
மதியம் 2.30 மணி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது தொலைபேசி அழைப்பு. எழுந்து தொலைபேசியை காதில் பொருத்தி, “யார் பேசரது?” என்றேன்.
“வணக்கம், கூகை பதிப்பகத்திலிருந்து பேசுறோம். நீங்க நடுக்கோம்பை நாராயணசாமி சார் தானே?” எனக் கேட்டு அவர்கள் என் பதிலுக்காக காத்திருந்தனர்.
கூகை பதிப்பகம் என்றதும் என்னுள் சந்தோஷம் பீரிட்டது. தமிழின் ஆகப்பெரிய பதிப்பகத்திடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. பெரிய கிரக்கத்தை ஏற்படுத்தியது. கலையாத கனவுகளோடு அவர்களிடம் பேசினேன்.
“ஆமா, நாராயணசாமி தான். உங்களுக்கு என்ன வேணும்?”
மீண்டும் அந்த இனிய பெண் குரல் பேசியது.
“கொஞ்ச நேரம் காத்திருங்க சார். எங்க எடிட்டர் உங்களுடன் பேசுவார்.”
நான் தொலைபேசியை காதிலேயே வைத்திருந்தேன். இனிய நாதசுர இசைக்கு பின் கரகரவென்ற ஆண்குரல் பேசியது.
“வணக்கம் சார்.”
நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன். எனக்கு இருப்பு கொள்ளவில்லை. என் அறை சுழல்வதாகத் தோன்றிய போது மீண்டும் அவர் பேசினார்.
“சார் இந்த வருடம் புக் ஃபேருக்கு பத்து எழுத்தாளர்களோட நூறு புக் போடறதா திட்டம். உங்களோட ஒர்க்ஸ் எல்லாத்தையும் போடறதா ஐடியா இருக்கு. நீங்க என்ன நினைக்கறீங்க?”
அவர் சொல்லச் சொல்ல என் கீழிருந்த தரை மெல்ல நகரத் தொடங்கியது. ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. மூச்சில் உஷ்ணம் கூடியிருந்தது. என்ன பேசுவதென்றே தெரியவில்லை வார்த்தைகளை விழுங்கிய படியே பேசத் தொடங்கினேன்.
“ரொம்ப சந்தோஷம் சார். என்ககு இது பெரிய அங்கீகாரம் சார். ஆனா பத்து புக் போடற அளவுக்கு எங்கிட்ட மெட்டீரியல் இல்லைங்களே சார்.”
அவர் இடைமறித்து பேசினார்.
“அதப்பத்திலாம் நீங்க கவலைப் படாதீங்க. நீங்க எழுதின எல்லாத்தையும் உடனடியா எங்களுக்கு அனுப்பி வைங்க மத்தத நாங்க பாத்துக்கிறோம்.”
அவரது பேச்சு எனக்கு தெம்பை கொடுத்தாலும், சில ஐயங்களையும் ஏற்படுத்தியது. சிறிது நேரம் யோசித்தபடியிருந்தேன். மீண்டும் அவரே பேசினார்.
“என்ன யோசிக்கறீங்க? தயக்க மில்லாம படைப்புகளை உடனடியா அனுப்புங்க. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்.”
மிகுந்த உரிமையோடு பேசினார். எனக்கு நம்பிக்கை ஏற்படத் தொடங்கியது. புதிய தெம்புடன் அவரிடம் பேசினேன். “சரிங்க சார். அனுப்பிச்சிடுறேன். அப்புறம் ஒன்னு உங்க கிட்ட கேட்கலாமா சார்?”
“ம். தாராளமா கேளுங்க” என இயல்பாக பேசினார்.
“என் படைப்புகளை படிச்சிறுக்கீங்களா சார்.”
“ஃ படிச்சிருக்கேனே, சல்லிகைல வந்த முயல்கதை ரொம்ப நல்லா இருந்திச்சே.”
“சார் அது முயல்கதை இல்லை. காட்ட பத்தின கதை.”
“ஃ அப்படியா? காட்ல எதாவது முயல் பத்தி எழுதி இருந்தீங்களா?”
“இல்லைங்க சார். சிங்கமும் நரியும் பத்தின கதை”
“அப்படியா, சந்தோஷம். ஆனா உங்க கதை பத்தி நெறய பேர் எங்கிட்ட சொன்னாங்க. யங் ரைட்டர்ஸ்ல உங்க கிட்ட ஒரு ஃபுளோ இருக்கு. அப்புறம் உங்க கதைய படிக்கறப்ப எனக்கு ஹெமிங்வே தான் ஞாபகத்துக்கு வரார் தெரியுங்களா?“
அவர் பேச பேச எனக்கு மெல்ல சிறகுகள் முளைக்க ஆரம்பித்தது. அதுநாள் வரை எனக்கு உவப்பானதாக இருந்த மின்விசிறியின் இயக்கம் கர்ண கொடூரமாக இருந்தது. ஜனாதிபதி மாளிகையின் படிகளில் ஏறி விருது வாங்குவது போலவும், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவது போன்றும் பலவித எண்ணங்கள் மின்னி மின்னி மறைந்தன. சிறிது ஆசுவாசத்திற்கு பின் மீண்டும் அவரிடம் பேசினேன்.
