Sunday, December 05, 2010

சல்லிகை- ஓர் சிறுபத்திரிக்கை முயற்சி


நண்பர்களே,

கண்டாச்சிபுரத்திலிருந்து சல்லிகை எனும் புதிய சிறுபத்திரிக்கை ஒன்றை கொண்டுவர எண்ணி முதற்கட்ட வேலைகளைத் தொடங்கி இருக்கிறேன். நண்பர்களின் துணையின்றி ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுக்க முடியாது என்றும் கருதுகிறேன்.

உங்களின் காத்திரமான படைப்புகளுக்காகவே சல்லிகை தன் பக்கங்களை விரித்து காத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் படைப்புகளை அளிப்பதன் மூலம் சல்லிகையை தொடர்ந்து கொண்டுவருவதற்கான ஓர் சூழலை கட்டமைப்பதில் உங்களின் பங்களிப்பை உறுதிசெய்யுங்கள் நண்பர்களே.

இலக்கியத்தின் அனைத்து முயற்சிகளையும் சல்லிகை முன்னெடுக்க விரும்புகிறது. கதை, கவிதை , மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகளின் மீதான சொல்லாடல்களை ஒருங்கினைக்கவே சல்லிகை விரும்புகிறது


உங்களின் ஆலோசனைகளையும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.




-காலபைரவன்




தொடர்புக்கு

சல்லிகை
12.முருகன் கோயில் தெரு
கண்டாச்சிபுரம் & அஞ்சல்
விழுப்புரம் மாவட்டம் -605701
அலைபேசி: 9944413444

Thursday, December 02, 2010

நூலக வார விழா


கடந்த 22.11.2010 அன்று எங்கள் ஊர் கிளை நூலகத்தில் நூலக வாரவிழா நடைபெற்றது. விழாவில் புத்தக கண்காட்சியை நண்பரும் எழுத்தாளருமான கவிஞர் கண்டராதித்தன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமதி லதா அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் தேவசேனாபதி,அண்ணாமலை,எத்திராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கவிஞர் கண்டராதித்தன் நூலகத்தின் பயன் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பத்திரிக்கை முகவர் திரு.சேகர், திருமதி. இராசாமணி அம்மாள், ஆசிரியர் அரங்கநாதன், உரக்கடை ஆறுமுகம், ஆசிரியர் எத்திராஜ், கோ.குப்புசாமி ஆகிய புரவலர்கட்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கப் பட்டது.

விழாவினை வாசகர் வட்டத்தலைவர் திரு.கணபதி ஏற்பாடு செய்திருந்தார். விழா இறுதியில் நூலகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

குறிப்பு:
தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சி. பாலசுப்ரமணியன், தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பேராசிரியர் திரு க.பொன்முடி ஆகியோர் இந்நூலகத்தின் முன்னாள் வாசகர்களே.

மேலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இன்றைய பதிவாளர் பேரசிரியர் அ. கார்த்திகேயன் அவர்களின் இளம் பிராயம் முழுக்க இந்நூலகத்தில் தான் கழிந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கவிஞர் கண்டராதித்தனையும் காலபைரவனாகிய என்னையும் தமிழ் படைப்புலகிற்கு கொடுத்து ஒருதாயைப்போல சந்தோஷத்தை விரிவு செய்து கொண்டிருக்கிறது இந்நூலகம்.

ஆர்மீனியச் சிறுகதைகள் , அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் மற்றும் புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய நூல்களை எடுத்து பொழுது போவது தெரியாமல் நூலகமே கதி என்று கிடந்து படித்த நாட்கள் இப்போதும் தன் பச்சயத்தை இழக்காமல் அப்படியே இருக்கின்றன என் நினைவில்.

Thursday, November 25, 2010

ஒருபோதும் நாங்கள் இவ்வாறு இருந்ததில்லை


இந்தாண்டு தீபத்திற்கு என் குழந்தைகளுக்கு எப்படியாவது சுற்றுவதற்கு கார்த்தி செய்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் தொடர் மழையின் காரணமாக செய்து தர முடியவில்லை. அண்ணாமலையார் தீபத்தன்று மதியத்திலிருந்தே என் குழந்தைகள் “கார்த்தி ....கார்த்தி” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தனர். மழை வேறு விட்டுவிட்டு பெய்து கொண்டிருந்தது. தெருவில் அவரவர் வீடுகளில் மக்கள் தீபங்களை ஏற்றத்தொடங்கினர். யாராவது கார்த்தி சுற்றினால் அதை வைத்து இன்று ஒப்பேற்றிவிடலாம் என்று எண்ணினேன்.ஆனால் சொல்லி வைத்ததுபோல தெருவில் ஒருவர்கூட கார்த்தி சுற்றவில்லை. கார்த்தி இல்லாத என் தெருவைப் பார்க்கவே சங்கடமாக இருந்தது எனக்கு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒருபோதும் இப்படி இருந்தது இல்லை. தீபத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதற்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். கண்டிப்பாக தீபத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் பள்ளிக்கு செல்லாமல் கார்த்தி செய்வதற்கு தேவையான அடுப்புகரியை அரைக்கத் தொடங்குவோம்.அப்போது பெற்றோர்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கவே செய்தது. மணிலா தொலும்பு, பனம் புடுக்கை மற்றும் மரத்தூள் ஆகியவற்றை ஊர் எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டுவருவோம். அதன் பின்னரே கார்த்திக்கு தேவையான கரித்தூள் பொட்டலம் தயாராகும்.சீக்கிரத்தில் தீ பட்டு எரிந்து விடாத எருக்கை கழிகளைக் கொண்டு கரிப் பொட்டலத்தை வைக்க தோதாக கார்த்தியை செய்து முடிப்போம்.இதை செய்து முடித்தபின் நாங்கள் அடைந்த மனநிறைவை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. என் கிராமத்தில் கார்த்திக்கு கரி அரைக்கும் ஒரு சிறுவனைக்கூட காண முடியவில்லை. எல்லோரும் பள்ளிகளிலும் தொலைக்காட்சியிலும் தஞ்சமடைந்து கிடக்கின்றனர்.
என் பிள்ளைகளுக்கு எப்படியாவது இந்த கார்த்திகைக்கு கார்த்தியை ஏற்பாடு செய்வது எனத் தீர்மானமாக இருந்தேன். முதல் நாள் தொடர்மழையின் காரணமாக முடியவில்லை. ஆனாலும் பிள்ளைகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என எண்ணினேன். என் மனைவியிடம் ஒரு தேங்காயைக் கொண்டு வரச் சொல்லி, அதை உரித்து அம்மட்டைகளை இரண்டு மூன்றாகச் சேர்த்துக் கட்டி நெருப்பில் காட்டி அவர்களுக்கு சுற்ற கொடுத்தேன். அவர்களும் அதை சந்தோஷத்துடன் சுற்றினர். அதிலிருந்து வெளிப்பட்ட ஒன்றிரண்டு தீப் பொறிகளை கண்டு அவர்கள் சந்தோஷத்தில் துள்ளினர்.

மறுநாளும் மழை தொடர்ந்தது.ஆனாலும் இன்று அவர்களுக்கு ஒரு நிஜக் கார்த்தியைக் கொடுத்துவிட வேண்டும் என எண்ணினேன். பல நண்பர்களிடம் இது சம்பந்தமாக சொல்லியும் வைத்தேன். சிறிது நேரத்தில் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ஜம்பையில் இருந்து மூன்று கார்த்திகள் வருவதாகவும் அதில் ஒன்றை தருவதாகவும் கூறினார். சிறிது நேரம் காத்திருந்து கார்த்தியைப் பெற்றுக்கொண்டு ஒரு வெற்றி வீரனைப் போல வீட்டிற்கு வந்தேன். என் குழந்தைகளுக்கு இது தான் கார்த்தி என்று காட்டினேன். அவர்கள் அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருந்தனர். அன்று முழுவதும் ஒரு குழந்தையை தடவிப் பார்ப்பது போல அதை தடவியபடியே இருந்தாள் என் இளைய மகள். மாலை நெருங்க நெருங்க அவர்களை குதூகலம் தொற்றிக் கொண்டது.

கார்த்திக்கு நெருப்பிட வேண்டும். ஆனால் இங்கு யார் வீட்டிலும் விறகு அடுப்பு இல்லை. என்ன செய்யலாம் என அனைவரும் தீவிரமாக யோசித்தோம். “ அப்பா கேஸ் அடுப்புல கொளுத்த முடியாதா?” என்று என் பெரிய மகள் கேட்டாள். “முடியாது மா” என்று சொல்லி, என் மனைவியிடம் கற்பூரத்தை கொண்டுவரச் செய்து, அதை ஐந்தாறு துண்டுகளாக்கி கார்த்தி பொட்டலத்தின் மீது வைத்து கொளுத்தி நெருப்பை கனியவைத்தேன். சுற்றுவதற்கு இப்போது கார்த்தி தயாராக இருந்தது.முதலில் நான் எடுத்து சுற்றிக் காட்டினேன். நீண்ட என் தெருவில் நான் மட்டும் தனித்து கார்த்தியை சுற்றிக் கொண்டிருந்தது மனதுக்கு சங்கடமாக இருந்தது.
பின் குழந்தைகளை ஒவ்வொருவராக என் அருகில் நிற்க வைத்துக் கொண்டு கார்த்தியைச் சுற்றினேன்.அதிலிருந்து உதிர்ந்த பொறிகளை பார்த்து கைத்தட்டி சந்தோஷப் பட்டனர். அவர்கள் எதையோ சாதித்து விட்டதைப்போல உணர்ந்தனர். என்னுடைய இரண்டாவது மகள் கார்த்தியில் இருந்து வெளிப்பட்ட ஒவ்வொரு தீப்பொறியின் பின்னாலும் ஓடினாள். நாங்கள் சுற்றுவதை எதிர் வீட்டு நண்பர் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். கார்த்தியை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்ற என் மூத்த மகள் “இந்தாங்க மாமா நீங்க சுத்துங்க பார்க்கலாம்” என்று சொன்னாள். அடுத்த ஆண்டு நிச்சயம் குழந்தைகளுக்கு கார்த்தி செய்யக் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எல்லோர் வீட்டிலும் தீபம் காற்றின் போக்கில் ஆடியபடி எரிந்துகொண்டிருந்தது.

Wednesday, November 17, 2010

கேள்வியும் பதிலும்-1


மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடமிருந்து என் எழுத்து சார்ந்து எண்ணற்ற கடிதங்கள் வருகின்றன. அக்கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் அளிப்பது நடைமுறை சாத்திய மற்றதாகும். கீழ்காணும் நேர்கானல் பகுதி ஓரளவிற்கு பயனுடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
- இசபெல் ஆலன்டே.

கே : வெளிப்படுத்திக்கொள்வதற்கான வேறு தளங்களில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? அல்லது கதை கூறல் தளத்திலேயே தொடர்ந்து இயங்கலாம் என்று எண்ணுகிறீர்களா?

ப : இளம் வயதுகளில் நாடகங்கள் எழுதியும் அதை விரும்பியும் இருக்கிறேன் ; ஒரு குழுவாக இயங்குவதில் ஆர்வம் கொண்டவள் நான். என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது, நான் சிறுவர் கதைகள் எழுதவும் முயற்சித்திருக்கிறேன் ; ஒவ்வொரு நாள் இரவிலும் அவர்களுக்கு கதை கூறுவேன். அற்புதமான அப்பயிற்சியை நான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டேன். 2001 ல் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக,’ தி சிட்டி ஆப் த பீஸ்ட்ஸ்’ எனும் நாவலை எழுதினேன். அது ’பிளேயா அண்டு ஜேன்ஸ், ஸ்பெயின்’ எனும் நிறுவனத்தால் வெளியிடப் பட இருக்கிறதுது. பல ஆண்டு நான் நகைச்சுவைகளையும் எழுதியிருக்கிறேன். அனைத்து வடிவங்களையும்விட நகைச்சுவை தான் மிகவும் கடினமானது என நினைக்கிறேன். கவிதை எழுத நான் ஒரு போதும் முயன்றதில்லை. இனிமேலும் செய்வேன் என்ற எண்ணமும் கிடையாது.

கே : நீங்கள் ஸ்பானிஷ் மொழியில் தான் எழுதுகிறீர்களா?

ப : புனைவுகளை நான் ஸ்பானிஷில் தான் எழுதுகிறேன். ஏனெனில் என் மொழியில் தான் என்னால் செய்ய இயலுகிறது. அதுதான் இயல்பான செயலாக எனக்கு இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக உலகம் முழுக்க எனக்கு ஆகச் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் வாய்த்திருக்கிறார்கள்.

கே : உங்கள் மொழிபெயர்ப்பாளரோடு இணக்கமாக பணியாற்றுவீர்களா? உங்களின் அனேக புத்தகங்களை ’மார்கரெட் சாயர்ஸ் பேதென்’ தான் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் என நான் அறிந்திருக்கிறேன்.

ப : மார்கரெட்டும் நானும் எப்போதும் தொடர்பில் இருக்கிறோம். மன பொருத்தத்தையும் நாங்கள் பெற்றுள்ளோம் எனவும் நான் நம்புகிறேன். அவள் வியக்கத்தக்க பணியை செய்கிறாள். அவளைச் சரிபார்ப்பது என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. வேறு பல மொழிகளில் எப்படியிருப்பினும், யார் மொழிப்பெயர்ப்பு செய்கிறார்கள் என்பதே எனக்கு தெரியாது. பதிப்பாளர்களே அதிலும் அக்கறை எடுக்கிறார்கள்.

கே : புனைவு எழுத்து குறித்து, உண்மையை கூறுவது தொடர்பாக, பொய் உரைத்தல் குறித்து, முழுமை பெறாத சில யதார்த்தங்கள் பற்றி, மற்றும் இவை அனைத்தும் எவ்வாறு சேர்ந்து அல்லது ஒன்றையொன்று எதிர்த்து இயங்குகின்றன என விரிவாக கூற முடியுமா?

ப : புனைவின் முதல் பொய், வாழ்வின் நிகழ்வுகளை படைப்பாளி வரிசைப் படுத்துவதாக இருக்கிறது. அது காலக்கிரமமாகவோ அல்லது படைப்பாளி தெரிவு செய்யும் எந்த வரிசையாகவோ இருக்கலாம். ஒரு எழுத்தாளராக, நீங்கள் ஒரு முழுமையில் இருந்து சில பகுதிகளை தேர்ந்தெடுக்கிறீர்கள் ; தேர்ந்தெடுத்த பகுதியின் முக்கியத்துவம் மற்றும் எஞ்சியப் பகுதியின் முக்கியமின்மையை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். அவற்றைப் பற்றி உங்கள் பார்வையை ஒட்டி நீங்கள் எழுதுவீர்கள். வாழ்க்கை அப்படிப்பட்ட தல்ல. எல்லாம் ஏக காலத்தில், தொடர்ந்தும் மற்றும் நீங்கள் எந்த தெரிவும் மேற்கொள்ள முடியாத வகையில் நடக்கின்றன. நீங்கள் எஜமான் இல்லை ; வாழ்வு தான் எஜமானன். புனைவு என்பதே பொய் தான் என ஒரு எழுத்தாளராக எப்போது நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ, அப்போது நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம் ; எதையும் உங்களால் செய்ய முடியும். பிறகு அப்புள்ளியைக் கொண்ட வட்டங்களில் நீங்கள் நடக்கத் தொடங்கலாம் . வட்டம் பெரிதாக, நீங்கள் அதிகப்படியான உண்மையை பெறலாம்.


நன்றி: www.isabelalande.com
தமிழில்:காலபைரவன்

Sunday, November 14, 2010

இருவருக்கும் இடையில் நின்ற சொல்


பெற்றோர்களின் இருப்பு என்பது குழந்தைகளின் நம்பிக்கை சார்ந்ததாக எப்போதும் இருக்கிறது. தங்களின் பெற்றோர்கள் எவ்வளவு தான் மோசமானவர்களாக இருந்தாலும் கூட அவர்களின் பாதுகாப்பு குழந்தைகளுக்கு அவசியமானதாகவே இருக்கிறது. கடந்த செப்டம்பர் 20 அன்று என் தந்தை ஓய்வு பெறுவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே அவர் பணியாற்றிக் கொண்டிருந்த பள்ளியில் அகால மரணம் அடைந்தார். எந்தக் கட்டத்திலும் அவர் என்னை படி என்றோ இந்த வேலைக்கு செல் என்றோ ஒருபோதும் கூறியது கிடையாது.இந்தக் காரணத்துக்காகவே அவரை நான் அதிகம் நேசித்தேன். அவர் கடைசி வரை ஒரு சிறந்த தந்தையாக இருக்க முயற்சித்து பெரிதும் அதில் பின்னடைவையே சந்திக்க வேண்டியிருந்தது. காரணம் கடைசி பத்தாண்டுகளாக அவரைத் தொற்றிக் கொண்ட குடிப்பழக்கமும் காரணமாக இருந்திருக்கக் கூடும். அவருக்கு தன் வாழ்க்கை சார்ந்த பல சம்பவங்களை மறக்கவேண்டியிருந்தது. குடிப்பழக்கத்தை அவர் ஒரு கருவியாகவே பயன்படுத்திக் கொண்டார். இருபதுகளில் அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது. அது என் தாயின் மரணம் வரைக்கும் தொடர்ந்தது. கடுமையாகப் போராடி அந்தப் பழக்கத்திலிருந்து அவரை வெளிக்கொண்டுவந்தேன். என் தாய் இறந்த ஆறு மாதத்தில் கொடுமையான புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்டு என் தந்தை வழி பாட்டி இறக்க நேர்ந்தது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு துயரங்களில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு அவர் சுருட்டுப் பழக்கத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். தொன்னூறுகளில் அவருக்கு தன் குடும்பம் சார்ந்து நிறைய பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.அப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் முடிந்திருந்தது. அதன் பிறகே அவர் குடிப்பழக்கம் நோக்கி மெல்ல திரும்பினார். பின்னர் கடைசி வரை அவரால் அதிலிருந்து நிரந்தரமாக விடுபட முடியவில்லை. ஆனால் அவர் அதிலிருந்து மீள தொடர்ந்து முயற்சி செய்தபடியே இருந்தார். அவரும் ஒருவித சந்தோஷத்தோடே தன்னை மரணத்திற்கு தின்னக் கொடுத்தார் .
எனக்கும் அவருக்குமான உறவுமுறை ஒரு கட்டத்திற்கு மேல் மெல்ல சிக்கலாகத்தொடங்கியது. இருவருக்கும் இடையிலானா உரையாடல்களில் அதீதமான எச்சரிக்கை உணர்வு தொற்றிக்கொண்ட்து. இதனால் வார்த்தைகளின் பிரயோகம் அளவோடும் சொற்பமாகவும் இருந்தன. ஆனால் எங்களுக்கு இடையிலான பிரியம் தொடர்ந்து அதிகரித்தும் வலுவடைந்தும் வந்தது. இனி பேசிக்கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டபோது கூட இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் அலாதியான பிரியமும் அன்பும் கொண்டிருந்தோம். என் தாயின் மரணத்திற்கு பிறகு அவர் சிரித்து நான் பார்த்ததில்லை. அவருடைய பணம் மட்டுமே பிரதானமென மாறிப்போன காலகட்டத்தில் அவர் ஒரு நடைபிணம் போல வாழ்ந்தார். அக்கால கட்டத்தில் அவர் கைமீறி எல்லாம் நடந்தது. ஒரு கட்டத்தில் என் சித்தியால் நானும் என் சகோதரனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டோம். அப்போது ஒரு நகைக் கடையில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். இந்தச் சிக்கலான காலத்தில் நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் நேசித்த பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததால் நான் திருமணம் செய்து கொள்ளும் முடிவிற்கு வரநேர்ந்தது. என் தம்பி எனக்கு பெரிதும் உதவியாக இருந்தான். பண உதவி என் தந்தையிடம் இருந்து கிடைத்தது. வீட்டை விட்டு வந்ததும் எனக்கும் என் தந்தைக்குமான உரையாடல் முழுவதுமாக நின்று விட்டிருந்தது.

