Tuesday, May 05, 2009

எல்லாம் திட்டமிட்டே நிகழ்த்தப்படுகிறது


ஒரு எழுத்தாளனாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னால் ஏதாவது பங்காற்ற முடியுமா என யோசிக்கும் போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.இந்த தேர்தலை எதிர்கொள்வதில் நமக்கு ஏற்படும் பெரிய சிக்கலே யார் எதிரி, யார் தோழன் என உணரமுடியாததே. ஒரே விதமான சொற்களையே அனைவரும் பயன்படுத்துகின்றனர்.உச்சரிக்கும் விதத்தைக்கொண்டே ஒருவர் வேற்று முகாமை சார்ந்தவர் என்பதை அறியமுடிகிறது. இளம் வயதில் நண்பர்களுடன் விளையாட்டாக சண்டைபோட்டுக்கொண்டு பிறிந்து மீண்டும் சேரும் போது ஒருவித கூச்சமும் நெருடலும் ஏற்பட்டு சங்கடப்பட்டிருக்கிறது மனம். அவ்வாறான நமக்கு நம் அரசியல்வாதிகளைப் பார்த்தால் சற்று பொறாமையாகத்தான் இருக்கிறது.ஐந்தாண்டுகள் ஒரு அணியில் எல்லா சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு கடைசி நொடியில் சிரித்த முகத்தோடு எந்த வித நெருடலோ கூச்சமோ சிறிதும் இன்றி எதிர் அணிக்கு தாவவும் ஒரு திறன் வேண்டுமல்லவா?. அதற்காக நம் அரசியல்வாதிகளை அவசியம் நாம் பாராட்டித்தானாகவேண்டும். ஒரு புனைவெழுத்தாலனைக் காட்டிலும் கூடுதலான கற்பனைத்திறத்தோடு அவர்கள் மக்களிடம் பல வினோதமான கதைகளை உருவாக்கி தொடர்ந்து வெற்றியும் பெற்று வருகின்றனர்.
பிய்ந்து தொங்கும் உங்கள் கூறை வீட்டின் சாணம் மெழுகாத தரையில் அமர்ந்து உங்களோடு சேர்ந்து கம்பங்கூழைக் குடிக்க ஆசைப்படும் அந்த நபர் உங்கள் தொகுதியின் ஏதாவது ஒரு அணியின் வேட்பாளராக இருக்கலாம். ஐந்தாண்டுகள் தொகுதிப் பக்கமே திரும்பி பார்க்காத உங்கள் உறுப்பினர் நீங்கள் தேனீர் அருந்தும் கடையில் உங்களுடன் உரையாடிக்கொண்டே தேனீர் அருந்தும் அதிசயத்தையும் நீங்கள் காண நேரலாம். வானம் பார்த்த பூமியில் மழைக்கு ஏங்கி காராமணிச்செடிகளைப் பார்த்து பெருமூச்சு விடும் உங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓடோடி வரக்கூடும். உங்களூர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்துகூட இதுவரை நீங்கள் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டுவந்த கட்சியின் மாநிலத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் அதிசயம் நிகழும்.இந்த காட்சிகளை ஒரு எழுத்தாளனாக உள்வாங்கும் போது ஏற்படும் மனநெருக்கடியிலிருந்து எப்படியாவது தப்பித்துக்கொள்ளவே மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது. என்ன இது சின்ன புள்ளத்தனமா இருக்கு” எனும் வடிவேலுவின் நகச்சுவைதான் நம் அரசியல்வாதிகளை பற்றி நினைக்கும்போது எனக்கு ஏற்படுகிறது.
உலகம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இக்காலகட்டத்தில் மிகவும் லாபகரமான சந்தையாக இந்திய நாடாளுமன்ற தேர்தல் திகழ்கிறது.தேனீர் கடைகளில் சர்வசாதாரணமாக புழங்கும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்ப்பதன் மூலமாக நமது ஜனநாயகத்தின் இன்றைய போக்கைப் புரிந்து கொள்ளமுடியும். தங்கி இருக்கும் இடத்திலிருந்து பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு ஒருமுறை சென்று திரும்ப நம் தலைவர்கள் செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?. சுமார் அறுபதாயிரம் ரூபாய். ஆனால் இவர்கள் தான் நம் ஏழைப்பங்காளர்கள்.எல்லாம் காலத்தின் கட்டாயம்.