“ரொம்ப சந்தோஷங்க சார்.....”
“பரவாயில்லை. உடனே நீங்க அனுப்பிடுங்க. எனக்கு ஓவர்சீஸ் கால் ஒன்னு வருது. வச்சிடட்டுங்களா சார்” என்று அவர் துண்டு துண்டாக பேசி தொலைபேசியை வைத்தார்.
என்னால் அதில் இருந்து சுலபத்தில் விடுபடமுடியவில்லை. ஏதோ அகாயத்தில் மிதப்பது போன்று உணர்ந்தேன். உடல் முழுக்க சந்தோஷத்தின் உஷ்ணம் பரவியிருந்தது. மெல்ல எழுந்தேன். ஆனால் எனக்கு அது துள்ளல் போன்று தோன்றியது. என் அலமாரியைத் திறந்து சில கோப்புகளை எடுத்து அவற்றில் இருந்த என் எழுத்துக்களைத் தடவிப் பார்த்தேன் எழுத்துகள் பொன்னாக மின்னின. சந்தோஷத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.
சிறிது நேரத்திற்கு பின் என் சேகரிப்புகள் அனைத்தையும் ஒரு பெரிய கட்டாக கட்டி, வண்டியில் வைத்துக்கொண்டு கூரியர் அலுவலகம் நோக்கி விரையும் என்னை என் மனைவி விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாரம் கடந்திருக்கும் நிலையில் என் பெயருக்கு ஒரு பார்சல் கடிதம் வந்து சேர்ந்தது. பெரிய எதிர்பார்ப்போடு இருந்த நான் உடனடியாக அதை திறந்து பார்த்தேன். உள்ளே தனித்தனியாக எட்டு கட்டுகளும் ஒரு கடிதமும் இருந்தது. தனித்தனியாக இருந்தவற்றை எடுத்துப் பார்த்தேன். அவை பிழைதிருத்த அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் என் பெயரை பார்த்தபோது எனக்குள் சந்தோஷம் குமிழிட்டது. நீண்ட நேரம் அவற்றையே புரட்டிப் புரட்டி பார்த்தேன். தான் அனுப்பியவற்றை தரம் பிரித்து இவ்வளவு நேர்த்தியாக நூலாக்கியிருக்கும் எடிட்டரை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
பின் அந்த கடிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தேன். எடிட்டரின் கையெழுத்து கிறுக்கலாக இருந்ததால் வாசிக்க கடினமாக இருந்தது.
20-11-2008
அன்பினிய நாராயணசாமி சாருக்கு,
வணக்கம், உங்கள் நூல்களை கொண்டு வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் படைப்புகளை இனி தொடர்ந்து நாங்களே வெளியிட தீர்மானித்துள்ளோம். உங்கள் ஒத்துழைப்பு தேவை. மேலும் நீங்கள் அனுப்பிய உங்கள் எழுத்தாக்கங்களை கீழ்கண்டவாறு பிரித்து தட்டச்சு செய்து உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளோம். பிழைத்திருத்தி அனுப்பவும்.
1. நாவல்
2. சிறுகதை
3. நீங்கள் வாசித்த புத்தகங்கள்
4. உங்களின் இசை ரசனை
5. திரைப்படங்கள்
6. மொழிபெயர்ப்பு கதைகள்
7. கல்வி முறை பற்றிய கட்டுரைகள்
8. பாலியல் கதைகள்.
மேலும் இது தவிர இன்னும் இரண்டு தலைப்புகளான, பயணக் கட்டுரைகள் ஒன்றும் பிற மொழி எழுத்தாளர் பற்றிய கட்டுரை ஒன்றும் தயாராகிவிட்டால் நமது திட்டம் முற்றிலும் வெற்றி. ஆகவே அனுப்பாடமல் இருக்கும் மற்ற பிரதிகளையும் அனுப்பி உதவுங்கள்.
கடிதம் கண்டதும் முடிந்தால் தொலைபேசியில் அழையுங்கள்.
என்றும் அன்புடன்
கானாடுகாத்தான்
(கூகைக்காக)
பத்து புத்தகங்கள் வெளியாகப்போகும் மகிழ்ச்சி. துள்ளிக் குதித்தபடி மனைவியிடம் கடிதத்தை கொடுத்தேன். என் நடையில் அப்போது கம்பீரம் கூடியிருந்தது. பின் என் செல்பேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.
