Thursday, April 23, 2009

இப்போதுதான் நீங்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் -கவிதை


எப்படி ஓட்டினாலும்
விழாத இருசக்கர மோட்டார் சைக்கிளை
தயார் செய்துவிட்டீர்கள்
வாழ்த்துகள்

பின் விதவிதமாக ஓட்டிப் பார்க்கிறீர்கள்
கைகளை விட்டு
கால்களைத் தூக்கி மேலே வைத்துக்கொண்டு
எழுந்து நின்றபடி
எப்படி ஓட்டினாலும்
வாகனம் விழுவதாக இல்லை

சில நாட்களில்
உங்கள் வாகனத்தின் திசையிலோ
அல்லது
எதிரிலோ
எந்த வாகனமும் வருவதில்லை
கொஞ்ச நாட்களில்
தனிமையில் ஓட்டுவது
உங்களை சலிப்படையச் செய்கிறது

பின்னர்
அது வாகனம்தானா என்ற ஐயம்
மெல்ல எழுகிறது
குற்றவுணர்ச்சிக்கு நீங்கள் ஆட்படுகிறீர்கள்
வாகனம் பற்றிய கவலை உங்களை
அலைக்கழிக்கிறது

இன்று எப்படியாவது
விழுந்தே ஆவதென
தீர்மானத்துடன் ஓட்டும் நீங்கள்
சிறு கல் தடுக்கி
தூக்கி தூர எறியப்படுகிறீர்கள்
எந்த சலனமுமற்று
அதன் திசைவெளியில் பயணிக்கின்றது
உங்கள் வாகனம்

No comments:

Post a Comment