(தொடரும்...)

Saturday, November 13, 2010

இன்னும் அந்த உஷ்ணம் அவளோடு இருக்கிறது


எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.தெருவில் போட்டிருந்த ஷாமியானாப் பந்தலில் எரிந்து கொண்டிருந்த குழல்விளக்கைச் சுற்றி நிறைய சிறு பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.ஈசானத் திக்கில் மேகம் திரண்டிருந்தது.தெருத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்த சித்தாத்தூர் பண்டாரம் சேங்கிட்டியை எடுத்து அடித்தான். அதிலிருந்து பீரிட்டெழுந்த ஒலி சாவு வீட்டின் துக்கத்தை மேலும் கூட்டிக் காட்டியது.சேங்கிட்டியை கீழே வைத்துவிட்டு சங்கை எடுத்து வாயில் வைத்து ஊதினான்.தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த சங்கொலி வீடு முழுக்க பட்டு எதிரொலித்தது.அந்த சங்கொலி அனைவர் மனதிலும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.தெருவிலும் திண்னையிலும் சிலர் அமர்ந்திருந்தனர். ஒரு சிறுவன் அனைவருக்கும் தேனீர் கொடுத்துக் கொண்டிருந்தான். பண்டாரம் சங்கு ஊதுவதை நிருத்திவிட்டு தேவாரம் பாட ஆரம்பித்தான்.
கூடத்தில் கிழக்கு பார்த்தவாறு ஐந்து முழு வாழை இலை போடப்பட்டிருந்தது.நடப்பிற்கு வந்திருந்த உறவினர்கள் கொண்டுவந்திருந்த இனிப்பு கார பலகாரங்களை இலைகளில் எடுத்து வைத்தனர். “நேரம் ஆவுதில்ல சட்டுபுட்டுனு படைக்கர வேலய பாருங்க” என்று துணுராமுட்டு பாட்டி கூறினாள். அதற்கு காவேரி பெரியம்மா, “போயி மொதல்ல பார்வதியை கூட்டிட்டு வாங்க” என்றாள்.சென்னகுனத்திலிருந்து வந்த கலா அக்கா போய் பார்வதியை அழைத்து வந்தாள்.அழுது அழுது கண்கள் வீங்கியிருந்தன. கை நிறைய கண்ணாடி வளையலும் தலை நிறைய பூவும் வைத்திருந்தார்கள். குங்குமம் கொண்டு நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருந்தனர். அவளைப் பார்ப்பதற்கு நாடகங்களில் வரும் அம்மனை பார்ப்பதைப் போல இருந்தது. தெரு நடையில் ஒப்பாரி வைத்து அழும் பெண்களையும் தெருவில் அமர்ந்திருப்பவர்களையும் காவேரி பெரியம்மா சென்று படைக்க அழைத்தாள். படையள்களுக்கு முன் புறம் மூன்று இடங்களில் கற்பூரத்தை வைத்து காவேரி பெரியம்மா கொளுத்தினாள். அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த கொளாப்பர் வீட்டு மாமா, “சொந்தகாரங்களாம் வந்து விழுந்து கும்புடுங்க” என்று சொன்னார். முருகனின் புகைப்படத்தருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த பார்வதியை காவேரி பெரியம்மா, “முருகன் எங்கயும் போயிடலடி அவன் சாமியா மாரி நம்மோடத்தான் இருக்கிறான். வா வந்து உழுந்து கும்புடு” என்றாள். வேறு சிலரும் அவளைப் பார்த்து ,” அதயே நெனச்சிக்குனு இருந்தா எப்புடிமா? உம் புள்ளைகளுக்கு நீதான ஆருதல் சொல்லனும். வா வந்து உழுந்து கும்புடு”. அவள் எழுந்து வந்து விழுந்து வணங்கும் போது அவளையும் மீறி அழுகை வந்தது.உடைந்து அழுதாள். அருகிலிருந்தவர்களும் ஆத்திரம் தாளாமல் அழுதனர். படையல் அனைத்தயும் ஒன்றாக்கி ஒரு சருவத்தில் போட்டு அகிலாண்டம் பெரியம்மா அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பிடி அள்ளிக்கொடுத்தாள். சிலர் வேண்டாமென மறுத்தனர்.தெருவில் சேங்கிட்டி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

(தொடரும்...)

Tuesday, November 02, 2010

எப்போதும் இறுகும் உங்கள் பிடி


அந்தி மங்க
தங்கள் கூடு நோக்கி
திரும்பிக் கொண்டிருக்கின்றது
கருநாரைக் கூட்டம்

வாஞ்சையோடு
ஓடிவரும்
அக்குழந்தையை
வாரி அணைக்கிறீர்கள்

பிரியத்தால்
பின் மெல்ல
இறுகுகின்றது உங்கள் பிடி

சூழும் இருளில்
இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டு
அல்லித் தண்டென
மெல்லச் சரிகிறது அது

வாளின் கூர்மையொத்த
நிலைத்த
அதன் விழிகளை
பார்க்க முடியாமல்
முகம் திருப்பிக் கொள்ளும்
உங்களுக்கு
அப்போது முளைத்திருக்கின்றன
கடைவாயில் இருபற்கள்
வெளித் துருத்திக் கொண்டு

இனி
கண்ணாடியில்
முகம் பார்க்கையில்
நீங்கள் மட்டுமாவது
பயப்படாதிருக்க
முயற்சி செய்யுங்கள்
அதுபோதும்.

Friday, October 29, 2010

ஜாக்கிரதை நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்


கவிதையெழுதுவது
குற்றமென
அறிவிக்கப்படுகிறது
திடீரென்று

அனைத்து மாநில எல்லைச் சாவடிகளும்
வருவோரையும் போவோரையும்
கவிஞர்கள் அல்ல என
உறுதி செய்து கொண்ட பிறகே
தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கின்றன

தபால் நிலையங்கள்
தந்தி அலுவலகங்கள்
தனியார் கூரியர் நிறுவனங்கள்
அரசு மற்றும் தனியார் தொலைபேசிகள்
கவிதைகளைப்
பரிமாற்றம் செய்ய
முற்றாக மறுத்துவிடுகின்றன
இந்த ஆண்டின்
எந்த இலக்கிய விழாக்களிலும்
கவிதைகள் கண்டுகொள்ளப்படாமல்
ஒதுக்கப்படுகின்றன

உரைநடை ரூபத்தில் கவிதைகள்
ஏதாவது
வெளிவருகிறதாவென்று கவனிக்க
நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுவிட்டது

கவிஞர்களை ஒடுக்குவதற்கான
அவசரச்சட்டமும் தயார் நிலையில்
கவிதை மற்றும்
கவிஞர்கள் குறித்தான தகவல்களை
அந்தந்த அரசுகள் அரக்கத்தனமாக
அழித்தொழிக்கின்றன

இங்கிருந்தோ
அல்லது வெளிநாடுகளிலிருந்தோ வரும்
கவிஞர்களுக்கான ஆதரவுக் குரல்களின்
முனைகள் உடனுக்குடன் மழுங்கடிக்கப்படுகின்றன

எல்லாம் வழக்கம் போலவே
நடந்து முடிகிறது

கவிஞர்களைப் பொருட்படுத்த வேண்டிய
அவசியம் இங்கு
யாருக்குமே நேரவில்லை

Tuesday, October 26, 2010

ஆம் நண்பர்களே இறுதியில் அதுதான் நடந்தது


ஏதோ ஒன்றை முன்வைத்து
நிகழ்த்தப்பட்ட ஒன்றிற்காய்
உடைந்து உருக்குலைகிறது
உனக்கான எனது பிம்பம்

சில்லுகள் பொறுக்கி
உருக்கூட்ட முனைந்து
தோற்றுப் போகிறேன்

உருக்கூடல் இன்றி
உறவுகள் கிளைத்தல்
எப்போது
சாத்தியம்?

Thursday, October 21, 2010

சூரியோதயம் : மூன்று நிலைகள்


நிலவு மரணித்து விட
பகற்பொழுதின் நீட்சியை
இனிமேலும் தடுக்கவியலாது

எரிந்தவண்ணம் இயக்கம்
கொள்ளும் ஞாயிறு
எதையும் நிர்வாணமாக்கும்

பின்
யாரும் எதிர்பாரா வேளையில்
மேற்கிலிருந்து கூட சூரியோதயம்
நிகழக்கூடும்

ஓய்வும் உறக்கமும்
கூடி முயங்குதலின் காலவெளியும்
எதிர்பார்த்த கணங்களில்
இனிமேல் நிகழாது

தீர்மானித்து செயல்படுவது
திடீரென அற்றுவிடும்

இயக்கத்தின் பெருவெளியில்
எதையும் செய்ய
பழகித்தானாக வேண்டும்
இல்லையேல்
நடுவானில் கூட சூரியோதயம்
சாத்தியமாகலாம்

Tuesday, October 19, 2010

ஈடுசெய்ய முடியாதவை எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன


தட்புருடமுகம் நோக்கி கிழக்கிருந்து வீசும்
குளிர்காற்று, வடக்கே வாமதேவம்,
கோரைப்பல் அகோரமுகம் தென்திசையில்,
கழுத்திலோர் கபால மாலை
சிசுவின் பிரேத குண்டலம் காதிலாட
ஒற்றைக் கால் தூக்கி
சேமிப்பின் களமுடைத்து
வார்த்தைகளைப் பிளந்தெறியும்
உன் நீள்குறியின் கூர்மை
ஏன் இன்னும் அதிர்கிறது.

மூளியான வார்த்தைகளின்
முகம் தேடி,
செங்கோட்டி யாழ் சுழிப்பில்
இசை பெருக்கிச் செல்கிறேன்

பாறைகளின் சிறு வெடிப்பில்
கள்ளிச் செடி முட்பரப்பில்
சிக்கியெழும் வார்த்தைகளின்
ஓலத்தை உறிஞ்சி
வீங்கி வெடிக்கட்டுமுன் தனங்கள்

துளிர்த்தெழும் வார்த்தைகளின்
சிரசுகளைத் திருகி ஒன்றாக்கி
ஓணான் கொடி கட்டி
யோனிக்குள் பதுக்கும்
நீ
மும்முக அரக்கிதானே

வன்மம் உள்ளிருத்திய உன் புன்னகை
நிச்சயம் தீனியாகாதென் குறிகளுக்கெனில்
நான் தேடிச்செல்லும்
ஒற்றைச் சொல்லுக்கீடாகுமா
உன் யோனியின் ஆழம்.

Sunday, October 17, 2010

ஆனால் என் கடவுள் இளமையிலேயே இறந்து போனார்


செங்காந்தள் நிறமொத்த
அவள் பின்னால்தான்
அவர் சென்றதாக
மாடவீதி மக்கள் பேசிக்கொண்டனர்

அகாலத்தில் அவர்
அவ்வாறு சென்றது
அதிர்ச்சியையேற்படுத்த
மடவிளாகச் சாமியாரை
மண்டியிட்டது
அர்ச்சகர் கூட்டம்

ஊர் என்ன பழிக்குமோ
நாடென்ன பேசுமோவென
அச்சத்தில் இருந்தார்
குரு மகாசன்னிதானம்

திருக்காப்பிட்ட பின்
தேவடியா மகனுக்கு
தெருவில் என்ன வேலையென்று
ஓர் கூட்டம்
கத்திச் சென்றது
(நிச்சயம் தேவடியா மகன் என்றே அவர்கள்
கூறினார்கள்)

கையும் களவுமாக
பிடிப்பட்டவுடன்
குனிந்த தலை நிமிராது
கருவறை நோக்கிச் சென்றார்
எல்லாம் அறிந்த
இராமநாதீஸ்வரர்.

எள்ளும் கொள்ளும் வெடிக்க
ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்
உடனுறையும்
ஞானாம்பிகை

மறு நாளிலிருந்து
மடிமீது
அவளை அமரவைத்தபடி
அருள்பாலித்துக் கொண்டிருந்தார்
அவர்.

அன்றிலிருந்து தான்
அவருக்கு
சுய இன்பப்பழக்கம்
ஏற்பட்டிருக்குமென
குரு மகாசன்னிதானம்
கூறத்தொடங்கினார்.

உடனுறையும்
ஞானம்பிகைக்கு
எந்தக் கேடும்
இப்போது
இல்லை.

Thursday, October 14, 2010

ஞாபகத்தில் தேங்கிய வீடு


தன் வீட்டைக் கட்டிமுடித்த
திருப்தியில் உங்களை சிறுபுன்னகையோடு திரும்பிப்
பார்க்கிறாள்
சிறுமி சைதன்யா
சுவர் கோணலாக இருப்பதாக்கூறி நீங்கள் சிரிக்க
அவள் வாயிற்கதவை திறந்துவிட்டதாகக் கூறுகிறாள்
கை நுழைய முடியாத நுழைவாயிலைக்கொண்டு
என்ன செய்துவிட முடியுமென்கிறீர்கள்
உள்ளே நுழைந்து ஒளியேற்றிவிட்டேன் என்கிறாள்
ஒளிவெள்ளம் பெருகும் வீட்டை
தை மாத வெள்ளாமை கொண்டு நிரப்புவேனென்று
அவள் சூளுரைத்தபோது
ஈசானத்திக்கில் மேகம் திரண்டு மழை வலுக்கிறது

உங்களின் குற்றச்சாட்டுகள் பெருகிக்கொண்டே இருக்க
வீடுகளாக கட்டிக்கொண்டே இருக்கிறாள் அவள்
பின் அவளின் வேகம் உங்களை மௌனமாக்குகிறது
சடுதியில் எல்லா வீட்டிற்குள்ளும் நுழைத்து
திரும்புமவள் உங்களைப் பார்க்கிறாள்

பின் தலையுயர்த்தி ஈசானத்திக்கைப் பார்க்கிறாள்
குளிர்காற்றெடுக்க மின்னலும் இடியும் வலுக்கின்றன

என்ன நினைத்தாளோ தெரியவில்லை
தான் கட்டிய ஒவ்வொரு வீட்டையும்
வேகத்தோடு இடித்து தரைமட்டமாக்கி
தன் பாவாடையை உதறிக்கொண்டு கிளம்புகையில்
காற்றும் மழையும் சுழன்றடிக்கின்றன

இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது வெளிச்சம்
இடிபாடுகளுக்கிடையில்

வீடுகளிருந்த இடத்தை வெறித்துப்
பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

Monday, October 11, 2010

கடக்க முடியாத இரவு


அலையெழுப்பிக் கொண்டிருந்த
நதியின் பிரவாகத்தை
கடுங்கோடை இரவொன்றில்
கடக்க வேண்டியிருந்தது
தீவிரத்துடன் எத்தனிக்க
தன்னை மெல்ல உள்ளிழுத்துக்கொண்டது நதி
எவ்வளவு முயன்றும்
வறண்ட நதியின் மணற்சூட்டை மட்டுமே
உணர்ந்த என் விரல்கள் அறிந்திருக்கவில்லை
உயிர்ப்பும் உயிர்ப்பின்மைகள் பற்றியும்.

இருள் விலகாத விடியலில்
துக்கத்தோடு திரும்புகையில்
கேட்க முடிந்த சிரிப்பொலிகள்
நிச்சயம்
வறண்ட நதியினுடையதாக இருக்க முடியாது

Sunday, October 10, 2010

ஸ்தனங்கள் இடறும் இரவு


சனிப்பிணம் துணைத்தேடி
வளமோட்டுப் பாறையேறி
கோட்டான் ஒலி கேட்கும்
வாசியம்மன் குறிசுவைக்க
ஐயனாரப்பனுக்கேனிந்த
அவசரம்

கள்ளக் கூடலுக்கு
காட்டேரி துணைபோக
தீவட்டி கொண்டு
சாரிபோகும் கன்னிமார்கள்

பச்சபுள்ளா குளம் தாண்டி
சரடென இழையும்
குறியொலி கேட்டு
கோணமலைப் பிள்ளையார்
குன்றேறிப் பார்ப்பார்

ஈசானத் திக்கில்
சிவனும் தயார் நிலையில்

கந்தவேல் முருகன்
கையாலாகாதவனா

திசையெங்கும் ஏதிரொலிக்கும்
குறிகளின் ஓலம்

பின்
திப்பக்காடு தாண்டி
சூரியப் பிரவேசம்

Friday, October 08, 2010

உயிர்த்தெழல்


அடர்ந்தோங்கிய வனம் அது. விண்ணை முட்டும் அளவிற்கு மரங்கள் ஓங்கி உயர்ந்திருந்தன. நண்பகலில் கூட அடர்ந்த இருள் பரவிக் கிடந்தது. சூரிய வெளிச்சத்தைக் கொண்டுதான் ஓரளவு திசைகளை அறிந்து கொள்ள முடிந்தது. காட்டின் ஊடே பெரிய காட்டாறு ஓடிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு குன்றும் மலைகளுமாகத் தெரிந்தாலும் மலையைத் தாண்டி உள் நுழைந்து விட்டால் வனத்தின் விஸ்தீரணத்தை உணர்ந்து கொள்ள முடியும். மனித நடமாட்டம் அற்றிருந்ததால் உயினங்கள் அனைத்தும் சுதந்திரமாக வனத்தை வலம் வந்து கொண்டிருந்தன.

வனத்தின் தலைவராக இருந்த சிங்கம் அனைத்தையும் ஓர் ஒழுங்கின் கீழ் நடத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொன்றும் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையில் எவ்வித சிக்கலுமின்றி நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தன. அந்த வனத்திற்கு ஒரு நரி வந்து சேரும் வரை அனைத்தும் அமைதியாகவே இருந்தது. நரிக்கு எப்போதுமே தந்திரம் அதிகம். அதுவும் அது ஒரு கிழட்டு நரிவேறு. வந்ததும் அது தன் வேலையைத் துவங்க ஆரம்பித்தது. சிங்கத்திற்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டு பொறாமை கொண்டது.

சிங்கம் எதையும் வேண்டிப் பெறுவதில்லை என்றாலும் கூட பிற மிருகங்கள் தானே வலிய வந்து சிங்கத்தை வணங்குவதை முறையாகக் கொண்டிருந்தன. நாளாக நாளாக நரிக்கு பொறாமையின் அளவு பெருகிக் கொண்டே இருந்தது. சுலபத்தில் அதை நரியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. சிங்கத்தை விட தந்திரத்திலும் வயதிலும் தான் தான் மூத்தவன் என்று நினைத்த அதற்கு இன்னும் ஆத்திரம் கூடியது. எப்படியும் தான் வனத்தின் ஆஸ்தான இடத்தை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது.

மறுநாளில் இருந்து நரியின் நடை மாறிவிட்டிருந்தது. அது தோள்பட்டையை உயர்த்தி, கைகளை வீசி வீசி எம்பி எம்பி நடக்க ஆரம்பித்தது. மிகவும் தனித்துவமானவன் என்று தன்னை பிரஸ்தாபித்துக் கொள்ள அது மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. அது அவ்வாறு நடந்து செல்வதைக் கண்ட முயல், மரக்கிளையில் அமர்ந்திருந்த குருவியிடம் ‘‘நரிக்கு மூலம் வந்துடுச்சா.... இல்ல கால்ல ஆணியான்னு தெரியல. எம்பி எம்பி நடந்து போவுது’’ என்று கூறியது.