“வணக்கம் சார். ரொம்ப சந்தோஷம் இவ்ளோ சீக்கிரம் அனுப்பிச்சிட்டீங்களே.”
“எதையும் கச்சிதமாக முடிச்சிடனும் சார். அப்பதான் தீவிரமா இயங்க முடியும். புரூப் பாத்து சீக்கிரம் அனுப்பிச்சிடுங்க.”
“சரிங்க சார். அப்புறம் அந்த ரெண்டு தலைப்புல புக் போடறதுக்கு எங்கிட்ட மெட்டீரியல் கிடையாதே” நான் அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை அலட்சியம் செய்வது போல அவர் வெகு சாதாரணமாகக் கேட்டார்.
“என்ன அந்த பயண கட்டுரைவும், அயல் எழுத்தாளர் பற்றியும் தானே?”
“ஆமா, சார்.”
“நீங்க எங்கயும் வெளியில டூர் போனது கிடையாதா?”
“சின்ன வயசுல என் பாட்டி கூட ராமேசுரம், கன்னியாகுமரின்னு போய் இருக்கேன். அதுக்கப்புறம் எங்கயும் போனது கிடையாது சார்.”
“ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்க பிரண்ட்ஸ் கூட எங்கலாம் போவீங்க?”
“தெனத்துக்கும் காலையில வீரங்கிபுரம் ஏரிக்கு காலார நடந்து வெளிய போவம் சார்.”
“இதுதான்யா நமக்கு முக்கியம். ஒரு எழுத்தாளன் எங்க போனாலும் அது பயணம் தான்யா. அத பத்தி எழுது. அதுதான் நிக்கும்.”
அவர் சொல்ல சொல்ல எனக்கு நண்பர்களுடன் நடந்து செல்வதும், ஏரிப்பாறையில் அமர்ந்து ஊர்கதை பேசுவதுமான காட்சிகள் மனத்திரையில் விரிவு கொண்டன. மேலும் அவரின் பேச்சு ஒரு புது வித தெம்பையும் அளித்தது. பின் நான் அவரிடம் கேட்டேன்.
“சார். அப்புறம் அயல்மொழி எழுத்தாளர் பற்றி ஒரு கட்டுரை தொகுப்பு.....”
என நான் இழுத்தேன். புரிந்து கொண்டவராய் அவர் தொடர்ந்தார்.
“அதப்பத்தியும் கவலைப் படாதீங்க. உட்டி பத்ரிக்கையில உங்க பழைய கடிதம் ஒன்று வந்தது நினைவு இருக்கா?”
“ஆமாம் சார். எப்பவோ எழுதனது. அரை வேக்காட்டுத் தனமா இருக்கும் சார். அயல்மொழி எழுதத்தாளர்கள் பற்றி என் சந்தேகத்தை கேள்வியா கேட்டிருப்பேன்.”
“அதே தான்யா. அந்த கடிதம் தான்.”
“சார் அது வெறும் வார்த்தை குப்பை சார்.”
“போயா...போ, அது ரொம்ப முக்கியமான ரைட் அப். அத இன்னும் டெவலப் செஞ்சி ஒரு புக்கா போட்டுடலாம்.“
நான் புரியாமல் அவரிடம் கேட்டேன்.
“எப்படி சார் டெவலப் பன்றது?”
“அதபத்தி நீ ஏன்யா கவலைப்படுற? நெட்ல இருந்து ஒரு இருபது பக்கம் டவுன் லோட் செஞ்சி அனுப்புரோம். படிச்சிட்டு உன் கருத்தை எழுதி அனுப்புயா அது போதும்.”
“சரிங்க சார்.”
“அப்புறம் கல்வி பற்றி ஒரு புக் போடறம்ல, அதுக்கு கொஞ்சம் பக்கம் கொறையுது. நாவல்ல இருந்து எடுக்கலாம்னு பாத்தா அப்புறம் அதுக்கு பக்கம் கொறஞ்சிடும்.”
“நாவல் தான் ரொம்ப பெருசாச்சே சார்.”
“அதுல கொஞ்சம் எடுத்து தான் சிறுகதைகளாக்கி சிறுகதை தொகுப்பை முடிச்சோம். இனி அதுல கைவைக்க முடியாது. வீட்ல நீங்க வேறெதுவும் எழுதி வச்சிருக்கீங்களா?”
