்டான். “எந்த பக்கமா போலாம்?” வானத்தை அன்னாந்து பார்த்தபடி, “கோட்டி கல்லுக்கா போலாம்” என்றான் ராமசாமி. வெள்ளக்குளத் தெருவழியாக நடந்து, அவர்கள் ஐயர் வீட்டு சந்தை அடைந்தனர். பள்ளிகூடத்தில் நின்றிருந்த காட்டுவா மரம் இருட்டில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை தெருவை அடைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் மூக்கை அழுத்தி பிடித்துக்கொண்டே தெருவோரமாக நடந்தனர். கணேசனைப் பார்த்து, “எத்தினி பஞ்சாயத்து பிரசிரண்டு வந்தாலும் இத சரிபண்ண மாட்டாங்க” என்று அலுத்துக் கொண்டே நாப்பாளையத் தெருவழியாக நடந்து திருக்கோவிலூர் சாலையை பிடித்தனர். சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கிடந்தன. மழைநீர் ஆங்காங்கே தேங்கியிருந்தது. ஆண்டா செட்டிகுளத்தின் கரையில் இருந்த இலுப்பை மரத்திலிருந்து வந்த பூவின் வாசனை எங்கும் பரவியிருந்தது. இலுப்பை மரத்தைப் பார்த்ததும் ராமசாமிக்கு கோனார் வீட்டு தில்லைக்கோவிந்தனின் ஞாபகம் வந்தது. கொஞ்ச நேரம் இலுப்பை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், ராமசாமியை சீண்டி, “தில்லைகோவிந்தன் மட்டும் உசுரோட இருந்திருந்தா வேட்டைக்கு நம்ம கூட வந்திருப்பாண்டா” என்று சொன்னவுடன், இவன் ஆண்டா செட்டி குளத்தையும், இலுப்பை மரத்தையும் மீண்டும் திரும்பி பார்த்தான். இலுப்பை மரத்தில் ஏறித்தான் அவர்கள் ஆண்டா செட்டிகுளத்திற்குள் குதிப்பார்கள். ஓரி பிடிப்பதில் தில்லைகோவிந்தன் கெட்டிக்காரன் இலுப்பை மரத்திலிருந்து குதித்து நீருக்குள்ளாகவே நீந்தி இந்த கரையிலிருந்து அந்த கரையை அடையும் அவனது சித்திரம் இவன் மனதில் மெல்ல விரியத் தொடங்கியது.
“ஏய் சத்தம் போடாதிங்க” என்று தில்லைகோவிந்தன் எச்சரித்தவுடன் கணேசனும் ராமசாமியும் அவன் பார்த்துக் கொண்டிருந்த திசையை உற்றுப்பார்த்தனர். நெற்றி விளக்கின் வெளிச்சம் பட, ஓடாமல் நின்று கொண்டிருந்தன இரண்டு முயல்கள்.அவற்றின் கண்களில் பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது நெற்றி விளக்கின் வெளிச்சம். வளர்த்தியான முயல்கள். தில்லைகோவிந்தன் வெளிச்சத்தை தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டே, “ராமசாமி நீ அடிடா” என்று சொன்னான். கணேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். நீண்ட தொலைவிற்கு புல்வெளி பரந்து கிடந்தது. அவை எங்கும் தப்பியோட முடியாதென மனதுக்குள்ளாகவே எண்ணிக்கொண்டு, “ம் அடி” என்று மெதுவாக ராமசாமியிடம் சொன்னான். ராமசாமி மெல்ல நெருங்கி, கையில் வைத்திருந்த தடியை உயர்த்தி தன் வலு கொண்ட மட்டும் ஓங்கி அடித்தான். ஒன்று மட்டும் அடிபட்டு சுருண்டு விழுந்தது. இன்னொன்று வெளிச்சத்தை நோக்கி ஓடியது. தயாராக இருந்த கணேசன் தன் தடியால் அதை குறிபார்த்து அடித்தான். அதுவும் துள்ளிக் குதித்தபடி வீழ்ந்தது. கீழே குனிந்து பார்த்தான். அதுவும் இறந்து விட்டிருந்தது. மூவரும் தடிகளை கீழே வைத்து விட்டு அருகிலிருந்த சிறிய பாறாங்கல்லின் மீது அமர்ந்தனர். முயலைத் தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமியைப் பார்த்து, “பீடி இருந்தா குடுடா” என்று கையை நீட்டினான் தில்லைகோவிந்தன். “எனக்கும்டா” என்று கணேசனும் கை நீட்டினான். ராமசாமி தன் கால்சட்டை பையில் வைத்திருந்த பீடிக்கட்டை எடுத்து ஆளுக்கொன்று உருவிக்கொடுத்து, தானும் ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். மூவரும் புகையை ஆழ்ந்து இழுத்து விட்டனர். வளையம் வளையமாக புகை மேலெழுவதை வெளிச்சத்தில் பார்த்தவாரே ராமசாமி, “எப்ப வேட்டைக்கி போனலும் அந்த சானியாமுட்டு ஆளு மட்டும், பெரிய பெரிய உருப்படியா அடிச்சி எடுத்துட்டு வர்றாருடா. எப்படி அவருக்கு மட்டும் சிக்குதுனு தெரியலயே” என்று ஆதங்கத்தோடு சொன்னான். அதற்கு தில்லைக்கோவிந்தன் புகையை வெளிவிட்டபடி, “உனக்கு அடுத்தவங்கள பாத்து பொறாமைபடறதே பொழப்பா போச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கணேசன், ராமசாமியைப் பார்த்து “ரெண்டு மாசத்துக்கு முந்திகூட ஒரு பன்னிய அடிச்சி துட்டு பாத்தயே பத்தலையா” என்று கேட்டான். ராமசாமி அமைதியாக முயல்களைத் தூக்கி எவ்வளவு எடை தேரும் என்று கணித்துக் கொண்டிருந்தான். வீரங்கிபுரத்து ஏரிக்கரை அரசமரத்திலிருந்து காற்று சில்லென்று வீசியது. அவர்கள் தடிகளை எடுத்துக் கொண்டு, பச்சபுள்ளா குளம் வழியாக திருவண்ணாமலை சாலையில் ஏறினார்கள். பச்சபுள்ளா குளத்தில் பாதியளவு மழைநீர் தேங்கியிருந்தது. சாலை நெடுக நின்று கொண்டிருந்த புளிய மரங்களை இருட்டில் பார்ப்பதற்கு ரம்மியமாக இருப்பதாக உணர்ந்தான் ராமசாமி. சில்வண்டுகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. தொடர்மழையால் முட்டிச்செடியும் கொஞ்சிச் செடியும் பூக்க ஆரம்பித்திருந்தன. கொஞ்சிப் பூவின் வாசனை தில்லைக்கோவிந்தனுக்குள் ஒரு வித இனிப்பு பலகாரத்தின் சுவையை ஏற்படுத்திய போது அவன் ராமசாமியைப் பார்த்து, “செங்குறிச்சாமுட்டு பானு ஓட்டேரி தெரு சாமிக்கண்ணு கூட ஓடிடிச்சாமே? ” என்று கேட்டான். “அந்த கதயை ஏன் கேக்கற இத்தணைக்கும் நானும் சாமிக்கண்ணும் தான் அன்னிக்கு ஈசை புடிச்சிட்டு வந்து பாளத்தாமுட்டு திண்னையில படுத்தம். எப்பதான் போனாங்க. எப்படிதான் போனாங்கன்னு தெரியல. காலையில எழுந்தா ஊரே களேபரமா கெடக்கு. என்ன புடிச்சி உண்மைய சொல்லுடான்னு கேட்டா, நான் என்னத்த சொல்றது?” என்று அலுத்துக்கொண்டே சொன்ன ராமசாமி. கையில் பிடித்திருந்த முயல்களை கணேசனிடம் கொடுத்தான்.
“நீ தான சாமிக்கண்ணுகூட கடைசி வரைக்கும் இருந்த, அப்புறம் உனக்கு தெரியலனா எப்படி?” என்று மறுபடியும் கேட்டான் தில்லைக்கோவிந்தன். அதை ஆமோதிப்பது போன்று, “இவனுக்கு எல்லாம் தெரியும். திருடன் தெரியாத மாதிரி நடிக்கிறான்” என்றான் கணேசன். “அட ஏன்டா நீங்களே நம்ப மாட்றீங்க” என்று சொல்லி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் காய்ந்து தொங்கிய பனை ஓலை காற்றின் போக்கில் ஆடிக்கொண்டிருந்தது. சனி மூலையில் மின்னல் கீற்று தோன்றி மறைந்தது. ஈரமேறி இருந்தது காற்று. அதன் சில்லிப்பு ராமசாமிக்கு சிலிர்ப்பை ஏற்படுத்த அவன், அவர்களிடம் மறுபடியும் சொல்லத் தொடங்கினான். “ராத்திரி பத்து பத்தரை இருக்கும். எங்க வூட்டான்ட வந்து சாமிக்கண்ணு கூட்டான். ஒரு கையில பெட்ரமாக்ஸ் வௌக்கும் இன்னொரு கையில தட்டுக்கூடையும் வச்சிகினுருந்தான். அப்பதான் மழை வுட்டிருந்தது. இப்பபோனா ஈச நெறைய கெடைக்கும்னு சொன்னான். அவன் பேச்ச கேட்டு மருந்து பொடியும் தட்டுக்கூடையும் எடுத்துக்குணு கல்லாங்குத்து வழியால நாங்க வாசியாத்தா கோயில் பக்கம் போனம். ஏரிக்கரை ஓரமா ரெண்டு மூனு புத்தும். இலுப்பை மரத்துங் கீழ ஒரு பெரிய புத்தும் இருந்திச்சி. பெரிய புத்த அவன் புடிச்சிகினான். புத்த சுத்தி சீர் பன்னி, பக்கத்துல பள்ளம் போட்டு பெட்ரமாக்ஸ் வௌக்க பக்கத்துல வச்சம்” என்று கூறி செருமிக்கொண்டான். தில்லைக் கோவிந்தன் தோலில் மாட்டிக் கொண்டிருந்த பேட்டரியை சரி செய்து கொண்டான். கணேசன் ராமசாமியைப் பார்த்து “இன்னும் மெயின் பாயிண்ட்டுக்கே வரலேயே” என்று எதையோ எதிர்ப்பார்ப்பவன் போலக் கேட்டான். சாலையோரத்து மரத்திலிருந்து மழைத் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக் கொண்டு ராமசாமி விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். “கொண்டு போயிருந்த பையில இருந்த மருந்த எடுத்து புத்து கண்ணபாத்து ஊதனோம். அவ்ளோதான். எங்க தான் இருந்திச்சோ அவ்ளோ ஈசைங்க. வந்து தொபதொபனு அவனோட பள்ளத்துல விழ ஆரம்பிச்சிது. நாங்க ஒரு வெப்பால மரத்துக்கு கீழ போயி, பனமட்டய எடுத்து போட்டு உட்கார்ந்துட்டோம். அவன் இடுப்பு மடிப்புல வச்சிருந்த ஹான்சை எடுத்து வாயில் போட்டுகினு எங்கிட்ட கேட்டான். ” என்று நிறுத்தி பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தை பார்த்தான். ஆவல் தாங்காமல் கணேசன் “என்ன கேட்டான்?” என்றான். “சொல்லிக்கினு தான வரான், அதுக்குள்ள ஏன் பறக்கிற” என்று கணேசனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். செட்டியார் வீட்டு மோட்டார் கொட்டகையில் முகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வயலுக்கு யாராவது நீர் பாய்ச்சுவார்கள் என்று மனதில எண்ணிக்கொண்டே அவர்களிடம் மீண்டும் கூறத் தொடங்கினான். குளுமையான காற்று வீசிக்கொண்டிருந்தது. “பான பத்தி நீ என்ன நெனக்கிற? என்றான். நா எந்த பானுன்னு கேட்டேன். ஆமாண்டா செங்குறிச்சாமூட்டு பானுன்னாதான் ஒனக்கு தெரியுமான்னு கேட்டான். அவளுக்கென்ன சூப்பரான பிகர் ஆச்சேன்னு சொன்னேன். அவன் மூஞ்சி போன போக்க பாக்கனுமே, ஆனா அத அவன் வெளிக்காட்டிகல. ஒனக்கு அவள ரொம்ப புடிக்குமான்னு வேற கேட்டான். ஏன்டா இதலாம் கேக்கறேன்னு கேக்கனும்னு தோனிச்சி. ஆனா கேக்கல. அவங்கிட்ட அவள ரொம்ப புடிக்கும்னு மட்டும் சொன்னேன். மறுபடி மறுபடி அவன் எங்கிட்ட கேள்வி மேலகேள்வி கேட்டுட்டே இருந்தான். அவகிட்ட ஒனக்கு எதுலாம் புடிக்கும்னு கேட்டான். அவ கலரு புடிக்கும் என்று சொல்லிக்கினு இருக்கும்போதே என் மனதில் கெம்பு கலர் தாவணி கட்டிக்கினு காதுல ஜிமிக்கியும், ஒத்த ஜடையும் போட்டுகினு அவ டியூஷன் வாதியார் கூட ஒன்னா கட்டல்ல கட்டிபுடிச்சிகினு படுத்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்திச்சி. ஆனா அதலாம் அவன்கிட்ட சொல்லல. அவன் எதுவும் பேசாமல் என் கண்களையே பார்த்துகினு இருந்தான். நான் அவனிடம் இதலாம் ஏங்கேக்கிற என்றேன். அவன் சும்மாதான்னு சொன்னான். அவள ஒனக்கு புடிக்குமானு நா திரும்ப கேக்க அவன் லேசா சிரிச்சி தலைய மட்டும் ஆட்னான். அப்ப ஜொலிச்ச அவனுடைய கண்கள் இப்பவும் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு” என்று நிறுத்தி எச்சியை கூட்டி விழுங்கினான். முக்கியமான கட்டத்தில் அவன் நிறுத்தி விட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். முயலை தில்லை கோவிந்தனிடம் கொடுத்துவிட்டு, ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு, “வேற எதுவும் சாமிக்கண்ணு சொல்லலையா?” என்றான். லேசாக தூற ஆரம்பித்திருந்தது. சில்லு வண்டுகளின் சத்தம் அதிகரித்திருப்பதாக உணர்ந்த ராமசாமி அவர்களிடம் மீண்டும் சொன்னான். “வேற எதுவும் சொல்லலை. எனக்கு மட்டும் பானு ஞாபகமாவே இருந்துச்சி. அப்புறம் எழுந்து புத்துகிட்ட போனம். என் குழியில ஈசல் கொறச்சலா தான் விழுந்திருந்திச்சி. அவனுக்கு மூணு மரக்கா கிட்ட கெடைச்சிருக்கும். எனக்கு ஒருமாதிரியா இருந்திஞ்சி. இதுக்காடா இம்மா நேரம் காத்து கெடந்தோம்னு தோனிச்சி. சாமிக்கண்ணு எம் புட்டுகூடையை கொடுன்னு கேட்டான். எனக்கு ஏன்னு புரியல. நானும் கொடுத்தேன். அவன் குழியில கெடந்த மொத்த ஈசையையும் எங்கூடையில போட்டு நீ எடுத்துக்குனு போன்னு சொன்னான். உனக்குடான்னு கேட்டேன். நாளக்கி கெடைக்கறத நா எடுத்துக்குறேனு சொன்னான். அப்பறம் பெட்ரமாக்ஸ் விளக்க எடுத்துக்குனு வூட்டுக்கு வந்து ஈசையை வச்சிட்டு பாளத்தாமுட்டு தின்னையில போயி படுத்தோம். தூங்கரவரைக்கும் அவள பத்தி தொனதொனன்னு எங்கிட்ட கேட்டுகுனே இருந்தான். எப்ப தூங்கனமுன்னே தெரியல” என்று கூறிவிட்டு தில்லைக்கோவிந்தனிடம் “நான் செத்த நேரம் தூக்கியாரட்டா?” என்று கேட்டான். “நா கூட எதோ பலான பலான கதனு நெனச்சன் கடைசில சப்னு ஆயிடுச்சி” என்று கணேசன் அலுத்துக் கொண்டான்.