முயல் கூறியதைத் தொடர்ந்து குருவி நரியைத் திரும்பிப் பார்த்து ஓங்கிச் சிரித்தது. நரியின் நடையைப் பார்த்து அவை விழுந்து விழுந்து சிரித்தன. தனக்கு அளிக்கப்படும் கௌரவமாக நினைத்துக் கொண்ட நரி இன்னும் கூடுதலாக தோள்பட்டைகளை உயர்த்தியபடி நடக்க ஆரம்பித்தது.

சில நாட்கள் கழிந்த நிலையில், நரியின் நடை உடை பாவனைகளில் மயங்கிய ஒரு ஓநாய் நரியின் சினேகிதத்திற்காக காத்துக் கிடந்தது. அதை உடனடியாகப் பார்ப்பதைத் தவிர்த்து ரொம்பவும் பிகுசெய்வதன் மூலம் தான் இந்த வனத்தின் மிகப்பெரிய சக்தி என்பதை நிறுவரி நரி முயற்சித்தது. ஓநாய்க்கு நரியின் மீதான மரியாதை மேலும் கூடியது. அதை சந்திக்கவே இத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால் அது எவ்வளவு சக்திவாய்ந்தது என எண்ணி புளகாங்கிதம் அடைந்தது. திடீரென ஒருநாள் ஓநாயை வரச்சொல்லி நரி சந்தித்தது. ஓநாய்க்கு நரியை சந்தித்து விட்டதில் ஒரே சந்தோசம். நரியைப் பார்த்து பலவித வார்த்தைகளால் அதன் புகழ்பாடியது. நரிக்கு ஒரே உற்சாகம். சந்தோஷம் பீறிட இன்றிலிருந்து நீ தான் என் காரியதரிசி என்று ஓநாயிடம் கூறியது. ஓநாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் மிகுந்த பணிவுடன் நரியிடம் திரும்பக் கேட்டது.

‘‘ஆமா, காரியதரிசினா என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?’’

‘‘இதுகூட தெரியாத மக்கா இருக்கியே. காரியதரிசினா, என்னோட வேலைகளை ஒழுங்குபடுத்தரவன்னு அர்த்தம். ஒன்ன வச்சிக்கினு நான் எப்படித்தான் சமாளிக்கப் போறனோ?’’

நரி அலுத்துக் கொண்டது. இருந்தாலும் தன்னுடைய அணிக்கு வந்த முதல் நபர் என்பதால் அதிகம் கடிந்து கொள்ளவில்லை. நரிக்கு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தது அலுப்பாக இருந்த போது அது, ஓநாயை அழைத்துக் கொண்டு வனத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பியது. அப்போது ‘‘எனக்கு சரிசமமா நடந்து வரக் கூடாது. என் பின்னாடி தான் வரணும் புரியுதா?’’ என ஓநாயிடம் கூறியது.

ஓநாய் மிகவும் கீழ்ப்படிந்த நிலையில் தலைதாழ்த்தி கூறியது ‘‘அப்படியே செய்றேன்’’.

ஒன்றன் பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்தன. வழியில் அவற்றால் எந்த விலங்குகளையும் காணமுடியவில்லை. ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில் மட்டும் குரங்குகளும் பறவைகளும் அமர்ந்து கொண்டு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தன. குரங்குகளும் பறவைகளும் தன்னைப் பார்ப்பதை அறிந்த நரிக்கு மீண்டும் தோள்பட்டை ஏறிக் கொண்டது. வனத்தின் அதிபதி போல இருந்தது அதன் நடை. ஓநாய்க்கு அதை பின்தொடர்வதில் ஒரு கௌரவம்.

தனது தலையைக் கோதிக் கொண்டு அதுவும் நரி போலவே நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் நரிக்கு சோர்வாக இருந்த போது, ஆலமரத்தின் கீழிருந்த ஒரு பாறையின் மீது அமர்ந்து கொண்டது. ஓநாய் அதற்கும் கீழாக உட்கார எண்ணி பின் வேண்டாம் என நினைத்து நின்று கொண்டே இருந்தது. அப்போது ஓநாயைப் பார்த்து ‘‘டேய் நாம ரெண்டு பேர் மட்டும் இருந்தா போதுமா? காட்ட நம்ம கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர...’’ என்று கேட்டது நரி.

‘‘எனக்கென்ன தலைவரே தெரியும். நீங்க என்ன செய்யச் சொல்றீங்களோ அதை செய்யறதுக்கு தான நான் இருக்கிறேன்’’. ஓநாய் நரியைப் பார்த்து கூறியது.

தன்னை தலைவன் என்று ஓநாய் சொன்னதில் நரி மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. கம்பீரமும் தனி மிடுக்கும் கூடியது. இம்மாபெரும் அடர்ந்த வனத்தின் தன்னிகரற்ற தலைவனாக அது தன்னை எண்ணி உள்ளூர மகிழ்ச்சி அடைந்தது. அப்பாறையின் மீது சிறிது நேரம் கம்பீரமாக அமர்ந்து அப்படியும் இப்படியும் திரும்பி ஓங்கி குரலெழுப்பியது. பின் ஓநாயிடம் கேட்டது. ‘‘டேய் என்ன பாக்க எப்படி இருக்கு?’’ ‘‘அசப்புல ஒரு ராஜா மாதிரியே இருக்கீங்க’’ ஓநாய் மிகுந்த சந்தோஷத்தோடு கூறியது.

‘‘இன்னும் நெறைய பேரு சேர்ந்தாதான நாம அந்த சிங்கத்த தீத்துக்கட்ட முடியும்’’ நரியும் மிகுந்த உற்சாகமடைந்தபடி ஓநாயிடம் கூறியது. நரி பேசப்பேச அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஓநாய் ‘‘அதுக்கு நான் என்ன செய்யனும்?’’ என்று பணிவுடன் கேட்டது.

“முந்திரிக் கொட்ட மாதிரி அவசரப்படாத. நா சொல்றத மொதல்ல கேளு.’’ ‘‘நாம மொதல்ல ரகசியமா ஒரு கூட்டத்தை கூட்டணும். அதுக்கு நீ தான் எல்லார் கிட்டயும் போயி என்னப்பத்தி எடுத்து சொல்லணும் புரிஞ்சுதா?’’ என நரி மிக அமைதியாகவும் காத்திரமாகவும் பேசியது. தன் தலைவரது பேச்சை மிக கவனமாகக் கேட்டுக் கொண்டது ஓநாய். பின் இருவரும் நடந்து அதனதன் இடங்களை அடைந்தன.

நரியின் தந்திரம் அரசல் புரசலாக சிங்கத்தை அடைந்தது. சிங்கம் அதை ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்நரியின் நடமாட்டத்தை தனது ஒற்றர்கள் மூலம் கண்காணிக்கத் தொடங்கியது. இதற்குள்ளாக வனத்தில் வனவிழா கொண்டாட்டம் வேறு தொடங்கியது. சிங்கத்தின் தலைமையில் விழாவிற்கான அனைத்து வேலைகளும் நடந்தன. நரிக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. தானே வலிய வந்து நரி வேலை செய்தாலும் கூட அதை பொருட்படுத்தாமல் சிங்கத்தின் பெருமையையே அனைத்தும் பேசிக் கொண்டிருந்தன. அதனால் சிங்கத்தின் மீதான வெறுப்பு தீராத பகையாகவும் வன்மமாகவும் உருக்கொண்டது நரிக்கு. ஆகவே மிகுந்த கோபத்தோடு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சிங்கம் எதையும் காணாதது போல காட்டிக் கொண்டது.

கோபத்தோடு சென்ற நரி உடனடியாக தனது தூதுவன் மூலம் ஓநாயை வரச்சொன்னது. ஏதோ பிரச்சினை என்று உணர்ந்து கொண்ட ஓநாய் வேகவேகமாக நரியின் இருப்பிடத்தை அடைந்தது. மிகுந்த சினத்தோடு இருந்த நரியைப் பார்த்த ஓநாய்க்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. அது தன்னிடம் என்ன கேட்கப் போகிறதோ என்ற பயத்தில் ஓநாய் மெல்ல நடுங்க ஆரம்பித்த போது நரி பேச ஆரம்பித்தது.

‘‘நம்முடைய குழுவில் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்?’’

நரியின் கேள்வி ஓநாயை கலவரப்படுத்தியது. மிகுந்த தயக்கத்துடன் அது கூறியது. ‘‘மூன்று பேர்் தலைவரே’’

ஓநாயின் பதில் நரிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. கண்கள் சிவந்தன. இதைப் பார்த்த ஓநாய்க்கு மூச்சு முட்டியது. என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அதை பீடித்துக் கொண்டது. ஆனாலும் உற்ற தோழனாக இருக்கும் ஓநாயையும் பகைத்துக் கொண்டால் என்னாவது என்று நரி யோசித்தபடியே கேட்டது.

‘‘அந்த மூணு பேர் யார் யாரு?’’

‘‘ஒரு வெளவால் ஒரு குரங்கு அப்புறம் ஒரு காக்கா’’ என்று மிகுந்த தயக்கத்துடன் ஓநாய்.

ஓநாய் கூறிய பட்டியல் நரிக்கு கவலையை ஏற்படுத்தியது. இருந்தாலும் முதன்முதலாக வந்தவர்களை ஏன் வேண்டாம் என்று சொல்வது என்று எதுவும் பேசாமல் இருந்தது. சிறிது நேர மௌனத்திற்கு பின் ‘‘அதுக்கு மேல யாரும் நம்ம கூட சேர விரும்பலயா?’’ என்று கேட்டது.

‘‘அப்படிலாம் ஒண்ணும் இல்ல தலைவரே. எப்படி செயல்படறோம்னு பார்த்துட்டு அப்புறமா சேர்ரம்னு சொல்றாங்க’’ அவசர அவசரமாக ஓநாய் பதில் அளித்தது.

இதைக் கேட்ட நரிக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தன்னுடைய செயல்பாட்டை மற்றவர்களுக்கு எப்படியும் நிரூபித்துக் காட்டிவிட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டது. அதற்கான வேலைகளில் உடனுக்குடன் இறங்கிவிட வேண்டும் என்று நினைத்த அதன் மனதில் சிங்கத்தின் பிம்பம் ஒரு விஷச் செடியைப் போன்று மெல்ல வளர்ந்து கொண்டிருந்தது.

‘‘நம்முடைய சகாக்களை சந்திக்க விரைவில் ஏற்பாடு செய்’’ பல்வேறு சிந்தனைகளுடன் அது ஓநாயிடம் கூறியது. தனது இருப்பிடத்திற்கு சென்றது. உணவு உண்டபின் அதற்கு களைப்பாக இருந்தது. கண்கள் செருக ஆரம்பித்தன. தான் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போன்றும் ஓநாய், வெளவால், குரங்கு மற்றும் காகம் ஆகியன கீழே இருக்கையில் அமர்ந்திருப்பது போன்றும் நினைத்துக் கொண்டிருந்த நரியை தூக்கம் மெல்ல தழுவரி ஆரம்பித்தது.

பொழுது விடிந்தும் விடியாததுமாக இருந்தது. இருள் சூழ்ந்து கிடந்த அக்காலையில் நரி பல்துலக்கிக் கொண்டிருந்தபோது ஓநாய் அம்மூவரையும் அழைத்துக் கொண்டு வந்தது. சிறிது நேரத்திற்குள்ளாக நரி அவர்களை சந்திக்க தயார் நிலையில் வர, ஓநாயுடன் சேர்ந்து அம்மூன்றும் எழுந்து நின்று வணங்கின. உட்காருங்கள் என்று அவற்றைப் பார்த்து நரி கூறியதும் ‘‘ஒவ்வொருவரும் தலைவரிடம் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்’’ என்று ஓநாய் அம்மூன்றிடமும் கூறியது.

அதைக் கேட்ட அம்மூன்றும் மிகப்பணிவுடன் தலைதாழ்த்தி, நரியின் புகழ்பாடி தங்களை அறிமுகம் செய்து கொண்டன. ‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு வெளவால்’’
‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு குரங்கு’’
‘‘தலைவருக்கு வணக்கம், எம்பேரு காக்கா’’

ஒவ்வொன்றும் இவ்வளவு தாழ்மையுடன் நடந்து கொள்வதைக் கண்ட நரி மிகுந்த சந்தோஷம் அடைந்தது. கால்மேல் கால் போட்டு சிங்கத்தைப் போல கர்ஜிப்பதாக நினைத்து ஊளையிட்டது. கம்பீரமாக அண்ணாந்து வானத்தைப் பார்த்தது. அம்மூன்றையும் இரண்டு மூன்று முறைகள் பார்வையாலேயே நோட்டம் விட்டது. அம்மூன்றும் தங்களுடன் தலைவர் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாரா என ஏங்கிய போது நரி பேச ஆரம்பித்தது.

‘‘உங்க கிட்ட ஓநாய் எல்லாத்தையும் சொல்லியிருக்கும்னு நெனைக்கிறேன்’’எனக் கூறி ஓநாயைப் பார்த்தது. ஓநாயும் ஆமோதிப்பது போல தலை அசைத்தது. பின் மீண்டும் நரி பேச ஆரம்பித்தது.

‘‘இந்த காட்ல சிங்கத்தின் எதேச்சதிகார ராஜ்ஜியம் நடக்கிறது. எவ்ளோ நாளக்கித்தான் நாம அடங்கி நடப்பது. நமக்குன்னு சுய கௌரவம் இருக்கு. எத்தன நாளக்கி சிங்கத்துக்கிட்ட கேட்டு கேட்டு எல்லாத்தையும் செய்யணும். அதனால நாமலே சுயமா முடிவெடுக்க நாம போராடி ஆவனும். அதுக்கு உங்க உதவி தேவைப்படுது என்ன புரிஞ்சுதா?’’

நரிப் பேசப் பேச அவை நான்கும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தன. அவை கவனிப்பதை கண்ட நரி தன் பேச்சின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்தது. பின் அவற்றிடம் மீண்டும் பேசியது. ‘‘நாம என்னன்ன வழிகள்ல சிங்கத்தை எதிர்க்கலாம்னு உங்களுக்கு தோன்றதையும் சொல்லலாம்’’.

அவை மிகுந்த சந்தோஷம் அடைந்தன. தங்களின் அபிப்ராயத்தைக் கூட கேட்கிறாரே என நரியை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டன. ஒவ்வொன்றும் வெகுநேரம் யோசித்த பின் நரியிடம் தங்களது யோசனைகளை கூறத் தொடங்கின. முதலில் வெளவால் நரியிடம் பேசத் தொடங்கியது.

‘‘நம்மள பாத்து சிங்கம் என்ன செய்யணும்னு நெனைக்கிறீங்க?’’ அதற்கு நரி உற்சாகத்தோடு கூறியது.

‘‘இது என்ன கேள்வி. நம்ள பாத்து பயந்து ஓடணும். நம்ளுக்கு அடங்கி நடக்கணும்’’. நரி அவ்வாறு கூறியவுடன், வெளவால் புன்னகையுடன் சொன்னது. ‘‘ஒருத்தங்கள அடிபணிய வைக்கிறது ரொம்ப சுலபம்’’. அதன் முகத்தில் ஒரு பொலிவு தென்பட்டது.

‘‘அதெப்படி?’’

‘‘நீங்க இங்கிலீஷ் கத்துக்கணும்’’

‘‘நா இங்கிலீஷ் கத்துகறதால எப்படி சிங்கத்தை அடக்க முடியும்?’’ எதுவும் புரியாமல் நரி கேட்டது.

‘‘இன்னிக்கி ஊரு ஒலகத்துல எல்லாம் இங்கிலீஷ் காட்டிதான் மத்தவங்கள பயமுறுத்துறாங்க’’.

‘‘நிஜமாவே இங்கிலீஷ்னா எல்லோரும் பயப்படுவாங்களா?’’ என்று கேட்ட நரிக்கு வெளவால் துடிப்புடன் சொன்னது.

‘‘நீங்க இங்கிலீஷ்ல பேசிப்பாருங்க... அப்புறம் புரிஞ்சுக்குவிங்க’’

‘‘எல்லாம் சரிதான். யார்கிட்ட போயி கத்துக்கிடறது?’’

‘‘அது ஒரு கஷ்டமே கெடையாது. இன்னைக்கு டவுண்ல நெறைய ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் நடத்துறாங்க. அங்க போயிட்டா போதும்’’ என்று வெளவால் கூறக்கூற நரி தன்னை வேறுமாதிரி கற்பிதம் செய்து செய்து பார்த்துக் கொண்டது. நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவதாகவும், தன்னைப் பார்த்து சிங்கம் பயந்தடித்து ஓடுவதாகவும் நினைத்துப் பார்த்தபோது, அதற்கு சிரிப்பு பீறிட்டெழுந்தது. இந்த யோசனையை கூறிய வெளவாலை அருகில் அழைத்து வெகுவாக பாராட்டியதுடன் அனைவருக்கும் உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சிறிது நேரத்திற்கு பின் அது குரங்கை அழைத்து சொன்னது.

‘‘குரங்காரே உமது ஐடியாவை கூறும்’’

நரிக்கு கும்மாளம் வந்து விட்டால் அது வார்த்தைகளில் தெரிந்து விடும். எப்படியும் தன்னால் சிங்கத்தை வீழ்த்திவிட முடியும் என நரி நினைத்துக் கொண்டிருக்கும் போதே குரங்கு எழுந்து தன்னுடைய யோசனையைக்கூற ஆரம்பித்தது.

‘‘இங்கிலீஷ் படிக்கிறதால எதுவும் செய்துட முடியும்னு எனக்கு தோணல’’ குரங்கு இவ்வாறு கூறியதும் வெளவாலுக்கு ஆத்திரம் வந்தது. கோபத்துடன் அது குரங்கைப் பார்த்துக் கேட்டது.

‘‘பின்ன எப்படி சிங்கத்த அடக்கிட முடியும்னு நெனைக்கிற?’’

நரிக்கும் ஆவலாய் இருந்தது. வெளவாலின் யோசனையைவிட, குரங்கின் யோசனை சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தது. அதனால் குரங்கை சீக்கிரம் கூறுமாறு கேட்டுக் கொண்டது. நரியே தன்னை கூறுமாறு அவசரப்படுத்துவதை குரங்கு பெருமையாக நினைத்தபடி சொல்லத் தொடங்கியது.

‘‘நீங்க இங்ககிலீஷ் கத்துக்கறத விட துப்பாக்கிச்சுட கத்துக்கிட்டா ரொம்ப வசதியா இருக்கும்’’. புரிந்தும் புரியாததுமாக நரி திரும்பக் கேட்டது.

‘‘எப்படி?’’

சற்று நேரம் ஆழ்ந்து யோசித்த குரங்கு பின் பேசத் தொடங்கியது.

‘‘நீங்க இங்கிலீஷ்ல பேசறத பார்த்துட்டு, சிங்கமும் இங்கிலீஷ் பேச கத்துக்கிட்டா என்ன பண்ணுவீங்க?’’ குரங்கின் இந்த கேள்வியில் அர்த்தம் இருப்பதாக நரி உணர்ந்தது. அதன் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் நரி கூறியது.

‘‘எனக்கு ஒன்னும் தோணல நீயே சொல்லிடு’’.

குரங்கு குதூகலத்தோடு கூறியது.