“சார் நெறைய கவிதைங்க வெச்சிறுக்கேன். வேனும்னா அனுப்புறேன். கவிதை தொகுப்பு ஒன்னு போட்டுடலாமே”
“இல்லைங்க சார். கவிதைக்கு இப்ப சேல்ஸ் இல்லை. அதுவுமில்லாம லைப்ரரி ஆர்டரும் கெடக்கமாட்டுது”
என சொல்லி முடித்தார். இருபுறமும் சிறிது நேரம் மௌனம் அடைத்துக்கிடந்தது பின் அவரே பேசினார்.
“வீட்ல கவிதை தவிர வேற எதாவது எழுதி வச்சிருக்கிங்கலா?”
“இப்ப வீட்டில இருக்கிறது என் பாடக்குறிப்பேடும் என் பொண்ணுடைய ஹோம் ஒர்க் நோட்டுகளும் தான் சார்.”
நான் சிரித்துக் கொண்டே கூறினேன். ஆனால் அவர் படு சீரியசாக என்னிடம் சொன்னார்.
“உடனே அவற்றை அனுப்பிடுங்க. அதயும் சேத்து கல்வி சம்பந்தமான அந்த தொகுப்ப முடிச்சா அதுக்கு ஒரு கூடுதல் வெயிட் கிடைச்சிடும்.”
அவரின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்கு புரியாமல் மறுபடி கேட்டேன்.
“சார் உண்மையிலேயா?”
“அமாம் யா, உடனடியா அனுப்பு. நாள் நெருங்கிடுச்சி.”
எனக் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்தார். அடுத்த நொடியில் இருந்து நான் வேக வேகமாக இயங்கினேன். என் பாடக் குறிப்பேடுகளையும், என் மகளின் எல்.கேஜி, யுகேஜி நோட்டு புத்தகங்களையும் அன்றே கூரியரில் அனுப்பி வைத்தேன். இரவு பகல் பாராது எழுதி எழுதி என் பயண அனுபவங்களை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைத்தேன்.
இரண்டு வாரங்கள் முடிந்து விட்டிருந்த அன்று பருவ மழை கூடிப் பெய்யத் தொடங்கியிருந்தது. எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே அடைப்பட்டிருக்க வேண்டி வந்தது. மதியம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது கூகை பதிப்பகத்திலிருந்து என்னை அழைத்தனர். இனிய ஒரு பெண்குரல் ஒலித்தது.
“சார் அழைப்பிதழும் உங்க புத்தகங்களின் ரேப்பர் டிசைனும் பின் அட்டை குறிப்புகளும் அனுப்பி வச்சமே கிடைச்சிடுதா?”
“இன்னும் இல்லைங்களே”
”அப்ப நாளக்கி இல்ல நாளன்னிக்கி கெடச்சுடும். அப்புறம் மார்க்வெஸ் பத்தி அனுப்பின கட்டுரைய படிச்சிட்டு ஒரு ரைட்அப் கேட்டிருந்தோம். இன்னும் நீங்க அனுப்பல. சீக்கிரம் அனுப்பிச்சிட்டா பைன்டிங்குக்கு அனுப்பிடலாம்.”
“நீங்க அனுப்பின கட்டுரைய படிக்கவே முடியலைங்க. சுலபத்துல அர்த்தம்புரிய மாட்டேங்குது. முயற்சி பண்றேன்.”
“ட்ரை பண்ணுங்க சார். அப்புறம் உங்களுக்கு தெரிஞ்ச வேற எங் ரைட்டர்ஸ் நம்பர் இருந்தா சார் அனுப்ப சொன்னாங்க.”
திடீரென்று வேறு எழுத்தாளர்களின் தொலைபேசி எண்களை ஏன் கேட்கிறார்கள் என மனம் வேகமாக யோசிக்க தொடங்கியது. நம்மீது நம்பிக்கையில்லாமல் போய்விட்டதோ என்றும் நினைத்தப்படியே அவரிடம் கூறினேன்.
“நான் அனுப்புரேங்க....”
”ரொம்ப நன்றி சார்.”
அந்த இனிய குரல் தொலைபேசி இணைப்பை துண்டித்தது. முதன் முதலாக நெருக்கடியாக உணர்ந்தேன். அவர்கள் அனுப்பிய கட்டுரையைப் படிப்பதற்கு கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து ஒரு பத்தியைப் படிப்பதற்கே சிரமப்பட வேண்டியிருந்தது. முடியாது என்றும் கூற முடியாத நிலை. இவ்வளவு பெரிய பதிப்பகம். நம்முடைய இத்தனை நூல்களை ஒரே நேரத்தில் கொண்டு வருகிறது. கொஞ்சம் இணக்கமாகத் தான் நடந்து கொள்ள வேண்டும் என மனதில் எண்ணவோட்டங்கள் சுழன்றபடியிருந்தது.
