Thursday, July 16, 2009

மயானக்கொள்ளை-சிறுகதை


“எப்படியும் இன்னும் அர மணி நேரத்துல கரவம் கௌம்பிடும்டா”
என்று வேலாயுதம் நாராயணனிடம் சொன்னபோது இருவருக்கும் போதை தலைக்கேறி இருந்தது. பேச முடியாதபடி நா குழறியது. கண்கள் மேல்நோக்கி செருக ஆரம்பித்தன. மரம் இழைக்கும் எந்திரத்தின் தொடர் இரைச்சல் அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்தபோது அவர்கள் மரப்பட்டறை வைத்து நடத்தும் முத்தை நொந்து கொண்டனர்.
“குடிக்க உங்களுக்கு எடம் கொடுக்கறதே தப்பு. ஒழுங்கா குடிச்சிட்டு போவீங்களா?” என்று முத்து முனகலுடன் கூறியதை நாராயணன் கேட்டுவிட்டு சொன்னான்.
“ஒன்ன யார்ரா டாஸ்மாக் பக்கத்துல பட்றயை வைக்க சொன்னது?”
போதை தலைக்கேறிய அவர்களை என்ன செய்வதென்று முத்துவுக்குப் புரியவில்லை. நாராயணன் தன் கால்சட்டை பையில் வைத்திருந்த பீடிக் கட்டில் இருந்து ஒன்றை எடுத்துப்பற்றவைத்தான். பீடி புகை பிடிக்காமல் வேலாயுதம் லுங்கியை உதறிக்கொண்டே எழுந்தான்.
“டேய் எத்தன தடவ சொல்றது. எங்கூட இருக்கிறப்ப பீடி புடிக்காதேன்னு” எனக் கேட்டபடியே வேலாயுதம் தலையில் அடித்துக்கொண்டே தள்ளாடிக்கொண்டு நடந்தான். அவனைப் பின்தொடர்ந்து நாராயணனன் சென்றான். இருவரும் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த முத்து அவர்களைப் பார்த்து கூறினான்.
“டேய் போய் அய்யா வூட்டு மோட்டார் கொ ட்டகையில படுங்க. அப்புறமா கோவிலுக்கு போகலாம்.” அவன் பேச்சு அவர்களை எட்டவே இல்லை. ஏதோ யோசித்தப்படி நாராயணனை பார்த்து சொன்னான் வேலாயுதம்.
“மச்சி பன்னன்டு மணிக்குள்ள ஒரு பொணம் விழும் பாரு” அதற்கு சிரித்துக்கொண்டு பீடியை இழுத்து விட்டபடி கேட்டான்.
“ஏன்டா குடிச்சிட்டு ஒலர்ற?”
“ஆமாண்டா. இவுரு காந்திக்கு பக்கத்துட்டு காரு.”
என்று நாராயணனை பார்த்து நக்கலடித்துக்கொண்டே மீண்டும் வேலாயுதம் பேசினான்.
“நா சொல்றது ஒனக்கு வேடிக்கையாதான் இருக்கும். நடக்கும் போது பாக்கதான போற”
“போன வருஷம் மயான கொல்லைக்கு தண்ணி டேங்க் இடிஞ்சி உழுந்து செத்தாங்களே அதனால சொல்றயா?”
“அது மட்டுமில்ல. அதுக்கு முந்தன வருஷ மயானகொல்லையன்னிக்கு நம்ம செட்டியார் வூட்டு நரசிம்மத்துக்கு என்ன ஆச்சு?” என்று வேலாயுதம் கேட்கும் போதே நாராயணின் மனத்திரையில் சம்பவங்கள் கோர்வையாக சுழலத் தொடங்கின.