‘‘இங்லீஷ் அது இதுன்னு சொல்லி எதுக்கு பிரச்சினையை வளக்கணும், பேசாம துப்பாக்கி சுடக்கத்துக்கிட்டீங்கனா சிங்கத்த ஒரே அடியா அடிச்சி தூக்கிடலாம் இல்ல’’ குரங்கு கூறி முடித்ததும் நரிக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதை அடி பணிய வைப்பதைவிட ஒட்டுமொத்தமாக இல்லாமல் செய்துவிடுவது புத்திசாலித்தனமென்று யோசித்தது. வெளவால் தன் யோசனை நிராகரிக்கப்படுமோ என்ற ஐயத்தில் இருந்தது. காகம் எதுவும் பேசாமல் ஆழ்ந்த யோசனையில் நரியையே பார்த்துக் கொண்டிருந்த போது மீண்டும் நரி கேட்டது.

‘‘துப்பாக்கி சுட எங்க கத்துக்குடுக்கிறாங்க?’’ ‘‘அதப்பத்தி நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க பக்கத்து டவுன்ல கத்துக்குடுக்கிறாங்க’’ நரியின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட குரங்கு சொன்னது.

நரிக்கு சந்தோஷமாக இருந்தாலும், ஒரு சந்தேகம் எழுந்தது. அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டி அது குரங்கிடம் பேசியது. ‘‘துப்பாக்கி வச்சிகினு இருக்கிறது தப்பு இல்லையா?’’ இதைக் கேட்ட குரங்கு விழுந்து சிரித்தது. ஒருவித அலட்சியத்துடன் நரியைப் பார்த்துக் கூறியது.

‘‘இது கூட தெரியாம இருக்கீங்களே அரசாங்கத்துக்கு தெரியாம வச்சிருந்தா தான் தப்பு. நாம லைசன்ஸ் வாங்கிதான வச்சிக்கப் போறோம். எந்தப் பிரச்சினையும் வந்துடாது’’.




குரங்கின் பதில் நரிக்கு மிகவும் தெம்பாக இருந்தது. துப்பாக்கியைக் கொண்டு சிங்கத்தை நேருக்கு நேராக நின்று சுட்டு வீழ்த்துவதாகவும், சிங்கம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வீழ்ந்து இறப்பதாகவும் கற்பனை செய்து மகிழ்ந்தபோது அதன் கண்கள் மினுங்கின. மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. அதன் மகிழ்ச்சி அதன் உடலில் தெரியும்படி மிகவும் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருந்தது. பரந்துபட்ட அவ்வனத்திற்கு தான் தான் அரசன் எனவும், தனது ஆளுகைக்கு உட்பட்டது தான் அனைத்தும் எனவும் எண்ணிக் கொண்ட நரி மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தபடி காக்கையை அழைத்தது.

காகம் சுற்றும் முற்றும் பார்த்தபடி எழுந்து நரியைப் பார்த்து தலை தாழ்த்தி மீண்டுமொரு முறை வணக்கம் தெரிவித்து தேர்ந்த ஒரு அரசியல் தலைவரைப் போன்று பேச ஆரம்பித்தது. அதன் பீடிகைகளைப் பார்த்த மற்ற அனைத்தும் சற்று கலக்கம் கொண்டன. தங்களுடைய யோசனைகளை நரி நிராகரித்து விடக்கூடும் எனவும் யோசித்தன. காகம் தனது தொண்டையை செருமிக் கொண்டு பேசத் தொடங்கியது.

‘‘நரியாரே நான் இந்த விஷயத்தில் கொஞ்சம் தொலைநோக்கோட சிந்திக்க விரும்புகிறேன். இங்கிலீஷ் கத்துக்கிறது, அப்புறம் துப்பாக்கி சுடறது இதுலாம் ஒரு கால கட்டத்துக்கு வேணா பிரயோஜனமா இருக்கலாம். ஆனா காலத்துக்கும் பயன்படுமா?’’ எனக் கேட்டு அது நரியையும் மற்ற அனைத்தையும் பார்த்தது.

அவற்றிற்கு காகத்தின் பேச்சு புரியாமல் இருந்தது. இது நம்மோடு தானே இருக்கிறது. ஆனால் ஏதேதோ புதுவிஷயங்கள் நிறைய சொல்கிறதே, எங்கு படித்திருக்கும் என எண்ணிக் கொண்டன. நரிக்கு ஒரே ஆவலாக இருந்தது.

வெளவால், குரங்கைக் காட்டிலும் காகம் கொஞ்சம் புத்திசாலி என நினைத்தது. இதன் யோசனை நிச்சயம் மிக உயர்ந்ததாக இருக்குமென நினைத்து யோசனையை உடனடியாகக் கூற காகத்தை அவசரப்படுத்தியது.

‘‘என் யோசனை உங்களுக்கு உதவாதது போலத் தெரியலாம். ஆனா அது தான் சாத்தியமான வழி. நம்மை வலுவாக ஊன்றிக் கொள்ள அது தான் கை கொடுக்கும்’’ என பீடிகையுடன் கூறக்கூற, பொறுக்கமாட்டாமல் நரி சீக்கிரம் கூறுமாறு அவசரப்படுத்தியது. காகம் மீண்டும் தன் தொண்டையை செருமிக் கொண்டபடி பேசத் தொடங்கியது.

‘‘நாம ஒரு அரசியல் கட்சிய உடனடியா தொடங்கணும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் தொடங்கணும் அத எல்லார்க்கிட்டயும் உடனே கொண்டு போவணும். நமக்குன்னு ஒரு கொடி, கொள்கை, எல்லாத்தையும் வடிவமைக்கணும் வர தேர்தலுக்குள்ள நாம எல்லார்க்கிட்டயும் ரீச்சாகிட்டா நம்மள அசைக்க அப்புறம் யாராலும் முடியாது’’ என்று வேகவேகமாக கூறிவிட்டு காகம் ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டது.

அவை மூன்றும் இப்போது காகத்தை உண்மையிலேயே ஒரு புத்திசாலியாக நினைத்துப் பார்த்தன. நரிக்கு இருப்புக் கொள்ளவில்லை. அதன் மனத்திற்குள் பல்வேறு சிந்தனைகள் எழுந்து மறைந்தன. தான் மெல்ல மெல்ல பெரிய தலைவராக உருவாகிக் கொண்டு வருவதாக நினைத்தது. காகத்தின் யோசனை தன்னுடைய வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்துமென நரி நினைத்தபடியே காகத்தின் பேச்சை கேட்க ஆரம்பித்தது.

‘‘கட்சி ஆரம்பிச்ச உடனேயே ஒரு டிவி சேனல் ஒண்ணு ஆரம்பிக்கனும். அப்பதான் நம்ம கொள்கைகளை மக்கள்கிட்ட சுலபமா கொண்டு போகமுடியும்’’ என காகம் கூறியதும் அனைத்தும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

யாரும் கூறாத, யாருமே யோசித்திராத யோசனையைக் கூறியதில் காகம் கொஞ்சம் கர்வப்படத்தான் செய்தது. இது செயல் வடிவம் பெற்றால் நிச்சயம் தனக்கான பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், யாராலும் நிராகரிக்கப்பட முடியாததாகவும் இருக்கும் என்று காகம் நினைத்தபடி நரி உள்ளிட்ட மற்ற அனைத்தையும் பார்த்துக் கேட்டது.

‘‘என் யோசனையில் ஏதாவது டவுட்னா கேக்கலாம்’’.

காகத்தின் போக்கு நரிக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளவாலோ குரங்கோ இது மாதிரி திறந்த மனதுடன் விவாதிக்கும் திறனற்றவை என நரி நினைத்தது. காகத்தின் அதீதமான படிப்பும் அதன் பரந்து பட்ட அறிவும் தான் இதற்கு காரணமாக இருக்குமென்று நினைத்தது. இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நினைத்து காகத்திடம் கேட்டது. ‘‘கட்சிலாம் நடத்த ரொம்ப பணம் தேவைப்படுமே அதுக்கு நாம எங்கபோறது?’’

நரியின் கேள்விக்கு மிகவும் அலட்சியத்துடன் பதில் கூறியது காகம்.

‘‘கட்சி ஆரம்பிக்கிறது மட்டும்தான் நம்மோட வேலை? அதபத்திலாம் நீங்க கவலைப்படாதீங்க பணம் தானாக வரும்’’ காகம் இவ்வாறு கூறியதும் நரி குறுக்கிட்டு, ‘‘அப்ப நம்ம கொள்கை என்னாவது’’ என்று கேட்டது.

காகம் நரியைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டது. தன்னை எதுவும் செய்துவிட முடியாது எனும் தோரணையில் ‘‘என்ன இதுகூட தெரியாம இருக்கீங்களே. கொள்கைலாம் நமக்கில்லை. அது மத்தவங்களுக்காக சொல்லறது அதப் போயி பெருசா பேசிகினு இருக்கிறீங்களே’’ என காகம் பதில் அளித்தது.

தங்களின் யோசனைகள் எடுபடாது எனும் விதமாக வெளவாலும், குரங்கும் அமர்ந்து கொண்டிருந்தன. வெகு நேரம் உட்கார்ந்திருப்பது அவற்றை சோர்வடையச் செய்தன. இருந்தும் எதுவும் செய்துவிடமுடியவில்லை. ஓநாய் மிகவும் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தது.

‘‘கொள்கையைப் பத்தி நான் கவலைப்படல ஆனா மத்தவங்க அதப்பத்தி கேப்பாங்கன்னு தான் பாக்கறேன்’’

‘‘பொது வாழ்க்கைன்னு வந்துட்டா எதப்பத்தியும் கண்டுக்ககூடாது. மத்தவங்க கருத்துக்கு காதுகுடுத்தம்னா நம்மால எதுவும் செய்ய முடியாது’’.

காகத்தின் கறாரான பேச்சு நரிக்கு புதுவித தெம்பை அளித்தது. தான் மட்டும் எவ்வளவு நேரம் பேசாமல் இருப்பது என்று ஓநாய் நினைத்தது. தன் கருத்தையும் பதியும் விதமாக அது நரியிடம் கேட்டது.

‘‘நம்மள கட்சி ஆரம்பிக்கணும்னு சொல்றாரு. அப்படியே ஆரம்பிக்கரும்னு வச்சிக்குங்க. மத்தவங்க நம்ம திட்டங்கள தெரிஞ்சுக்கிட்டு நம்பள பத்தி மத்தவங்க கிட்ட தாருமாறா ஏதாவது சொல்லிட மாட்டாங்களா?’’

‘‘எந்த திட்டத்த?’’

எதுவும் விளங்காததைப் போல நரி கேட்டது.

‘‘அதான் நீங்க இங்லீஷ் கத்துக்கப்போறது அப்புறம் துப்பாக்கி சுடப்பழகிக்கறது’’.

ஓநாயின் கேள்வியிலும் நியாயம் இருப்பதாக உணர்ந்தது நரி. அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. நரி ஒன்றும் புரியாமல் விழிப்பதை பார்த்த காகம் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு பேசத் தொடங்கியது.

‘‘மத்தவங்க நம்மள பேசிடுவாங்கன்னு கவலைப்பட வேணாம். வளர்னுனா அப்படி பேசிதான் ஆகணும். அப்படி பேசறவங்க எல்லாருமே கண்டிப்பா இங்கிலீஷ் படிச்சிருப்பாங்க. அவங்க படிக்கலைன்னா கூட அவங்களோட பசங்கள படிக்க வைப்பாங்க. மொழியச் சொல்லி அரசியல் பண்றதலாம் ஒரு தந்திரம். அத நாம்பளும் கத்துக்கிடனும். அதவிட்டுட்டு ஏதாவது சொல்லிடுவாங்கனு பயப்படறது நம்மோட வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் பயன்படாது.’’

காகம் இவ்வளவு விஷங்களை எங்கு தான் தெரிந்து கொண்டதோ என்று நினைத்து நரி நினைத்து ஆச்சரியப்பட்டது. மற்ற அனைத்தும் காகத்திற்கு தெரிந்த இவ்வளவு விஷயங்கள் தங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என நினைத்து தங்களை நொந்து கொண்டன. அவை அனைத்தும் காகத்தின் மீது மரியாதையையும் பொறாமையையும் கொண்டன. நரி எதுவும் பேசாமல் அமைதியாக யோசித்துவிட்டு காகத்திடம் கேட்டது.

‘‘நாம பவர் சென்ட்ரா மாற எவ்வளவு நாள் ஆவும்’’

‘‘கட்சி ஆரம்பிச்ச உடனே மேலெடத்துக்கு போயிடணும்னு நெனைக்கக் கூடாது. அடிமட்டத்த மொதல்ல ஸ்ட்ராங் பன்னனும். அப்புறம் தன்னால மேல போயிடலாம்’’ என காகம் கூறியது.

காகத்தின் தொலைநோக்கான பார்வையை நரி மிகவும் ரசித்தது. ஆனாலும் அது காகத்திடம் கேட்டது. ‘‘எல்லாம் சரிதான். நாம மேலிடத்த அடையிறதுக்கே ரொம்பகாலம் ஆனாக்கா, இந்த சிங்கத்த எப்படி அடக்கறது?’’

‘‘ஒங்களுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியமாட்டுது. உங்க வளர்ச்சிய கண்டு தன்னால அந்த சிங்கம் ஓடிடும். இந்த காடே உங்க காலடியில கிடக்கும்னு சொல்றேன். நீங்க இன்னான்னா அந்த சிங்கத்த உடாம புடிச்சிகினு இருக்கீங்க’’. காகம் மிகவும் உமையுடன் சொன்னது.

காகத்தின் பேச்சு நரியை மேலும் மேலும் கிறங்கடித்தது. எல்லாம் நடந்துவிட்டால் எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தது. தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டது. மெல்ல மெல்ல மெல்ல ஒரு அரசனுக்கான கம்பீரம் அதை தழுவரி ஆரம்பித்தது. தான் எப்போது அந்த பதவியை அடையமுடியும் என்ற ஆவல் அதற்கு எழுந்த போது அது காகத்திடம் கேட்டது. நரியின் அவசரத்தை உணர்ந்த காகம் சற்று விரிவாகவும் பொறுமையாகவும் பேச ஆரம்பித்தது.

‘‘ஒவ்வொரு ஊரா போயி நம்ம கொள்கைகளை பரப்ப வேண்டியது தான். நாம எப்படி கொள்கைய பரப்பரோம்னு டிவியில, பத்திரிக்கையில தெனம் தெனம் காட்டணும். அப்புறம் எல்லாத்த எதிர்த்தும் போராட்டம் நடத்தணும். ஜெயிலுக்கு போவணும். இதலாம் செஞ்சா தன்னால பெரிய ஆளா ஆயிடலாம். நம்மள மீறி எந்த சக்தியும் எதுவும் செய்துட முடியாது.’’

காகம் தனது திட்டங்களை மிகவும் துல்லியமாக எடுத்து வைக்க மற்றவைகள் பிரமை பிடித்தவைகள் போல, ஏதும் செய்ய முடியாமல் அமர்ந்து கொண்டிருந்தன. நரிக்கு கொஞ்சம் மலைப்பாகவும் இருந்தது. எப்படி இதையெல்லாம் எதிர்கொண்டு நாம் முன்னேறப் போகிறோம் என்று தோன்றியது. காகம் தன்னோடு இருந்தால் எதையும் சாதித்து விடமுடியும் என்றும், நினைத்து தன்னை தேற்றிக் கொண்டது. இன்னும் காகத்திடம் அனேக விஷயங்கள் இருப்பதை உணர்ந்த நரி காகத்திடம் கேட்டது.

‘‘போராட்டம்னு சொல்றியே.... அத பத்தி சொல்லேன்’’



போராட்டம் என்றால் என்ன என்று கூட விளக்க வேண்டியிருக்கும் தனது நிலையை எண்ணி காகத்திற்கு வருத்தமாக இருந்தது. இருந்தாலும் என்ன செய்துவிட முடியும் என்றும் யோசித்தது. ஆகவே தனது விதியை நொந்தபடியே கூற ஆரம்பித்தது. ‘‘இப்ப சினிமா படங்களுக்கு தமிழ் பேரு வச்சா வரி விலக்குன்னு சொல்றாங்க. அது எதுத்தும் நாம போராட்டம் நடத்தணும்’’

நரிக்கு ஏதும் விளங்கவில்லை. ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அதனால் காகத்திடம் கேட்டது. ‘‘அது நல்ல விஷயம் தானே, அத எதுத்து எதுக்கு போராட்டம் நடத்தணும்?’’

‘‘தமிழ் பேரு வச்சாக்கா வரி விலக்குன்னு தான சொல்லறாங்க. அப்ப ஏன் தமிழ் பேரு வச்சி வெளிவர செலபடங்களுக்கு வவிலக்கு கொடுக்க மாட்றாங்க?’’

‘‘அப்படி எந்த படத்துக்கு விலக்கு கொடுக்கலன்னு சொல்ற’’

‘‘அவளோட இரவுகள், மன்மத கனவுகள், அந்தரங்க அற்புதங்கள்-னு நிறைய படத்த அரசாங்கம் கண்டுக்கறதேயில்லை. அத தட்டிக் கேட்டு தான் நாம போராடணும்’’

காகம் படங்களின் பெயர்களைக் கூறக்கூற நரி முகத்தை ஒரு மாதிரி சுருக்கிக் கொண்ட காகத்திடம் கேட்டது. நீ சொல்ற படங்கள்லாம் ரொம்ப மோசமான படங்களாச்சே. அதுக்குப் போயி எப்படி வரி விலக்கு தர்றது?’’

‘‘அப்ப வரி விலக்கு கொடுக்கிற படங்கள்லாம் நல்ல கருத்துள்ள படங்கன்னு சொல்றீங்களா?’’ காகம் எதிர்த்து கேட்டது.

நரிக்கு ஒன்றும் புரியவில்லை. காகம் என்ன சொல்ல வருகிறது என்பதையும் உணரமுடியவில்லை. அதனால் அது காகத்திடம் கேட்டது.

‘‘கடைசியா நீ என்ன தான் சொல்ல வர்ற?’’

‘‘நான் ஒண்ணும் சொல்ல வர்றல. எவ்ளோ மட்டமா படம் எடுக்க முடியுமோ அவ்ளோ மட்டமா எடுத்துட்டு தமிழ்ல பேரு வச்சிட்டா அது நம்ம மொழிக்கு பெருமையைச் சேர்த்திடுமா, இல்ல நம்ம கலாச்சாரத்ததான் தூக்கி நிறுத்திடுமான்னு எனக்கு புரியல.’’

காகத்தின் பதில் நரிக்கு புரிதலை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் காகத்தின் வாதத்தில் ஏதோ ஓர் உண்மையும் வலுவும் இருப்பதாக உணர்ந்தது. ஆகவே காகத்திடம் சொன்னது.

‘‘சரி இந்த போராட்டத்த நாம நடத்துவோம்’’ என்று கூறி நரி அவற்றை பார்த்தது. அவை நரியின் பேச்சை ஆமோதிப்பது போல தலையசைத்தன. சிறிது நேரம் அவை அனைத்தும் மௌனமாக இருந்தன. பின் தொடர்ச்சியான உரையாடல் அவை அனைத்தையும் சோர்வடையச் செய்ததை உணர்ந்த நரி அவற்றிடம் கூறியது.

‘‘ரொம்ப அசதியா இருக்கிறதால நம்ம பேச்ச இத்தோட முடிச்சிக்கலாம் நாளைக்கி மீண்டும் தொடங்கலாம்.’’