இரண்டு நாட்களுக்கு பிறகு நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழும், புத்தங்கள் குறித்தான அட்டை படங்களும் பின் அட்டை குறிப்புகளும் வந்து சேர்ந்தபோது மீண்டும் என்னை பதற்றம் கவ்விக்கொண்டது. அன்று எடிட்டர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து பின் கட்டுரைப் பற்றி கேட்டார். விரைவில் அனுப்பி வைக்கச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.
எனக்கு சங்கடமாக இருந்தது. அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியாத என் நிலைகண்டு நானே நொந்து கொண்டேன். அவர்களின் அழைப்பிதழையும், நூல் பற்றிய குறிப்புகளையும் படிக்கவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு நூல்பற்றியும் மிகவும் உயர்ந்த அபிப்ராயத்தை எழுதியிருந்தார் எடிட்டர். எனக்கே என் எழுத்து மீதான மரியாதை கூடியது. அழைப்பிதழில் என் பெயரை கொட்டை எழுத்தில் பார்த்த என் மனைவி அன்றிலிருந்து அந்தரத்தில் கால்பாவி நடக்கத் தொடங்கினாள்.
இரவு உறங்கப்போகும்போது என் மனைவி என் புத்தகங்கள் பற்றிய சிறுகுறிப்புகளை வாசித்துவிட்டு என்னிடம் கேட்டாள்.
“எப்படிங்க உங்க புத்தகத்த பத்தி இவ்லோ உயர்வா எழுதியிருக்காரு?”
அவள் கிண்டலுக்கு கேட்கிறாளா எனத்தோன்றியது. அவளது முகத்தை உற்று பார்த்தேன். ஏதும் வித்தியாசம் தென்படாத நிலையில் அவளிடம் நான் சொன்னேன்.
“அவரு பெரிய படிப்பாளி டி. ஒரே ராத்திரியில போரும் அமைதியும் படிச்சி முடிச்சார்னா பாத்துக்கோயேன்.”
இப்போது என் மனைவியின் கண்களில் அச்சரியம் மின்னியது. ஆனாலும் வியப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டாள்.
“எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தா கூட, எப்படி இன்னும் முடிக்காத ரெண்டு புத்தகத்த பத்தி குறிப்பு எழுத முடியும்?”
அப்போதுதான் எனக்கும் உரைத்தது. நாம் இன்னும் இரு புத்தகங்களுக்கு தேவையான கையெழுத்து பிரதியையே அனுப்பவில்லை. அதற்குள் எப்படி குறிப்புகள் எழுத முடியும் எனும் கேள்வி எனக்குள்ளாகவே பூதகரமாக உருபெற தொடங்கியது. இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவியிடம் கூறினேன்.
“போடி போக்கத்தவளே. அவரு புத்தகத்த ஒரு தடவ பார்த்தா போதும். அத பத்தி டக்குனு சொல்லிடுவார் டி.”
அனாலும் என் மனைவி என் பதிலில் சமாதானம் கொள்ளாமலயே உறங்கச் சென்றாள். எனக்கு தான் இரவு, அடர்ந்த வனமாக தோன்றியது.
மறுநாள் பதிப்பகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு. கட்டுரை கேட்டு தான். என்னால் பேசமுடியாமல் தவித்தேன். அவர்கள் கொஞ்சம் கோபத்தோடு இருப்பதாக உணர முடிந்தது. தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டு உழல்வதாகப்பட்டது. புத்தகம் போட ஏன் ஒத்துக்கொண்டோம் என்றும் தோன்றியது. நாளுக்கு ஒன்றென இருந்த அவர்களின் அழைப்பு ஒரு மணிக்கு ஒரு முறை என்றான போது எனக்கு கைபேசியை கண்டாலே பயம் ஏற்படத் தொடங்கியிருந்தது. என் மனைவியை அவர்களுக்கு பதில்கூற சொன்னேன். இதனால் எனக்கும் அவளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் மௌனம் சாதித்தாலும் கூட அவர்கள் என்னை அழைப்பதை நிறுத்தவில்லை. நேராக வந்து விடுவார்களோ என்றும் பயந்து நடுங்கினேன். இந்த நேரம் தான் என்றில்லாமல் எல்ல நேரங்களிலும் தொலைபேசி ஒலிக்கவே என் மனைவியும் மகளும் வேறு அறையில் தூங்கப் பழகிக்கொண்டனர். தொலைபேசி அழைப்புகள் என்னை நீடித்த பயத்திலேயே வைத்திருந்தன.
ஒரு நாள் மாலை வேளை நானும் எனது நண்பனும் கூட்ரோட்டில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது என் செல்பேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தேன், கூகை பதிப்பகம் என்றிருந்தது. அழைப்பை என் நண்பனின் செல்பேசிக்கு மாற்றி, அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தேன். அவன் தொலைபேசி ஒலிக்க, எடுத்து அவர்களுடன் பேசினான்.