மயானத்திலிருந்து கரகம் திரும்பிக்கொண்டிருந்தது. ஒரு சில்வர் உண்டியை குலுக்கியபடி வந்து கொண்டிருந்தார் செட்டியார் வீட்டு நரசிம்மன். ஆஜானுபாகுவான தோற்றம். நல்ல வளர்த்தி சாலையில் இருபுறமும் ஓடியோடி உண்டியல் வசூல் செய்து கொண்டிருந்தவர் ஷபி கடை அருகில் வந்ததும் குடித்துவிட்டு ஆடிக்கொண்டு வந்த வேலாயுதத்தையும் நாராயணணையும் அழைத்தார். தனக்கு வயித்தை வலிக்கிறதெனக் கூறி உண்டியலை வேலாயுதத்திடம் கொடுத்துவிட்டு வடக்கு திரும்பி ஓடையை நோக்கி சென்றார். ஆடிக்கொண்டே வேலாயுதம் உண்டியல் குலுக்கத் தொடங்கினான். கபாலமேந்தியவர்கள் கோவில் அடிக்கு வந்து சேர்ந்தனர். “பத்து வச்சா... இருபது... ஐம்பது வச்சா... நூறு ...” என சூதாட்டம் களைகட்டியிருந்தது.
சீக்கிரமே வந்து விடுவதாக சொன்ன நரசிம்மனை காணாது அலுத்துக்கொண்டான் வேலாயுதம். உண்டியலை எடுத்துக்கொண்டு கோனார்வீட்டு ரங்கசாமியிடம் சென்று நீட்டினான்.
“எத்தினி வேலைய தாண்டா நா செய்யமுடியும்? நரசிம்மன் எங்க? அதுக்குள்ள எத்திகிட போய்ட்டானா?” என அவனை பொரிந்து தள்ளினார். அவனுக்கும் கோபம் மூக்கு நுனிவரை வந்தது. அடக்கிக் கொண்டு கூனமுட்டு சோமுவிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டான்.
மாலை ஐந்து மணியிருக்கும். சேகர் ஓட்டலில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவன், பெட்ரோல் பங்க் நோக்கி மக்கள் கூட்டம் ஓடுவதை கண்டு, தேனீரை சீக்கிரம் குடித்து முடித்து அவர்களை தொடர்ந்து ஓடி கூட்டத்தில் ஒருவரை கேட்டான்?
“என்ன அங்க?”
“செட்டியார்வூட்டு நரசிம்மன் செத்து கெடக்கராறாம்.”
என கூறிக்கொண்டே அவர் ஓடினார். அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. உடலில் நடுக்கம் பரவியது. நாக்கு வரண்டு போனது. இருந்தும் பயத்தினூடே அவன் அவரிடம் கேட்டான்.
“எங்க?”
“மணிகாரமூட்டு சண்முகம் கிணத்துல”
என்று அவர் கூறியதும், மணிக்காரமூட்டு கிணத்துக்கு ஏன் போவனும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
பெட்ரோல் பங்கிலிருந்து கீழே இறங்கி வரப்பு வழியாக ஓடிய கூட்டம் கிணற்றை சுற்றி நின்று கொண்டிருந்தது. கூட்டத்தை விலக்கி அவன் கிணற்றின் உள்ளே பார்த்தான். சலனமேயில்லாமல் நரசிம்மன் உடல் நீரில் மிதந்து கொண்டிருந்தது. பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர். மாடு மேய்க்கிற அம்மாக்கண்ணு மட்டும் சொன்னாள்.
“மசான கொல்லை இல்ல அதான் ஆள இங்கு இட்டாந்து ஜோலிய முடிச்சிருச்சி.”
அவளது வார்த்தைகள் அவன் மனதில் பயத்தை கசியவிட்டிருந்தது. மயானக் கொல்லைக்கும் ஒருவன் இறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று அவனுக்கு விளங்கவில்லை. ஆனால் அன்று இரவு அவனது பாட்டி அவனிடம் சொன்னாள்.
“கரவம் எறங்கறதுக்குள்ள எப்படியாவது காவு வாங்கிடும்டா.”
பயத்துடனேயே அவன் அவளிடம் கேட்டான்.
“எல்லா மசான கொல்லையிலுமா பொணம் விழும்?”