நரி பேசி முடித்தவுடன் அனைத்தும் நரிக்கு வணக்கம் கூறிவிட்டு வெளியே கிளம்பின. அவை கிளம்பி சென்ற பிறகு நரி உள்ளுக்குள்ளாக சென்றது. அப்போது தனது வாசலில் விபரீதமான குலை நடுங்கச் செய்யும் விதமான சப்தத்தைக் கேட்டது. நரி தனது கவனத்தை கூர்மையாக்கிக் கொண்டு என்ன சத்தம் என்று மெல்ல எட்டிப் பார்த்தது. அவ்வளவுதான் வெளியில் பதுங்கியிருந்த சிங்கம் சற்றும் எதிர்பாராத வகையில் நரியின் மீது வேகத்தோடு பாயவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நரி அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கவும் சரியாக இருந்தது. தான் கண்டு கொண்டிருந்த சுவாரசியமிக்க அக்கனவைக்கூட காணவிடாமல் அச்சிங்கம் தன் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதே என்று சிங்கத்தின் மீது சினம் கொண்டது நரி. எப்படியும் அச்சிங்கத்தை அழித்தே தீர்வது என்றும் தனது மனத்தில் கருவிக் கொண்டு கண்களைக் கசக்கிக் கொண்டது.

உடனடியாக ஓநாயை வரச்சொல்லி நரி ஆள் அனுப்பியது. வெளவால், குரங்கு மற்றும் காகத்துடன் ஓநாய் நரியின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. நரியின் கண்களில் பதற்றத்தை காண முடிந்தது. அதைக் கண்ட ஓநாய்க்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. பயத்துடனேயே நரியிடம் பேச்சுக் கொடுத்தது.

‘‘தலைவரே நம்ம கூட்டாளிகளை கூட்டாந்திருக்கேன். என்ன செய்யனம்ணு கட்டளை இடுங்க’’.

ஓநாயின் பேச்சு நரிக்கு தெம்பைத் தந்தது. அது ஓநாயுடன் வந்தவைகளைப் பார்த்தபடியே ‘‘இந்த சிங்கத்தோட தொல்லைய தாங்க முடியல. கனவுல கூட நிம்மதியாவுட மாட்டுது. அத ஒழிச்சுக் கட்டியே ஆவணும். அதுவும் சீக்கிரமாவே அது கதய முடிச்சுடனும், அதற்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க’’ என்று படபடப்பாக பேசியது.

அதன் உடல் நடுங்கிக் கொண்டிருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க அது அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. நரி தங்களிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டதும் அவை அனைத்தும் ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தன. நல்ல யோசனையாக கூற வேண்டுமே என்ற பயம் அவற்றிடம் தெரிந்தன. ‘‘என்ன ஐடியா ஏதாச்சும் சிக்கிச்சா?’’ சிறிது நேரம் கடந்த நிலையில் நரி மீண்டும் கேட்டது.

அவை அனைத்தும் மிகவும் அமைதியாக இருந்தன. அவற்றின் முகங்களில் பயத்தின் ரேகைகள் ஓடிக் கொண்டிருந்தன. தங்களை நரி ஏதாவது செய்துவிடுமோ என்றும் அவை அஞ்சின. ஓநாய் மெல்ல எழுந்து மனதை திடப்படுத்திக் கொண்டு நரியிடம் பேசியது.

‘‘தலைவரே உடன்தடனா ஐடியா கேட்டா எப்படி, இவங்க எல்லாருமே புதுசு. இரண்டு மூணு நாளு கொடுத்துப் பாப்பம். அப்பதான அவங்களால சரியா யோசிக்க முடியும்’’.

ஓநாயின் பதில் நரியை கொஞ்சம் சாந்தப்படுத்தவே செய்தது. இருந்தாலும் அதற்கு சிங்கத்தை ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அடிமனதில் நெருடிக் கொண்டே இருந்தது. ஆகவே அது ஓநாயிடம் கேட்டது.

‘‘இப்ப எதுவும் செய்ய முடியாதா?’’

மீண்டும் அவை அனைத்தும் ஆழந்து யோசிக்க ஆரம்பித்தன. தங்களுக்குள் கலந்து பேசிக் கொண்டன. தங்களது எண்ணங்களை ஓநாயிடம் தெரிவித்தன. அவை கூறியவற்றை ஓநாய், நரியிடம் கூறியது.

‘‘நிம்மதியா தூங்கக் கூட விடாத சிங்கத்தின் செயலை கண்டிச்சி உருவபொம்மை எரிப்பு போராட்டமும் ஒரு கண்டன கூட்டமும் நடத்தலாம்’’.

ஓநாயின் இந்தத் திட்டம் நரிக்கு உவப்பாக இருந்தது. சிங்கத்தின் எதேச்சாதிகாரத்திற்கு இதன்மூலம் ஓர் பாடத்தை புகட்டி விடலாம் என்று எண்ணியது. குறைந்தபட்சம் அதன் கவனத்தை ஈர்ப்பதாகவும், தன்னுடைய வலிமையை புரிய வைப்பதாகவும் அக்கூட்டம் இருக்கும் என அது யோசித்து மகிழ்ந்தது. மிகவும் சந்தோஷத்துடன் அது ஓநாயிடம் கேட்டது.

‘‘போராட்டத்த எங்கு, எப்ப நடத்தறது, உருவ பொம்மைய யார் செய்றது?’’

‘‘நாளன்னிக்கு நடத்தலாம். அதுக்குள்ள உருவ பொம்மய செஞ்சிடணும். விழுப்புரம் பக்கத்துல அகரம் சித்தாமூர்ல இருக்காரு ஒருத்தர் அச்சு அசலா அப்படியே செஞ்சிடுவார்’’ என ஓநாய் கூறியது.

ஓநாய் கூறியதும் நரி அவசர அவசரமாக கூறியது.

அப்படின்னா அவர உடனே அழச்சிட்டு வர ஏற்பாடு செய்.

நரியின் ஆணைக்கிணங்க, அகரம் சித்தாமூர்லிருந்து உருவ பொம்மை செய்பவர் வரவழைக்கப்பட்டார். அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு, சிங்கத்தின் உருவ பொம்மையை தயார் செய்வதில் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டன. அவர் செய்யச் செய்ய நரி சிலவற்றை சுட்டிக்காட்டி சரி செய்தபடியே இருந்தது. பிடரியின் அளவு, பற்களின் கூர்மை, வாலின் நீளம், உடல்வாகு அனைத்தையும் கன கச்சிதமாகவும் நுட்பமாகவும் செய்யச் சொல்லி மேற்பார்வை செய்தது.

நிஜ சிங்கத்தைப் போல அவ்வளவு தத்ரூபமாக அது உருவாக ஆரம்பித்தது. அவை மூன்றும் ஓடியாடி வேலை செய்தது. ஓநாய் அவருடன் கூடவே இருந்து அவருக்கு தேவையான வேலைகளை பார்த்துக் கொண்டது. நள்ளிரவில் பலவித வண்ணங்களை குழைத்து அவர் மெருகேற்றிக் கொண்டிருந்தார். இறுதியாக கண்களில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்த போது நரி ஓநாயிடம் கேட்டது.

‘‘அசல் சிங்கம் மாதிரியே இருக்கில்ல’’

அதை ஆமோதிப்பது போல ஓநாய் தலையாட்டியது. இதை செய்தவர் தான் அழைத்து வந்தவர் என்பதில் ஓநாய் பெருமைப்பட்டுக் கொண்டது. அன்று மதியம் அனைத்து வேலைகளும் பூர்த்தியடைந்தது. ஒரு நிஜ சிங்கம் எவ்வாறு நின்று கொண்டிருக்குமோ அதைப் போல நின்று கொண்டிருந்தது. நரி அதைச் செய்தவரை தடபுடலாக கௌரவித்து வழி அனுப்பி வைத்தது. பின் அவை சாப்பாட்டை முடித்துக் கொண்டு மறுநாள் போராட்டத்திற்கு ஆயத்தமாகின.

அவை நான்கும் சிங்கத்தின் உருவபொம்மையை மிகவும் கஷ்டப்பட்டு வனத்தின் மையப்பகுதிக்கு கொண்டு சென்றன. கண்டன முழக்கங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஆங்காங்கே நட்டு போராட்டத்தை உருவாக்கின. ஒலி பெருக்கிகள், போராட்டத்திற்கு வரவேண்டியவர்கள் மற்றும் முக்கிய வேலைகளை ஒழுங்கு செய்யும் பணியை ஓநாய் கவனித்துக் கொண்டிருந்தது. நாளை பேச வேண்டிய முக்கிய குறிப்புகளை நரி தயார் செய்து கொண்டிருந்தது. மறுநாள் விடியலை அவை அனைத்தும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. எதற்கும் உறக்கம் வரவேயில்லை.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அவை போராட்ட களத்திற்கு சென்றன. கண்டன கோஷங்களைத் தாங்கிய தட்டிகளும் பேனர்களும் போராட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்திக் காட்டின. அச்சூழலை கண்ட நரி மிகவும் சந்தோஷம் கொண்டு உணர்ச்சி பீறிட ‘‘போராட்டத்தை ஆரம்பிச்சிடலாமா’’ என்று கேட்டது. நரியின் கேள்வியை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவை அனைத்தும் ஆரம்பிச்சிடலாம் என கோரசாக கூறின. அவை நான்கும் சிங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பின.

‘‘ஒழிக... ஒழிக’’ என்றது ஓநாய்.

‘‘சிங்கத்தின் அராஜகம் ஒழிக’’ மற்ற அனைத்தும் கூறின.

தொடர்ந்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியது. சிங்கத்தை தவிர மற்ற விலங்குகள் அப்போராட்டத்தைக் காண ஆங்காங்கே திரண்டன. எந்த பிரச்சினை வந்தாலும் எதிர் கொள்ளும் துணிவுடனேயே நரி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தது. அப்போது ஓநாய் சிங்கத்தின் அராஜகத்தை கண்டிக்கும் விதமாக, அதன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தை இப்போது நமது தலைவர் அவர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று கூறியதும் சூழலை ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

உடனே நரியின் கையில் ஒரு தீவட்டி கொடுக்கப்பட்டது. ஒரு பெரிய வீரனைப் போல தீவட்டியை ஏந்திச் சென்று, அவ்வுருவ பொம்மைக்கு தீ வைக்க நெருங்கிய நரிக்கு சிங்கத்தின் கண்களைப் பார்க்க பயமாக இருந்தது. உண்மையில் இது நிஜ சிங்கம் தானோ என்று அது அஞ்சியது. ஆனாலும் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அதற்கு தீ வைக்க, தீயின் சூடு தாங்காமல் அவ்வுருவ பொம்மை வனமே அதிரும்படி கர்ஜித்தது. தனது கால்களை தரையில் உதைத்தபடி நரியை நோக்கி சீறிப்பாய்ந்தது. அங்கு திரண்டிருந்த ஓநாய் உள்ளிட்ட அனைத்திற்கும் ஒன்றும் புரியவில்லை.

அவை அவ்வுருவபொம்மையையே உற்றுப் பார்த்தன. அதன் கண்கள் தீப்பிழம்பென துடித்துக் கொண்டிருந்தன. நடப்பது கனவா நிஜமா என்று கூட யோசிக்க அவற்றிற்கு அவகாசம் இல்லாமல் இருந்தது. பொம்மை உயிர் பெற்றதைக் கண்ட வெளவால், குரங்கு மற்றும் காகம் அனைத்தும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கையிலேந்திக் கொண்டிருந்த தீவட்டியுடன் காட்டிற்குள் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தது. அப்போதும் கூட அதற்குள் ஒரு கேள்வி எழுந்தது. ‘‘எப்படி பொம்ம சிங்கம், நிஜ சிங்கமா மாறிச்சி’’.

பின்குறிப்பு:

1. இக்கதை சிங்கத்தின் அரசியலை தூக்கி நிறுத்த முயற்சிக்கவில்லை. மாறாக சிங்கத்தின் அரசியலை எதிர்கொள்ள களமிறங்கும் அனைத்தும் சிங்கமாக மாறுவதன் பின்னணியில் நிகழும் நுண்ணரசியலையே பேச விரும்புகிறது.

2. மேலும் கதையில் வரும் சில சம்பவங்கள் நிஜ நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. அவ்வாறான சூழலில் வாழ நேர்ந்தமைக்கான துக்கம் அடர்த்தியாக நம்மீது கவிவதையும் தவிர்க்க முடியவில்லை.

Tuesday, October 05, 2010

பச்சபுள்ளா குளம்


எட்மண்ட் டான்டஸ்சின் இருபத்தைந்தாம் நினைவு நாளையொட்டி, The Cross Section எனும் இலக்கியப் பத்திரிகை, ஒரு சிறப்புக் கட்டுரையையும், ஒரு சிறுகதையையும் வெளியிட்டு அவரை கௌரவித்திருந்தது. சிறந்த மொழியியல் அறிஞரும் சிறுகதை எழுத்தாளருமான டாக்டர் வில்லியம் மோர்ஸ் அவர்களால், எட்மண்ட் டான்டஸ்சின் ஆய்வுகளை உள்வாங்கி, எழுதப்பட்ட இக்கதை சிதைந்து வரும் நமது கிராமியக் கலாச்சாரத்தையும் வாய்மொழிக் கதைகளின் வீச்சையும் நுட்பமாக பதிவு செய்கிறது. கன்னிமார்குறித்த ஆய்வுகளை தொடர மேற்கொண்ட அவரது முயற்சிகளையும், இதுவரை விளங்கிக் கொள்ளவே முடியாத அவரது புதிர் நிரம்பிய மறைவையும் தனக்கே உரித்தான தொனியில் வில்லியம் மோர்ஸ் எழுதிச் செல்கிறார். கதையின் போக்கோடும் முடிவோடும் ஒத்துப்போக முடியாத பட்சத்தில் கூட, இக்கதையில் படிந்திருக்கிற கிராமம் சார்ந்த நம்பிக்கையின் நுண்அரசியலும் அவசியம் என்றே தோன்றுகிறது.மேலும் எட்மண்ட் டான்டஸின் மறைவானது., கன்னிமார் குறித்த ஆய்வோடு அவருக்கிருந்த ஈடுபாட்டினால் ஏற்பட்ட மனப்பிறழ்வு சம்பந்தப்பட்டது மட்டும் தானா என்பதை இன்றளவும் விளக்கிக் கொள்ள முடியவில்லை. கன்னிமார்கள் குறித்த ஆய்வின் கடைசித் தொகுதி முற்று பெறவே இல்லை என்பதும், அதைத் தொடர யாரும் விருப்பம் காட்டவே இல்லை என்பதும் ஆய்வுலகில் அவ்வப்போது ஏற்படும் பெரிய சோகங்களில் ஒன்றாகும். டான்டஸின் இறுதிக் காலங்கள் கூட மற்றவர்கள் மத்தியில் இவ்வாய்வு குறித்த பயத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்றும் எண்ண இடமிருக்கின்றது. கன்னிமார்கள் குறித்து பதினாறு தொகுதிகள் கிட்டத்தட்ட இருபத்திமூனாயிரம் பக்கங்கள் என்று வளர்ந்து கொண்டே இருந்தவரின் செயல்பாடு கடைசியில் சுயநினைவின்றி, “தான் தான் கன்னிமார்களின் கதைகளை எழுதவந்தவன்” என்று புலம்பியபடி பச்சபுள்ளா குளக்கரையிலும் கோணமலைக் காடுகளிலும் சுற்றிச் சுற்றி வந்ததை இக்கட்டுரை காத்திரமாக முன்வைக்கிறது. இதை வாசிக்கும் போது நமக்கும் மனம் கனத்து கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. பிரசுர வசதி கருதி கதையின் சுருக்கப்பட்ட வடிவம் மற்றும் டான்டஸ் பற்றிய சிறு குறிப்பும் பதிப்பாளரின் அனுமதியோடு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஈசான மூலையில் மேகம் கரும்பாறையென திரண்டிருந்தது. மழைவருவது போல தோன்றிய போது, பண்டாரம் துண்டை உதறிக்கொண்டே எழுந்தார். சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடந்தது. கிணற்று மேட்டில் தவளைச் சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருந்தது. மடியில் சுருட்டி வைத்திருந்த பீடிகத்தையிலிருந்து ஒன்றை உருவி பற்றவைத்துக்கொடு மோட்டார் கொட்டகையிலிருந்து கீழிறங்கினார். அவர் கால்வைத்த இடத்திலிருந்து ஒரு தவளை தாவிக்குதித்து ஓடியது. கண்களை அழுத்தி துடைத்தபடி விளைச்சலை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே வந்தவர் கீழண்ட வாய்க்கால் ஓரம் தொடர்ச்சியாக தீப்பந்தங்கள் போன்று எதுவோ அசைந்து செல்வதைக் கண்டார். கண்களை நன்கு துடைத்துக் கொண்டு உற்றுப்பார்த்தார். கையில் தீவட்டிகளோடு கன்னிமார்கள் சாரியாக சென்று கொண்டிருந்தன. ஒரு நெருப்பு கோடு நகர்வதைப் போன்று ஒளியும் மாறி மாறித் தோன்றின. கீழண்ட வாய்க்காலைக் கடந்து சிறு மேட்டை அடைந்தபோது அது கன்னிமார்களின் சாரிதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவரை பயம் கவ்விக்கொண்டது. வேக வேகமாக நடந்து மோட்டார் கொட்டகையின் மீது ஏறி தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை அதட்டி எழுப்பினார்.“டேய் வினாயகம் எழுந்திர்டா” அவன் சட்டை செய்யாமல் புரண்டு படுத்தான். அவர் வேகமாகத் தட்டி எழுப்பினார். அவன் அலண்டு அடித்துக்ள கொண்டு எழுந்தான். சோம்பல் முறித்தபடியே அவரைப் பார்த்துக் கேட்டான்.“நடு ராத்திரில ஏன் தான் எழுப்பறீங்களோ”“டேய் அங்க பார்றா. கன்னிமார்லாம் சாரி போவுது” என கீழண்ட வாய்க்காலை நோக்கிக் கையை நீட்டி காண்பித்தார். தொலைவு வரை அடர்ந்திருந்த இருளில் மின்மினிப்பூச்சிகள் நீந்திக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றின. கண்களை கசக்கியபடி, அவர் கைநீட்டிய திசையைப் பார்த்தான். தீப்பந்தங்களுடன் ஆட்கள் நடந்து செல்வது போலத் தோன்றியது. மேட்டின் மீது வளர்ந்திருந்த தென்னைகளின் ஊடாக அவை நடந்து கொண்டிருந்தன. அவனுள் பயத்தின் பிடிமெல்ல இறுகிக்கொண்டிருந்த போது அவர் பீடியை ஆழ்ந்து புகைத்துக் கொண்டிருந்தார்.ஒலி நாடாவில் பதிவாகியிருந்த குரல் துல்லியமாக ஒலித்தது. ஒலி வடிவத்தை எழுத்தாக மாற்றும் போது அயர்வாக உணர்ந்த எட்மண்டான்டஸ் ஒலி நாடாவின இயக்கத்தை நிறுத்தினார். களைப்பை போக்க அவருக்கு சிறு தூக்கம் தேவைப்பட்டது. மீதியை அப்புறம் எழுதிக்கொள்ளலாம் என்று முடிவு செய்தவருக்கு அதுவரை எழுதியவற்றை மாற்றும் போது தான் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என அவர் யோசித்துக் கொண்டிருக்கும்போது காற்று வேகமெடுத்து பெருத்த சப்தத்தோடு வீசியது. தோட்டத்தில் மரங்கள் ஒடிந்து வீழ்ந்து விடுவதைப்போல ஆடின. அவர் எழுந்து வெளியில் வந்து பார்த்தார். வானம் இருட்டிக் கொண்டு வந்தது. தூரத்தில் மழை பெய்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றுபோன போது மீண்டும் அவர் உள்ளுக்குள் சென்று நாற்காலியில் வருகை சங்கடத்தையே அளிக்கும் என நினைத்தபடி மேசை மீது படபடத்துக் கொண்டிருக்கும் ஏடுகளின் சப்தத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.தென்னாற்காடு முழுக்க அலைந்து திரிந்து சேகரித்த கன்னிமார்களின் கதைகள் அடங்கிய ஏடுகள் புதர் போல் மண்டிக்கிடந்தன. எத்தனையோ பேர் பார்க்கமுடிந்தகன்னிமார்களை தன்னால் ஏன் பார்க்க முடியவில்லை எனும் கேள்வி அவரை அரித்தது. ஒரு வேளை கன்னிமார்கள் கற்பிதங்கள் தானோ என்றும் யோசிக்க வேண்டியிருந்தது அவருக்கு. தமது ஆய்வின் முடிவு எப்படி இருக்கப் போகிறது. எந்த திசை நோக்கிச் செல்கிறது என அவரால் யூகித்து அறியமுடியவில்லை. இருட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தெருவில் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்த போது அவரை உறக்கம் மெல்ல தழுவ ஆரம்பித்தது.கன்னிமார் குறித்த அச்சம் மெல்ல விலக ஆரம்பித்திருந்த ஓர் நாள் அதிகாலை சாமிக்கண்ணு வாத்தியாரை கன்னிமார் அறைந்து விட்டதாக ஊர்முழுக்க ஒரே பேச்சு அன்றிலிருந்து மீண்டும் கன்னிமார்கள் குறித்த பயம் விநாயகத்தைத் தொற்றிக் கொண்டது. அன்றிரவு தெருவில் படுத்துக் கொண்டிருந்த போது பாட்டியிடம் கேட்டான்.“வாத்தியார எப்படி பாட்டி கன்னிமாரு அறஞ்சிச்சி?”அவன் கேட்டவுடன் அருகில் படுத்துக் கொண்டிருந்த அவன் அக்கா, அவனை பார்த்து அதட்டலுடன் சொன்னாள்.“டேய் பேசாம படு”அவன் விடுவதாக இல்லை. தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தன் பாட்டியிடம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுடைய அக்கா எதிர்ப்பு தெரிவித்தபடியிருந்தாள். இருவரும் மோதிக்கொள்ளத் தயாராகயிருந்தபோது பாட்டி அவர்களைச் சமாதானம் செய்தபடி தொடங்கினாள். பாட்டிச் சொல்லச் சொல்ல வார்த்தைகள் பீதி நிறைந்த சித்திரமென விரிந்தன.
அன்று சீக்கிரமாகவே மொட்டை மாடிக்குச் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார் சாமிக்கண்ணு வாத்தியார். காற்று சில்லென்று வீசியது. தோட்டத்து தென்னைமரங்கள் சலசலத்தபடியிருந்தன. அண்ணாந்து வானத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தவர் மெல்ல உறக்கத்தின் பிடியில் சிக்குண்டார். சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியால் நிரம்பியிருந்த தெரு முக்கில் சில நாய்கள் ஊளைவிட்டுக் கொண்டிருந்தன.தன்னை யாரோ தொட்டு எழுப்புவதை உணர்ந்த அவர் எழுந்த போது ஊர் அடங்கி விட்டிருந்தது. எங்கும் நிசப்தம் அருகில் நின்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். அருகில் இருந்தவள் தன் மனைவி அல்லாத வேறு பெண்ணாக இருந்தாள். அதீத அழகோடு சற்று நேரத்திற்கு முன்பு குளித்து விட்டு வந்தவளைப் போல இருந்தாள். மஞ்சள் படர்ந்திருந்த முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென தோன்றியது அவருக்கு. சுண்டினால் ரத்தம் வந்துவிடக்கூடிய உடம்பு, இவ்வளவு வாளிப்பான உடல்வாகு கொண்ட பெண்ணை அவர் இதுவரை கண்டதே கிடையாது.அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். தன் இதழ் ஓரங்களில் புன்னகையை தேக்கியபடி அவரை நெருங்கினாள். அவரின் தலையைக் கோதியபடி நெற்றியில் அழுத்தமாக ஓர் முத்தமிட்டாள். சடுதியில் அனைத்தும் மாறத் தொடங்கின. அவள் விரல்கள் அவரது உடலெங்கும் ஊர்ந்தன. அவருள் காமத்தின் வேட்கை வேர்விடத் தொடங்கியிருந்தது. அவளை வாரி அணைத்தபோது அவள் கூறினாள். அவளது பேச்சு தேர்ந்த சாஸ்தீரிய சங்கீதமென இருந்தது அவருக்கு.“இங்க வேணாம் வேற எங்கயாவது போவம்”அவளின் வார்த்தைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாதவராக இருந்தார் அவர். சத்தமே எழாமல் சிரித்தபடி மெல்ல எழுந்தாள். தனது ஆடைகளை சரி செய்து கொண்டபடியே அவளைப் பார்த்து கேட்டார்“வேற எங்க போறது. யாராச்சும் பாத்துட்டாங்கனா அவ்ளோதான்”.இதை கேட்டதும் அவள் மென்மையாக சிரித்தாள். முத்துகள் சிதறியதைப் போன்றிருந்தது தனது உடலின் செழுமையை அவர் கவனிக்கயேதுவாக வெளிச்சத்தில் நின்றவாறு அவள் கூறினாள்.“எங் கூட வாங்க மற்றதெல்லாம் நா பாத்துக்கறேன்”அவள் வார்த்தைகள் அவளைப் போலவே மிகக் கச்சிதமாகவும், அவ்வளவு அழகாகவும் இருந்தன. இனிமேல் தான் இப்படித்தான் பேச வேண்டுமென நினைத்துக் கொண்டார். சுவாசிக்கும்போது அவளது உடம்பில் ஏற்படும் மேடு பள்ளங்களை உற்றுக் கவனித்தார். அவரது கையைப் பற்றிக் கொண்டு மெல்ல நடந்தாள். மாடிப்படி தெருபக்கமாக இருந்தது. எந்த அதிர்வு மேற்படாமல் அவள் நடந்து சென்றாள். கிறக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வாசனை வெளியேறிக் கொண்டிருந்தது அவளது உடலிருந்து. அதில் மயங்கிக் கிடந்தார் அவர். சோடியம் விளக்கு வெளிச்சத்தில், ஒரு தங்க விக்ரகம் நடந்து வருவதைப் போல இருந்தது அவளைப் பார்ப்பதற்கு. அவர்களை பார்த்து நாய்கள் குரைக்கத் தொடங்கின.