யார் நீங்க?
“சார் நாங்க கூகை பதிப்பகத்திலிருந்து பேசுறோம் நடுக்கோம்பை நாராயணசாமி சார் தாங்களே”
“இல்லைங்க சார். நான் அவரோட பிரண்ட்”
“பரவாயில்லைங்க சார். நீங்களும் எழுத்தாளரா?”
அவனுக்கு ஏதும் புரியவில்லை. எந்த பதிலையும் கூறும் நிலையிலும் அவன் இல்லை. மெல்ல அவன் ஓர் எழுத்தாளராக அந்த நிமிடத்திலிருந்து உருக்கொள்வதாகத் தோன்றியது.
சில நாட்களுக்கு பின் காலை நடையின்போது தானும் கதைகள் எழுதுவதாகவும் மொழிப்பெயர்ப்பு செய்வதாகவும் கூறி என்னை பார்த்து கண் சிமிட்டினான்.
பறவைகள் அங்கு மிங்குமாக திரியத் தொடங்கின. சூரியன் மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது.
இணைப்பு : 1
நூல் வெளியிடு 2009
கூகை பதிப்பகம், 18, தட்டாவட்டி சாலை, பேர் பெரியாங்குப்பம் .605 701 . email: koogai@gmail.comwww.koogai.com
நடுக்கோம்பை நாராயணசாமியின் பத்து நூல்கள்
1. வாசித்து முடித்த வரிகள்
ஆசிரியர் தன் பால்யத்திலிருந்து இதுவரை வாசித்து முடித்த உலகின் அதி முக்கியமான நூறு புத்தகங்களைப் பற்றிய விரிவான பதிவு. உலக இலக்கிய போக்குகளை நுட்பமான முறையில் எழுதிச் செல்லும் ஆசிரியர் இடையிடையே அவ்வப்பொழுது செயல்பட்ட இலக்கிய அரசியலையும் கராறாக விமர்சிக்கிறார். எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் நூலகத்தில் அவசியம் இடம் பெற வேண்டிய நூல் இது.
480 பக்கங்கள் விலை ரூ 240
2. நெடிய இரவின் பிடியில் உறங்கும் கோடம்பாக்கம்
உலகின் அதி உன்னத திரைப்படங்களைப் பற்றி பேசும் மிக முக்கிய புத்தகம். உலகத்திரைப்படங்களின் துணை கொண்டு ஆசிரியர் மிகவும் நடுநிலையாக இந்திய, தமிழ் திரைப்படங்களை அலசியிருக்கும் கட்டுரை நூலின் பெரும் பலம். நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள நைஜிரிய இயக்குனர் ‘லால் சலாம் ஜிம்போ’ வின் நேர்காணல் புத்தகத்திற்கு மேலும் வலுசேர்க்கிறது.
280 பக்கங்கள் விலை ரூ 120
3. அல் ஜீப்ராவையும் அமீபாவையும் நாம் ஏன் கற்க வேண்டும்? (கல்வியியல் சிந்தனைகள்)
இன்றைய கல்வி முறையை கூர்மையாக விமர்சனம் செய்யும் நூல் இது.மனநோயாளிகளின் கூடாரமாகிவிட்ட நமது கல்விச்சாலைகளை தனது மாணவப் பருவ கண்கொண்டு அணுகும் ஆசிரியர், அவரின் பாடக்குறிப்பேடுகளின் உதவியுடன் இன்றைய திட்டங்களை ஆய்வு செய்வதால் ஓர் அய்வறிக்கையை வாசிப்பது போன்ற தோற்றம் ஏற்படுவதே நூலின் பலத்திற்கு ஓர் சான்று.
200 பக்கங்கள் விலை ரூ 110
4. துளையிலிருந்தெழும் பேரிசை
சமீபத்தில் தமிழில் வெளிவந்திருக்கும் மிகவும் முக்கியமான இசை நூல் இது . கென்ய, அரேபிய, நைஜிரிய இசைக்கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசுவதுடன் பல்வேறு இசை வடிவங்களையும், அக்கலைஞர்களையும் பற்றி விரிவாக அலசுகிறது இந்நூல். தமிழ் மெல்லிசை வடிவங்களின் போதாமைகள் குறித்தும் ஓர் விரிவான கட்டுரை உண்டு. மொராக்கோ இசைக்கலைஞர் ஜும்போ செம்பேன் அவர்களின் நேர்காணலும், இசைக்குறிப்புகளும் அடங்கிய மிக முக்கிய தொகுப்பு இது.
340 பக்கங்கள் விலை ரூ 180
5. காத்தாயி சொன்ன காரிருள் கதைகள் (பாலியல் கதைகள் ஒரு நூறு )
இன்றைய நவீன வாழ்வில் பெருஞ்சிக்கலாக உருக்கொண்டிருக்கும் காமம், கடந்த நூற்றாண்டுகளில் எப்படி அணுகப்பட்டது என்றும், அப்போது புழக்கத்திலிருந்து இப்போது இல்லாமல் போன மிக நுட்பமான நூறு பாலியல் கதைகளும் அடங்கிய தொகுப்பு இது. காமத்துக்கும் உளவியலுக்குமான நுட்பமான ஓர் கட்டுரை முனைவர் பால் பாண்டியன் அவர்களால் எழுதப்பட்டிருப்பது குறிப்படத்தக்கது. அனைவரும் வாசிக்க வேண்டிய ஓர் அரிய தொகுப்பு இது,
600 பக்கங்கள் விலை ரூ. 350
6. அந்த பாறை வளர்ந்து கொண்டே இருக்கிறது (மொழி பெயர்ப்பு சிறு கதைகள் )
மதம் இனம் தேசியம் எனும் கற்பிதங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு, அதிலேயே உழலும் நமது எழுத்துக்களுக்கு மத்தியில் இது போன்ற கதைகளின் வரவே நம் இலக்கியப் பரப்பை மேலும் விரிவுபடுத்தும். தற்கால உலக இலக்கியத்தின் போக்கை இக்கதைகள் வழி அறிய முடிகிறது. மேலும் கதை சொல்லுதலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் துல்லியமாக பதிவு செய்கிற இந்நூலை ஆசிரியர் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார்.
184 பக்கங்கள் விலை ரூ. 110
7. கூந்தலில் நீர்மை கொண்ட ஜக்கம்மாவின் கதை
ஜக்கம்மா எனும் பாத்திரத்தின் மூலம் ஆசிரியர் மூன்று நூற்றாண்டுகளில் பயணிக்கிறார். காலந்தோறும் பெண்களின் அவலங்களை பேசும் நூல், இடையிடையே பெண்கள் செய்த தந்திரங்கள், படுகொலைகள், அட்சி கவிழ்ப்புகள் அகியவற்றையும் விவரிக்கிறது. எனவே நாவலுக்கு ஓர் சமகால அரசியல் படிமம் கிடைத்து விடுகிறது. பெண்களை மையமாகக் கொண்டு தமிழில் இது போன்ற ஓர் விரிவான நாவல் இதுவரை எழுதப்படவேயில்லை என்பதை உரத்துக் கூறலாம். தொன்மத்தை ஆசிரியர் நேர்த்தியாக கையாண்டிருப்பது நாவலின் மற்றுமொரு பலம். பெண்களின் அரசியலை விரிவான தளத்தில் பதிவு செய்திருக்கும் இந்நாவல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
720 பக்கங்கள் விலை ரூ. 430
8. ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை (சமீபத்திய சிறுகதைகள்)
2000க்கு பின் எழுதிய பதினாறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. நுண்ணிய விவரிப்புகள், கதை கூறலில் நவீனத் தன்மை, வசனங்களின் கச்சிதம் அனைத்தும் கூடிய நேர்த்தியான கதைகள் அடங்கியிருக்கின்றன. தொகுப்பின் அகச் சிறந்த கதைகளான “பொம்மியக்காவின் உதிரம்” “ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை”, “ஜடாயுவின் துண்டான இறக்கை” மூன்று கதைகளையும் அவசியம் படித்தேயாக வேண்டும். இது உண்மை. இதில் எழுத்தாளரின் புனைவெழுத்தின் வேகம் பெரும் வீச்சோடு வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
192 பக்கங்கள் விலை ரூ. 110
9. நடுக்கோம்பையும் நாகலிங்க மரமும் (பயணக் கட்டுரைகள்)
அடிப்படையில் தன்னை ஓர் பயணி என அறிமுகப் படுத்திக் கொள்ளும் எழுத்தாளரின் இதுவரை வெளியான பயணக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு. நம் தேசத்தை குறுக்கும் நெடுக்குமாக அலைந்து அனுபவித்து சேகரித்த அரிய நினைவுகள் பகிர்ந்து கொள்ளும் களமாக விரிவு கொள்கிறது நூல். ஆசிரியர் எடுத்த கலை நுட்பத்துடன் கூடிய புகைப்படங்கள் நூலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. பயணம் நமக்கு நிறைய கற்றுத் தருவதைக் கட்டுரைகளின் வழியாக நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். நிச்சயம் நம்மை பயணிக்கத் தூண்டும் ஓர் நூல்.