அவள் “ஆமாம்” என்று உறுதியாக தலையாட்டிய விதம் அவனுக்குள் மீண்டும் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

“ஏம்பா எங்க போயிட்டீங்க? அங்க ரங்கசாமி அண்ணன் உங்களை தேடிட்டிருக்கார்.” என செட்டுக்காரர் அவர்களைப் பார்த்து உரக்கக் கேட்டதும் தான் அவர்கள் பழைய நிலைக்கு திரும்பினார். இருவரது கண்களும் பயத்தால் நிரம்பியிருந்ததை காணமுடிந்தது. தள்ளாட்டத்துடன் நடந்து அவர்கள் கோயிலை வந்தடைந்தபோது கோனார் வீட்டு ரங்கசாமி அவர்களைப் பார்த்து சத்தமாகச் சொன்னார்.
“நல்ல நாளு அதுவுமா இப்படியா குடிச்சிட்டு வரது. போங்கடா.. போயி வெள்ள குளத்தாரூட்ல கரவம் ஜோடிக்க பூ வாங்கிட்டு வாங்க”
அவர் பேச்சுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் சந்து வழியாக பூ வாங்க நடந்தனர். கோயிலில் உடுக்கையும் பம்பையும் சப்தமெழிப்பிக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் எல்.ஆர்.ஈஸ்வரியின் மாரியம்மன் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அவர்கள் வெள்ளக்குளத்தை அடைந்தபோது வேலாயுதம் சொன்னான்.
“டேய் நாம இன்னைக்கி குடிச்சிருக்க கூடாதுடா?”
அவன் முடிப்பதற்கு முன்பாக நாராயணன் கூறினான்.
“டேய் அந்த கோனாமுட்டு ஆளு சொல்றார்னா கவல படுற. அவுரும்தாண்டா வூத்தினு இருக்காரு”.
“போடா, பொய் சொல்லாத” என்றான் வேலாயுதம்.
“நான் ஏன் பொய் சொல்லனும், நீ வேணா அவர வூதச் சொல்லேன் பார்ப்போம்.”
அவர்கள் மாறி மாறி பேசிக் கொண்டே வெள்ள குளத்தார் வீட்டை அடைந்தனர். அங்கு பூக்காரர் மனைவி தான் இருந்தாள். இவர்களைப் பார்த்து முகஞ்சுளித்தவள் “பூ வாங்க வந்திருக்கிற மொகரைங்களை பாரு”, என முனகிக் கொண்டே உள்ளே சென்று பூப் பந்துகளை கொண்டு வந்து வேண்டா வெறுப்பாக மண் திண்ணையில் வைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள். வேலாயுதத்திற்கு கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. நாராயணன் அவனை சாந்தப்படுத்தி, அழைத்துக் கொண்டு வந்தான். ஆனாலும் வேலாயுதம் பூக்காரர் வீட்டை திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே வந்தான். கால்கள் போதையில் பின்னிக் கொள்ள தொடங்கின. அவன் ஆத்திரம் தீராமல் காரித் துப்பிக் கொண்டே நாராயணனிடம், “பெரிய உத்தமியாட்டம் காட்டிக்கிறா. வண்டிக்கார சுப்ரமணி கூட ஓடனவதானே அவ?”எனக் கூறி மீண்டும் காரித்துப்பினான்.
“டேய் விடுரா. இதுலாம் சாதாரணம்” என நாராயணன் நா குழறியபடியே அவனை அடக்கினான்.
அவர்கள் ஆடிக்கொண்டே வருவதை கோயில் பந்தலடியில் இருந்தவர்கள் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர். சிலர் அவர்களைச் சுட்டிக் காட்டி கிண்டலாக ஏதோ கூறி சிரித்தனர். அவர்கள் பூப்பந்தை பூசாரியிடம் கொடுத்து விட்டு பந்தலடிக்கு வந்தனர். அவர்கள் அங்கிருப்பதை விரும்பாத கோனார் வீட்டு ரங்கசாமி அவர்களிடம் சொன்னார்.
“டேய் போய் அரசமரத்தடியில் படுங்க. கரவம் கௌம்பறப்ப கூப்பிடுரோம்.”