எதிர்வீட்டிலிருந்து பூவரச மரத்திலிருந்து கோட்டான் பெருங்குரலெடுத்துக் கத்தியபோது அவர்கள் தெருவைக் கடந்து கிழக்கு நோக்கி திரும்பி விட்டிருந்தார்கள்.சாலை வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் யாரும் நின்றிருக்கவில்லை. தன்னை எங்கு அழைத்துச் செல்கிறாள் என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. கொஞ்ச தூரம் நடந்தபின் வடக்கு நோக்கிப் பிரிந்த ஒரு மண்பாதையில் திருப்பினபோது அவளிடம் கேட்டார்.“எங்க போறோம்? பாழடைந்த மான்ராசா கோயிலத் தவற வேற எதுவும் இங்க இல்லையே”பேசாமல் வருமாறு சைகை செய்து காண்பித்தாள். அடர்ந்த இருளும், படர்ந்திருந்த நிசப்தமும் அவருக்கு பயத்தை ஏற்படுத்தின. அவள் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள். அவரும் நடக்க வேண்டியிருந்தது. மான்ராசா கோயிலை அடைந்த போது இருவருக்கும் வியர்த்துக் கொட்டியது. கோயிலுக்குள்ளிலிருந்து நாய் ஒன்று எழுந்தோடி இருளுக்குள் சென்றது. கோயில் மிகவும் சிதிலமடைந்திருப்பதை உணரமுடிந்தது. அவளது வியர்வை நாற்றத்தை முகர்ந்துகொண்டே இருக்க வேண்டுமென நினைத்தவர், மிகுந்த ஆவேசத்தோடு இறுக்கி அணைத்தார். எந்த எதிர்ப்பையும் காட்டாது மிக லாவகமாக அமர்ந்து கொண்டாள். அவர் சூழலை மறந்திருந்த நொடியில் அவள் பேசினாள். அவளது பேச்சை உணர்ந்து கொள்ள முடியாதவராக அவர் மயங்கிக் கிடந்தார்.“ஒரே கசகசப்பா இருக்குது. குளிச்சா தேவலாம்”அவருக்கும் அப்படித்தான் தோன்றியது. இருவரும் ஒன்றாக குளித்துக்கொண்டிருப்பதை கற்பனை செய்து பார்த்தவர் அவளிடம் கேட்டார்.“இந்த நேரத்துல எங்க போயி குளிக்கிறது?”அவள் ஒன்றும் தெரியாதவளைப் போன்று கேட்டாள்.“கிட்டக கெணறு ஒண்ணுமில்லையா?”“இருக்குது. ஆனா ஆட்கள் காவலுக்கு படுத்திட்டுருப்பாங்க சரிபட்டு வராதே”.அவள் சிரித்தாள். சிறு மின்னற் துண்டைப் போன்றிருந்தது சிரிப்பு. வேம்பின் காற்று சில்லென இருந்தது. அவளது சிரிப்பிலிருந்து அவர் இன்னும் விடுபட்டிருக்கவில்லை. புன்னகைத்தபடி அவளே கேட்டாள்.“இவ்ளோ பெரிய ஊர்ல குளிக்கறதுக்கு ஒரு எடம் கூடவா கிடையாது?”அவருக்கு அசிங்கமாக இருந்தது. எந்த நிலையிலும் தன்னூரை குறைத்து மதிப்பிடுவதை விரும்பாதவர் அவர். யோசனையில் ஆழ்ந்தார். அவரை உசுப்பேற்றிக் கொண்டுஇருந்தாள் அவள். தனது நாவால் அவரது கழுத்துப்பகுதியில் வருடிக்கொண்டிருந்தாள். பின் மெல்ல காதுமடல்களை கடித்தாள். சுகிப்பிலிருந்து மீள முடியாமலிருந்த போது அவளிடம் கூறினார்.“ஒரு எடம் இருக்கு. ஆனா கொஞ்சம் தூரம். யாரும் இருக்க மாட்டாங்க” ஆர்வ மிகுதியில் அவரை இறுகத்தழுவியபடி கேட்டாள்.“பச்சபுள்ளா குளம்”“கொளமா?” என ஆச்சரியத்தோடு கேட்டாள். அவர் கண்களில் காமம் கொப்பளிக்க தலையாட்டினார் அவர் தளர்ச்சியடைந்து விடாதவாறு பார்த்துக் கொண்டாள். இருவரும் வேக வேகமாக நடந்தனர். அவளை சுலபத்தில் அவரால் பின்தொடர முடியவில்லை. சாலை ஓரங்களில் நின்றிருந்த புளிய மரங்கள் பயத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றியது. நன்கு மழிக்கப்பட்ட பனைகள் பீதியூட்டுவதாக இருந்தன. ஒரு மிருகத்தைப் போல அவள் நடந்தாள். நீண்ட கருங்கூந்தலைப் போல வளைந்து நெளிந்து கிடந்தது தார்ச்சாலை சில்வண்டுகள் ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன. காட்டுப்பூக்களின் வாசம் தூரத்தை கடந்தும் மணம் வீசிக் கொண்டிருந்தது. அவரும் வேகத்தைக் கூட்டி நடக்க வேண்டியிருந்தது. இருவருக்குமான தூரம் அதிகரிக்கத் தொடங்கியது போது அவர் ஓடவும் செய்தார். அவளிடமிருந்து கசிந்து கொண்டிருந்த ஒருவித வாசனை தொடர்ந்து அவரை முன்னிழுத்தபடியே இருந்தது. அவளுக்கு எப்படி பச்சபுளா குளம் செல்வதற்கான வழி தெரியும் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கட்டுண்டு கிடந்தார். அவரது சிந்தனை முழுக்க அவளே நிரம்பியிருந்தாள்.நிலவொளியில் சாலை ஓரத்தில் வட்டவடிவிலான ஒரு கண்ணாடியைப் போன்று இருந்தது குளம். நான்கு பக்கமும் படிக்கட்டுகள். ஒரு சில இடங்களில் சிதிலமடைந்து இருந்தன. குளத்திற்கு வடக்கில் புளிய மரம். அதன் கீழே கழிப்பு கழித்ததன் அடையாளமாய் முறம், சிவப்பு, மற்றும் சில்லறைகள் சிதறியிருந்தன. மேற்கில் எருக்கு, புதர் கிழக்கும் தெற்கும் எந்த அடைசலுமின்றி இருந்தது. நிலவின் நகர்வு குளத்து நீரில் பிரதிபலித்தது. கிழக்கு பக்கமாக அவள் குளத்தினுள் இறங்கினாள். மேலேயே நின்று கொண்டிருந்தார் அவர். நீருக்குள் இறங்கியவள் தன் ஆடைகளை களைந்து படியில் வைத்தாள். ஓர் ஆணின் முன் அம்மணம் கொள்வதை சிரமம் கருதாதவளாக இருந்தாள். அவருக்குத்தான் பதற்றம் கூடத் தொடங்கியிருந்தது. மிக நெருக்கத்தில் நிர்வாணம் உணரப்படும்போது முதலில் பயத்தையே ஏற்படுத்துகிறது. அதிலிருந்து மீள கொஞ்ச நேரம் பிடித்தது அவருக்கு. தேர்ந்த சிற்பியின் செதுக்கல்களிலிருந்து உயிர் பெற்றவளைப் போல இருந்தாள்.நிலவின் ஒளிபட்டு ஜொலிக்கின்ற அவளது உடலையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரை குளத்திற்குள் இறங்குமாறு சொன்னாள். தயக்கமாக இருந்தாலும் இறங்கியாக வேண்டிய கட்டாயம். தன்னை அம்மணமாக்கிக் கொள்வது அவருக்கு கூச்சமாக இருந்தது. அவள் உதவினாள். பின் இருவரும் நீந்தினார்கள். அவருக்கு சோர்வாக இருந்த போது படியில் சிறிது நேரம் அமர்ந்து கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவள் வேக வேகமாக நீந்தினாள். மேற்கு புறமாக சென்று படியேறியவள், ஒரு பலகைக்கல்லில் மஞ்சளை இழைத்து உடல்முழுக்க பூசிக் கொண்டு குளத்திற்குள் இறங்கினாள். அதைக்கண்ட அவருக்கு பயம் ஏற்பட்டது. இரவில் யார் மஞ்சள் பூசி குளிப்பார்கள் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அவர் முகம் இறுகத்தொடங்கியது. நீந்தியவாறே அவருக்கு அருகில் வந்தவள், அவரைப்பிடித்து நீருக்குள் இழுத்தாள்.அவளை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தங்கத்தைப்போல பிராகாசிக்கும் அவளது உடம்பு இப்போது அவருக்கு பயத்தை ஏற்படுத்தியது. வெறியோடு இறுக்கி அணைத்தாள். எலும்புகள் நொறுங்கிவிடுவதைப் போன்றிருந்தது. அவருக்கு மூச்சை அடைத்தது. நீருக்குள்ளாக அவளின் தீவிரம் கூடத் தொடங்கியபோது எப்படியாவது மேலேறி சென்றுவிட வேண்டுமென நினைத்தார். முடியவில்லை. அவர் தன்னை மெல்ல இழந்து கொண்டிருந்தார். நினைவுகள் மங்கத்தொடங்கியபோது அவர் மீதான அவளின்பிடி இறுகத் தொடங்கியது. நிலமெலாம் அதிரும்படி அவள் சிரித்தாள். சிரிப்பொலி நாலா திசையிலும் பட்டு எதிரொலித்தபடியிருந்தது. அவள் ஆவேசத்தோடு இயங்கினாள். காப்பாத்துங்க, காப்பாத்துங்க என்று அவர் உரக்கக் கத்தினார். ஆனால் குரல் அவருக்குள்ளேயே ஒடுங்கிப்போனது. வெறுமையாக்கி அவரை தூக்கி வீசினாள். பின் மெல்ல கரையேறி ஆடைகளை உடுத்திக்கொண்டு தெற்கு பக்கமாக நடக்க தொடங்கினாள். இருள் அடர்ந்திருந்தது. குளம் அமைதியாக இருந்தது. பேச்சு மூச்சற்று புளிய மரத்தின் கீழே வீழ்ந்து கிடந்தார் அவர். விடிந்ததும் விடியாததுமாக ஊர் முழுக்க செய்தி காட்டுதீ போல பரவியது. அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். ஊர் முழுக்க பலகதைகள் உலவிக்கொண்டிருந்த அந்த வாரத்தின் கடைசி நாளில் இறுதிவரை நினைவு திரும்பாமலேயே இறந்தும் போனார்.என்றோ பாட்டி கூறிய கதை அவனுள் பயத்தை ஏற்படுத்தியது. கீழண்ட வாய்க்காலையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்பா வேறொரு பீடியை எடுத்து புகைக்கத் தொடங்கினார். அவன் இருளை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த போது அவர் கீழிறங்கி சிறுநீர் கழித்துவிட்டு வந்து படுத்துக்கொண்டார். உடனே தூங்கியும் விட்டார். ஆனால் அவனுக்கு தூக்கம் வரவில்லை புரண்டு படுத்தான் சுற்றும் முற்றும் பார்த்தான் பூச்சிகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. அருகில் தூங்கிக் கொண்டிருந்தவரை திரும்பிப் பார்த்தான். அவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். வானத்தில் நிலவு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.
கதவு தட்டும் சத்தம் தூரத்தில் கேட்பதுபோல தோன்றிய போது எட்மண்ட்டான்டஸ் விழித்துக்கொண்டார். கண்களை கசக்கிக்கொண்டு ஒலிநாடா பெட்டியை பார்த்தார். அது ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்குள் குழப்பமாக இருந்தது. சாமிக்கண்ணு வாத்தியார் கதை வெறும் கனவுதானோ என்றும் யோசித்தார். எழுதிக்கொண்டிருக்கும் தாள்களை புரட்டிப்பார்த்தார் தான் சேகரித்த அநேக கதைகளில் அதுவும் ஒன்றென எண்ணிக்கொண்டு படபடத்துக் கொண்டிருக்கும் தாள்களையே பார்த்துக் கொண்டிருந்தார். நேரில் பார்த்ததைப்போல காட்சிகள் அவர் மனதில் குமிழிட அவருக்கு மேலும் குழப்பம் அதிகரித்தது. எப்போது சாப்பிட்டோம் என்று கூட அவருக்கு தெரியவில்லை.மேசைமீது உணவுப் பாத்திரங்கள் அப்படியே இருந்தன. மீண்டும் ஆழ்ந்து யோசித்தார் நினைவின் கீற்று அவரது மனதில் மின்னி மறைந்தபோது அவரை ஞாபகத்தின் கொடிகள் பற்றத் தொடங்கின தெளிவான காட்சிகளாக பிம்பங்கள் நகரத்தொடங்கின. விழுப்புரம் தாலுக்கா கெடார் கிராமத்திற்கு அருகில் உள்ள செல்லங்குப்பத்தில் ஓர் மழை இரவில் பண்டாரத்தோடு பேசியதும் அவர் கூறிய சாமிக்கண்ணு வாத்தியார் கதையை கெடார் பழனிவேல் முதலியார் ஊர்ஜிதம் செய்த காட்சியும் கோர்வையாக அவரது மனதில் தோன்றிய போது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனையோ கதைகள் இருக்க இந்த கதை மட்டும் ஏன் கனவாக வரவேண்டும் என்று யோசித்தவர் கடிகாரத்தைப் பார்த்தார். பன்னரெண்டாக இன்னும் சிலமணித்துளிகளே இருந்தன. தெருப்பக்கம் சென்று கதவைத் திறந்தார். தொப்பளாக நனைந்த ஓர் நெடிய உருவம் நின்று கொண்டிருந்தது. மழை வேகத்தோடு பெய்து கொண்டிருந்தது. அந்த உருவம் அழகிய பெண் என்பதை சில வினாடிகளுக்குள் அவரால் உணர்ந்து கொள்ள முடிந்தது.அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மழை ஈரத்தால் அவளது உடலின் வனப்புகளை இருட்டில் கூட அவரால் கூர்மையாக காண முடிந்தது. அவளின் உயரம், நீண்ட கருங்கூந்தல் மஞ்சள் பூசிய முகம் அனைத்தும் அவருள் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தின. எதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார். மழைக்கு ஒதுங்கிய நாய்கள் குரைக்கத் தொடங்கின.