220 பக்கங்கள் விலை ரூ. 130
10. கண்டாச்சிபுரத்தில் பறக்கும் தும்பிகளைப் பற்றி கார்சியா காப்ரியேல் மார்க்வெஸ் எழுதாதது ஏன்? (புனைவெழுத்தின் மீதான அரசியல் கட்டுரைகள்)
நோய்க்கூறான சமூகத்தில் வாழ நேர்ந்து விட்ட அவலத்தில் துடிக்கும் எழுத்தாளனின் வெளிப்பாடுகளில் அரசியல் இருப்பதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் புனைவெழுத்தில் கட்டமைக்கப்படும் நுண் அரசியலையும், ஜாதி அடையாளங்களையும் ஓர் எழுத்தாளன் கண்டிப்பாக அடையாளப்படுத்தி அலட்சியப்படுத்தவும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட பனிரெண்டு எழுத்தாளர்களின் கூர்மையான கட்டுரைகள் கொண்ட தொகுப்பு. மொழிபெயர்ப்புகள் மூலம் நிகழ்த்தபடும் அரசியலும், அதன் பிற்சேர்க்கையாக இணைக்கப்படும் எழுத்தாளர்களின் பட்டியல் கொண்டுள்ள அரசியலையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன கட்டுரைகள், அவசியம் அனைவரும் வாசித்து அறிய வேண்டிய நூல்.
130 பக்கங்கள் விலை ரூ. 80
இணைப்பு : 2
நூல் வெளியிடு 2009
நூல் வெளியீட்டு அரங்கு - மூன்று
நடுக்கோம்பை நாராயணசாமியின் பத்து நூல்கள்
நாள் : 15.1.2009 திங்கள், மாலை 5.00 மணி
இடம் : தேவநேய பாவாணர் நூலக அரங்கு, சென்னை.
தலைமை : திரு.பெர்முடாஸ் பெரைரோ, கலாசார அமைச்சர், மொரிஷியஸ்,
முன்னிலை : திருமதி.அமிர்தானந்த கட்டாரியா, இ.ஆ.ப. ஒரிஸ்சா,
வரவேற்புரை : கவிஞர் திரு. கானாடு காத்தான்
பங்கேற்பு :
எழுத்தாளர் திரு. அண்டோனியா முழக்கோ, கீன்யா
எழுத்தாளர் திரு. பாஸ்பைண்டர் வெரோனிகா, கூபா
இசைஅறிஞர் திரு. சால் ஜமைக்கா டெரி, மொராக்கோ
நடிகர் திரு. இயான் கீமேட் பிளமிங், இங்கிலாந்து
நடிகர் திரு. ஹென்றி போர்டு மூர், அயர்லாந்து
திரு. பிரேமானந்தா கணேசலிங்கம், இலங்கை
திருமதி. இட்லியான அட்வுஸ், துணைவேந்தர், அமெரிக்கா
செல்வி. ஓமனக்குட்டி அப்பசன், கேரளா
நீதியரசர் திரு. விட்டாலோ பென்ஜமின், உலக பன்னாட்டு நிறுவனம், ஜெனிவா.
வேந்தர் திரு. அருளானந்தம், ஏசிடி பல்கலைக்கழகம், மைசூர்.
இயக்குனர் திரு. விட்டோரி நைரி மோல், போலந்து.
வெளிவரும் நூல்கள்
. வாசித்து முடித்த வரிகள் . நெடிய இரவின் பிடியில் உறங்கும் கோடம்பாக்கம் . அல் ஜீப்ராவையும் அமீபாவையும் நாம் ஏன் கற்க வேண்டும்? . துளையிலிருந்தெழும் பேரிசை . காத்தாயி சொன்ன காரிருள் கதைகள் . அந்த பாறை வளர்ந்து கொண்டே இருக்கிறது . கூந்தலில் நீர்மை கொண்ட ஜக்கம்மாவின் கதை . ஒரு நாளும் நாம் திரும்பப் போவதில்லை . நடுக்கோம்பையும் நாகலிங்க மரமும் . கண்டாச்சிபுரத்தில் பறக்கும் தும்பிகளைப் பற்றி கார்சியா காப்ரியேல் மார்க்வெஸ் எழுதாதது ஏன்?
நன்றியுரை : எழுத்தாளர் திரு. நடுக்கோம்பை நாராயணசாமி
உங்கள் வருகையை அன்புடன் எதிர்நோக்கும் :கூகை பதிப்பகம், 18, தட்டாவட்டி சாலை,பேர் பெரியாங்குப்பம் .605 701. email: koogai@gmail.comwww.koogai.com
1 comment:
today morning only i visit yuor blog and happy to go through that.you 've revealed the disclosed absurds of commercial publishers in tamil especially in little magazine atmosphere.no one can read your short story without a chuckle.kalgakkara kaalabairava...hat's off! Thamaraibarathi tirukoilur
Post a Comment