அதற்கு வேலாயுதம் கூறினான்.
“இப்படிதான் மாமா போனதடவையும் சொன்னீங்க. ஆனா நாங்களா எந்திரிச்சு பாக்கறப்ப புளிய மரத்தடியில் டிராமா இல்ல நடந்துகினு இருந்தது.” என்று அவன் சொன்னதும் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். வெயில் உக்கிரமாக காய்ந்து கொண்டிருந்தது.
“கபாலம் ஏந்தும் பக்தர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக பந்தலடிக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டவுடன் பந்தலடியில் கும்பல் சேரத் தொடங்கியது. வெடிச்சத்தம் கேட்டு வேலாயுதமும் நாராயணனும் எழுந்து கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்னும் போதை குறைந்திருக்கவில்லை அவர்களுக்கு. நாராயணனை பார்த்து வேலாயுதம் கேட்டான்.
“யார்றா மூத்திரம் விடுர மாதிரி வானம் உடறது? மேலவே போக மாட்டுது?”
அதை கேட்ட நாராயணனுக்கு குபுக்கென சிரிப்பு வந்துவிட்டது. இருந்தும் சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலாயுதத்திடம் கூறினான்.
“டேய் சத்தமா பேசாத. நவுட்டுகாரமுட்டு சுந்தரம் தான் விடுறார்.”
“ஆமா அவுரு பெரிய அண்ணாதொரை மயில்சாமி. அவரு காதுல கேட்டுட்டா, ராக்கெட்ட இந்த பக்கம் திருப்பிடுவாரு போடா போக்கத்தவனே.” என்று வேலாயுதம நாராயணனை பரிகாசம் செய்து கொண்டே கோவிலுக்கு வந்து சேர்ந்தான். கரகம் வேப்பிலையாலும் பூவாலும் ஜோடிக்கப்பட்டிருந்தன. உச்சி வெயில் மண்டையை பிளந்தது. பம்பை உடுக்கை காரர்கள் உச்ச ஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தனர். சிலர் அருள் வந்து அவர்களின் வாசிப்புக்கேற்றபடி ஆடிககொண்டிருந்தனர் . கபால மேந்தியவர்கள் மத்தியில் ஓர் இறுக்கம் மெல்ல பரவத் தொடங்கியபோது வேலாயுதத்தை நாராயணன் கேட்டான்.
“ஏன்டா, இன்னாவோ பன்னன்டு மணிக்குள்ள ஒரு பொணம் விழும்னு சொன்னே”
அவன் கேள்விக்கு வேலாயுதம் மிகவும் இறுக்கமான முகபாவத்துடன் பதில் சொன்னான்.
“பொணம் விழாம மேல ஏறுன கரவம் கீழ எறங்காது பாத்துகுனே இரு”
இம்முறை வேலாயுதத்தின் பதில் நாராயணனுக்கு உள்ளூர பயத்தை ஏற்படுத்தியது. பயம் மெல்ல உடலெங்கும் பரவத் தொடங்கியபோது கரகம் புறப்படத் தொடங்கியது. தெரு அகலத்துக்கும் பரவியிருந்தது கபால மேந்தியவர்கள் கூட்டம். சாமி வந்து சிலர் ஆடிக்கொண்டு முன்னால் சென்றனர். நரம்புகள் புடைக்க வாத்தியக்காரர்கள் பம்பை உடுக்கையை வாசிக்கத் தொடங்கினர். அவர்களின் வாசிப்பு சாமி வந்து ஆடிக்கொண்டிருப்பவர்களை முறுக்கேற்றியது.
நாராயணனும் வேலாயுதமும் கூட்டத்திற்கு முன்னால் நடந்து சென்றனர். அவர்களைப் பார்த்து ரங்கசாமி சத்தமாக சொன்னார்.
“டேய் அந்த வாணத்த வாங்கி வுடுங்கடா. பாவம் அவுரு எம்மா நேரம் தான் வுடுவாறு?”
அதற்கு அவர்கள் இருவரும், “நாங்களா அவர வுடச்சொன்னோம்?” என்றனர்.