அவர்கள் மாந்தோப்பு கொல்லை வழியாக ஊருக்குள் செல்லும் வண்டி பாட்டையில் இறங்கினர். செம்மண் பாதை மழை ஈரத்தினால் சொத சொதவென்றிருந்தது. மாந்தோப்பு கழனி முழுக்க வெறும் கரம்பாகவே இருந்தது.
மாந்தோப்பு கழனியின் தெற்கு பக்கமிருந்த சப்பாத்தி புதரிலிருந்து எதுவோ அவர்களைப் பார்த்தவுடன் வெளியில் ஓடிவந்தது. அவர்கள் சட்டென்று சுதாரித்துக்கொண்டு நெற்றி விளக்கை அதன் மீது பாய்ச்சினர். எதுவும் அவர்களுக்கு தட்டுபடவில்லை. தில்லைகோவிந்தன் கூர்ந்து பார்த்தான். “கண்டிப்பா எதுவோ, அங்கருந்து ஓடியாந்திச்சி” என்று அவர்களிடம் கணேசன் சொன்னான். மூவரும் அங்குலம் அங்குலமாகத் தேடினர். எதுவும் தென்படவில்லை. “பாத்துகுனு இருக்கும்போதே எங்கடா போயிருக்கும்?” என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டே அருகில் கிடந்த சிறு பந்து போன்ற கல்மீது தில்லைகோவிந்தன் தன் காலை வைத்தான். பாதம் பட்ட உடன் கல் நகர்வது போன்று உணர்ந்தவன், காலை எடுத்துவிட்டு வெளிச்சத்தை அக்கல்லின்மீது அடித்தான். அதில் சிறு அசைவு தென்பட, கீழே குனிந்து கையில் வைத்திருந்த கைத்தடியால் சீண்டியபடியே அவர்களைப் பார்த்து, “பாத்திங்கலாடா, நம்ம கிட்டயே இது வேலைய காட்டுது” என்று சொல்லி அதைப் புறட்டி போட்டான். அவர்களும் அவனருகே வந்து குனிந்து அதைப்பார்த்தனர். “என்னன்னு தெரியுதா?” என்று தில்லைகோவிந்தன் ராமசாமியைப் பார்த்து கேட்க, அவன் “நலுங்கு” என்று மெல்லிய குரலில் பதில் சொன்னான். அதைப் பார்ப்பதற்கு பனை மரத்தின் மேற்பரப்பை போல சொரசொரப்பாக இருந்தது. வெளிச்சத்தை கண்டதும் பந்துபோல அது சுருட்டிக்கொள்வதை இவர்கள் சிறிது நேரம் ரசித்தபடி இருந்தனர். சனிமூலையில் மேகம் திரளத் தொடங்கியது. “மீண்டும் மழை வரும்போல இருக்குடா” என்று நலுங்கைப் பார்த்துக் கொண்டே கணேசன் அவர்களிடம் கூறினான். தில்லைகோவிந்தன் அன்னாந்து வானத்தைப் பார்த்த பின் அவர்களிடம் கேட்டான். “இத என்ன பன்றது?” என்று அவன் கேட்டு முடிக்கவும்,“இத இங்கயே உட்டுடலாம்டா. வெளியில தெரிஞ்சா பிரச்சனையாயிடும்” என்று கணேசன் சொன்னான். தில்லைக்கோவிந்தனிடமிருந்து முயல்களை வாங்கியபடியே, “கெடைக்காத சரக்கு கெடச்சிகிது. அதபோயி இங்கயே உட்டு வான்னு சொல்றயே” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். அதற்கு “அப்ப என்ன பன்லாம்னு சொல்ற?” என்று அவனைப் பார்த்து தில்லைக்கோவிந்தன் கேட்டான். காற்றில் மாமரங்கள் சலசலத்தன. சில்லுவண்டுகளின் சத்தம் ஓய்ந்திருந்தது. ராமசாமி ஒரு கையில் முயலை வைத்துக்கொண்டு, ஒரு கையால் பீடியை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு கணேசனைப் பார்த்து, “கொஞ்சம் பத்த வைடா” என்றான். கணேசனும் பற்றவைத்துக்கொண்டே “நேரமாவுது சட்னு என்ன பன்றதுன்னு யோசிங்க” என்றான். “இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு? கறியாக்கிட வேண்டியது தான்” என்றான். தில்லை கோவிந்தன் ராமசாமியைப் பார்த்து, “இப்ப ஆவுர காரியமாடா இது. சீக்கிறத்துல இத சாக அடிக்க முடியாதே” என்றான். “உன்னால முடியாது தான். என்னால முடியாதுனு நா சொன்னனா” என்று சொல்லி கணேசனிடம் முயல்களை கொடுத்துவிட்டு, கைத்தடியால் அதை புரட்டிப் போட்டு தன் வலு கொண்டே மட்டும் ஓங்கி இரண்டு மூன்று தடவை அடித்தான். அவர்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே குனிந்து அதைப்புரட்டிப் பார்த்துவிட்டு “அதுங்கதை குளோஸ்” என்று சந்தோஷத்தோடு சொல்லி, “சரி சட்டுபுட்டுனு ஆவ வேண்டியத பாருங்க” என்று பக்கத்தில் கிடந்த துரிஞ்சி மிளாரை எடுத்து மடக்மடக்கென ஒடித்தான். தில்லைக்கோவிந்தன் விளக்கை நாளா திசையிலும் அடித்தான். அவனுக்கு வலது பக்கம் சப்பாத்தி கள்ளி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து வந்து அந்த மிளாரின் மீது போட்டு நெருப்பை பற்றவைத்தான். கையில் முயலை வைத்தபடி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன். தவளைச் சத்தம் சட்டென அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீச, “டேய் மழவர மாதிரி இருக்கு சீக்கிரம்” என்று அவர்களை அவசரப்படுத்திக் கொண்டிருந்தான் கணேசன். சப்பாத்தி கள்ளியும் துரிஞ்சி மிளாரும் நன்கு கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. ராமசாமி நலுங்கைத் தூக்கி அதில் போட்டு, கையில் வைத்திருந்த தடியால் இப்படியும் அப்படியுமாக அதைத் திரும்பி திருப்பி நெருப்பில் வாட்டினான். “டேய் தீஞ்சிட போவுது போதும்” என்று தில்லைக்கோவிந்தன் சொன்னதும் அவன் நெருப்பிலிருந்து அதை எடுத்து தரையில் போட்டான். கணேசனுக்கு கால் வலிக்கத் தொடங்கியது. அவன் தரையில் அமர்ந்து கொண்டான். அவனைப் பார்த்து, “நல்லா சப்ளாங்கோல் போட்டு உக்காறதாண்டா நீ லாயிக்கி” என்று கிண்டலடித்தான் ராமசாமி. பின் தரையில் கிடந்த நலுங்கைத் தொட்டுப்பார்த்தான். சூடு குறைந்திருந்தது. மெல்ல அதன் மீதிருந்த ஓடுகளை பெயர்த்தெடுத்தான். அவை சுலபமாக வந்தன வெந்த கறியின் வாடை அவர்களின் மூக்கை துளைத்தது. கணேசனும் அருகில் வந்து பார்த்தான். ஒவ்வொரு ஓடுகளாக அகற்றிய பின் கணேசனைப் பார்த்து, “அந்த வரப்புல இருக்கிற தேக்கமரத்தில இருந்து கொஞ்சம் இலைங்கள பறிச்சிட்டு வாயேன்” என்று கையைக் காட்டிச் சொன்னான். அங்கு இரண்டு மூன்று தேக்கு மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. லேசாகத் தூறத் தொடங்கியது. அவன் இலை பறித்துக் கொண்டு சடுதியில் திரும்பினான். ஓடுகள் அகற்றப்பட்ட நலுங்கை மூன்று பாகமாக்கி மூன்று இலைகளிலும் வைத்து “எடுத்துக்குங்க” என்று சொன்னான் ராமசாமி. இலையில் இருந்ததை முகர்ந்து பார்த்த தில்லைக்கோவிந்தன் “எனக்கு இது மட்டும் போதும்டா. நீங்க ஆளுக்கொரு மொசல எடுத்துக்குங்க” என்றான். அதற்கு கணேசன் ராமசாமியைப் பார்த்து, “அப்ப நாளக்கி உங்காட்ல மழைதான். ஊட்ல வாங்கியாந்து வச்சிகினு சுதி கொறைய கொறைய ஊத்திகினு இறுப்ப?” என்று சொன்னான். தில்லைக்கோவிந்தன், கணேசனின் பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான். “இன்னாத்துகுடா இவன் இப்படி உழுந்து உழுந்து சிரிக்கறான்?” என்று தில்லைக்கோவிந்தைக் காட்டி கணேசனிடம் கேட்டான். வேகமாகத் தூற ஆரம்பித்தது. அவர்கள் நடையை துரிதப்படுத்தினர். பள்ளிக் கூடத்து முகுட்டை அடைந்ததும் தில்லைக்கோவிந்தன் வெள்ளக்குளத் தெருப்பக்கம் திரும்பி நடந்தான். அவர்கள் இருவரும் ராமலிங்கசாமி மடம் வழியாக ஓட்டேரி தெருவுக்குள் நுழைந்தனர்.







மழை வலுத்தது. தவளைச் சத்தம் நாலா திசையிலும் கேட்டது. தில்லைக்கோவிந்தன் வீட்டிற்கு வந்து படலை திறக்க கையை தூக்கினான். படல் திறந்தே கிடந்தது. எப்போதும் சாத்தியே இருக்கும் படல் ஏன் திறந்து கிடக்கிறது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டான். மழை பெய்து கொண்டிருந்ததால் சாத்த மறந்து அவள் தூங்கி இருக்கலாம் என்று யோசித்த படியே நடந்தான். சொத சொதவென்றிருந்த தரையில் பாதங்கள் புதைந்தன. கூரையில் இருந்து மழைநீர் ஒழுகிக் கொண்டிருந்தது. மாட்டு கொட்டகையில் மாடுகள் கால்களை தரையில் உதைத்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. கூரையில் இருந்து ஒழுகும் மழை நீரில் நணையாமல் சட்டென்று குனிந்து கையில் வைத்திருந்த கறியை திண்ணையில் வைத்தபோது அருகில் யாரோ பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. கூர்ந்து கேட்டான். வீட்டினுள் இருந்து தான் குரல் வந்தது. இந்நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று யோசித்தபடியே மெல்ல நடந்த சாவி துவாரத்தின் வழியாகப் பார்த்தான். வேறொருவனுடன் தன் மனைவி அம்மனமாய் படுத்திருப்பதை பார்த்தவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. நா வரண்டு உடல் முழுக்க நடுக்கம் பரவியது. அவன் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். வெளியே மழை அமைதியாக பெய்து கொண்டிருந்தது. சற்று நேரம் அடங்கியிருந்த பேச்சொலி மீண்டும் கேட்கத் தொடங்கியது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அவனுக்கு கேட்கத்தோன்றியது. “சரி நா கௌம்பட்டா” என்று ஆண் குரல் கேட்டது. யாருடைய குரல் என்று அவன் ஆழ்ந்து யோசித்தான். வண்டிகாரமுட்டு தொப்புளான் குரல்தான் அது என்று தெளிவாக தெரிந்தது. “எப்பவும் இப்படி தான் உன் வேல முடிஞ்சிடுச்சினா நீ பாட்டுக்கு கௌம்பிடுவ. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்று இவனுடைய மனைவி சினுங்கினாள். வளையல் சப்தம் நன்றாக கேட்டது. அவளின் பேச்சிக்கு தொப்பளான், “உன் வீட்டுக்காரன் வர நேரம். எதாவது பிரச்சனையாயிட போவுது” என்றான். “அந்தாளு இப்ப வற மாட்டாரு. இன்னொரு தடவ செய்யி” என்று அவனை இழுத்தாள். இவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. தன்னைப் பார்த்து எப்போதும் சிரிக்கும் அவளின் அந்த முகத்தை நினைவுகளின் அடுக்குகளில் இவன் கலைத்து கலைத்து தேடினான். அந்த முகம் மெல்ல விகாரமடையத் தொடங்கியது. இனி அவள் முகத்தில் முழிப்பதே பாவம் என்று யோசித்துக்கொண்டே கீழே இறங்கினான். கூரை அவனது தலையில் இடித்தது. அவன் சுவாசம் சீரற்று இருந்தது. இந்த உலகம் பொய்யானது என்று அவன் நினைத்தான். அவனது சிந்தனை யோட்டம் தாறுமாறாக இருந்தது. உள்ளே சிரிப்புத் சத்தம் கேட்டது. மழைசற்று அடங்கி லேசாக தூறிக் கொண்டிருந்தது. இவன் மாட்டு கொட்டகை நோக்கி நடந்தான். தண்ணீர் சேந்துவதற்காக வைத்திருந்த கயிறு ராட்டிணத்தை எடுத்து, ராட்டினைத்தை கழற்றி வைத்துவிட்டு மூலையில் கவிழ்த்து வைத்திருந்த நெல் அவிக்கும் அண்டாவைப்போட்டு கையிற்றைத் தூக்கி உத்திரத்தில் போட்டான். தான் வாழ்ந்த பதினைந்தாண்டு கால குடும்ப வாழ்க்கையை நினைத்தபடி கழுத்தில் சுருக்கிட்டுக்கொண்டு அண்டாவை எட்டி உதைத்தான். சுறுக்கு மெல்ல இறுகியது. அப்போது கூட உறங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தைகளை பற்றி அவனுக்கு எண்ணத்தோன்றவில்லை.
பேருந்து சத்தம் கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது கணேசனுக்கு. கண்களை கசக்கிக்கொண்டான். எல்லாம் நேற்று நடந்ததைப் போன்று இருப்பதாக உணர்ந்தவன் மெல்ல பழைய நிலைக்கு திரும்பினான். தில்லைகோவிந்தன் மாட்டு கொட்டகையின் உத்திரத்தில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியே அவன் மனதில் கொஞ்ச நேரம் நிலைத்திருந்தது. மீண்டும் அவன் திரும்பி இலுப்பை மரத்தைப் பார்த்தான். பார்ப்பதற்கு பயமாகவே இருந்தது. மீண்டும் மீண்டும் அவனுக்கு தில்லைககோவிந்தனின் முகமே மனக் கண்முன் தோன்றிக் கொண்டிருந்தது. பேருந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும்போது தேங்கியிருந்த மழைநீர் இவர்கள் மீது தெரித்தது. “தேவிடியா பையன் எப்படி ஓட்றாம்பாரு” என்றான் ராமசாமி. “வேகமாக நடடா” என்று கணேசனைப் பார்த்து சொன்னான். கோனமலை பக்கமாக வானில் மின்னல் தோன்றி மறைந்தது. குளிர்ந்த காற்று வீசியது. கணேசன் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு ராமசாமி “எல்லாம் பொய் மப்பு டா. மழை அவ்ளோதான்” என்று ஒருவித நம்பிக்கையுடன் சொன்னான்.
அவர்கள் இருவரும் ஆண்டாசெட்டி குளத்திற்கு எதிர்புறம் இருந்த சந்து வழியாக ஏரிக்கு செல்லும் பாதையில் இறங்கினர். சமீபத்திய மழையால் ஏரியில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தது. மேலும் ஆங்காங்கே பள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது. அவர்கள் மாட்டு வண்டிப்பாதையில் கவனமாக நடந்தனர். பாதையெங்கும் கருவேலமுட்கள் சிதறி கிடந்தன. மழையில் ஊறியிருந்த களிமண் பாதைநெடுகிலும் கொழ கொழப்பாக கிடந்தது. சற்று ஏமாந்தால் கூட, வழுக்கி விட்டு விடும். கணேசன் வானத்தைப் பார்த்தான். கோனமலை பக்கம் திரண்டிருந்த மேக கூட்டம் மெல்ல சனிமூலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது.
அவர்கள் ஏரியைக்கடந்து சித்தாத்தூர் செல்லும் கூட்ரோடு சாலையைப் பிடித்து மேற்கு புறமாக நடந்து கோட்டிக்கல்லை அடைந்தனர். இருவரும் தங்களது நெற்றி விளக்குகளை எடுத்து அணிந்து கொண்டனர். கணசேன் பேட்டரியை தோலில் மாற்றிக்கொண்டே ராமசாமியைப் பார்த்து, “மழை பெஞ்சதால எங்க கால் வச்சாலும் சொத சொதன்னு இருக்கு” என்று சொன்னான். ஆமோதிப்பதுபோல இவனும் தலையாட்டினான். கோட்டிக்கல் பாறை இருளில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கார்த்திகை தீபத்தன்று அதன் மீது தீபமேற்றினால் சுற்றுவட்டத்தில் உள்ள ஊர்களில் இருப்பவர்கள் கூட காணலாம் அவ்வளவு உயரம். பக்கத்தில் இருந்த பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன. கோட்டிக்கல்லின் எதிர்புறமும், பின்புறமும் இருந்த நிலங்கள் சமப்படுத்தப்பட்டு வீட்டு மனைகளாகி விற்பனைக்கு தயார்நிலையில் இருந்தன. எப்போதுமே கோட்டிக் கல் பகுதி வானம் பார்த்த பூமிதான். சாமையும் தினையும் தான் அதில் விளையும். ராமசாமியிடம் ஒரு பீடியை வாங்கி பற்றவைத்துக்கொண்டே “என்னடா ஒன்னையுமே காணம்?” என்று கேட்டான் கணேசன். “இப்பதான மழை உட்டுகிது. இனிமேதான் அதுக வெளியில வரும்” என்று இவன் கூறினான். “மழை எங்க வுட்டுது மீண்டும் வரும்போல இருக்குது” என்று மீண்டும் கணேசன் சொன்னான். வெகு தொலைவிற்கு கரம்பாகக் கிடந்த செம்மண் பூமி இவன் மனதை என்னவோ செய்தது. சிறுவயதுகளில் தீபாவளியன்று வீட்டில் செய்யும் பலகாரங்களை ஒரு தூக்குவாளியில் போட்டுக்கொண்டு நண்பர்களோடு அங்கு வந்து விளையாடி விட்டு சாப்பிடும் காட்சி கணேசனது மனதில் சில கணங்கள் வந்து சென்றது. இப்போது யாரும் அதுபோல வருவது கிடையாது. ஆனால் சில இளைஞர்கள் விழாக்காலங்களில் இங்கு வந்து மது அருந்துவதாக அவன் கேள்விபட்டிருக்கிறான். கோட்டிக்கல் பற்றித் தெரியாமலேயே ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பது குறித்து எப்போதும் அவனுள் ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. “ஏன்டா என்ன யோசிக்கிற?” என்று ராமசாமி கேட்டவுடன் அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.
நேரம் கடந்து கொண்டிருந்தது. ராமசாமி புகைத்துக்கொண்டே. “எம்மா நேரந்தான் கோட்டி கல்லையே சுத்திகினு கெடக்கறது? வா அந்த பக்கம் போவம்” என்று மாட்டாஸ்பத்திரி பக்கம் கையை நீட்டி சொன்னான். “கோட்டி கல்லுல கெடைக்காததா அங்க கெடச்சிடும்?” என்று திரும்ப கேட்டு, “சாதாரணமா இந்நேரத்துக்கு மூனு நாலு உருப்படிக ஆட்டுருக்கும்” என்று அலுப்புடன் சொன்னான். மெல்ல இருவரும் நடக்கத் தொடங்கினர். எதுவும் கிடைக்காததால் அவர்கள் சோர்வடைந்தனர். கால்களில் வலி தெரிந்தது. வழியில் இருந்த குற்றுச் செடிகளை கைதடியால் ஆட்டிப் பார்த்தனர். எதுவும் அகப்படவில்லை. சிவன் கோயில் விளக்கு வெளிச்சம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. நரிமுட்டு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. “இன்நேரத்திற்கு யார் பாசரது?” என்று ராமசாமியை கணேசன் கேட்டான். “நாத்து உட்டுருப்பாங்க. மழை வரமாதிரி இருக்குல்ல, அதால எறைப்பாங்க” என்று கூறினான். அவன் சொன்னதுபோல நரிமுட்டு மோட்டார் கொட்டகையில் மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மோட்டார் கொட்டகை ஓரம் உயரமாக வளர்ந்து நின்று கொண்டிருந்த நீலகிரி மரங்கள் ஒடிந்து விழுவதுபோல காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நடந்தபடியே அவர்கள் உற்றுப்பார்த்துக்கொண்டு வந்தனர். எதுவும் அகப்படவில்லை. ராமசாமி மீண்டும் இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு பீடியை எடுத்து பற்றவைத்துக்கொண்டான். “டேய் எனக்கும் ரெண்டு இழுப்பு கொடுடா” என்று கேட்ட கணேசன் “நாம இன்னிக்கு வந்திருக்கக்கூடாது டா“” என்று அவனிடம் சொன்னான். அவர்கள் மாட்டாஸ் பத்திரியின் பின்புறமிருந்த பனந்தோப்பில் நுழைந்தனர். பனைமரங்களைப் பார்த்ததும் ராமசாமிக்கு தில்லைக்கோவிந்தனுடன் அங்க கள்குடித்தது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர். கள் சீசன் தொடங்கிவிட்டால் போதும் விடுமுறை நாட்களில் மூவரும் சாயந்திரம் அங்கு தான் இருப்பார்கள். விலைபேசி ஒரு பானையில் கல்லை எடுத்துக் கொண்டு, தொட்டுக்க வறுத்த கருவாட்டையும், அவித்த முட்டையையும் ராமசாமி வாங்கிக் கொண்டு வருவான். கணேசனும் தில்லைக்கோவிந்தனும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கும் ஒரு புளிய மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டிருப்பார்கள். கணேசன் மட்டும் எப்போதும் குடிக்க மாட்டான். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் வாங்கும் அசைவ உணவுகளை வெளுத்து வாங்குவான் “குடிக்காதவனுக்கு எதுக்குடா கருவாடும் முட்டையும்? எம்மாத்தரம் திண்ணாலும் வெடியாது டா ஒனக்கு” என்று திட்டுவான் ராமசாமி. “சரி போரான் விடுடா” என்பான் தில்லைகோவிந்தன். ஆளுக்கொரு மொந்தையில் கள்ளை ஊற்றிக் குடிக்கக் தொடங்கினால் நேரம் போவதே தெரியாது அவர்களுக்கு. அதுவரை பீடி அவர்கள் கைகளில் புகைந்து கொண்டே இருக்கும். அதீத போதை தலைக்கேறி கண்கள் சொறுக தொடங்கியதும் தள்ளாடியபடியே அவர்கள் நடக்கத் தொடங்குவர். போதையின் தள்ளாட்டத்தில் அவர்கள் பேசும் பேச்சுகளை மறுநாள் கணேசன் அவர்களிடம் சொல்லி கிண்டல் செய்வான். “இதுக்கு தாண்டா இவன குடிக்கற எடத்துக்கு கூட்டுகினு போகக்கூடாது. தின்றதோட இல்லாம நக்கலுவேற” என்று கணேசனைப் பார்த்து சொல்லுவான்.
“ஏய் மழை வரமாதிரி இருக்கு. வீட்டுக்கு போலாம்” என்று ஏமாற்றத்தோடு அவனைப்பார்த்து சொன்னவுடன் தான் பழைய நினைவுளில் இருந்து மெல்ல மீண்டான் ராமசாமி. அன்னாந்து வானத்தைப் பார்த்தான். வானம் இருட்டிக்கொண்டிருந்தது. தூரல் அதிகரிக்கத் தொடங்கிய போது ராமசாமி, “அடச்சே, வந்ததுக்கு நாச்சும் எதாவது கெடச்சிருக்கலாம்” என்று இவனைப் பார்த்து சொன்னான் . பனந்தோப்பு முழுக்க அவர்கள் அலசோ அலசென்று அலசினர். ஒரு சிறிய எலியைக் கூட காணவில்லை. அவர்களுக்கு சோர்வாக இருந்தது. கடுங்காலில் வலி அதிகரிக்க தொடங்கியது வீட்டிற்கு திரும்பிவிட முடிவு செய்து மாட்டாஸ்பத்திரி வழியாக நடந்து திருக்கோயிலூர் சாலையை அடைந்தனர். சாலையோரம் இருந்த ஓடையில் வீரங்கிபுரத்து ஏரியிலிருந்து மடவிளாகம் ஏரிக்கு மழைநீர் வந்து கொண்டிருந்தது. மழை வேகமாய் பெய்யத் தொடங்கியது. அவர்கள் நடையை துரிதப் படுத்தினர். சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் ஓடிக் கொண்டிருந்தது. அவர்கள் ஆண்டா செட்டி குளத்தை அடைந்த போது ஊரில் மின்சாரம் நின்றுபோயிருந்தது தெரிந்தது. “கொஞ்சம் மழவரக்கூடாதே சட்டுனு புடிங்குடுவனுவலே” என்று ராமசாமி கணேசனைப் பார்த்து சொன்னான். திரௌபதி அம்மன்கோயில் மேடையில் படுத்திருந்த நாய் அவர்களைப் பார்த்து குரைத்தது. டல்லா ஏயர் வீட்டு தெரு வந்ததும் ராமசாமி வடக்கே செல்லும் சந்து வழியாக திரும்பி வெள்ளகுளத்தெரு நோக்கி நடந்தான். கணேசன் ஏயர் வீட்டு பின்புறம் வழியாக பிரியும் செட்டியார் வீட்டு சந்து பக்கம் சென்றான். மழை நின்று பெய்து கொண்டிருந்தது.
தொப்பலாக நனைந்தபடியே அலமேலுவின் வீட்டு கதவைத் தட்டினான் ராமசாமி. இந்நேரத்துல யாராயிருக்கும் என்று யோசித்தபடியே கதவைத் திறந்தவள் இவனைப் பார்த்து திடுக்கிட்டாள். இவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். “சொல்லாம கொள்ளாம வரக்கூடாதுன்னு எத்தன மொற சொல்றது உங்கிட்ட” என்று அவனைப் பார்த்து கேட்டாள். அவன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். “என்ன நான் கேட்டுட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியாக இருக்க. அவுரு இருந்திருந்தா இன்நேரம் என்னாயிருக்கும் தெரியுமா?” என்று பதட்டத்தோடு பேசினாள். அவன் எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்று கொண்டிருந்தான். அவன் கைலியிலிருந்து நீர் தரையில் சொட்டிக்கொண்டிருந்தது. குளிரில் அவனது உதடுகள் படபடவென அடித்துக்கொண்டிருந்தது. “”சரி வா. வந்து தொலை யாராவது பாத்துட போறாங்க” என்று அவனை உள்ளே அழைத்தாள். எதுவும் பேசாமல் அவன் உள்ளே வந்தான். துவட்டிக் கொள்ள துண்டை கொடுத்தாள். இவன் நெற்றி விளக்கையும். பேட்டரியையும் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு தலைதுவட்டத் தொடங்கினான்.
தோட்டத்திற்கு சென்று வந்தவள். “வேட்டைக்கு போயிட்டு வறியா?” என்றாள். இவன் ஆமாம் என்பதுபோல தலையாட்டினான். நெற்றி விளக்கு, பேட்டரி வைக்கப்பட்டிருந்த இடத்தை சுட்டிகாட்டி, “எங்க ஒன்னையும் கானோம்?” என்று கேட்டாள். அதற்கு அவன் “ஒன்னும் ஆப்புடல மழை வந்து கெடுத்திடுச்சி” என்றான். “அதான பாத்தன், ஏதாவது கெடச்சிருந்தா ஏன் இங்க வரப்போற, உன் வீட்டுக்கில்ல போயிருப்ப” என்று சொன்னாள். சுருக்கென்றது அவனுக்கு. “இப்பிடிலாம் பேசாத” என்று அவளை நெருங்கினான். “இதுக்கு மட்டும் தான் நானு உனக்கு வேணும்” என்று அவனை மீண்டும் சீண்டினாள். இருட்டு அவனுக்கு வசதியாக இருந்தது. அவளை இறுக அணைத்தான். உதட்டில் முத்தமிட்டான். “எப்படிதான் உன் பொன்டாட்டி இந்த கருமம்புடிச்ச நாத்தத்த சகிச்சிகிறாளோ?” என்று அவன் வாயிலிருந்த வந்த பீடி நாற்றத்தை உணர்ந்து கேட்டாள். அவன் அவளுடைய ஆடைகளை களைய ஆரம்பித்தான். வெளியில் மழை இன்னும் பெய்து கொண்டிருந்தது.

Saturday, August 28, 2010

நவீனத்துவத்தின் கோமாளி






ஆகச் சிக்கலானதும் குரூரமானதுமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, ஓர் நகைச்சுவை நடிகரின் இருப்பு பலநிலைகளிலும் தேவையான ஒன்று. பல்வேறு கட்டங்களில் மனஅழுத்தத்தோடு உழன்றுகொண்டிருக்கும் மக்களை தங்களது நடிப்பின் மூலம் சந்தோஷப்படுத்தி, மனச்சிக்கல்களில் இருந்து மீட்கும் ஒரு மீட்பராக நகைச்சுவை நடிகர் செயல்படுகிறார். இந்தப் போக்கை நாம் வரலாற்றின் பக்கங்களை புரட்டுவதன் மூலம் உணரமுடியும்.
காலம் எனும் நீண்ட அலகில் அவர்கள் விகடகவி, கட்டியங்காரன், கோமாளி எனத் தொடர்ந்து பயணித்து இன்றைய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் என அடையாளப் படுத்தப்படுகிறார்கள். நாடகமோ கூத்தோ அல்லது திரைப்படமோ எதுவாக இருந்தாலும் ஓர் நகைச்சுவை நடிகரின் பாத்திரம் தவிர்க்க முடியாததும் நிராகரிக்க முடியாததுமாகும்.
மேற்கண்ட காரணங்களைக் கொண்டுதான் நாம் நடிகர் வடிவேலுவின் இடம் திரைப்படங்களில் எவ்வாறு உருப் பெருகிறது, எந்த அரசியலைப் பேசுகிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியும். என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் எனும் இரு நகைச்சுவை நடிகர்களுக்கு பின்பு தனது உடல் மொழியைப் பெரிதும் பயன்படுத்திய ஒரே நடிகர் என்று வடிவேலுவைக் குறிப்பிட்டுச் சொல்ல நமக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. சாதாரண வெகுஜன ரசனைக் கொண்ட பார்வையாளன் கூட மேற்கண்ட முடிவுக்கு சுலபத்தில் வந்துவிட முடியும். மேலும் எனது நோக்கம் இங்கு வடிவேலுவின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்வது என்பதும் அல்ல. அவர் ஓர் நடிகர் என்ற முறையில், தன் நடிப்பில் எப்படி தொடர்ந்து அழகியலையும், வளர்ச்சியையும் தக்க வைத்தப்படி இயங்குகிறார்?. இன்றைய சமூகத்தில் நீக்கமற விரவிக் கிடக்கும் மனச்சிக்கல்களை தனது நடிப்பின் மூலம் எவ்வாறு விசாரணை செய்கிறார் என்பதை ஒரு ரசிகனாக நின்று சிறிய அளவில் ஆராய முற்படுவதற்காகவே இக்கட்டுரை. எல்லா நகைச்சுவை நடிகர் மேலும் எனக்கு அன்பும் ஈர்ப்பும் உண்டு. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் அந்த இடத்தை இட்டு நிரப்பி இருக்கின்றனர். அதில், கவுண்டமணி, செந்தில், விவேக், போன்றவர்களுக்கும் இடம் உண்டு. இவர்களையும் தாண்டி எப்படி வடிவேலு இக்காலத்தின் கலைஞனாக இருக்கிறார், அவரின் நடிப்பு எவ்வகைப்பட்டது, அவர் ஏற்கும் பாத்திரத்தின் வகைகள், அப்பாத்திரங்களின் மூலம் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் வழி வெளிப்படும் அரசியல் அகியவற்றையும் பற்றியே எவ்வித மனசாய்வும் இன்றி எழுத விரும்புகிறேன்.
வடிவேலுவின் நகைச்சுவைப் பாத்திரங்களையும், அக்காட்சிகளையும் விவாதிப்பதற்கு முன்பாக உலகம் முழுவதுமாக தற்போது நடைமுறையில் இருக்கும் நடிப்பின் வகைகளையும், நகைச்சுவையின் வகைகளையும் அறிந்து கொள்வதன் மூலம் வடிவேலுவின் இடத்தை காட்சி ஊடகங்களின் பரப்பில் வைத்து பொருத்திப் பார்க்க வசதியாக இருக்கும்.




நடிப்பின் வகைகளாக இன்று உலகம் முழுவதுமாக அறியப்படுவன ; மெத்தட் ஆக்டிங் (method acting) இதை கண்டுபிடித்தவர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எனும் அரங்கக்கலை நிபுணர். அதற்கடுத்து மெய்ஸ்னர் டெக்னிக் (meisner technique) இதை வளர்த்தெடுத்தவர் ஸான்போர்டு மெய்ஸ்னர் ஆவார். இதில் முன்னது, நடிப்பை அந்நடிகனுக்குள்ளிருந்தே மெல்லக் கொணர்வதாகும். உதாரணமாக ஒரு சோகக்காட்சியில் நடிக்க வேண்டுமாயின் அந்நடிகனின் வாழ்வில் நிகழ்ந்த மிக நெருக்கமானவர்களின் மரணத்தையோ அல்லது துயர நிகழ்ச்சிகளையோ யோசிக்கச்செய்தும் உள்வாங்கச் செய்தும் தேவையான உணர்ச்சிகளை / பாவங்களை வெளிக்கொணரும் முறையாகும். இவ்வகை நடிப்பை சிறப்புற கையாள்பவர்களாக ஆன்ஜிலான ஜூலி, டேனியல் டே லெவிஸ், மர்லின் மன்றோ, பால் நியூமேன், அல் பாசினோ, ராபர்ட் டிநிரோ, போன்றோர்களை குறிப்பிடலாம்.
ஆனால் மெய்ஸ்னர் டெக்னிக் என்பது முற்றிலும் மெத்தட் ஆக்டிங் வகையில் இருந்து மாறுபட்டதாகும். இதில் நடிப்பு முறையென்பது பெரும்பாலும் உடற்பயிற்சி மற்றும் சக நடிகனோடு கொள்ளும் உரையாடல்கள் மூலம் தேவைப்படும் நடிப்பை பெறுவதாகும். மெல்ல மெல்ல சிக்கலான தொடர் பயிற்சியின் மூலம், அந்நடிகளின் திறனை மேன்மை படுத்தும் முறையாகும். இம்முறையில் சக நடிகன் வெளிப்படுத்தும் அசைவு(movement)மற்றும் உணர்ச்சிகள் (emotions) ஆகியவற்றுக்கு பதிலாக / மாற்றாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றும் அசைவுகளில் இருந்து தேவையான நடிப்பை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவை தவிர ராபர்ட் ஹோகனின் கோதே (GOTE) எனும் வகையும், நடன இயக்குனர் மேரி ஓவர்ஸியின் நடிப்பு முறையும் குறிப்பிடப்படவேண்டிய நடிப்பு முறைகளாகும். நடிப்பு என்பது ஒரு பிறவிக்கலை என்ற ஓர் எண்ணம் நம்மிடம் உண்டு. ஆனால் மேற்கண்ட நடிப்பு பயிற்சிகள் மூலம் உலகின் ஆகச் சிறந்த நடிப்புகளை வெளிப்படுத்திய நடிகர்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
மேற்கண்ட நடிப்பு வகைகளின் ஊடே வடிவேலுவின் நடிப்பை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு சில விளக்கங்களை நாம் பெற முடியும். நிச்சயம் வடிவேலுவிற்கு திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஸ்டேனிஸ்லாவ்ஸ்கியைப் பற்றியோ மெய்ஸ்னர் பற்றியோ நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரை அறியாமலேயே அவர் மேற்கண்ட இருமுறைகளையும் பயன்படுத்தியிருக்கக்கூடும். பிறவிக்கலைஞன் எனும் தகுதி ஒரு எல்லை வரையே கலை இலக்கியத்தில் ஒருவனுக்கான இடத்தை அடைய உதவும். அதைத் தாண்டுவதென்பது, அவன் மேற்கொள்ளும் தொடர் பயிற்சி மற்றும் அது தொடர்பான வாசிப்பு சார்ந்தே சாத்தியப்படும். எப்போதும் விதிவிலக்குகள் பொது நியதிகள் ஆகா.
ஆக நடிக்க வருவதற்கு முன்பு தனது கிராமம் சார்ந்த வடிவேலுவின் ஆழ்ந்த உற்றுநோக்கல்களே பின்னாளில் அவரின் கதா பாத்திரங்களை மெருகூட்டப் பயன்பட்டிருக்கக் கூடும் எனும் முடிவிற்கு மேற்கானும் கருத்துகளின் மூலம் வந்து சேரமுடிகிறது.
-தொடரும்

Friday, August 27, 2010

நாகத்திற்கு நஞ்சிடுங்கள்


படமெடுத்தாடிக்கொண்டிருக்கிறது
அந்நாகம்
கற்றாழையும் மல்லியும் அடர்ந்த
உங்கள் ஜன்னலுக்கு வெளியே

அப்படியொன்றும் கொடூரமானதல்ல அது
உங்களின் தீராத யௌவனம்
குழைவான உரையாடல் மூலம்
அதை வழிக்கு கொண்டு வந்துவிடமுடியும் சுலபத்தில்

ஒரே கூப்பாட்டில் ஊரை கூட்டும்
உங்களுக்குத்தான் தெரியவில்லை
ஒரு நாகத்தை எவ்வாறு கைக்கொள்வதென

ஆனால்
எப்படியும் தப்பித்துவிடாதபடிக்கு
சுற்றி வளைக்கப்பட்டுவிட்ட நாகம்
உள்ளூர நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது

எந்த விசாரணையும் வேண்டாம்
பார்த்தவுடன் அடித்துவிடுங்களென முன்னேறும்
உங்களை
பீதியுடன் கவனித்துகொண்டிருக்கும் அதற்கு
தான் எப்படியும் கொல்லப்படுவோமென்பது
மட்டும் தெரிந்தேயிருக்கிறது

இருந்தும் சமாதானத்திற்கான தன் உரையாடலை தொடங்க
விரும்பும்
அதன் போக்கை அர்த்தமற்றதெனக்கூறி
நிராகரிப்பதுகூட நீங்கள்தான்

ஆம் நீங்கள் நினைப்பதுதான் நடந்தேறுகிறது
எல்லாவித நுட்பங்களுடனும்
பாம்பென்ற காரணத்திற்காகவே அது கொல்லப்படுகிறது

இறுதியில்
ஜன்னலை சாத்துவதைத் தவிர
வேறெந்த நெருக்கடியை சந்திக்கப்போகிறீர்கள்
நீங்கள்

Tuesday, August 24, 2010

இருவழிப்பாதை


பஸ்ஸை விட்டு அவர்கள் இறங்கியதுமே அவன் கேட்ட முதல் கேள்வி “கண்டாச்சிபுரம் ரொம்ப மாறிடிச்சி இல்ல” என்பது தான். அவன் கேள்வியை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. பேருந்திலிருந்து தங்களது உடமைகளை இறக்குவதில் அவர்களது கவனமிருந்தது. அண்ணாசிலை கீழே செல்லாயி வீட்டு கண்ணன் டீகடை போட்டிருந்தார். கடைத் தெரு ஜனங்களின் நடமாட்டம் இருந்து கொண்டிருந்தது. ஒட்டம்பட்டு வழியாக திருக்கோவிலூருக்கு செல்லும் கடைசி பேருந்து நின்று கொண்டிருந்தது.
கொண்டு வந்திருந்த பெட்டிகளை இறக்கியான பின் அவர்கள் செல்லாயி கடைக்கு டீ குடிக்கச் சென்றனர். தேனீர் குடித்துக் கொண்டே அவன் டீ கடை காரரைப் பார்த்து கேட்டான். “இங்க இருந்த நாவமரத்த வெட்டிட்டாங்களா?” அதற்கு கடைகாரர் ஆதங்கத்துடன் “ஆமாங்க... ரோட்ட அகலப்படுத்தறமுன்னு நாவ மரத்த வெட்டிட்டாங்க” என்றான். அவனுக்கு வருத்தமாக இருந்தது. வேகமாக டீ யை குடித்து தன்னுடைய டிரங்க் பெட்டியை தூக்கிக் கொண்டு மெல்ல நடக்கத் தொடங்கினான். இன்னும் அவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அவன் தனியே புறப்படுவதை பார்த்த நாடக கம்பெனி மேனேஜர் “என்ன சுப்ரமணி நீ பாட்டுக்கு தனியா கௌம்பிட்ட?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆமா நீங்க பொட்டிக்காரர் வந்தா தான் வருவீங்க, நின்னு இட்டுட்டு வாங்க, நா மெதுவா நடந்து போறேன்” என்று கூறிவிட்டு இடுப்பில் சுற்றியிருந்த பீடிகட்டிலிருந்து ஒன்றை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.
சிவன் கோயிலை நெருங்க நெருங்க இலுப்பை பூவின் வாசனை அவனுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வாசனையை அவன் ஆழ்ந்து இழுத்தான். கோபுரத்திலிருந்த புறாக்கள் சிறகுகளை அடித்தபடி இலுப்பை மரம் நோக்கிச் சென்றன. கோயில் அருகில் உள்ள அடிகுழாயில் ஒருவர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். நாடகக் கொட்டகையை நெருங்க நெருங்க இலுப்பையின் வாசனை அவனுக்கு அம்சவேணியை ஞாபகப்படுத்தியது. ஒருசில நிமிடம் அவன் சிவன் கோவில் முகப்பு விளக்கையே உற்றுப்பார்த்தான். அவன் நினைவலைகள் மெல்ல பின்நோக்கி சுழலத் தொடங்கின. அப்போது சகடை கொட்டகை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு நாய் அவனைப் பார்த்துக் குறைக்கத் தொடங்கியது.
“சைலேன்ஸ்,, சைலேன்ஸ்” என்று கட்டியக்காரன் சொன்னதும் மந்தவெளியில் திரண்டுடிருந்த கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. நாடகம் பார்க்க வந்த சிலர் மேடைக்கு முன்பாக பாயைப் போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக குழல்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி நிறைய பூச்சிகளும் வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. காத்தாயி வீட்டு சோமு டீ கடை போட்டிருந்தார். தூங்கிக்கொண்டிருந்தவர்களை பக்கத்திலிருந்து எழுப்பிவிட்டனர். கூட்டத்தில் இன்னும் சலசலப்பு நீடித்தது. மீண்டும் கட்டியக்காரன், “சைலேன்ஸ், சைலேன்ஸ்” என்று சொல்லி, “இன்னைக்கு நடக்க இருக்கிற நாடகத்தின் பெயரைச் சொல்லப்போகிறேன், கவனமாக கேளுங்க” என்று பீடிகை போட்டான். தபேலா வாசிப்பவர் சிறு சுத்தியால் டங்டங்கென தபேலாவை தட்டி சரி செய்து கொண்டிருந்தார். மீண்டும் கட்டியக்காரன் கூட்டத்தைப் பார்த்து ஒலிவாங்கி முன்வந்து கூறத் தொடங்கினான், “இன்றைக்கி நடத்தக் கூடிய நாடகத்தின் பெயர் ராமர் பட்டாபிஷேகம் அல்லது ராவண வதம்.” இன்னொரு முறை கூறினான். “ராமர் பட்டாபிஷேகம் அல்லது ராவண வதம்.” மேலும் அவன் கூட்டத்தைப் பார்த்து, “பெரியோர்களே, தாய்மார்களே, இளைஞர்களே, பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களே, நடத்தக்கூடிய நாடகம் அருமையான நாடகம், அதில் ஏற்படும் சொற்குற்றம், பொருட்குற்றம், ஆகிய குற்றங்களைப் பொறுத்து, எங்களது நாடகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமென அம்மன் நாடக மன்றத்தின் சார்பாக உங்கள் பாதங்களைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறி, “நாட்டுக்கு சேவை செய்ய
நாகரீக கோமாளி வந்தேனுங்க....
பாட்டு பாடி ஆட்டமாட
அழகான கோமாளி வந்தேனுங்க.....”
பாட ஆரம்பித்தான். ஆர்மோனியக்காரர் அப்பாடலை உரக்க பாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தோதாக தபேலா காரரும், தாளம் போடுபவரும் வாசித்தனர். பாடிக் கொண்டே கட்டியக்காரன் மேடையின் ஓரத்திற்கு சென்று திரையை விலக்கி பார்த்தான். அடுத்து வரும் பெண் வேஷம் தயாராக இருந்தது. முகச்சவரம் செய்துகொள்ள தயாராகி கொண்டிருந்தார் நங்காத்தூர் சுப்பரமணி. அம்மன் நாடக மன்றத்தின் ஆஸ்தான திருமால் அவதாரம் அவரே. அரிதாரத்தை பூசிக்கொண்டு மேடையில் நின்றாரென்றால் நிஜ ராமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் தோற்று ஓடி விடுவான். குரல் கனீர் கனீர் என ஒலிக்கும். அடவு வைத்து ஆடக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். கண்ணாடியைப் பார்த்து அவர் முகச்சவரம் செய்து கொண்டிருந்த போது மேடையை ஒட்டி போட்டிருந்த கீற்று கொட்டகையை நீக்கியபடி ஆசூரார் பாலு, “சுப்ரமணி... சுப்ரமணி” என்று அவரை கூப்பிட்டு ஒரு எவர் சில்வர் சொம்பை கையில் கொடுத்தார். முகசவரம் செய்து கொண்டிருந்த சுப்ரமணி அவர் கொடுத்த எவர் சில்வர் சொம்பை வாங்கி தன் பெட்டி அருகே வைத்து மூடினார்.
மேடையில் கட்டப்பட்டிருந்த திரைக்கு பின்புறம் இருந்து, “சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு” என்று பாடிக் கொண்டே திரையை நீக்கியபடி அரியலூர் தண்டபாணி பெண் வேஷமிட்டு மேடைக்கு வந்து வளைந்து நெளிந்து மிகவும் கவர்ச்சியாக ஆடினார். அவ்வேடத்திற்கு தோதாக கட்டியக்காரனும் பலவித காம சேஷ்டைகளை செய்து கொண்டிருந்தான். கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. சிறுவர்கள் கைதட்டி சிரித்தனர். ஆவூராமுட்டு பாண்டியன் வேகமாக நடந்து மேடையில் ஏறி பெண் வேடமிட்டிருந்தவரின் மார்புமீது பத்து ரூபாய் நோட்டை குண்டூசியால் குத்திவிட்டு வந்தான். தென்னண்ட வீட்டு ராமு அருகில் அமர்ந்திருந்த செங்குறிச்சியாரை சீண்டி “நாடகம் எப்படி சீர்கெட்டுப் போச்சு பாத்தியா?” என்றார். அதற்கு அவர், “ஆமா என்ன பன்றது பொன்ரங்கம் பொம்பல வேஷம் போட்டுக்கினு வந்தாக்க அப்படியே கண்ல ஒத்திக்க தோனும்,.ம் அதுலாம் ஒரு காலம்பா” என்று ஆதங்கப்பட்டார். அதற்கு ராமுவே, மீண்டும் “என்ன செய்யறது பா எல்லா நாடகக் காரங்களும் தான் ரெக்காடான்ஸ் ஆடரவங்களா மாறிட்டாங்களே” என ஆதங்கந்தோடு சொன்னார்.
முகசவரம் செய்து முடித்தவுடன் சுப்பரமணி தன் பெட்டிக்கு அருகில் மூடிவைத்திருந்த சொம்பை எடுத்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் டம்பளரில் கொஞ்சம் ஊற்றி குடித்தார். குமட்டிக் கொண்டு வந்தது அவருக்கு. உடனே ஊறுகாய் பொட்டலத்தை பிரித்து நாக்கில் தடவிக்கொண்டு இன்னொரு மிடறு குடித்தார். தட்டிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த கோடியாமூட்டு சரவணன் பக்கத்தில் நின்றிருந்தவரை சீண்டி “இன்னா குடிக்கிறார் தெரியுதா?” எனக் கேட்டு, “சாராயம்” என உதட்டைப் பிதிக்கி கண்ணைச் சிமிட்டியவாறே பதிலையும் சொன்னான். சுப்ரமணிக்கு சாராயத்தின் நெடி தாங்க முடியவில்லை. மீண்டும் ஊறுகாய் பொட்டலத்திலிருந்து உறுகாயை சிறிது எடுத்து நாக்கில் தடவிக்கொண்டார். டம்ளரில் மீண்டும் கொஞ்சம் சாராயத்தை ஊற்றிக் குடித்து விட்டு தன் பெட்டி அருகில் சொம்பை மூடி வைத்தார். மிதமான போதையில் அவரது கண்கள் சுழன்றன. அந்தபோதையிலும் அவருக்கு அம்சவேணியின் ஞாபகம் வந்துபோனது வந்தததிலிருந்து அவர் எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் எங்கும் அவளின் நடமாட்டம் தென்படவில்லை. இம்முறை வழங்கமாக அவள் போடும் முறுக்குக் கடையைக்கூட காணவில்லை. எங்கு போயிருப்பாள் என்று யோசித்தப்படி இடுப்பு மடிப்பிலிருந்த பீடிக்கட்டை எடுத்து ஒன்றை உருவி பற்றவைத்தார். பெட்டியில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து பார்த்துக் கொண்டே குழைத்து வைத்திருந்த அரிதாரத்தை முகத்தில் பூச ஆரம்பித்தார். மேடையில் சூரவேஷம் போட்டிருந்த கருவாட்சி கிருஷ்ணமூர்த்தி கட்டியக்காரணை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். அடுத்து சுப்ரமணி தான் போக வேண்டும். வேக வேகமாக ஆடைகளை உடுத்தி தயாராக இருந்தார். மேடையில் இருந்து சூர வேஷமும் கட்டியக்காரனும் இறங்கிய பின் திரைக்கு பின்னே சென்று குரலெடுத்து,
“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே,”
என பாடிய படியே திரையை விலக்கியபடி மேடைக்கு வந்தார். பெட்டி போடுபவரும், தபேலா வாசிப்பவரும் அவருடன் இணைந்து பாடலை சத்தமாகப்பாடி வாசித்தனர். சுப்ரமணியின் கால்கள் தாளத்திற்கேற்ப சக்கரமென மேடையில் சுழன்றது. வாத்தியகாரர்கள் அவரது ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து வாசித்தனர். கூட்டத்தில் சல சலப்பு ஓரளவு அடங்கியிருந்தது. அவர் பாடி முடித்து, “அடே காவலா” என கட்டியக்காரனை அழைத்தார். கட்டியக்காரன் ஷார்ட்ஸ் அணிந்து, கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பாத்த்து கூட்டம் கைதட்டிச் சிரித்தது. நாட்டு நலம் பற்றி கட்டியக்காரனிடம் விசாரித்தவர். தன் மனைவி சீதா என்ன செய்கிறாள் என பார்த்து வருமாறு கூறி, திரைக்கு பின் வந்து சொம்பில் இருந்து கொஞ்சம் எற்றிக்குடித்துவிட்டு பீடியை பற்ற வைத்து ஆழ்ந்து இழுத்தார். மேடைக்கு வலப்புறம் பானையில் வைத்துக்கொண்டு குல்பி ஒஸ் விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். சிறுவர்கள் சிலர் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நாடகமும் வனவாசம் கட்டத்தை அடைந்திருந்தது. அடுத்தது சீதையை இராவணன் கடத்திச் செல்ல வேண்டும். சுப்ரமணி ஒவ்வொருமுறை மேடைக்கு சென்று வந்ததும் ஒரு மிடறு சாராயத்தை குடித்து விட்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டார். போதை தலைக்கேறியதும் மீண்டும் அவருக்கு அம்சவேணியின் ஞாபகம் வந்தது. முறுக்கு கடையும் போடாமல் எங்கு சென்றிருப்பாள் என மீண்டும் யோசித்தவாறே பக்கத்திலிருந்த சித்தாமூர் மூர்த்தியை கூப்பிட்டு, “எனக்கு வயித்த என்னமோ பன்னுது.. ஏரி வரைக்கும் போய் வந்துடறேன், அது வரைக்கும் பாத்து மெல்ல நகத்துங்க” என்று கூறி அம்சவேணி வீட்டை நோக்கி நடந்தார். பெட்டிக்காரர் சத்தமாக பாடியபடி வாசித்துக் கொண்டிருந்தார். குல்பி ஜஸ் காரனும் வண்டியில் கட்டியிருந்த மணியை ஆட்டியபடி விற்றுக் கொண்டிருந்தான்.
அம்சவேணியின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போதே சுப்ரமணிக்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் அவளுக்கும் இடையில் நிகழ்ந்த அந்த முதல் சந்திப்பு குறித்த சித்திரம் அவர் மனத்திரையில் குமிழிட உடல் முழுக்க ஒரு வித பரவசம் தொற்றிக் கொண்டது.