இந்த சூழலில் இடதுசாரிகள் யார், திராவிட கட்சிகளைச் சார்ந்தவர்கள் யார் என்பதை கண்டுணர முடியாதபடி எல்லோரும் சலிப்பான அரசியல் மொழிகளையே பேசிவருகின்றனர். மக்கள் ஜனநாயகத்தால் கட்டப்பட்ட நமது இந்தியாவை முதலாளித்துவ ஜனநாயகத்தை நோக்கித் திருப்பிய பெருமை அனைத்துக் கட்சி தலைவர்களுக்குமே உண்டு. வேட்பாளர்களின் நேர்காணலின் போது அவர்களிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதுதான். இந்த கேள்வியில் அடங்கியிருக்கும் அரசியலைக் கொண்டு நம்முடைய இன்றைய தேர்தலை புரிந்துகொள்வது மிக சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.
குடும்ப அரசியலை யார் யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள் அனைவரும் அதே சாக்கடையில் வீழ்ந்து தங்களது பச்சோந்தித் தனத்தை தமிழகத்திற்கு உணர்த்தியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாகிறோம். மக்களவை இடங்களோடு தன் மகனுக்காக மாநிலங்களவை இடத்தை சிறிதும் கூச்சமின்றி கேட்டுப் பெரும் மருத்துவர் ராமதாஸை இந்த விஷயத்தில் யாராளும் விஞ்சமுடியாது. தலைவர்களின் இம்மாதிரியான தடித்தனமான போக்கிற்கு முதல் காரணம் தொடர்ந்து அவர்களின் அடிவருடிகளாகவே இருந்து பழக்கப்பட்டுவிட்ட அக்கட்சித் தொண்டர்கள்தான். சுய லாப நோக்கங்களுக்காக நம் தலைவர்கள் மிக மோசமான தொண்டர்களையே தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் அவர்களால் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிகிறது.
ஈழத்தமிழர் பிரச்சனை இந்த தேர்தலில் பிரதான இடம் வகிக்கும் எனத் தெரிந்தவுடன் தமிழ்நாட்டில் அரங்கேற்றப்பட்ட கூத்துகளுக்கு அளவே கிடையாது. யுத்தமென்று வந்தால் சிலர் கொல்லத்தான் படுவார்கள் என்றும் அங்கு நடப்பது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்றும் பேசிவந்த அதிமுக பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா திடீரென இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுதான் இதுவரை அரங்கேற்றப்பட்டதிலேயே முக்கிய கூத்தாகும். மனிதச்சங்கிலி, ரயில் மறியல், கடை அடைப்பு போன்றவைகள் கூத்திற்கு வலுசேர்ப்பவைகளாகவே பயன்பட்டன. தினம் தினம் இலங்கையில் செத்து மடியும் தமிழர்களின் பிணங்களைக் கொண்டு இங்கு அரசியல் செய்யும் நம் தமிழகத் தலைவர்கள் நிச்சயம் கொலைகார சிங்களவெறியன் ராஜபக்‌ஷேவைவிடவும் மிகக் குரூரமானவர்கள்.
ஒரு எழுத்தாளனாக இந்த அசிங்கங்களைக் கடந்து செல்வது நிச்சயம் இயலாத காரியமே.தேர்தல் பிரச்சாரங்களையும் நம்முடைய தலைவர்களின் மேடைமுழக்கங்களையும் எதிர்கொள்ள நிச்சயம் தனித்திறன்வேண்டும்.அத்திறனைப் பெற நாம் எல்லாவற்றையும் இழந்து சூடு சுரணை அற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனாலும் எத்தனை நாட்கள்தான் மழையில் நனையும் எருமை மாட்டைப் போன்று அமைதியாகப் பொருத்துக்கொண்டிருக்க முடியும்?. நம் தலைவர்களின் தடித்தனங்களுக்கும் குரூரங்களுக்கும் எதிராக நம் குரலை ஒரு சிறிய அளவில் கூட உயர்த்த தயங்குவோமாயின் நம்மைவிடவும் கீழானவர்கள் வேறெவரும் இருக்கமாட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நெருக்கடியான இந்த அரசியல் சூழலில் நிச்சயம் உங்களின் கருத்துக்களும் எதிர்வினைகளும் இன்னும் கூடுதலான பல வாசல்களைத் திறக்கும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

1 comment:

gu said...

நண்பன் விஜிக்கு,
பத்திகளுக்கு இடையில் இடைவெளியை அதிகரிக்கவும்.

கூடியவரையிலும் பத்திகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்.


Post a Comment