“சரிடா, போங்க போயி வாங்கி வுடுங்கடா” எனும் அவரின் கட்டளைக்கு அவர்கள் அமைதியாகி நவுட்டுகாரர் வீட்டு சுந்தரத்திடமிருந்து வாணங்களை வாங்கி விட ஆரம்பித்தனர்.
கரகம் திருவண்ணாமலை சாலையிலிருந்து முருகன் கோயில் தெருவுக்குள் நுழைந்தது. வழி நெடுக்க தரையில் தண்ணீர் ஊற்றியிருந்தும் பாதை வெயிலால் தகித்தது. எங்கும் அனல் பரவிக்கிடந்தது. கால் வைக்க முடியவில்லை. கூட்டம் தேங்கிவிடாதபடி மெல்ல ஓடிக்கொண்டே இருந்தபோது நாராயணன், வேலாயுதத்திடம் கேட்டான்.
“இன்னாடா இவ்ளோ வெயில் லயும். வெடி புஸ் புஸ்னு போவுது. மருந்த சரியா காய வைக்கலயோ?”
“நானும் அதாண்டா நெனைக்கிறேன்.” என அவன் பதில் அளித்தான்.
“அப்ப மருந்த காயவச்சா தான் கரகம் எறங்கறப்ப வேட்டு வைக்க முடியும்.” என்று நாராயணன் சொல்ல அதற்கு வேலாயுதம் அவனிடம் சொன்னான்.
“சரி நாவேணா போயி மருந்த காய வைக்கிறேன். கரவத்து கூடவே நீ போயிட்டு வா.”
“சரிடா,” என்று வாணங்களை வாங்கிக் கொண்டான் நாராயணன். கூட்டத்திலிருந்து மெல்ல விலகி நல்லாப்பாளையம் சாலை வழியாக கோயில் நோக்கி நடந்தான் வேலாயுதம்.
கோயிலிலும் கூட்டம் இருக்கத்தான் செய்தது. ஊஞ்சல் ராட்டினங்களில் பிள்ளைகள் ஆடிக்கொண்டிருந்தனர். தண்ணீர் பந்தலில் நீர்மோர் வினியோகம் நடந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பந்தலடியும் வெயிலால் தகித்தது. பம்பை உடுக்கைச் சத்தம் இப்போது ஓடைப் பாலத்தை தாண்டி கேட்டது.
சகடை நிறுத்தமிடத்திற்கு சென்று வேலாயுதம் வேட்டு வைக்கப்பயன்படும் இரண்டு இரும்பு குழல்களையும் காகிதத்தில் மடித்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்கு எதிரே வியாபித்திருந்த புளிய மரத்தடிக்கு வந்து, குழல்களில் மருந்தை கிடித்துப்பார்த்தான். மருந்து சொத சொதவென இருந்தது. சற்று நேரம் யோசித்தவன், மருந்தை சுற்றி எடுத்துக்கொண்டு கோயிலுக்கு பக்கத்தில் உள்ள குளக்கரைக்கு சென்று, செய்தித்தாளை விரித்து அதில் மருந்தை பரப்பி காயவைத்தான். வெயிலில் மருந்து தகதகத்து. அவன் இரு கைகளாலும் மருந்தை கிளறி விட்டான்.