அது சித்திரை மாதம் வழக்கமாகவே தமிழ் வருஷப்பிறப்பிற்கு கற்பக வினாயகர் கோவில் திருவிழா களைகட்டும். ஆட்டம் பாட்டம் எல்லாம் கனஜோராக நடக்கும். அந்த வருடமும் இரண்டு நாள் நாடகம் நடத்துவதாக ஏற்பாடு. ஜமீன் கூடலூரைச்சேர்ந்த பந்தல் காரர் ஒரு வாரத்திற்கு முன்பே கோவிலுக்கு வடக்கே விஸ்தாரமாக பந்தல் போட்டு சென்றுவிட்டார். அதன்பிறகான மாலையில் சிறுவர்கள் பந்தலடியே கதியாக கிடந்தனர். வழக்கமாக பெரும்பாக்கம் கதிரேசன் செட்டியார் ஜமா இல்லையென்றால் செ.குன்னத்தூர் சிவாலிங்கம் ஜமா தான் தாம்பூலம் வாங்குவார்கள். அந்த வருடம் என்ன காரணமோ தெரியவில்லை. நாட்டாண்மைக்காரர் தென்பேர் அம்மன் நாடக மன்றம் என்ற புது ஜமாவுக்கு தாம்பூலம் கொடுத்தார்.
லட்ச தீபத்தன்று முதல் நாள் ஆட்டம். மக்கள் அரசமரத்தடியில் பொங்கலிட்டு வினாயகருக்கு படைத்து, ஊரைச் சுற்றிக்கொண்டு சென்றபோது செஞ்சியில் இருந்து வரும் ஜோதி பஸ்சில் சந்திரா கடை முகட்டில் வந்து இறங்கினார் நாடக மன்றத்தினர். ஆளாளுக்கு ஒரு இரும்பு ட்ரங்க் பெட்டி வைத்திருந்தினர். அதன் மீது அம்மன் நாடக மன்றம் தென்பேர் என பெயின்ட்டால் எழுதியிருந்தது. வழிகேட்டுக்கொண்டு அவர்கள் சன்னதி தெரு வழியாக நாடக கொட்டகையை அடைந்தனர். அவர்களைக் கண்டதும் சிறுவர்கள் கும்மாளமிட்டனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பெட்டியை கொட்டகையில் வைத்துவிட்டு அம்மன் நாடக மன்றம் என்று எழுதப்பட்ட திரைச் சீலையை முதலில் கட்டினர். பின்னர் மேடையின் பின்புறம் இருந்த கொட்டகையில் ஒவ்வொருவரும் தங்களது பெட்டியை திறந்து ஆடைகளை எடுத்து கயிற்றில் போட்டனர். வழக்கமாக திருக்கோவிலூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சவுண்ட் சர்வீஸ் தான் ஒளி ஒலி அமைக்கும் வேலையை ஏற்பார்கள் அந்த வருடமும் அவர்கள் தான் மேடையில் மைக்கை கட்டிக் கொண்டிருந்தனர். மந்தவெளியில் மக்கள் மெல்ல கூடக் தொடங்கினர். சிலர் பாயைப் போட்டு இடம் பிடித்தனர். சிலர் சாக்கு, இன்னும் சிலர் படுதா ஆகியவற்றை கொண்டு இடம்பிடித்தனர். கோயிலடியில் ஒரு சிறுவன் கமர்கட் விற்றுக்கொண்டிந்தான். பந்தலுக்கு மேற்கே சிலர் “பத்து வச்சா இருபது.... இருபது வச்சா.... நாப்பது” எனும் இட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர். சிலர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் அங்கும் இங்கும் புழுதியை கிளப்பியப்படி ஓடிக்கொண்டிருந்தனர். செட்டியார் வீட்டு குமார் சர்க்கார் கிணற்று ஓரம் சிறிய கடை ஒன்றை போட்டிருந்தார். அந்த கடைக்கு பக்கத்திலேயே நாப்பாளையத் தெரு பரமசிவம் ஒரு டிரம்மில் டீயை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
பத்து மணிக்கு மின்சாரம் நின்று வந்ததும் நாடகம் தொடங்கியது. ஆர்மோனியக்காரரும், தபேலாக்காரரும் சுதியை சரிசெய்து கொண்டிருந்தனர். செட்டுக்காரர் வந்து மைக்கின் முன் நின்று மைக்கை விரலால் தட்டி “ஒன்.. டு... திரி... மைக் டெஸ்டிங்” என்று இரண்டு மூன்று முறை செய்து விட்டு சென்றார்.
“வந்தனம். வந்தனம்... வந்த செனமெல்லாம் குந்தனும்” என திரைக்கு பின்னால் இருந்து கெட்டியக்காரன் பாட, அதையே உரத்தக்குரலில் பெட்டிக்காரரும் தபேலாக்காரரும் பாடி வாசித்தனர். பாடிக்கொண்டே திரையை விலக்கிக்கொண்டு கெட்டியக்காரன் பளபளக்கும் உடையில் மேடைக்கு வந்து பெட்டிபோடுவரையும், தபேலா வாசிப்பவரையும் தொட்டு வணங்கினான். மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த பெரிய பெரிய பொட்டலங்களை கெட்டியக்காரனிடம் கொண்டு கொடுத்தனர். அவனும் அதை ஆவலோடு வாங்கிக்கொண்டான். அந்த பொட்டலத்தில் இருந்து ஒன்றை எடுத்து பிரித்தான். பிரிக்க பிரிக்க வெறும் காகிதமாக வந்து கொண்டே இருந்தது. கூட்டம் விழுந்து விழுந்து சிரித்தது. அவனும் சளிக்காமல் பிரித்துக்கொண்டே இருந்தான். கடைசியில் அவன் எதிர்பார்க்காத நேரத்தில் பொட்டலத்திலிருந்து ஒரு தவளை துள்ளிக்குதித்து ஓடியது. கெட்டியக்காரனும் துள்ளிக்குதித்தான் கூட்டத்தில் ஒரே சிரிப்பலை. சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“சைலேன்ஸ்.. சைலேன்ஸ்” என்று கெட்டியக்காரன் சொன்னபோது தான் கூட்டம் அமைதியானது. கூட்டத்தைப் பார்த்து அவன் பேசத் தொடங்கினான். “பெரியோர்களே தாய்மார்களே, ரசிகப் பெருமக்களே, இன்று இரவு நடத்தக்கூடிய நாடகம் கிருஷ்ணன் தூது அல்லது பதினெட்டாம் போர். மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க இன்றிரவு நடத்தக்கூடிய நாடகம் கிருஷ்ணன் தூது அல்லது பதினெட்டாம் போர்” என்று கூறி “நாடகத்தில் சொற்குற்றம் பொருட்குற்றம் மற்ற ஏனைய குற்றங்கள் இருப்பின் பொறுத்தருளவும்”என்று கூறி பாட ஆரம்பித்தான் .
“நாட்டுக்கு சேவை செய்ய...
நாகரீக கோமாளி வந்தேனுங்க
ஆட்டம் ஆடி பாட்டு பாட
அழகான கோமாளி வந்தேனுங்க” என பாடி முடித்து திரைக்குபின் சென்று கம்பெனி மேனேஜரிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்துக் கொண்டான். அப்போது திரைக்கு பின்னால் இருந்து பழையகருவாட்சி கிருஷ்ணமூர்த்தி சூரவேஷம் போட்டுக்கொண்டு, “அண்டங்கள் ஏழும் படீர் படீர் என அலைகள் எல்லாம் குபீர் குபீரென” எனும் பாடலை கர்ஜனையோடு பாடிக்கொண்டிருந்தார்.
“ஏம்பா குடிக்க தண்ணி இருந்தா குடுங்கபா” என்று கட்டியக்காரன் கேட்டான். அதற்கு கிருஷ்ணர் வேஷம் போடும் சுப்ரமணியிடம், மேனேஜர் “ஏம்பா அங்க முறுக்கு வித்திட்டிருக்க அம்சவேணிகிட்ட போயி ஒரு ஏனத்தில் தண்ணி கொண்டு வரச் சொல்லுப்பா ” என்றார்.
அம்சவேணி என்றதுமே அவளது முகம் சுப்ரமணியின் மனத்திரையில் தைலவண்ண ஓவியமென திரண்டது. கோயில் பக்கத்தில் இருந்த மண்டபத்தில் அவர்களுக்கு உணவு பறிமாறியபோது அவள் தான் வளைய வளைய வந்தாள். நல்ல எடுப்பான தோற்றம். வசீகரிக்க கூடிய பார்வை. வளைவும் நெளிவுமான உடல்வாகு. ஒவ்வொரு பிடி சோற்றை எடுத்து வாயில் போடும் போதும் அவன் கண்கள் அவளைத் தேடியது. அவளுக்கும் அவனது பார்வை என்னவோ செய்தது. சமையல் செய்த நவுட்டுக்காரர் கூட “அம்சவேணி... அம்சவேணி..” என்று அவளையே எதற்கெடுத்தாலும் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்சவேணி அவளுக்கு பொருத்தமான பெயர்தான் என அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சாதம் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் பார்க்கும் படி அங்குமிங்கும் நடந்தாள்.
“ஏம்பா சொன்னது காதுல உழல?” என்று மேனேஜர் மீண்டும் கேட்டபோது தான் சுப்ரமணிக்கு நினைவு வந்தது. “தோ போரன் அண்ணே” என்று கூறி கொட்டகையை விட்டு பந்தலுக்கு தெற்கு புறம் பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் முறுக்கு விற்றுக்கொண்டிருந்த அம்சவேணியை நோக்கி நடந்தான்.
ஒரு மரபெஞ்சில் சின்ன சின்ன சில்வர் பாத்திரங்களில் எள்ளடை, முறுக்கு ஆகியவற்றை வைத்து அம்சவேணியும் அவளது கணவனும் ஆளுக்கொரு மர ஸ்டூலில் அமர்ந்து கொண்டிருந்தனர். சுப்ரமணி வந்து, “மேனேஜர் தண்ணீ கொண்டு வரச் சொன்னார்” என அம்சவேணியைப் பார்த்து சொன்னான். அதற்கு அம்சவேணியின் கணவன் “த புள்ள தண்ணி கேக்கறாங்க பாரு, போயி ஒரு கொடம் கொண்டு வந்து கொடு” என்றான். அவள் ஏதும் பதில் சொல்லாமல் இவனைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தாள். அவளது சிரிப்பு அவனுள் காமத்தின் மொக்குகளை அவிழ்க்கத் தொடங்கின. அவள் கொட்டகையின் பின்பக்கமாக சென்று சர்க்கார் கிணற்றை சுற்றிக் கொண்டு சென்றாள். அவள் சென்ற சிறிது நேரம் கழித்து, இவன், “வயித்த கலக்கற மாதிரி இருக்குது எந்த பக்கம் போறது?” என்று அம்சவேணியின் கணவனிடம் கேட்டான். அதற்கு அவன் சாதாரணமாக, “அம்சவேணியின் பின்னடியே போங்க. வீடு எறக்கத்துல தான் ஆயிகுளம் இருக்கு” என்று கூறினான். இவன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அம்சவேணியின் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
கூட்டம் நாடகத்தில் ஆழ்ந்திருந்தது. மேடையின் முன்புறம் சில சிறுவர்கள் அப்படியே மண்ணில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். மைக்கில் கட்டியக்காரன் “கற்பக வினாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த எல்ஜசி ஏஜெண்டாக பணிபுரிகின்ற குருநாதன் என்கின்ற அண்ணார் அவர்கள் பப்பூனாக நடிக்கும் கல்பட்டைச் சார்ந்த சரவணன் ஆகிய எனக்கு ரூபாய் பத்தை அன்பளிப்பாக வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்க்கும் என் சார்பிலும், விழுப்புரம் மாவட்டம், அதே வட்டத்தைச் சார்ந்த தென்பேர் கிராமம் ஸ்ரீஅம்மன் நாடக மன்றத்தாரின் சார்பிலும், வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறிக் கொண்டிருந்த போது, பின்னால் யாரோ வருவதை உணர்ந்த அம்சவேணி திரும்பிப் பார்த்தாள். சுப்ரமணி வருவதை அறிந்ததும் அவளது மனதிலும் காமத்தின் தித்திப்பு மெல்லிய கீற்றென தோன்றி மறைந்தபோது அவனைப் பார்த்து அவள், “இந்த இருட்டுல எங்க கௌம்பிட்டீங்க?” என்றாள். “வயித்த கலக்குற மாதிரி இருக்குது அதான்” என்று கூறி தயங்கித் தயங்கி அங்கேயே நின்றான். அவள், “அதோ தெரு எறக்கத்துல ஆயிகுளம் இருக்குது” என்று அவனிடம் கூறிக்கொண்டே உள்ளே சென்றாள். இவன் கைலியை அவிழ்த்து கட்டிக்கொண்டு அவள் வீட்டு எறவானத்தைப் பிடித்தப்படி நின்று கொண்டிருந்தான். உள்ளில் ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. நடையிலிருந்து அவள் தெருவைப்பார்த்தாள். இவன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு கேட்கும் விதமாக, “அதுக்குள்ளயா போயிட்டு வந்துட்டீங்க?” எனக் கேட்டாள். இவன் ஒரு மாதிரிச் சிரித்தான். ஒரு எவர் சில்வர் குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து திண்ணையின் கீழ் வைத்தாள். சிறிது நேரம் இருவரும் மாறிமாறி பார்த்துக் கொண்டனர். நடு நிசி அவர்களுக்கிடையிலான தொலைவை மெல்ல இல்லாமல் செய்து கொண்டிருந்தது. அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, அவள் மீண்டும் உள்ளுக்கு சென்றாள். சுற்றுமுற்றும் பார்த்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பின்னாலேயே சென்றான். இவன் உள்ளே வருவதை அறிந்தவள் “யோவ் அப்படியே ஓடியாராதே. கதவை சாத்திட்டு வா” என்று திடுதிப்பென கூறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனது மனம் பலவித கணக்குகளை சடுதியில் போட்டு அழித்தது. பயமாகவும் இருந்தது அவனுக்கு. ஒருவித நடுக்கத்தோடே கதவைச் சாத்திவிட்டு மெல்ல நடந்து வந்து அவளை இறுக்கி அணைத்தான். “தொரைக்கு நாங்களே கூப்பிடனும்” என்று தலையில் மெதுவாக கொட்டினாள். அவன் அவளது காது மடல்களை மெல்ல கடித்தான். அவள் உடம்பிலிருந்து வீசிய மட்டமான பவுடர் வாசனை மேலும் அவனுள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டு சுவற்றில் பல்லி ஒருமுறை கத்தி முடித்தபோது அவள் தண்ணீர்க் குடங்கள் வைக்கப்பட்டிருந்த பக்கம் தலையை வைத்து படுத்தாள். அவன் கையைப் பிடித்து அவள் இழுத்தாள். இருவரது சுவாசங்களிலும் உஷ்ணம் ஏறியிருந்தது. அவள் அவனது உதட்டைக் கவ்வி நீண்ட முத்தம் ஒன்றை கொடுத்தாள். பின் அவன் அவளுக்குள் எதையோ ஆழ்ந்து தேடினான். அவளும் அவன் தேடலுக்கு ஒத்துழைத்தாள். எங்கும் சூழ்ந்திருந்த இருட்டு அவர்களை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவர்கள் எழுந்து இடையை உடுத்திக் கொள்ளும் போது தெருவிளக்கு கம்பத்தின் கீழ் படுத்திருந்த நாய் ஊலையிட்டது. தோட்டத்திற்கு சென்று வந்தபின் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு தெருவிற்கு வந்து குடத்தை தூக்கிக்கொண்டு “யோவ் செத்த நேரம் கழிச்சி வா” எனக் கூறி விட்டு நடந்தாள். இவன் தெருத் திண்ணையில் அமர்ந்து ஒலி பெருக்கியில் வரும் குரலைக் கொண்டு யார் மேடையில் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மனத்திரையில் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடந்த பின், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு மெல்ல நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அதற்குள் அவள் தண்ணீரை கொண்டு வந்து வைத்து விட்டு, முறுக்கு விற்கும் இடத்திற்கு சென்று தன் கணவன் அருகில் நின்று கொண்டிருந்தாள். வேஷம் பூசும் கொட்டகைக்குள் நுழையும் போது அவளைத் திரும்பி பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெல்லியதாக சிரித்தாள்.
இரண்டாம் நாள் மட்டும் அவர்கள் மூன்று முறை கூடினார்கள். இரண்டாம் முறை சகடை கொட்டகை இருட்டிலும் மூன்றாவது முறை சர்க்கார் கிணற்று ஓரத்திலும் அவர்கள் ஒதுங்கினர். மூன்றாம் முறை அவளை புணர்ந்த போது அவள் அவனை எலும்புகள் நொறுங்கும் படி இறுக்கி அனைத்தாள். தலைமுடியை இறுக்க பிடித்துக் கொண்டு அவனுக்கு தோதாக இயங்கினாள். கிரக்கத்தின் பிடியில் இருந்தவள் அவன் காதில், “சத்தியமா நா இதுவரை இப்படி அனுபவிச்சதே கெடையாதுயா” என்றாள். அவள் வார்த்தைகள் அவனுள் வேகத்தைக் கூட்டியது. கடைசியில் அவனை அருகில் அழைத்து இறுக்கி அணைத்து, உச்சந்தலையில் அழுத்தமாக ஓர் முத்தத்தை தந்தாள். அவனுக்கு அவளை அங்கேயே விட்டு செல்ல விரும்பமில்லை, எப்படியாவது தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என எண்ணி “நாம எங்கியாவது போயிடலாமா? ”என்று அவளிடம் கேட்டான். அவ்வார்த்தைகளை கேட்காதவளைப் போன்று அவன் பிடிக்குள்ளாகவே இருந்தாள் அவள். இருட்டு அவர்களுக்கு தைரியத்தையும் சுதந்திரத்தையும் அளித்தது. ஒரு பெண் தன் பையனைத் தூக்கி தோளில் போட்டு, பாயை உதறி சுருட்டிக் கொண்டு சன்னதி தெரு நோக்கி நடந்தாள். மழவந்தாங்கல் ரகோத்தமக்கவுண்டர் காளி வேடமிட்டு மேடையில் நடித்துக் கொண்டிருந்தார். மடத்து திண்ணையில் அமர்ந்து கொண்டு சிலர் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும் அவன் கேட்டான். அவள் அவனையே உற்றுப் பார்த்தாள். பின் உடைகளை சரிசெய்து கொண்டு எழுந்து உட்கார்ந்தவள் “நெஜமாவா?” என்றாள். அவன் ஆமாம் என்பது போல தலையாட்டினான். அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. கம்பத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து தேநீர் அருந்த சென்றனர். மீண்டும் அவனே அவளிடம் கேட்டான், “ஏன் எம்மேல் நம்பிக்கை இல்லையா? கூத்தாடிதானேன்னு பாக்கறீயா?”. “ச்சே அப்படிலாம் யோசிக்கல” என்று சொன்னாள். “வேற எப்படி யோசிக்கிற”. “அவரயும் கொழந்தைகளையும் பத்தி யோசிச்சேன்” என்று அவள் சொன்னபோது தான் அவனுக்கு தன் சின்ன மகன், “அப்பா ஆட்டமாடிட்டு திரும்ப வரக்குல எனக்கு கவுரு கட்ற ஷீவும் ஜாமின்ரி பாக்சும் வாங்கிட்டு வாப்பா” எனச் சொன்னது மனத்திரையில் தோன்றி மறைந்தது. அவளை விட்டுச் செல்லவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. “எங்கூட வந்தா மகாராணியாட்டம் உன்ன பாத்துக்குவேன்” என்று அவளது கை விரல்களை வருடிய படியே சொன்னான். அதற்கு அவள் “எனக்கும் இசையாதான் இருக்கு. ஆனா அதுலாம் சரிபட்டு வறாதுயா” என்றாள். அவன் “ஏன் சரிப்பட்டு வராது?” என்று திரும்பக் கேட்டான். அவள் தீர்க்கமாகச் சொன்னாள். “சரிப்பட்டு வராதுனா வராதுதான்.” பின் நீண்ட நேரம் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது. பெட்டிக்காரர் “செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” என்ற பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். நிலவு உச்சியில் நிலை கொண்டிருந்தது. சர்க்கார் கிணற்றோரம் இருவர் நின்றபடி புகைத்துக் கொண்டிருந்தனர். நாப்பாளையத் தெரு பரமசிவம் ட்ரம்மை சாய்த்து டீ பிடித்துக் கொண்டிருந்தான். மூச்சை நன்கு இழுத்து விட்டபடியே அவள் “நா எங்கயும் ஓடிர மாட்டேன். நீ எப்பவேனா இங்க வரலாம். அவருக்கும் புள்ளைகளுக்கு ஆக்கி போடவாவது ஒரு ஆள் வேணுமில்ல” என்று சொன்னாள். அவளின் வார்த்தைகள் அவனுள் ஒரு வித அதிர்வை ஏற்படுத்தியது. பிறகு எதுவும் அவனுக்கு பேசத் தோன்றவில்லை. சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் “நான் போவனும்” என்றான். “என்ன கோபமா?” என்றாள் அவள். “அதுலாம் ஒன்னுமில்லை” என்று சொன்ன படியே எழுந்து நாடகக் கொட்டகையை நோக்கி நடந்தான்.
“இந்நேரத்துல எங்க கௌம்பிட்டீங்க நங்காத்தூராரே?” என்று சகடைமேல் உட்கார்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த செங்குறிச்சார் கேட்டவுடன் தான் சுப்ரமணி பழைய நினைவுகளில் இருந்து மெல்ல மீள ஆரம்பித்தான். ஒருகணம் நின்று பின்னால் திரும்பிப்பார்த்தான். நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெட்டிச் சத்தமும் தபேலா சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. சர்க்கார் கிணற்று மீது சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அம்சவேணியின் வீட்டை நெருங்க நெருங்க சிவன் கோயில் அருகிலிருந்த இலுப்பை மரத்திலிருந்து பரவிய இலுப்பை பூவின் வாசனை அவன் மூக்கை துளைத்து.
அம்சவேணியின் வீட்டில் பூட்டு தொங்கியது. உள்ளேயும் எந்த விளக்கும் எரிவதாக தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீண்டும் நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அம்சவேணியைப் பற்றி யாரிடம் கேட்பது என்றும், அப்படிக் கேட்டால் யாராவது தப்பாக அர்த்தப் படுத்திக் கொள்வார்களோ என்றும் அவன் மனதில் எண்ணற்ற கேள்விகள் தோன்றி மறைந்தன. பின் டீகடை நோக்கி சென்றவன் “ஏம்பா.. ஒரு டீ கொடு” என்று பரமசிவத்தைப் பார்த்து கேட்டான். “நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே கொண்டு வந்திருப்பேன்னே” என்று பவ்யமாக அவன் சொன்னான். இரண்டு மூன்று மிடறு தேனீரை குடித்ததும் டீ கடைக்காரனிடம் அம்சவேணியைப் பற்றி கேட்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்றும் யோசித்தான். டீயை முழுவதும் குடித்து முடித்த பின் மெல்ல அவனிடம் சுற்றி வளைத்து கேட்டான்.
“ஏம்பா இந்த வருஷம் யாரும் முறுக்கு கடை போடலியா?”
“அம்சவேணி இருந்தா போட்டிருக்கும், வேற யாருங்க போடுவா? ” என்றான் அவன்.
இவன் வெகு சாதாரணமாகக் கேட்டான் “அம்சவேணி எங்கயாவது எருக்கு கீருக்கு போயிக்கா?”
“அட அந்த கதய ஏஞ்சார் கேக்கறீங்க, சேலத்திலிருந்து கெணறு வெட்ட வந்த ஒரு செட்டியாரு கூட அது ஓடிபோச்சுங்க” என்றான்.
பாம்பை மிதித்தது போல உணர்ந்தான் இவன். அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. அவளுடனான நினைவுகள் அனைத்தும் தன்னுடைய வண்ணங்களை மெல்ல உதிர்க்கத் தொடங்கியிருந்தன. மலத்தை மிதித்த உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. தனக்கு ஏன் அவ்வாறு தோன்ற வேண்டும் என்றும் அவன் யோசித்தான். நாடக மேடையில் காளி, வேப்பிலையைக் வாயில் வைத்தபடி உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. கடையியதிலிருந்து இதற்காகவே வரவழைக்கப்பட்ட பம்மை உடுக்கைகாரர்கள் வேக வேகமாக வாசித்தனர்.
“சரி வரம்பா” என்று இவன் டீ கடைகாரரிடம் கூறிவிட்டு, நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அம்சவேணியின் முகம் அவனை அலைகழித்தப்படியே இருந்தது. அந்த சேலத்து செட்டியாரை ஒரே ஒருமுறை அந்த கணத்தில் அவனுக்கு பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவனிடம் இருந்திருக்க வேண்டும், அது தான் அம்சவேணியை அவனுடன் அழைத்து சென்றிருக்கும் என்றும் யோசித்தான். சற்று முன்பு தோன்றிய மனநிலைக்கு முற்றிலும் தொடர்பற்ற வேறொரு மனநிலையில் அவன் கொட்டகை நோக்கி நடந்தான். அப்போது “அம்சவேணி பின்னாடியே போங்க, தெரு எறக்கத்துல தான் ஆயி குளம்” என்று கூறிய அம்சவேணியின் கணவனது குரல் அவன் காதோரம் ஒலித்து மெல்ல தேயத்தொடங்கியது.

Sunday, August 22, 2010

பாடாண் திணை


கூவிரம்கொண்டு
போர் வெல்ல
பகையரண் வளைத்த
நடு நாட்டு கூனா
அவளைச்சுற்றி வரவா
ஆயிரம் நரம்புள்ள யாழோடு
திரிந்தாய்
நீ நாடு பிடிப்பாயென
நம்பிக்கொண்டிருக்கிறது லோகம்

ஐயோ பாவம்
உடைந்த வளையலையும்
உதிர்ந்த மல்லியையும்
சேகரித்துக் கொண்டிருக்கும் நீ
நடந்து செல்லும் திசையெங்கும்
பெருக்கெடுத்தோடுகிறது
சபிக்கப்பட்டவுன் சுக்கில நதி

பொன்னையும் பொருளையும்
வாரியிறைத்தால்
போனது வந்துவிடுமென
யார் சொன்னது
போ...
போய்க் கதவைத் திறந்து பார்
ஓராயிரம் யோனிகள்
ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பதை

இப்போது
உனக்கு சந்தோஷம்தானே?

Saturday, August 21, 2010

நட்பு பாராட்டல்


அதிகப்படியான
உங்களின் விசுவாசம்
என்னை பீதியடையச் செய்கிறது
புற்றுக்குள் ஒளிந்திருக்கும் நாகத்தைப் போல
நானும் தயார் நிலையில் இருக்கிறேன்
எதற்கும் எப்போதும்

Thursday, August 19, 2010

எல்லோருக்கும் முன்பாக ஒரு நெடுஞ்சாலை நீண்டுகொண்டேயிருக்கிறது.



சற்றைக்கு முன்னர் புணர்ந்த
அவளின் கருங்கூந்தலை ஒத்திருக்குமந்த
நெடுஞ்சாலையின்
ஒருபுறம் நீங்கள்
அதற்கு நேரெதிரே மெல்ல ஊர்ந்து
வருகிறது ஓர் நத்தை
நிலைத்துப் பரவும் வெயிலைப்போல

நகரின் பிரதான நெடுஞ்சாலையைக் கடக்கிறோம்
என்ற அச்சம் சிறிதுமின்றி
மெல்ல முன்னேறுகிறது அது
ஆனால் உங்களால் அவ்வாறு இருக்கமுடிவதில்லை
பெருஞ்சீற்றத்தோடு பாய்ந்து செல்லும்
வாகனங்கள், சாலைவிதிகள்
விடைத்தகுறிகளென நிற்கும் கட்டடங்கள்
சடுதியில் கடந்து செல்லும் ஒரு
மரணவூர்தியைப்பற்றியான
பிரமிப்பில் ஆழ்ந்துபோகின்ற கணத்தில்
நாகத்தின் பிளவுண்ட நாவெனத் தோன்றுகிறது
அந்நெடுஞ்சாலை

அனைத்தையும் அலட்சியம் செய்தபடி
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அந்நத்தையிடம்
அதன் சுதந்திரம் குறித்து
பயமின்றி சாலையைக்கடக்கும் நுட்பம் குறித்து
கடக்கவேண்டியதன் தேவைகுறித்து
துவக்குகிறீர்கள்
உங்களின் விசாரணையை

அந்நத்தை தலையுயர்த்தி பேசத்தொடங்குகிறது;
கேள்வி கேட்பதைப் போன்று அவ்வளவு
சுலபமானது அல்ல ஒரு நெடுஞ்சாலையைக் கடப்பது
ஒரு பயிற்சிக்காக தீவிரத்துடன்
பழகிக்கொண்டிருக்கிறேன் நான்
இன்று
நீர்நிலையாய் இருக்கும் என் வசிப்பிடம்
நாளையும் அவ்வாறே இருக்கும் என்பது
என்ன நிச்சயம்
மேலும் இதிலெல்லாம் சுணக்கம் காட்ட முடியுமா
எனக்கேட்டு
வெயில் ஊர்கிற சாலையில் மெல்ல நகர்கிறது

யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நெடுஞ்சாலையில் சிவப்பு அணைந்து மெல்ல
மஞ்சள் ஒளிரத்தொடங்குகிறது

Wednesday, August 18, 2010

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?