தெருவில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் ஏதோ ஓர் மரம் ஒடிந்து விழும் சப்தம் கேட்டது. அவள் உடல் அதிகமாக நடுங்க ஆரம்பித்ததை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் பேசினாள்.“தொப்பர நனைஞ்சி வந்திருக்கேன். உள்ள வாங்கனு கூப்பிட மாட்டிங்களா?”குரல் வெண்கல மணிச்சத்தம் போல ஒலித்தது. பற்கள் வெண்மையாக இருந்தன. உதட்டசைவையே அவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். மீண்டும் அவள் பேசினாள்.“உங்கள தான் கேக்கறேன்.”இப்போது அவளது குரல் அவளை பேசவைத்தது மிக அமைதியாகவும் பதற்றத்துடனும் சொன்னார்.“உள்ள வாங்க”ஈரம் சொட்டச் சொட்ட அவள் நடந்து உள்ளே வந்தாள். அவர் திரும்பித்திரும்பி பார்த்தவாறு முன்னால் சென்று, துவட்டிக் கொள்ள துண்டை எடுத்துக் கொடுத்தார். அவள் துண்டை வாங்கிக்க கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். புரிந்து கொண்டவராக கிழக்கு பக்கமிருக்கும் அறையைக் காட்டினார். அறை நோக்கி மெல்ல நடந்தவள், திரும்பிப் பார்த்து மென்மையான சிரிப்பொன்றை உதிர்த்தாள். பெருமழையின் சீற்றம் குறைந்திருக்கவில்லை. ஆனாலும் அவருக்கு வியர்த்தது. உடல் முழுக்க உஷ்ணம் பரவியது. அவர் வியர்வையை சிறு துண்டால் துடைத்துக் கொண்டிருந்த போது கதவைத் திறந்து கொண்டு அவள் வந்தாள். ஈரத்துணி அவளது உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்தது.அவர் அவளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வைகள் நிலை கொள்ளாது அலைந்தன. சிந்தனைகள் கட்டற்று எழுப்பின. காமம் அவருள் தீயின் நாவென துடித்துக் கொண்டிருந்தபோது அவளை நெருங்கினார். அவள் யாராக இருக்ககூடுமென்ற சிந்தனையும் அவரால் புறந்தள்ள முடியாததாக இருந்தது. சூழலின் தனிமை அவர்களை விழுங்கத் தொடங்கிய போது அவர் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டிருந்தார். இருவரது உதடுகளும் மொழிமீறிய வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டன. காற்றின் வீச்சத்தால் ஜன்னல் கதவுகள் படபட என அடித்துக்கொண்டபோது அவளது இடது காது மடலுக்கும் கீழாக அழுத்தமாக அவர் முத்தமிட்டார்.அவளுக்குள்ளாகவும் காமத்தின் சுருள்கள் இறுகத்தொடங்கியபோது மழையின் வேகம் குறையத்தொடங்கியது. தெருவில் வெள்ளத்தின் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.உணர்வுகளில் கட்டுண்டு கிடந்தாலும் அவர் கவனத்துடனேயே இருந்தார். எப்படியாவது கன்னிமார்களின் நடமாட்டத்தை, விசித்திரத்தை நேரில் கண்டுவிட வேண்டும் எனும் ஆவல் அவரது விழிகளில் தேங்கிக்கிடந்தது. மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அவள் போக்கிலேயே இயங்கினார். மழை முழுவதுமாக ஓய்ந்திருந்தது. மழைக்கு பிறகான நிசப்தம் பேரமைதியாக எங்கும் கவிந்திருந்த போது அவள் சொன்னாள்.“எனக்கு உடம்பு கசகசனு இருக்கு, குளிக்கணும் போல இருக்குது”ஆட்டம் தொடங்கிவிட்டதென நினைத்தவருக்கு சட்டென சாமிக்கண்ணுவாத்தியாரின் கதை நினைவுக்கு வந்தது. அக்கதை வெறும் கனவுதானோ என்று திரும்பவும் யோசித்தவர் அவளிடம் சொன்னார்.“இங்கேயே குளிக்கலாமே”“அது சரியா வராது; கிட்டக்க கெணறு எதுவும் இல்லையா?”அவர் அவள் பேச்சை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கினார், அவளின் செய்கைகள் அவரை உசுப்பேற்றின. வீழ்ந்து விடாமலிருக்க நிறைய சிரமப்பட வேண்டியிருந்தது அவருக்கு. அவள் தன்னிடம் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்தவர் சொன்னார்.“இருக்குது ஆனா மோட்டார் கொட்டாயில ஆட்கள் படுத்துக்கிடப்பாங்க பாத்துட்டாங்கனா அவ்ளோதான்”“வேற எடமே இல்லையா?”“இருக்குது கொஞ்சதூரம்”ஆர்வ மிகுதியில் அவள் கேட்டாள்.“எந்த இடம்”அவளது விழிகளில் தேங்கியிருந்த வஞ்சகத்தை கண்டவராக கூறினார்.“பச்சபுள்ளா குளம்”அவர் கூறிவிட்டு அவளைப் பார்த்தார். அவளின் விழிகளில் ஆச்சரியம் மின்னலெனத் தோன்றி மறைந்தது. அவள் அவரை இறுக்கி அணைத்து அவரது உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு சொன்னாள்.“போகலாமா”அவர் தலையாட்டி, தெருக்கதவை திறக்கச் சென்றார்.மழைநீர் வடிந்திருக்கவில்லை பாதங்களை நனைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது. மேட்டுத்தெரு வழியாக அவர்கள் பள்ளிக்கூடச் சந்தை அடைந்தனர். தெரு நெடுக சேரும் சகதியுமாக இருந்தது. அதிக ஒலி எழுப்பாமல் நடந்தனர். பள்ளிக்கூடத்தின் பின்புறமிருந்த இலுப்பையின் உயரம் பீதியை ஏற்படுத்தியது அவருக்கு. வெள்ளக்குளத் தெருவிற்குள் நுழையும் போது நாய்கள் விடாமல் குரைத்தன. எங்கும் இருள் சூழ்ந்து கிடந்தது. இருவரையும் நாய்கள் பின்தொடர்ந்தன. அவள் அவற்றைத் திரும்பிப் பார்த்தாள். அவை வால்களை ஆட்டிக் கொண்டு பின்னோக்கி ஓடின. வெள்ளக்குளம் முழுக்க நீர் நிரம்பியிருந்தது. தெருவை அடைத்தபடி வெள்ளநீர் ஓடிக்கொண்டிருந்தது.மாந்தோப்புக் கழனிக்குள் அவர்கள் நுழையும் போது அவர் மணிப் பார்த்ததர். சரியாக ஒரு மணியாக இருந்தது. தமது ஆர்வம் விபரீதத்தில் முடிந்துவிடுமோ என்றும் அவர் யோசித்தார். கண்களில் பயத்தின் திவலைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. அப்போது அவள் நடையைத்துரிதப் படுத்தியிருந்தாள். அவரும் வேகமாக நடக்க வேண்டியிருந்தது. நரிமுட்டு கழனியைத் தாண்டி சாலையை அவர்கள் அடைய குறைந்த நேரமே பிடித்தது. சாலையில் மேற்கு நோக்கி நடந்தனர். குளிர்ந்த காற்று வீசியது. மரங்களில் ஈரம்படர்ந்திருந்தது. காற்றில் பரவியிருந்தது முட்டிப்பூக்களின் மணம். இரவின் தனிமையை மழைபெய்து அதிகப்படுத்தியிருந்ததை உணர முடிந்தது.பச்சபுள்ளா குளத்தின் வளைவில் ஓங்கி வளர்ந்திருந்த அரசமரத்தின் கீழிருந்து குளத்தை நன்கு பார்க்க முடிந்தது. படிக்கட்டுகளை காணமுடியாதபடி நீர் நிரம்பியிருந்தது. வேகவேகமாக நடந்து அவர்கள் கிழக்கு பக்கமாக குளத்தை அடைந்தனர்.ஆடைகளை களைந்து விட்டு நீருக்குள்ளாக இறங்கியவள் அவரை நீருக்குள் வருமாறு அழைத்தாள். ஆடைகளை அவிழ்த்து ஈரம்படாதவாறு மடித்துவைத்து விட்டு குளத்திற்குள் இறங்கினார். இருவரும் நீருக்குள்ளாக இறுக்கி பின் மெல்ல விலகி இருவரும் நீந்த ஆரம்பித்தனர். அவளுக்கு ஈடுகொடுத்து அவரால் நீந்த முடியவில்லை. குளம் அதிர அவள் நீந்தினாள். புளியமரத்து பறவைகள் சடசடத்தபடி அங்குமிங்கும் அலைமோதின. தெற்கு பக்கமாக நீந்திச் சென்றவள், கரையேறி மஞ்சள் அரைத்து உடம்பு முழுக்க பூசிக்கொண்டு மீண்டும் நீருக்குள் சென்றாள். அவர் குளித்து கரையேறி விட்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவளும் கரைக்குச் சென்று அவரை இறுகத் தழுவினாள். அவருள் கட்டுண்டிருந்த காமம் நாகமெனச் சீறியது. எலும்புகள் நொறுங்க அவளை இறுக்கினார். காமத்தின் நெடி மெல்ல இருவர் மீதும் படர ஆரம்பித்த போது அவர்களின் உடல்கள் உரையாடலைத் தொடங்கிவிட்டிருந்தன.மிக நெருக்கத்தில் அவரது கண்களை மீண்டுமொரு முறை உற்றுப் பார்த்தாள். இருவரும் மாறிமாறி தங்களது உணர்வுகளை பரிமாறிக் கொண்டிருந்தனர். இருவரின் மூச்சுக்காற்றும் அங்கேயே மோதிச் சரிந்தன. வியர்வை கசகசப்பை ஏற்படுத்தியபோது அவர் உச்சம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். அவள் உணர்வுகளை உள்வாங்கியபடி மெல்லிய ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தாள். தீவிரத்தோடு வெம்மைக்கூடி வெளிவந்தது. தன் வாழ்நாளிலேயே நீண்ட புணர்ச்சியை முடித்துக்கொண்ட திருப்தியோடு புரண்டு கீழே படுத்தபோது ஒரு துளி விந்து சிதறி குளத்தில் விழுந்தது. கண்களை மூடிப்படுத்துக் கிடந்தவளின் சுவாசம் தாறுமாறாக இருந்தது. சிறிது நேரம் கழித்து கண்களை மெல்லத் திறந்தாள். பின் எழுந்து அவரது கண்களை உற்றுப் பார்த்தவள், ஓங்கிச் சிரித்தாள். குளம் அவளது சிரிப்பை எதிரொலித்தது.அந்த சிரிப்புக்கான அர்த்தத்தை அவரால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் அவரைப்பார்த்து ஓங்கிச் சிரித்தபடியே நீருக்குள்ளாக இறங்கி தனது இரு கைகளாலும் நீரை அள்ளி ஒரு மிடறு பருகிய நொடியில் ஒரு துளி நீர்கூட இல்லாமல் சட்டென குளம் வறண்டது. புதிர் நிறைந்த அக்கணத்தில் அவர் அவளாகவும், அவள் அவராகவும் உருமாறிவிட்டிருந்தனர். அவராக உருமாற்றம் கொண்ட அவள் ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தான் கன்னிமார்களின் கதையை எழுதவந்தவன் என்று வறண்ட குளத்தின் கரையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் அவள் உரு கொண்ட அவர். அதன்பிறகு அந்தக்குளம் எப்போதும் நிரம்பவேயில்லை.

குறிப்புகள்

எட்மண்ட் டான்டஸ்
கொலம்பியாவைச் சேர்ந்த எட்மண்ட் டான்டஸ் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவமானவர். ஆண்ட்ரியோ, மெபக்கி படைப்பாளிகளுக்கு முந்தைய தலைமுறையைச் சார்ந்தவர். இவரது கதைகள் அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் மர்மத்தையும், அபத்தத்தையும் மனப்பிறழ்வையும் கரிசனத்துடன் ஆராய்பவை. இவரது கட்டுரைகள் பெரும்பாலும் நாட்டார் வழக்காற்றியலோடு தொடர்புடயவையாக இருக்கின்றன. எல்லை தெய்வங்கள், பழங்குடி மக்களின் வாய்மொழிக்கதைகள், நாட்டுப்புற கதைப்பாடல்கள் போன்றவற்றை சேகரிக்கவும் ஆய்வு செய்யவும் உலகம் முழுக்கப் பயணித்த ஓர் பண்பாட்டு ஆய்வாளர். இவரது கதைகளைப்போலவே இவருடைய வாழ்வும் மிகுந்த சோகத்துக்குரியது. கடுமையான வறுமையை எதிர்கொண்டவர். சம்பாத்தியத்தை முழுக்க முழுக்க எழுத்துக்காகவும் பயணத்திற்காகவும் செலவிட்டவர். ஆரம்ப நாட்களில் ஜீவனத்தின் பொருட்டு பல்வேறு வேலைகளைப் பார்த்தவர். மௌனப்படங்களுக்கு பழங்குடிகளின் இசைக்கருவிகளை வாசித்திருக்கிறார்.இந்தியாவில் சந்திக்க நேர்ந்த நாடோடிகளின் கதைகளை கேட்டிருக்காவிட்டால், அன்றாட வாழ்வின் மர்மங்களைப்பற்றி இவ்வளவு துல்லியமாக என்னால் கதைகளை எழுதியிருக்க முடியாது என்று கூறும் டான்டஸ்சால் வாழ்வின் புதிர்த்தன்மையை கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. The black stones, A woman under the Blanket, A collection of folktales of North Tamilnadu ஆகியன அவரது சிறுகதைக் தொகுதிகள். சிறுகதைகளோடு ஓரிரு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.“The foot prints” எனும் தலைப்பில் கன்னிமார் குறித்த கட்டுரைகள் பதினாறு தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. “Unfinished life” எனும் தலைப்பில் முடிவு பெறாத ஓர் சுயசரிதையையும் எழுதியிருக்குமிவருக்கு தமிழ்நாட்டில் தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் திருவண்ணாமலைச் சாலையில் அடுக்கம் கிராமத்திற்கருகே பச்சபுள்ளா குளக்கரையில் நின்ற நிலையில் வடக்குநோக்கி பார்த்தவாறு ஓர் கற்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. சரியாக பராமரிப்பு இன்றி மெல்ல சிதைந்து வரும் அச்சிலையின் கண்கள் இன்னும் எதையோ தேடிக்கொண்டே இருக்கின்றன என்பதை அச்சிலையை கூர்ந்து பார்ப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.

வில்லியம் மோர்ஸ்
வில்லியம் மோர்ஸ் 1932 ல் பெருவில் பிறந்தவர். வாழ்வின் பெரும்பகுதியை மெக்ஸிகோவில் கழித்தார். கட்டுரைகள், நாடகங்கள் எனப் பலவற்றைப் பிரசுரித்துள்ள போதும் மோர்ஸ் அடிப்படையில் ஓர் மொழியியலாளராகவே அறியப்படுகிறார். மெக்ஸிகோவிலிருந்து பெருவுக்கு திரும்பிய பின்னர் டான்டசுடன் சேர்ந்து அவருடைய ஆராய்ச்சியில் பங்கெடுத்துக் கெர்ணடார். டான்டஸ் வெளியிட்ட “The foot prints” எனும் நூலின் ஏழாம் தொகுதிவரை மோர்ஸ் அவருடன் இணைந்து பணியாற்றினார். வயது முதிர்ந்த நிலையில் இன்று பெருவில் வாழ்ந்து கொண்டிருக்குமிவருக்கு இரு மனைவியரும் ஒன்பது பிள்ளைகளும் இருக்கிறார்கள்.“Game of the language, Magic of Alphabets” என்பன மொழியில் குறித்த அவரது நூல்கள். “Collected stories of William morce” என்னும் தலைப்பில் அவரது ஒட்டு மொத்த கதைகளையும் “The Hard Bound” எனும் பதிப்பகம் வெளியிட்டு கௌரவித்திருக்கிறது. டான்டசுடன் இணைந்து பணியாற்றிய காலங்களை பசுமையுடன் நினைவு கூர்கிறார். தன்னால் எழுத்தில் சாதிக்க முடிந்தது என்று ஏதாவது இருந்தால் இது டான்டஸ் குறித்த எழுதிய இந்தக் கதை மட்டுமே என்று தீர்க்கமாக்க கூறுமிவர் தற்போது பழங்குடிகள் குறித்து ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறார்

Friday, September 24, 2010

நாசக்காரர்கள் ஜாக்கிரதை


இறுதி செய்யப்பட்ட
அன்பின் வார்த்தைகள்
அறிவிக்கின்றன
ஓர் நாசக்காரனின் வருகையை
அடையாளப்படுத்தியதோடு
முடிவடைவதில்லை
உங்கள் செயல்பாடு

தொடர் தாக்குதலை
மேற்கொள்ளும் எவரும்
எதன் பொருட்டும் சோர்ந்துவிடாதீர்கள்

கருணையோடு அளிக்கப்படும்
சிறு அவகாசம்
நாசக்காரனுக்கு அளித்துவிடக்கூடும்
புதிய உற்சாகத்தை

நாசக்காரனென
அழைக்கப்படும் ஓர் நபர்
அவசியம் அவ்வாறு
இருந்தாக வேண்டிய
எந்தக் கட்டாயமும் இல்லையெனும்
சிறு விளக்கத்தை மட்டும்
மனதில் கொள்ளும் நீங்கள்
பிறகு
எதுபற்றியும்
யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது.

Saturday, September 18, 2010

சாரிபோகும் கன்னிமார்கள்


பொழுது இருக்கும் போதே வீடு திரும்பி விடும் சண்முகத்தால் அன்று அவ்வாறு செய்ய முடியவில்லை. அரகண்டநல்லூர் கமிட்டியில் வேலை வளர்ந்து கொண்டே போனது, கமிட்டியை விட்டுக் கிளம்பும் போது இரவு பத்து மணியாகிவிட்டிருந்தது. பத்தரை மணி ரெயிலுக்காக கேட்டை முன்னமே சாத்திவிட்டிருந்தனர். ரயில் வந்து, கேட்டைத் திறக்க அரைமணி நேரத்திற்கு மேலானது. வண்டிக்காரனிடம் அவர் சொன்னார்.
"வண்டியை வேகமாக ஓட்டுடா.''

"வேகமா ஓட்றதுக்கு இது ஏரோப்பிளேன் பாருங்க'' என மெதுவாகக் கூறினான். காலம் காலமாக மாட்டு வண்டியையே பார்த்துக் கொண்டிருப்பதனால் வந்த கோபம். இருள் அடர்ந்திருந்தது. சாலையைப் பிரித்தறிய முடியவில்லை. இருபுறங்களிலும் புளிய மரங்கள் தொடர்ச்சியாக நின்றிருந்தன. கால்களை நீட்டி தோதாக அவர் அமர்ந்து கொண்டார். இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தவரை தூக்கம் மெல்ல சூழ்ந்து கொண்டபோது அவனிடம் கூறினார்.
"டேய் தூக்கம் வர்ற மாதிரி இருக்கு. பாத்து ஓட்டுடா.'' அவன் ஏதும் பதில் கூறாமல் வண்டியை ஓட்டினான். ஆவர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். மாடுகள் மெதுவாக நடந்தன. சக்கரம் மேடு பள்ளங்களைக் கடக்கும் போது அதிக ஒலியெழுப்பின. தனிமையைப் போக்கிக் கொள்ள அவன் மெல்லிய குரலில் பாடத் தொடங்கினான்.
பின்புறம் திரும்பி வண்டிக்குள்ளாக தூங்கிக் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தான். பின் மாடுகளின் வாலை வேகமாகத் திருகினான். வண்டி வேகமெடுத்தது அரண்டடித்துக் கொண்டு தூக்கம் கலைந்தவராக எழுந்து பார்த்தார் அவர். எதுவுமே நடக்காதது மாதிரி அவன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். மீண்டும் படுத்துத் தூங்கிப் போனார் அவர்.
கோட்டிக்கல் அருகே ஆறேழு பெண்கள் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை அவர் கண்டார். அவை ஏற்கனவே பழகிய பெண்களின் சாயலை ஓத்திருந்தன.
அவற்றின் அசைவுகளில் இயல்புக்கு மீறிய நளினத்தை உணர முடிந்தது. கொஞ்சிப்பூவின் வாசனை அவருள் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அவற்றின் சிரிப்பும் வளையோசையும் அவருக்கு லேசான பயத்தை ஏற்படுத்தின போலும். தன்னை அவை என்ன செய்துவிடும் என்றும் நினைத்துக் கொண்டு பார்வையைக் கூர்மைப்படுத்திக் கொண்டார்.
எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. கோட்டிக்கல் இருளில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கையில் தீவட்டிகளுடன் அவை வரிசையாகப் புறப்பட்டன. மெல்லிய பேச்சொலிகளைக் கேட்க முடிந்தது. சிறிது இடைவெளிவிட்டு அவர் பின் தொடர்ந்தார். செங்குறிச்சியார் வீட்டு நிலத்து வழியாக அவை மடவிளாகம் ஏரிக்கரையை அடைந்த போது அவர் மணியைப் பார்த்தார்.
ஏரிக்கரையை அடைந்ததும் அவருள் படர்ந்திருந்த பயத்தின் ரேகைகள் மறைந்துவிட்டிருந்தன. சிவன் கோயிலின் முகப்பு வெளிச்சம் தொலைவில் தெரிந்தது. கரை மேலிருந்து தெற்குத் தெரு வீடுகளை முழுவதுமாகக் காண முடிந்தது. மடவிளாகம் காலனி வழியாக அவை கீழிறங்கி வளமோட்டு பாறைக்குச் சென்றன.
பாறை இருட்டில் ஒரு கூடாரம் போல விரிந்திருந்தது. அருகில் இருந்த இலுப்பை மரம் சூழலின் விகாரத்தைக் கூட்டிக் காண்பித்தது. அவை பாறை மீதேறி சுற்றிலும் பார்த்தன.
அவற்றின் செயல்பாடுகளை மிக நுட்பமாக அவர் கவனித்துக் கொண்டார். பின் அவை கீழிறங்கி வண்டிப்பாட்டை வழியாக நடந்து வாசியம்மன் கோயில் நோக்கி நடந்தன. பாதை கரடுமுரடாக இருந்தது. இருபுறமும் கள்ளியும் ஆடாதொடையும் புதராக மண்டியிருந்தது. சிறிது தூரம் நடந்து அவை தென்னண்டை வீட்டு வாய்க்கால் வழியாக வாசியம்மன் கோயிலை அடைந்தன.
இலுப்பைப் பூக்களின் மணம் எங்கும் வியாபித்திருந்தது. பாறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன. ஓட்டேரி பக்கம் பாறை நீண்டு சரிந்திருந்தது. ஆள்நடமாட்டம் இருக்கும் போதே கோயில் ஓர் அமானுஷ்யத் தன்மையோடு இருக்கும். யாருமற்ற இந்த இரவில் கேட்கவா வேண்டும் என்று அவருக்குள் கேட்டுக் கொண்டார். அவை கோயிலை வலம் வந்தன.
நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டன. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பின் வடக்கு நோக்கிச் சென்று ஓட்டேரி வழியாக நடக்க ஆரம்பித்தன. இங்கெல்லாம் ஏதற்கு அவை வந்து செல்கின்றன என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன நடந்தாலும் இன்று கடைசிவரை அவற்றைப் பின்தொடர்வது என்று மனத்திற்குள் நினைத்தபடி பின் தொடர்ந்தார்.
அவற்றிற்கு பாதைகள் நன்கு பரிச்சையமாகி இருந்ததை உணர முடிந்தது. ஓட்டேரி காலனி வழியாக ஓட்டேரித் தெருவுக்குள் நுழைந்தன. அப்போது நாய்கள் பெருங்குரலெடுத்துக் குரைத்தன. தெருவில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறு சலனமுமின்றி அவை வரிசையாக நடந்தன. கையில் பிடித்திருந்த தீவட்டிகள் அப்படியே எரிந்து கொண்டிருந்தன.
ஆச்சரியம் நீங்காமல் அவர் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். அவை வரசித்தி வினாயகர் கோயில் வழியாக நடந்து திருக்கோயிலூர் ரோட்டை அடைந்தன. சாலையில் நிசப்தம் கூடியிருந்தது. இரண்டாவது ஆட்டம் விட்டு மக்கள் சென்று விட்டிருந்தனர். இராமலிங்க சாமி மடத்தில் மட்டும் ஒரு சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவை வடக்கு நோக்கி நடந்து பள்ளிக்கூடச் சந்தில் திரும்பி, வெள்ளக்குளத் தெருவில் நடக்க ஆரம்பித்தன.
வெள்ளக்குளம் நீரால் நிரம்பியிருந்தது. நீரில் பாசியேறி இருந்தது. தெருவில் கட்டப்பட்டிருந்த மாடுகள் கால்களை உதைத்து சப்தமெழுப்பின. நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன.



அய்யனார் கோயில் பூசாரி வீட்டருகே ஓர் உருவம் உட்கார்ந்திருப்பதை உணர முடிந்தது. நெருங்க நெருங்க அது ஊர்சாமுட்டு வைத்திக் கவுண்டர் என்பது தெரிந்தது. சிறுநீர் கழித்துவிட்டு அவர் எழுந்து திரும்பவும் அவை எதிர்படவும் சரியாக இருந்தது. பயத்தால் வெளிறி அவர் கீழே சரிந்தார்.
அவருக்கு உதறல் எடுத்தது, மூச்சு விடுவது சிரமமாக இருந்தது. கீழே விழுந்தவரைக் கடக்கும் போது குனிந்து பார்த்தார். பின் வேகவேகமாக நடந்தார்.
அவை வண்டிப் பாதையைக் கடந்து, மாந்தோப்பு வழியாக திருவண்ணாமலை ரோட்டை அடைந்தன. சாலையின் இருபுறமும் புளிய மரங்கள் தொடர்ச்சியாக இருந்தன. பகலைவிட இரவில்தான் மரங்கள் மிக நெருக்கத்தில் இருப்பதை உணர முடிகிறது. சிள்வண்டுகளின் இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
அவை மேற்கு நோக்கி நடந்து பச்சபுள்ளா குளத்தை அடைந்தன. குளம் எந்த சலனமுமற்று மிக அமைதியாக இருந்தது. அவை தங்களது ஆடைகளைக் களைந்து குளத்திற்குள் இறங்கின. அசல் பெண்களைப் போன்றே இருந்தன.
அவற்றின் அழகும் வனப்பும் அவரைக் கிளர்ச்சியடையச் செய்தன. ஆனாலும் அவர் சுதாரித்துக் கொண்டார். அவை குளத்திற்குள்ளாக ஓங்காரமாக நீந்தின. சாதாரணமாக அதைப் போன்று யாராலும் நீந்த முடியாதென நினைத்துக் கொண்டே, அவை நீந்தும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒன்றன் பின் ஒன்றாக மஞ்சள் தேய்த்து உடல் முழுக்க மஞ்சளைப் பூசிக் குளித்தன. சிறிது நேரத்திற்கு பின் அவை கரையேறி ஆடைகளை ஊடுத்திக் கொண்டன. அவற்றின் முகங்கள் தீச்சுவாலைகள் போன்று பிரகாசமாக இருந்தன. பின் அவை மெல்ல நடந்து கோணமலைக்குச் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தன. இனிமேலும் அவற்றைப் பின் தொடர்வது ஆபத்தில் முடிந்துவிடலாம் என நினைத்தவர் திரும்பி வேக வேகமாக வீடு நோக்கி நடந்தார்.
சரிவில் வண்டி வேகமாக இறங்குவது போன்றிருந்த போது தான் அவருக்குத் தூக்கம் பிரிந்தது. விழித்தவர் பச்சபுள்ளா குளத்தைக் காணாது திகைத்தார். தான் எங்கிருக்கிறோம்; மணி என்ன என்ற யோசனை அவருக்குள்ளாக ஓடத்தொடங்கிய போது தான், அதுவரை அவர் கண்டு கொண்டிருந்த நீண்ட கனவிலிருந்து அவரால் விடுபட முடிந்தது. கடிகாரத்தைப் பார்த்தார். மணி மூணாக இன்னும் கொஞ்ச நேரமே இருந்தது.
பதற்றத்தால் உடல் நன்றாக வேர்த்து ஈரமாகயிருந்தது. எழுந்து அமர்ந்தபடி சுற்றும்முற்றும் பார்த்தார். வண்டி பில்ராம்பட்டு மேட்டைக் கடந்து கோட்டிக்கல் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. கோட்டிக்கல் இருளில் உருண்டு திரண்டிருந்தது. ஆள் நடமாட்டம் ஏதும் தென்படவில்லை. இருளில் அவர் ஆழ்ந்து பார்த்தார். புதர்களும் பாறைகளையும் தவிர வேறொன்றையும் அவரால் காண முடியவில்லை. ஒரு சில நாய்கள் படுத்துக்கிடந்தன. சிறு பறவைகளின் சப்தம் விட்டுவிட்டு கேட்டுக் கொண்டிருந்தது. வண்டியின் சக்கரங்கள் அதிக சப்தமெழுப்பிய போது அவர் அவனிடம் கூறினார்.
"டேய் வண்டிய செத்த நிறுத்துடா.'' வண்டி நின்றதும் அவர் இறங்கிக் கொண்டு வண்டிக்காரனை நெருங்கி வண்டியை ஓட்டிக் கொண்டு போகச் சொன்னார். அவர் அவ்வாறு கூறியதும் அவன் ஏதும் புரியாதவனாக அவரைப் பார்த்துக் கேட்டான்.
"நீங்க வரலயா?''
"நா ஏரிக்கரையால நடந்து வர்றேன்'' ஏனக் கூறியவர், ரோட்டிலிருந்து இறங்கி ஏரி நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
நிலவொளியில் ஏரியின் விஸ்தீரணத்தை நன்கு உணரமுடிந்தது. ஏரிக்குள்ளாக இறங்கிய பிறகுதான் அவர் தனிமையை உணர்ந்தார். தனிமை அவருள் பயத்தை ஏற்படுத்த கன்னிமார்களின் கனவு அதை அடர்த்தியாக்கியது. பரந்து விரிந்து காணப்பட்ட தெற்கு கரை மீதிருந்த அரசமரத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. நீரின்றி பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தது.



ஓங்கி வளர்ந்திருந்த கருவேல மரத்திலிருந்த சிள்வண்டுகளின் இரைச்சல் ஏரி முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது. பக்கத்து கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கம்பங்களின் வரிசையை இருட்டில் பார்ப்பதற்கு ஒரு வலைக்கோட்டை போல ரம்மியமாகயிருந்தது. நடந்து நடந்து பாட்டை நன்கு தேய்ந்திருந்தது. திரும்பிப் பார்க்காமல் அவர் தேய்ந்த பாட்டை மீது வேக வேகமாக வீடு நோக்கி நடந்தார்.
பாதை நீண்டு கொண்டே இருந்தது. இருளின் தனிமை யாரோ பின் தொடர்ந்து வருவதைப் போன்ற உணர்வை அவருள் ஏற்படுத்தியது. அதனால் உடல் நடுக்கமுற்று வேர்க்கத் தொடங்கிய போது அவரது நடையில் வேகம் கூடியது. தான் தனியாக வந்திருக்கக் கூடாது என்று நினைத்தவர் பல இரவுகளில் அதே வழியாக வந்திருப்பதையும் நினைத்தபடியே வேகமாக நடக்கத் தொடங்கினார். நீண்ட பாம்பென நெளிந்து வளைந்து கிடந்தது பாதை. இடைவிடாத பூச்சிகளின் இரைச்சல் தனிமையின் அடர்த்தியைக் கூட்டிக் காட்டிய போது அவர் ஆயி குளத்தை நெருங்கியிருந்தார்.
குளத்திற்குள்ளிருந்து கால் அலம்பும் சப்தம் வர மீண்டும் அவரை பயம் பீடித்துக் கொண்டது. வேகமாக நடந்து குளத்தைக் கடக்க முயற்சித்தவரை பெயர் சொல்லி ஒரு குரல் அழைத்தது. ஆனால் அந்தக் குரல் ரொம்ப பரிச்சயமானவரின் குரலைப் போன்று இருந்ததால், அவருக்கு சற்றுத் தெம்பு வந்தது. மூச்சை நன்கு இழுத்துவிட்டபடி குளத்திற்குள்ளாகப் பார்த்துக் கேட்டார்.
"யாரது?''
சிறிய மௌனத்திற்கு பிறகு குரல் ஒலித்தது.
"என்னத் தெரியல?''

யோசிப்பு நீண்ட அமைதியை அவருள் ஏற்படுத்திய போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.
"டேய் பயந்தாங்கொள்ளி. நான்தான்டா கணேச மாமா.''
அவர் திரும்ப கேட்டார். இந்த முறை பயம் முற்றிலுமாக நீங்கிவிட்டிருந்தது.
"எந்த கணேச மாமா?''
"உனக்கு எத்தன கணேச மாமா இருக்காங்க. செங்குறிச்சாமூட்டு கணேச மாமான்னா தான் தொரைக்கு வௌங்குமோ?''
எனக் கேட்டுக்கொண்டே மெல்ல படியேறி வந்தார் அவர். இவருக்குப் பயமாகவும் இருந்தது. கரைக்கு வந்ததும் இவர் குனிந்து அவரின் கால்களைப் பார்த்தார். இவர் கால்களைப் பார்ப்பதை கவனித்துவிட்ட அவர் கேட்டார்.
"என்ன கால் இருக்குதா? இல்ல இன்னும் பேய் பிசாசுன்னுதான் நெனைச்சிக்கினு இருக்கியா?''
அவர் கேட்ட பிறகுதான் இவருக்கு இயல்பு திரும்பியது. இனி எந்தப் பயமும் இல்லை என்று நினைத்தவர், எட்டி குளத்திற்குள்ளாகப் பார்த்தார். குளத்தில் குட்டை போல் தேங்கியிருந்த நீரில் நிலவின் நகர்வு மங்கலாக ஒளிர்ந்தது. வீடு நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கிய போது அவரிடம் கேட்டார்.
"என்ன மாமா இந்நேரத்துல இங்க.''
"வயித்த கடுக்கற மாதிரி இருந்திச்சி அதான்'' என்று பேச்சை இழுத்தவர் இவரைப் பார்த்துக் கேட்டார்.
"நடு ராத்திரில பேயாட்டம் திரியரவன் நீ. இன்னாத்துக்கு பேய் அறஞ்சவனாட்டம் இருக்க. எப்ப இருந்து இந்தப் பயம்...'' இவர் மௌனமாகவே இருந்தார். அவர் அவ்வாறு கேட்டது இவருக்கு அசிங்கமாகவும் இருந்தது. தேவையில்லாமல் தான் ஏன் பயந்தோம் என்று யோசித்துப் பார்த்தவருக்கு, நீண்ட கனவு நினைவுக்கு வந்தது. உடனே மயிர்க்கால்கள் சிலிர்த்துக் கொண்டன. இவரின் மௌனத்தை கலைப்பவராக அவர் கேட்டார்.
"அப்படி என்னதான் யோசிக்கிற.''
சிறிது நேர அமைதிக்குப் பின், அவரிடம் தான் கண்ட கனவை ஒன்று விடாமல் விவரித்தார் இவர். சுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்த அவர், இவரிடம் கேட்டார்.
"சாதா ஒரு கனவுக்காகவா யாராவது பயப்புடுவாங்க?''
இவர் இடைமறித்துக் கூறினார்.
"மாமா கனா மாதிரியே தெரியல. ஏதோ நெஜத்துல நடந்த மாதிரி தான் தோணுது.''
"சொம்மா பெனாத்தாதடா. வெறும் கனவுதான் அது.'' உரையாடல் நீண்டு கொண்டே வந்த போது சிவன் கோயில் சகடை நிறுத்தும் இடத்தை அடைந்து விட்டிருந்தனர். அப்போது அவர் கூறினார்.
"மனச போட்டு கொழப்பிக்காமா போயிப்படுடா''
இவர் தலையாட்டியபடியே நடுத்தெருவுக்கு செல்லும் பாதையில் திரும்ப, அவர் வீடு நோக்கி கிழக்குப் பக்கமாக சென்றார்.

தன்னை யாரோ தட்டியெழுப்புவதை உணர்ந்து கண்விழித்துப் பார்த்தபோது அவர் திண்ணையில் படுத்திருந்தார். தான் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று அவருக்கு குழப்பமாக இருந்தது. கையில் காபி டம்ளருடன் நின்றிருந்த அவரது மனைவி அவரிடம் சொன்னாள். "ஏங்க ஊர்சாமுட்டு வைத்திக்கவுண்டர் செத்துட்டாராம்.''
அவள் கூறியதும் பதற்றம் கூடி அவரை ஒரு உலுக்கு உலுக்கியது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. நடுக்கம் மெல்ல உடல் முழுக்கப் பரவ ஆரம்பித்தது. நா வறண்டு பேச முடியாமல் போனது. முந்தின இரவு அரங்கேறிய சம்பவங்கள் தெளிவான காட்சிகளாக அவரது மனதில் புரளத் தொடங்கின. அவரிடம் தோன்றும் மாற்றங்களை அவரது மனைவி உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி விட்டோமோ என்று நினைத்துக் கொண்டவாறே கூறினாள்.
"ஏங்க இந்த காபியக் குடிங்க.''
அவர் மௌனமாக காபியை அருந்தத் தொடங்கினார். அவரது கைகளில் நடுக்கத்தின் மெல்லிய இழைகளை உணர முடிந்தது. காபியை குடித்து முடித்துவிட்டு அவளிடம் கேட்டார்.
"எப்படி செத்தாரு?''
"ராத்திரி ஒண்ணுக்கு போனவர, கன்னிமார்ங்க அறஞ்சிருக்கும்னு பேசிக்கிறாங்க.''
அவளின் பதில் அவரை மேலும் பீதியடையச் செய்தது. பார்வை மங்கிக் கொண்டு வந்தது. அதற்குமேல் அவரால் எதையும் பேசமுடியவில்லை. தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அன்றிலிருந்துதான் உறக்கம் பிடிக்காமல் உளறத் தொடங்கினார். அவருக்கு சித்தம் கலங்கிவிட்டதென ஊர் பேசிக் கொண்டது.