கபால மேந்தியவர்கள் மயானத்திலிருந்து திரும்பிக் கொண்டிருப்பதை பம்பை உடுக்கை சத்தத்தை கொண்டு அறியமுடிந்தது. கரகத்திற்கு முன் நடந்து கொண்டே வாணங்களை விட்டுக் கொண்டு வரும் நாராயணக்கு சட்டென “கரகம் எறங்குறதுக்குள்ள ஒரு பொணம் விழும்பாரு,” எனும் வேலாயுதத்தின் குரல் காதில் ஒலிக்க அவனுக்கு உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது. இருந்தாலும் பின்னால் ஓடிவரும் மக்கள் கூட்டத்தை பார்த்த நொடி அவனுள் பரவசம் தொற்றிக்கொள்ள வாணங்களை வேக வேகமாக விட்டெறிந்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கரவம் வந்துடும்” என யாரோ இருவர் சொல்லிக் கொண்டே இரு சக்கர வாகனத்தில் சென்றனர். பந்தலடியில் கூட்டம் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. கலர் பாயாசம் விற்கும் முதியவரிடம் சிறுவர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆஞ்சநேயர் கோவிலின் மீதும், ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீதும் சிலர் ஏறி, கரகத்தின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். அருகிலிருந்த அரசமரத்திலிருந்த குரங்குகள் ஊராட்சி மன்ற அலுவலக மதில் சுவருக்குத் தாவிக்கொண்டிருந்தன.
வேலாயுதம் மருந்தை காயவைத்துவிட்டு கரகத்துக்காக காத்துக்கொண்டருந்தபோது கரகம் திருவண்ணாமலை சாலையிலிருந்து தெற்கு நோக்கி திரும்பியது. அணையை உடைத்துக்கொண்டு பாயும் வெள்ளம்போல் மக்கள் கூட்டம் கோயில் நோக்கி வந்து கொண்டிருந்தது.கூட்டத்திற்கு முன் வாணத்தை விட்டபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த நாராயணனுக்கு வேலாயுதத்தைப் பார்த்ததும் அவன் சொன்ன வார்த்தைகள் மனத்திரையில் குமிழிட்டது. மனது கலவரப்படுவதை உணர்ந்த அவன் வெளிக்காட்டிக் கொள்ளாமல் பந்தலடியில் நின்றிருந்த வேலாயுதத்தை நெருங்கினான். அப்போது வேலாயுதம் நாராயணனிடமிருந்து வாணங்களை வாங்கி நாலாதிசையிலும் விட்டான். வாணங்கள் சர்சர்ரென விண்ணில் பாய்ந்து வெடித்துச் சிதறின. வேலாயுதம் வாணம் விட்டுக் கொண்டிருக்க நாராயணன் பாப்பான்குளத் தெருவழியாக சாராயக் கடை நோக்கி நடந்தான்.
கரகம் பந்தலடிக்கு வந்ததும் கூட்டம் இருப்பு கொள்ளமுடியாமல் தவித்தது. பம்பை உடுக்கை சத்தங்கள் பீறிட்டு மேலெழுந்தன. சாமி வந்து பலர் ஆடி கொண்டிருந்தனர். வேலாயுதம் வாணங்களை அருகில் நின்றிருந்த சந்துவீட்டு முனுசாமியிடம் கொடுத்துவிட்டு, மருந்து காய வைத்திருந்த இடத்திற்கு சென்று மருந்தை எடுத்துக்கொண்டு புளியமரத்தடிக்கு வந்தான். வேட்டு விடும் குழலை எடுத்து சிறிது செங்கற்பொடி கொண்டு அடைத்து விட்டு மருந்தை வைத்து அழுத்தமாகக் கிடித்தான். இரண்டு குழல்களிலும் மருந்தை கிடித்து வெடி வைக்க ஏதுவாக வைத்து விட்டு கூட்டத்தை பார்த்து “வேட்டு வைக்க போறேன் ஒதுங்கி நில்லுங்க” என கூறிக்கொண்டே மருந்தில் நெருப்பை வைத்தான். சர்ரென சீறிப்பாய்ந்த நெருப்பு குழல்நோக்கி சென்ற அடுத்த நொடி நிலம் அதிரும்படி வெடித்தது. மரத்திலிருந்த குரங்குகளும் பறவைகளும் வேகவேகமாக ஓடி மறைந்தன. கரும்புகை சூழ சற்று நேரம் அங்கு என்ன நடக்கிறது என்றே அறிய முடியாமல் இருந்தது.