பொய்யைக் கூட
உண்மைபோல கூறவேண்டியிருப்பதால்
இனிமேல்
என்னிடம்
எப்படி இருக்கிறீர்கள்
என்று மட்டும்
கேட்டு விடாதீர்கள்.

நம்மில் யார் தவறுகளுக்கு மிக அருகில் இருக்கிறோம்?


அகால மரணங்கள் எப்போதும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி விடுகின்றன. சமீபத்தில் இரண்டு அகால மரணங்களில் பங்கெடுக்க வேண்டியிருந்தது. என்னளவில் எந்த மரணமும் வெறும் செய்தியாக நின்று விடுவத்தில்லை. மரணம் அடைபவரின் நெருக்கத்தைப் பொருத்து மனஅதிர்ச்சி கூடவோ குறையவோச் செய்யலாம் அவ்வளவே. கடந்த பத்தாண்டுகளில் மரணத்தைக் கடப்பது பற்றி ஒருசில கவிதைகளை எழுதி இருந்தாலும் கூட அகால மரணங்கள் எப்போதும் பீதியூட்டுவதாகவே இருக்கின்றன.

மருத்துவத்துறையில் எவ்வளவோ அரிய பெரிய கண்டு படிப்புகள் வந்தபின்பும் அகால மரணங்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. சில வேளைகளில் எண்ணிக்கை கூடவும் செய்து வருகிறது. மனிதன் மரணத்தை வெல்லக்கூடிய நிலைக்கு வெகு சமீபத்தில் இருக்கிறான் என்று நாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் போதே, இன்ன நோய் தான் வந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியாமல் சில நோயாளிகளை நாமே கைப்பிடித்துக் கூட்டிச் சென்று மரணத்தின் வாசலில் விட்டு வருகிறோம். உண்மையில் மருத்துவத் துறையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? மருத்துவத்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சிகள் எத்தன்மையது என்பதை சரிவர உணர முடிவதில்லை.

ஒருவருடைய கல்லீரல் முப்பது நாட்களில் முழுவதுமாக பழுதடைந்து அதன் காரணமாய் அவர் உயிர்துறக்க வேண்டிய நிலை ஏற்படுமா? பொது மருத்துவத்தில் முதுகலை முடித்த நான்கிற்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும், நவீன மருத்துவ நோய் அறியும் கருவிகள் இருந்தும் எப்படி அவருக்கு கல்லீரலில் பிரச்சனை உள்ளதென்று அறியாமல் விட்டனர்? தவறு எங்கிருந்து தொடங்குகிறது? ஒருவராலும் அறிகுறிகளைக் கொண்டும் மருத்துவ ஆய்வுகளைக் கொண்டும் கணிக்க முடியாமல் போனதேன்?. ”தொடர்ந்து வாந்தி வருகிறதா லிவரில் பிரச்சனை இருக்கலாம்” என்று வெகுசாதாரண மக்கள் கூட கூறுகின்றபோது முதுகலை மருத்துவம் படித்தவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள்? வழக்கம் போன்று இதுவும் தற்செயல்தானா? எதுவும் விளங்கவில்லை.

மருத்துவம் தொடர்பாக கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா எனும் நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது. அதை தவறவிட்டவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளம் www.jeyamohan.inல் பார்க்கலாம். அதில் ஜெயமோகனோடு மருத்துவர்கள் ஒரு எதிராளியோடு சண்டையிடுவதைப்போல காரசாரமாக விவாதிப்பதைக் காணமுடியும். எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிய பின்பு ஜெயமோகனின் வாதத்திற்கே அழுத்தம் கூடுவதை உணரமுடிகிறது. பல லட்சங்கள் கொடுத்தும் நம்மால் ஓர் உயிரை மீட்க முடிவதில்லை. அந்தளவிற்கு பணத்தின் தேவை மருத்துவ உலகின் முதுகெலும்பாக மாறிவிட்டிருக்கிறது.

எந்தளவிற்கு ஆங்கில நவீன மருத்துவம் நுட்பம் நோக்கிச் செல்கிறதோ அந்தளவிற்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அளிக்கப்படும் வீரியமிக்க மருந்துகள், வேறொரு நோயை ஏற்படுத்திவிட்டே விடைபெறுகின்றன.இவ்வாறாக மனித உடல் ஒரு நடமாடும் ஆய்வகமாகவே மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. எலி, முயல் குரங்களுக்கு அடுத்தபடியாக மருந்து உற்பத்தியாளர்களுக்கு கிடைத்திருக்கும் மலிவு விலையுள்ள ஒரு சோதனைப் பொருள்தான் நோயுற்ற மனிதன். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு தான் யோசிக்கத் தோன்றுகிறது.

நம் சமூகத்தில் கடவுளுக்கு நிகராக மருத்துவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு பார்க்கப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நம்முடைய மருத்துவர்கள் அவசியம் உணர்ந்தாக வேண்டிய தருணம் இது. சில மருத்துவர்கள் கடவுளுக்கு வெகு அருகிலேயே இருப்பதையும் காண முடிகிறது. அவர்களை விட்டு விடுவோம். ஒரு நோயாளி என்பவனின் மனநிலை பல்வேறுபட்ட தளங்களில் பல நபர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவனது குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற நிறுவனங்கள் அவனோடு பிணைக்கப்பட்டுள்ளன. ஆக அவனுக்கு அளிக்கப்படும் மருத்துவம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமானதாகவே பொருள் கொள்ளப்படும். அந்த நம்பிக்கையில் தான் ஒருவன் மருத்துவர் ஒருவரைத் தேடி வருகிறான். எல்லா நோயாளிகளும் திரும்ப வீட்டிற்கு வருவோம் எனும் திடமான நம்பிக்கையோடுதான் மருத்துவமனை வாசலை மிதிக்கின்றனர். அந்த நம்பிக்கை நிச்சயம் பொருட்படுத்த வேண்டிய ஒன்று தானே?
இன்றைய காலகட்டத்தில் பணம் பெரிய பிரச்சனை அல்ல. குறிப்பாக நோயுற்றவர்கள் கடன் வாங்கியாவது நல்ல மருத்துவம் செய்து கொண்டு மீண்டுவிடவே ஆசைப்படுகின்றனர். அவர்களின் இந்த ஆசை பல்வேறு நிலைகளில் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கின்றது. அனைத்தையும் பொருட்படுத்த வேண்டிய ஓர் இடமே மருத்துவருடையது. அவரே கர்த்தர்; அவரே மீட்பார் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டிய பொருப்பும் கடமையும் நிச்சயம் அவருக்கு இருக்கின்றது. இது மருத்துவர்கள் மீதான விமர்சனம் அல்ல. அகால மரணங்கள் தோற்றுவிக்கும் மனநெருக்கடிகளில் இருந்து மீள ஒரு சராசரி மனிதன் மேற்கொள்ளும் சிறு எத்தனமே. இறுதியாக ஒரே ஒரு காட்சியை மட்டும் நாம் நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். ”மருத்துவம் பொய்த்து தாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்ற நிலையில் அந்நோயாளியின் மனநிலை எவ்வாறு இருக்கும்?” வேறெப்படியும் இக்கட்டுரையை எனக்கு முடிக்கத் தோன்றவில்லை.
குறிப்பு: நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு.சு.ராஜவேலுவின் அகால மரணம் ஏற்படுத்திய மனநெருக்கடிகளைக் கடக்கவே இக்கட்டுரையை எழுதவேண்டிய தேவை ஏற்பட்ட்து.

Tuesday, August 17, 2010

கொடுங்கனவுகள் மிகுந்திருக்கும் அவ்விரவு


மரணத்திற்கு
மிகச் சமீபத்திலிருக்கிறது
கைவிடப்பட்டவர்களின் உலகம்

கொடுங்கனவுகள்
மிகுந்திருக்கும்
அவ்விரவின் முடிவில்
நிகழப்போகும்
துக்கத்தின் அதிகாலை
கடைசி வாய்ப்பையும்
தட்டிப் பறித்துவிடுகிறது

உரையாட எவருமே கிடைக்காத
ஏமாற்றத்தில் கடைசியாக
நீங்கள் தொடப்போவது
ஜில்லிட்ட ஒரு உடலைத்தான்

அதன்பிறகான
எல்லா மரண வீட்டிலும்
எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்
துயர் தேங்கிய அவ்விரு கண்களை

Sunday, August 15, 2010

காணாமல் போகும் குளங்கள்


இயல்பிலேயே நம் பண்டைத் தமிழர் எதிர்கால நீர்த்தேவைகள் குறித்த தொலைநோக்கோடுகூடிய பார்வையைக் கொண்டிருந்தனர் என்பதை நமது இலக்கியங்கள் மற்றும் வரலாற்று நூல்களின் வழி அறிய முடிகிறது. தங்களின் வாழ்க்கைக்கு தேவையான நீர்த்தேவைகளை அவர்கள் ஏரி, குளம் மற்றும் கிணறுகளின் மூலமே பூர்த்தி செய்துகொண்டனர். மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் மேற்கண்ட நீர்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டதை தமிழகத்தின் உட்புறக் கிராமங்களுக்குச் சென்று கவனித்தால் இப்போதும் உணர்ந்துகொள்ள முடியும்.
கிராமப் பொருளாதாரம் பெரிதும் விவசாயம் சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக கால்நடைகள் சார்ந்ததுமாகும். ஆகவேதான் நம்முன்னோர்கள் ஊரைச் சுற்றிலும் குளங்களையும் சிறு குட்டைகளையும் அமைத்தனர். மழைநீரை முழுவதும் குளங்களிலும் ஏரிகளிலுமே அவர்கள் சேமித்தனர். கிராமப் பொருளாதாரத்தைக் குறித்து ஆன்மநேயத்தோடு இந்தியாவில் சிந்தித்தவர்கள் இருவரே. ஒருவர் மகாத்மா காந்தி. மற்றொருவர் பெருந்தகை ஜே.சி.குமரப்பா ஆவார். அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்களை கொண்டவர்கள் கூட அவர்களின் கிராமப் பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகளை எளிதில் புறந்தள்ள முடியாது.தன் வாழ் நாள் முழுக்க கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அமையவேண்டும் என்றும் அதுவே இயல்பானதும் சரியானதுமாகும் என்றும் ஜே.சி.குமரப்பா தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்ததை நமது தொலைநோக்கற்ற அரசியல் தலைவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தவே இல்லை. அவர்களின் நோக்கமெல்லாம் மிகப் பெரிய அணைகளின் மீதும், பெருந் தொழிற்சாலைகளின் மீதும் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதும் கிராம நீர்த்தேவைகளின் ஆதாரங்கள் குளங்களும் ஏரிகளுமே என்று ஜே.சி.குமரப்பா தன் ஒற்றைக் குரலில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அக்கிராமங்களின் தண்ணீர்த் தேவையைப் பொருத்து குளங்களும் ஏரிகளும் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது எனும் செய்திகளை ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இப்போதைக் காட்டிலும் கடுமையான பஞ்சத்தையும் வறட்சியையும் நம் முன்னோர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அப்போது அவர்களை அச்சிக்கல்களில் இருந்து மீட்க பெரிதும் உதவியது நீர் ஆதாரங்களின் மீது அவர்கள் கொண்டிருந்த அக்கறையே. முன்னோர்களின் வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் முறைகளையும் நவீனத்துவத்தின் பேரால் தொடர்ந்து அலட்சியம் செய்து வரும் தமிழ்ச்சமூகம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை எனும் பிரச்சனையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எளிய சூத்திரத்தையே நம் முன்னோர்கள் கையாண்டனர்.அவை, மழைக்காலங்களில் மழைநீரை ஏரிகளிலும் குளங்களிலும் சிறிதும் சேதாரமின்றி சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொண்டதுதான்.கிராமப் புறங்களில் இன்றும் ‘சர்க்கார் கிணறு’ எனும் சொற்றொடர் புழங்குவதை ஆழ்ந்து நோக்கினால் அதன் பின் இயங்கும் நம் முன்னோர்களின் இயற்கை சார்ந்த பார்வையை, அக்கரையை உணரமுடியும். ஆனால் நமது முன்னோர்கள் பொது கிணறுகளை வெட்டினார்களே தவிற வீடுகள் தோரும் கிணறுகளை வெட்டவில்லை. ஆனால் இன்று ஆழ்துளை கிணறுகளே இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் காரணமாகவே நிலத்தடி நீர்மட்டம் வேக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கிராமப் புறங்களில் கூட ஐநூறு அடி வரை பூமியை துளைத்தெடுக்கும் கொடூரம் நடக்கிறது. ஆனால் தண்ணீரைத் தான் காண முடியவில்லை. நகர் புறங்களில் நிலத்தடி நீர் மட்டத்தின் நிலை இன்னும் அபாயகரமான நிலையில் உள்ளது. பல்வேறு இடங்களில் கடல் நீர் உட்புகுந்துவிட்ட அவலத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.மேற்கண்ட அவலங்கள் எவையும் ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை என்பதுதான் ஆகப் பெரிய துக்கம்.
பொதுவாகவே நாம் அடிப்படைகள் சார்ந்து யோசிப்பது கிடையாது.மேலும் ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் உடனடி வெற்றிகள் மீதுதான் மோகம் அதிகம். ஆகவே எந்த அரசாக இருந்தாலும் அடிப்படை ஆதாரங்கள் என்று அழைக்கப் படும் மூல வளங்களை கண்டுகொள்வதுமில்லை. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்வதுமில்லை.ஆனால் நீர் ஆதாரங்களைக் காக்க பல ஆயிரங்கோடிகள் ஒவ்வோராண்டும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் சரியான வழியில் செலவிடப் படுகிறதா என்பதை சாமானிய மக்களால் ஒருபோதும் அறியமுடியாது.மேலும் ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசின் இன்னபிற அலுவலகங்கள் கட்ட இடம் தேவை எனும் நிலை எழும் போது ஆட்சியாளர்களின் கவனத்திற்கு ஏரிகளும் குளங்களுமே கவனத்திற்கு வருகின்றன. சமீபகாலமாக ஏரி குளங்கள் ஆக்கரிமிப்பு செய்வது அதிகரித்து வருவதாக ஓர் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏரி குளங்களின் மீது கட்டடங்களை அசுர வேகத்தில் எழுப்பும் நமது அரசுகளின் தீவிரத்தின் மீது செயல்படும் தொலைநோக்கற்ற அரசியல் பார்வையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
கிராமப் புறங்களில் காணாமல் போகும் குளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஒரு குளம் எப்படி காணாமல் போகும் என்று நம்மிடையே வியப்பு கலந்த ஓர் கேள்வி எழக்கூடும். ஆனால் அவை உண்மைதான். ஒவ்வொரு கிராமத்திலும் குளங்கள் மெல்ல காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன.ஒரு குளத்தை காணாமல் ஆக்க முறைப் படுத்தப் பட்ட ஒரு சில படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. அவை, செங்கல் சூளை மற்றும் இன்னபிற தேவைகளுக்காக குளங்களைச் சுற்றி மண் அள்ளுதல்; அதன் பின் குளத்தைச் சுற்றி நாலாதிசையிலும் பாவப்பட்டுள்ள படிக்கற்களை மெல்ல பெயர்த்தெடுப்பது; இதன் தொடர்ச்சியாக குளத்தின் ஆழத்தை கொஞ்சம் கொஞ்சமாக தரைமட்டத்திற்கு உயர்த்துதல். இவ்வாறாகத்தான் ஒரு குளம் நம் எல்லோரின் கண் எதிரிலேயே தன் உருவத்தை ,இருப்பை இழந்து ஒரு சமதளமாக மாற்றப் படுகிறது. இவை அனைத்தும் ஒரே நாளில் நிகழ்த்தப் படுவன அல்ல. ஒரு தவறு நடந்துகொண்டிருக்கிறது என்கிற எண்ணம் யாருக்கும் தோன்றாமல் ஒரு குளத்தின் அழிவு நிகழ்த்தப்படுகிறது.இந்த சீரழிவுகளை முன்னின்று நட்த்துவது சாதாரண வெகுஜன மக்கள் அல்ல. அவ்வாறு செய்பவர் நிச்சயம் அந்த பகுதியின் ஏதாவது ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இம்மாதிரி அழித்தொழிப்புகள் அவர்களுக்கே கை வந்த கலை. மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற செயல்பாடுகளில் மட்டும் நமது அரசியல்வாதிகள் கட்சிபேதங்களை கடந்து ஓர் அணியில் நின்று செயல்படுவதன் தேவையை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். எப்போதுமே ஒரு சாதாரண வழிப்பறிக்காரனிடம் தன் கோரமுகத்தை காட்டும் சட்டம் மற்றும் நீதித்துறை ஒருபோதும் அம்முகத்தை கோடிகளில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடத்தில் காண்பிப்பது கிடையாது. மேலும் அத்துறை தனது விசுவாசத்தின் வாலை ஆட்டி அதிகாரவர்க்கத்தின் பிம்பமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.
பச்சப்புள்ளாக் குளம், ஆயிகுளம், வண்ணாங்குளம், ஆண்டாசெட்டி குளம், வெள்ளக் குளம் போன்ற பெயர்களைத் தாங்கி ஒரு கிராமத்தின் அடையாளமாகவும், அக்கிராமத்தின் வரலாற்றுச் சுவடுகள் சிலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கின்ற குளங்களின் இன்றைய நிலை கேள்விக்குறியதாகவும் பீதியுண்டாக்குவதாகவும் உள்ளன .சராசரியாக கிராமப் புறங்களில் உள்ள குளங்களின் நீள அகலங்கள் அறுபது மீட்டராகவும் நாற்பது மீட்டராகவும் இருக்கின்றன. ஆழம் குறைந்தது இரண்டு மீட்டரில் இருந்து மூன்று மீட்டர்களாக உள்ளது. மேற்கண்ட அளவில் ஒரு குளத்தை வெட்ட இன்று பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கும் என்ற பிரக்ஞை சிறிதும் இன்றி நாம் குளங்களை எவ்வித குற்றவுணர்வுமின்றி தூர்த்து கொண்டிருக்கிறோம். எவற்றையும் கண்டுகொள்ளாமல் அரசும் ஒரு பார்வையாளராகவே இருக்க விரும்புகிறது. பல ஆயிரம் கோடிக்கு கீழ் செய்தாக வேண்டிய எந்தவொரு திட்டச் செலவையும் கற்பனை செய்துப் பார்க்க கூட அரசு விரும்புவதில்லை. நீர் நிலைகளைக் காக்க கோடிகளில் ஒதுக்கீடு செய்யும் இச்சூழலில் ஒவ்வொரு ஆண்டும் சில குளங்கள் காணாமல் போவதை நாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பத்து குளங்கள் இருந்த ஒரு கிராமத்தில் இன்று ஆறு குளங்களே பயன்பாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய சீர்கேடு? இவற்றையெல்லாம் அரசு எவ்வாறு சீர்செய்யப் போகிறது? அவ்வாறு செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொலைநோக்கோடு இருக்குமா என்பன போன்ற ஐயங்கள் நம்முன் பேருரு கொள்வதை தவிர்க்க முடியவில்லை. நம்முடைய ஐயங்களை களையவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு.
கோட்டை கொத்தளமும் கொடிமரமும் நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கோ அல்லது அதைவிட கூடுதலாகவோ மக்களும் மாக்களும் குடிக்கவும் அன்றாடம் புழங்கவும் தண்ணீர் தரும் குளங்களும் ஏரிகளும் அவசியம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய மனம் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாம். மிகப் பெரிய திட்டங்களின் மீது காட்டும் அக்கரையை அரசு கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகள் மீதும் காட்ட வேண்டும். குறிப்பாக நீர் ஆதாரங்களாக உள்ள ஏரி குளங்கள் மீதும் காட்டவேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏரி குளங்கள் சீர் செய்யப் படுவதாகக் கூறி அரசு உண்மைநிலையை உணராமல் இருப்பது இன்னும் மோசமான சூழலையே ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் சிறிதும் மெத்தனம் காட்டாமல் அரசு, கிராமங்கள் உள்ள நீர்நிலைகளை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமே மக்கள் மற்றும் மாக்களின் தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.”முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்க்கு இறை என்றே வைக்கப் படும்” எனும் குறளின் ஆழத்தையும் பொருளையும் அரசு உணரவேண்டிய சரியான தருணம் இதுவே.

கொலை-2


எல்லாம் செய்தாகிவிட்டது
என்கிறாய்
எதுவுமே செய்துவிடவில்லை
என்கிறேன்

இடையில்
மெல்ல நழுவிச் செல்கிறது
ஒரு தருணம்
பழுத்துதிரும் சிறு இலையைப் போன்று

Saturday, August 14, 2010

கொலை-1


எதிர்பார்ப்புகள் பொய்த்துவிட்ட
அந்நாளின்
கடைசி மணித்துளியில்
எல்லாமே நடந்து முடிந்திருக்கும்
ஒரு சிறு குழந்தையின் தாவலென

பரிசீலிக்கப்பட்டிருக்கும்
ஒரு வார்த்தை
மெல்லிய புன்னகை
உயிர்த்துடிப்பானதொரு முத்தம்
நிச்சயம்
எல்லாவற்றையும் தடுத்து நிறுத்தியிருக்குமென
இப்போது யோசிப்பதுதான்
ஆகப் பெரிய வன்முறை

Wednesday, August 11, 2010

குழந்தை அறிவுஜீவிகள் எனுங்கொடுங்கனவு


“நாளைக்கு மழை பேஞ்சிச்சு பாரு” என்று பேசும் மழலை மாறாத குழந்தைகளை ஒரு குழந்தை விஞ்ஞானியாகவோ அல்லது குழந்தை சாதனையாளராகவோ ஒவ்வொரு பெற்றோரும் மாற்றிவிடத் துடிக்கிறோம். குழந்தைப் பருவத்திலேயே உருவாகும் கம்பியூட்டர் மற்றும் கணக்கு புலிகளைப் பார்க்கும் போது ஆச்சர்யத்திற்கு மாறாக பயமும் அவமானமுமே எற்படுகின்றது.
குறைந்த பட்சம் ஒரு குழந்தையை குழந்தையாகவே நடத்தத் தெரியாத அசாதாரண சூழலில் நாம் வாழ்வதாகத் தோன்றுகிறது. நாமும் சிறிது காலம் குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்வதே கிடையாது. இது சார்ந்து எழுதும்போது என் தந்தையை பெருமையாக நினைக்கத் தோன்றுகிறது. பல விஷயங்களில் இன்று அவரோடு எனக்கு முரண்பட்ட கருத்து நிலவும்போது கூட மேற்கண்ட ஒரு விஷயத்தில் அவரை இப்போதும் உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு சந்தர்பத்தில் கூட அவர் என்னை படி என்று சொன்னதே கிடையது. மேலும் ஐந்தாம் வகுப்பிற்கு பின்பே நான் படிக்க ஆரம்பித்தேன் என்பதையும் இதனுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள முடியும்.உண்மையில் அப்போதுதான் நான் ரசித்துப் படித்தேன் என்று சொல்லலாம். ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வாழையடி வாழை எனும் நாடகத்தை இப்போதும் என்னால் நினைவு கூறமுடியும். அந்தளவிற்கு அந்நாடகத்தை ரசித்துப் படித்தேன். பின்னர் என் நண்பர்களோடு சேர்ந்து அதை நாடகமாகவும் நிகழ்த்தினோம்.நான் படித்தப் பள்ளி மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலில் அமைந்த பள்ளியாகும். அன்று எனக்கு தமிழ் பாடம் எடுத்தவர் திரு. துரை.தஷ்ணாமூர்த்தி எனும் ஆசிரியர். இப்போதும் அவர் எனக்கு அளித்த சுதந்திரத்திற்காக பிரியத்தோடு அவரை வணங்கத் தோன்றுகிறது.ஆறாம் வகுப்பிற்கு பின்புதான் நான் ஓரளவிற்கு பொருள் உணர்ந்து படிக்க ஆரம்பித்தேன். கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தான் நான் அறிவை விருத்தி செய்து கொண்டேன். ஆங்கில இலக்கணத்தை முழுவதுமாக நான் எதிர் கொண்டது பத்தாம் வகுப்பில் தான். ஏறக்குறைய கிராமம் சார்ந்த என் தலைமுறை மாணவர்களின் வளர்ச்சி படிநிலை இப்படியாகத்தான் இருந்திருக்கும்.
பிள்ளைப் பிடிப்பவனைப் போன்று, தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வாகனங்கள் வராத காலம் அது. தொன்னூறுகளுக்கு முன்பான காலகட்டம் குழந்தைகளை விளையாட, சுதந்திரமாக இயங்க அனுமதித்த அற்புதமான கால கட்டம். மேலும் அப்போது விளையாட தெருக்கள் இருந்தன. நிறைய குழந்தைகளும் இருந்தன.இன்று தெருக்களும் இல்லை. உடன் விளையாட பிள்ளைகளும் இல்லை. பள்ளிகளில் விளையாடுவதற்கு இடம் சிறிதும் ஒதுக்காமல், கான்கரீட் கட்டிடங்கள் வானளாவிய அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய இன்றைய தனியார் பள்ளிகள் நவீனச் சிறைச்சாலைகளின் இன்னொரு முகமாகவே விளங்குகின்றன. பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் காலையில் படுக்கையை விட்டே எழவே தயங்குகின்றனர். முரண்டும் பிடிக்கின்றனர். அவர்களின் அளவுக்கதிகமான அதிகாலைத் தூக்கம் மனஅழுத்தத்தின் பரிசாகும்.
இளம் வயதிலேயே ஓர் எதிர்காலத் தலைமுறையை மன அழுத்தத்தோடு உருவாக்குவதன் மூலம் சூழலில் என்ன விதமான வளர்ச்சியை, மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் நாம்? பத்து வயதில் எம்.எஸ்.ஸி முடித்து, பதினைந்து வயதில் பி.எச்.டி முடித்து, ஒரு பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலையில் அமரலாம். ஆனால் இதுவெல்லாம் குழந்தை எனும் அடிப்படையான ஆளுமை வளர்ச்சியை விற்றோ அல்லது அடகு வைத்தோ பெறப்பட்டதாகும். அதுபோன்ற விதிவிலக்கான குழந்தைகளை அளவோடு உற்சாகப்படுத்துவதே சூழலுக்கு நல்லதென்று தோன்றுகிறது. ஒருபோது அவர்கள் நமது முன்மாதிரிகள் ஆகமுடியாது. காலத்தின் தேவையும் அதுவல்ல. தெருவில் விளையாடி, கதைகேட்டு கழனியில் நிலக்கடலையும், எலியும் சுட்டுச் சாப்பிடுபவர்களே நமது கவனத்திற்குரியவர்கள் ஆவர். அவர்களின் பார்வையில் இருந்து தான் நாம் இன்றைய கற்றல் கற்பித்தலை விரித்தெடுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றைய நம்முடைய தலையாய பிரச்சனையே, குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் வயது வந்தவர்களைப் போன்று உருமாறிக் கொண்டிருப்பதுதான்.

Sunday, August 08, 2010

அவர்களைச் சந்தோஷமாக இருக்கவிடுவோம்-சிறு குறிப்பு


ஒரு எழுத்தாளனாய் தொடக்க நிலை மாணவர்களின் இன்றைய நிலை என்னை தொடர்ந்து கவலை கொள்ளச் செய்கிறது. எவ்வளவோ மாற்றங்களுக்கு பிறகும் மாணவர்கள் சுதந்திரத்திற்கு ஏங்குபவர்களாகவே இருப்பதை உணர முடிகிறது. சனி, ஞாயிறு விடுமுறை எனும்போது அவர்களது முகத்தில் தோன்றும் உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதுநாள் வரை ஒருபோதும் வகுப்பறைச் சூழலில் அவர்களின் இந்த உற்சாகத்தை நான் கண்டது கிடையாது.
நிச்சயம் மாணவர்கள் ஏதோவொரு சொல்லமுடியாத மன அழுத்தத்தோடு இருப்பதை உணரமுடிகிறது. அவர்களை ஓரளவிற்கு சந்தோஷமாக வைத்திருக்க நிகழ்த்துக்கலைகளால் முடியும் என நினைக்கிறேன். நிச்சயம் இசையும் நாடகமும் அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்ட உதவும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் நாடகம் என்பதே ஒருவிதத்தில் ஆளுமை வளர்ச்சி தொடர்புடையது என்பதால் தொடக்க நிலைப் பள்ளிகளில் நாடகத்தை கட்டாயம் ஓர் பாடமாக வைப்பதே கற்றலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் நாம் செய்ய வேண்டிய அவசிய பணியாகும்.
நாடக பங்கேற்பு மாணவர்களுக்கு சகலவிதமான திறன்களையும் அளிக்கும் என எத்தனையோ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் உற்றுநோக்கினால் நாடகத்தில் பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் எல்லாவகையிலும் மேம்பட்டதாகவே இருக்கும் என எண்ணுகிறேன். அரசின் சார்பில் கலை இலக்கியங்களுக்காக செலவழிக்கப்படும் தொகை முழுக்க மனிதவள மேம்பாட்டிற்காக செலவழிக்கப்படுவதாகவே உணரப்படவேண்டும். அந்த உணர்வே மொழியையும் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இதுவே மிகவும் உகந்த காலம். கல்விச்சாலைகளை மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கெடுக்கும் நாடகக் கூடமாக்கி அவர்கள் மேலும் சுதந்திரத்தை உணர நம்மால் இயன்றதைச் செய்வோம்.

நாகத்தைப் பழக்குதல்-கவிதை


உங்கள் செல்லப்பிராணியை
கைக் கொள்வதினினும்
மிகச்சுலபமானது
ஒரு நாகத்தைப் பழக்குவது

ஆரம்பத்தில் அதற்கு
அருந்த பால் கொடுக்கலாம்
ரொம்பவும் பிகு செய்தால்
ஒரே ஒரு கோப்பை
உயர்தர மது கொடுத்து உதவலாம்

பின் தன் இயல்பிலிருந்து மாறத் தொடங்கியிருக்கும்
அந்நாகத்திடம்
மெல்ல பேச்சுக் கொடுத்துப்பாருங்கள்

விருப்பமிருந்தால்
அதிகாலை நடைப்பயிற்சிக்கு
உங்களோடு அழைத்துச் செல்லலாம்

வீட்டில் அழுதுகொண்டிருக்கும் குழந்தைக்கு
(அது உங்கள் குழந்தையாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை)
விளையாட்டுக்காட்ட உத்தரவிடலாம்

அதுவுமில்லை எனில்
உங்கள் கைபேசியைக்கொண்டு
ரகசிய சினேகதிக்கு
குறுஞ்செய்தி அனுப்ப அந்நாகத்திற்கு
பயிற்சி அளிக்கலாம்

தொடர்பயிற்சிகளுக்கு பிறகு
மெல்ல
நாக உருக்கொள்ளும் உங்களுக்கு
எந்த குற்ற உணர்ச்சியும் எழக்கூடாது
நாகம் நாகமாக இல்லாதது பற்றி.

முன்பொரு காலத்தில் தெருக்கள் இருந்தன-கவிதை


இன்னும் சிலரின் நினைவுகளில்
மீதமிருக்கிற
தெருக்களில்
மெல்ல ஊர்ந்து வருகின்றன
இன்னும்
சில குழந்தைகளின்
நடைவண்டிகள்