புகை மண்டலம் ஓய்ந்த பின் சந்துவீட்டு முனுசாமிக்கு வாணம் விடவேண்டும் எனும் ஆசைவந்தது.பந்தலடியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அக்கம் பக்கமிருந்த மெத்தை வீடுகள் மீதெல்லாம் மக்கள் நின்று கொண்டிருந்தனர். வேட்டு வைக்கும் குழல்களை சிறுவர்கள் கால்களால் உருட்டி உருட்டி பார்ப்பதைக் கண்ட வேலாயுதம் அவர்களை விரட்டினான். காய வைத்திருந்த மருந்து மீது புளிய மரநிழல் விழுந்ததை அடுத்து சூரிய ஒளிபடும் இடத்திற்கு செய்தித்தாளில் இருந்த வெடி மருந்தை இழுத்து விரல்களால் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். முனுசாமிக்கு எங்கிருந்து தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. மனசுக்குள் ஒரு வித படபடப்புடனேயே ஒரு வாணத்தை எடுத்து நெருப்பை பொருத்தினான். அடுத்த நொடி அது சீறிப்பாய என்ன செய்வதென்று தெரியாத அவன் வானத்தை புளிய மரத்தை நோக்கி விட்டெறிந்தான். வானம் புளிய மரத்தில் பட்டு தெறித்து திரும்பி வேலாயுதம் காயவைத்துக்கொண்டிருந்த வெடி மருந்து மீது விழுந்து வெடித்து சிதறிய நொடி அங்கு பெரும் தீப்பிழம்பென பற்றி எரிந்தது.வேலாயுதம் மீதும் மளமளவென பரவிய நெருப்பைக் கவனிக்காமல் கூட்டம் பந்தலடியிலிருந்து நாலா திசைநோக்கியும் சிதறியது. சிறிது நேரத்திற்கு பின் தான் வெடிமருந்தில் சிக்கிக்கொண்டிருக்கும் வேலாயுதத்தை முனுசாமியால் உணரமுடிந்தது. பெரும் சீற்றத்தோடு எரிந்துகொண்டிருக்கும் வெடி மருந்தின் மீதே விழுந்தான் வேலாயுதம். புளிய மர உயரத்திற்குப் பரவி எரியும் தீயை நெருங்கவே அனைவரும் பயந்தனர். கடைசியில் கூனமுட்டு சோமு தண்ணீர் குடத்தைத் தூக்கிக்கொண்டு ஒடிவரும் போதுதான்கோயிலுக்கு பக்கத்தில் வசிப்பவர்கள் குடங்களோடு ஓடிவந்தனர். அப்போது முற்றாக எரிந்து கரிக்கட்டையாகியிருந்தான் வேலாயுதம்.
சாராயக் கடையில் மூக்கு முட்ட குடித்துவிட்டு பக்கத்திலிருந்த மர இழைப்பு பட்டறைக்கு வந்த போது சால்னா கடை பலராமன் அவனிடம் சொன்னார்.
“ஏய் உங்கூட்டாளி வாணம் வெடிச்சி நெருப்புல உழுந்திட்டான்னு ஊரே ஒரே அலாரா கெடக்கு. நீ இன்னாடான்னா குடிச்சிக்கினு இருக்கிறே” இந்த வார்த்தைகளை கேட்ட நாராயணனுக்கு சப்த நாடியும் ஒடிங்கிப்போனது. ஒவ்வொரு மயானக்கொள்ளையின்போதும் இறந்தவர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக அவனது மனத்திரையில் குமிழிட அவனுள் நடுக்கம் பரவியது. சட்டென அவனது போதை அறுந்து விழ தள்ளாட்டத்துடனே கோயிலடி நோக்கி ஓடினான். புளிய மரத்தின் உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்திருப்பதையும், கூட்டம் கூடி இருப்பதையும் கண்டவன் பெருங் குரலோடு “ஐயோ, நான் தான் அவன கொன்னுட்டேன்,” என தலையில் அடித்துக்கொண்டு அழுதான். சிதறி ஓடியிருந்த கூட்டம் பந்தல்நோக்கி வரத் தொடங்கியிருந்தது. உக்கிரமான வெயில் பந்தலடியை ஒரு மயானத்தை போல மாற்றிக் காட்டிக்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment