Thursday, August 06, 2009

பட்டித் தெரு -சிறுகதை


ஜில்லா கலெக்டர் லூஷிங்டன் என்பவரின் காரியதரிசியாக இருக்கும் ஜான் இர்வின் என்பவர் தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரசிரண்டுக்கு அனுப்பும் மகஜர்:
பிரிட்டிஷ் கம்பெனி ஆளுகைக்கு பாத்தியப்பட்ட எவரும் இனி எந்தவிதமான கட்டடங்களையோ கோட்டைகளையோ கட்டக்கூடாது. அந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது. அதையும் மீறி செயல்படுபவர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தென்னாற்காடு ஜில்லாவில் உள்ள ஆதிச்சநல்லூரில் பிரிட்டிஷ் கம்பெனிக்கு எதிராக ஒரு குழு இயங்குவதாக கலெக்டர் லூஷிங்டனுக்கு ஒரு புகார் மனு வந்துள்ளது. அதில் அந்த குழுவிற்கு அதே ஜில்லாவில் உள்ள கண்டராதித்த சோழபுரத்திலிருக்கும் கம்பெனிக்கு பாத்தியதையான மாடுகள் அடைக்கும் பட்டியிலிருந்து வெடிமருந்துகள் சப்ளை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரின் அவசரம் புரிந்து அந்த குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கண்டராதித்த சோழபுரத்திலிருக்கும் அந்த பட்டியை இடிக்கவும் இதன் மூலம் ஆணை இடப்படுகிறது.

ஜான் இர்வின்.
முகாம்: தெற்கு நாகலாபுரம்
நாள் :21.3.1800.


”இந்த ஓலையைப் படிச்சப்புறமுமா பட்டிய இடிக்கனம்னு உங்களுக்கு தோணுது?” என ஆதங்கத்தோடு தங்கமுத்து நாட்டார் அவர்களைப் பார்த்துக் கேட்டார். பிரிட்டீஷ்காரர்களால் அனுப்பப்பட்ட பழுப்பேறியிருந்த அவ்வோலையை பத்திரமாக காப்பாற்றிவந்ததன் வலியை அவரது கேள்வியில் உணரமுடிந்தது. அதற்கு வடிவுடையம்மை ரியல் ஏஜென்சியின் அதிபரும் ஆளும் கட்சியின் ஒன்றிய செயலாளருமான ராமகிருஷ்ணன் கோபத்துடன் நாட்டாரைப் பார்த்து சொன்னார்: “அந்த ஓலைய வச்சிகினு நாக்குதான் வழிக்க முடியும்” அவரின் இந்த பேச்சை கேட்ட நாட்டாக்காரருக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது. உயிரைக் கொடுத்து போராடி வெள்ளையனிடமிருந்து காத்த அந்த பட்டியை நினைத்து கண்கலங்கினார்.ஆனால் ஒன்றிய செயலாளர் பட்டியை எப்படியும் இடித்தே தீர்வதென உறுதியாக இருந்தார். தாழ்ந்த குரலில் மீண்டும் நாட்டாக்காரரே பேசினார்: ”ஏந்தம்பி உங்க மனைப் பிரிவுல வர்ற தெருவ கொஞ்சம் தள்ளி ஓடப் பக்கமா மாத்திப் போட முடியாதா?”. அதற்கு “ஓடப் பக்கமா போட்டா எந்த நாயி வந்து வாங்கும்?” என சிடுசிடுத்த ஒன்றிய செயலாளர், “இவ்ளோ பணம் போட்ட ஒழைப்ப ஓடையிலா கொண்டு போடச்சொல்ற? பட்டிய இடிச்சி நெரவினாதான் மன எடுப்பா தெரியும்” என கோபத்தில் பொரிந்து தள்ளினார்.இனி அவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்று உணர்ந்த நாட்டார் அமைதியாக நின்றார். அவர்களும் சிறிது நேரம் இருந்துவிட்டு காரில் ஏறிச் சென்றனர். என்ன செய்தாலும் இம்முறை பட்டியை இடிப்பதிலிருந்து காப்பாற்ற முடியாது என அவர் உள்மனம் எண்ணியது.இக்கட்டான இத்தருணத்தில் ஷண்முக முதலியார் தன் பக்கத்தில் இல்லையே என நொந்து கொண்டார்.கூடியிருந்த கூட்டம் பலவாறாகப் பேசியபடி கலைந்து சென்றது.ஓர் மௌன சாட்சியைப் போல வெயில் காய்ந்து கொண்டிருந்தது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பட்டியை நாளை இடிக்கப்போகிறார்கள் என்ற செய்தியை கேள்வி பட்டதிலிருந்து வேம்பிவீட்டு அகிலாண்டத்தால் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை. பட்டிக்கும் அவளுக்குமான ஒரு தோழமை அவளை துடுக்குறச் செய்தது.”திருமணமாகி புகுந்த வீட்டிற்கு சென்று மறுநாளே பிறந்த வீட்டிற்கு திரும்பி வந்தபோது கூட நீ இந்த அளவிற்கு கஷ்டப் பட்டதில்லையே?”, என எதிர் வீட்டு தங்கம்மா கேட்ட போது, இப்ப எதுக்கு அந்த கதய கிண்டற? என அகிலாண்டம் திரும்ப கேட்டாள். ஷண்முகத்தின் மீதான தன் காதலையும்,அதை அவர் வேண்டாமென மறுத்ததையும் அறிந்த ஒற்றை சாட்சியாக வீற்றிருக்கும் பட்டியின் சித்திரம் அவள் மனதில் வெவ்வேறு எண்ணவோட்டங்களை ஏற்படுத்தியது. சிறைவாசம் முடிந்து அவர் விடுதலை பெற்று வந்தபோது ஷண்முகம் தன்னிடம் சொன்ன,” இனி எந்த பொம்பளைக்கும் என் வாழ்க்கையில எடம் இல்லை அகிலாண்டம், நீ போய் உம் புருஷனோட சந்தோஷமா இரு. பட்டதெல்லாம் போதும்” எனும் வார்த்தைகள் அவளின் காதுகளில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒலித்துக் கொண்டே இருப்பதை அவளால் நன்கு உணரமுடிந்தது. கோடை கத்திரி வெய்யிலைக்கூட பொருட்படுத்தாமல் அங்குமிங்கும் அலைந்தவள் கடைசியாக வீட்டிற்கு வெளியில் நின்றிருந்த புங்கை மரத்தின் கீழ் காலைநீட்டி போட்டபடி அப்படியே அமர்ந்தாள்.அவளுக்கு மூச்சு வாங்கியது. வெம்மையின் அடர்த்தி அவளுக்கு நீர்சுருக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பாத்திரம் கழுவ பானையில் வைத்திருந்த தண்ணீரைச் சாய்த்து குடித்தாள். பின் எழுந்து சிறுநீர் கழிக்க தோட்டத்திலிருந்த மாட்டுகொட்டகை நோக்கிச் சென்றவள் மாட்டு கொட்டகைக்கு கிழக்கே கம்பீரமாக நின்றுகொண்டிருந்த பட்டியையே பார்த்தாள்.கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட பட்டியின் சுவர்களில் ஆலமரம் நன்றாக வேர்விட்டு வளர்ந்திருந்தது.ஆங்காங்கே நிறைய குற்றுச்செடிகள் வளர்ந்து காற்றின் வேகத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருந்ததன. “எப்படி இருந்த கட்டடம் இப்படி சீர்கொலஞ்சி கெடக்கே” என மனதிற்குள் நினைத்துக்கொண்டே சிறுநீர் கழிக்க கீழே அமர புதரிலிருந்து ஒரு பாம்பு வளைந்து நெளிந்து சர சரவென பட்டி நோக்கிச் சென்றது. சிறுநீரை அடக்கி கொண்டு பயந்தபடி பாம்பு பாம்பு எனக் கத்திக்கொண்டே தெருவிற்கு ஓடிவந்தாள்.
”இந்த கண்றாவிக்குதான் இத இடிங்கனு சொல்றோம். ஆனா அந்த பள்ளத்தெரு ஷண்முகம் மொதலியாரு நா உசுரோட இருக்குறமுட்டும் இத இடிக்க உடமாட்டேன்னு சொல்றாரு” என்று சின்ன கணக்கமூட்டு ரங்கசாமி அகிலாண்டத்தைப் பார்த்து கோபத்துடன் சொன்னார்.அகிலாண்டத்திற்கு படபடப்பு சற்று அடங்கி இருந்தது.அவள் ரங்கசாமியைப் பார்த்து சொன்னாள்: ”ஆவூன்னா அத இடுச்சி தர மட்டமாக்கிடனம் உங்களுக்கு. இத தவிர வேர எதுவும் தெரியாதா ஒங்களுக்கு?”’ அவளின் கேள்வி ரங்கசாமியின் முகத்தை இறுக்கமாக்கியது. அவருக்கு மூக்கு நுனி வியர்த்து கோபத்தின் ரேகைகள் பரவத்தொடங்கியது. தன் பாட்டி வயதையொத்த அகிலாண்டத்திடம் அவரால் நேருக்கு நேராக பேசமுடியாமல் எக்கேடாவது கெட்டு நாசமா போங்க. எனக்கென்ன வந்தது? என்று மனதிற்குள் கருவிக்கொண்டார். ஆனாலும் நாளை யார் தடுத்தாலும் எப்படியாவது பட்டியை இடித்துவிடவேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டார். சூரியன் மெல்ல மேற்கு நோக்கிச் சரியத் தொடங்கியிருந்தது.
பள்ளத்தெரு ஷண்முக முதலியாருக்கு நாளை பட்டியை இடிக்கப்போகும் சங்கதி காற்று வாக்கில் வந்து சேர்ந்தபோது அவருக்கு மனது கனத்தது. தெருத் திண்ணையில் கிடந்த கயிறு கட்டிலில் ஆசுவாசப் படுத்திக்கொள்ள சற்று நேரம் தலை சாய்த்தவருக்கு பட்டி குறித்த பழைய சித்திரங்கள் மனத்திரையில் தோன்ற ஆரம்பித்தன.
தாது வருஷ பஞ்சம் தன் கோரமுகத்தை காட்டிக்கொண்டிருந்த நேரமது.ஏரியில் மாடுகளை மேய்த்து விட்டு ஷண்முகம் வீடு திரும்பும் போது இருட்ட ஆரம்பித்திருந்தது.சனிமரப்பான் ஓடை வழியாக மாடுகளை ஓட்டிவந்து பட்டியில் கட்டிவிட்டு தவிடும் தண்ணீரும் கொண்டுவர வீட்டுத் தோட்டத்திலிருந்த மாட்டு கொட்டகைக்குச் சென்றான். மரக்காலில் தவிட்டையும் குடத்தில் தண்ணீரையும் எடுத்துக்கொண்டு பட்டிக்கு வந்து தொட்டியில் தவிட்டைக் கொட்டி தண்ணீரை ஊற்றி கரைத்து மாடுகளை குடிக்கச் செய்து பின் அவற்றை மீண்டும் முளைக்குச்சியில் கட்டிவிட்டு நிமிர்ந்தபோது ஷண்முகத்திற்கு தண்டுவடத்தில் சுளீர் என வலி தோன்றி மறைந்தது.கூலமான வைக்கோல்களை ஒதுக்கி தள்ளிவிட்டு வைக்கோல் புடுங்கிவர வைக்கோல் போரை நோக்கி நடந்தான். அவனுக்கு நன்றாக வியர்த்த்து. இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைத்துக் கொண்டான். போரில் வைக்கோலை புடுங்கி பந்துபோல சுற்றி எடுத்துக் கொண்டு பட்டிக்குள் நுழைந்தபோது இருட்டில் வேறு யாரோ மாட்டை கட்டிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ஆனால் யார் என சட்டென்று அடையாளம் காணமுடியாததால் அவன் கேட்டான்: “ யாரது?” . அதற்கு இருளில் இருந்து பதில் வந்தது: “ அம்மாக்கண்ணு”. புதுவீட்டில் மாடு மேக்கும் அம்மாக்கண்ணுதான் உள்ளே இருப்பது என்று தெரிந்ததும் ஒருவித புது தெம்புடன் வைக்கோலை எடுத்துச்சென்று மாடுகளிடம் போட்டுவிட்டு அவ்ளைப்பார்த்துக் கேட்டான்: ”இன்னா இந்நேரத்துல வந்து மாட்ட கட்ற?”. அதற்கு அவள் சலிப்பாக சொன்னாள்: “வாசியாத்தா கோயில் ஏரிக்கு தான் ஓட்டிகினு போனேன். ஆனா இந்த எழவெடுத்த மாடுங்க மதியத்துக்கு மேல வளமோட்டு பாறைக்கா மேச்சலுக்கு கெளம்பிடுச்சிங்க. அங்க இருந்து ஓட்டிகினு வரதுக்குள்ள உசுரு போயி உசுரு வந்துடுது”.
அவள் அலுப்பாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் மெல்ல நடந்து அவளருகில் சென்றான். நன்றாக இருட்டிவிட்டிருந்தது.தெருவில் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். மாடுகள் வைக்கோல் மெல்லும் சத்தம் நன்றாக கேட்ட்து. மூத்திர நெடி வேறு மூக்கைத் துளைத்தது. இருட்டு அவனுக்கு தைரியத்தையும் சுதந்திரத்தையும் கொடுக்க அவன் மெல்ல அவளை தொட்டான். திடீரென அவன் தொடுகையால் அவள் கலவரமடைந்து நிமிர்ந்து பார்த்து அவனை முறைத்தாள். அவளின் உடம்பு மெல்ல நடுங்குவதை அந்த அடர்ந்த இருளிலும் அவனால் உணர முடிந்தது. அவனையும் பயம் தொற்றிக்கொண்டு தான் இருந்தது. சிறிது நேரம் அழ்ந்த மௌனம் அங்கு நிலவியது. மாடுகள் கால்களால் தரையை உதைத்தன. பட்டிக்கு வலப்பக்கமிருந்த தென்னை மரத்திலிருந்த பறவைகள் சடசடவென சிறகுகளை அடித்துக் கொண்டு பறந்தபோது அவன் மெல்ல அவளிடத்தில் கேட்டான்: “ ஏன் உனக்கு இதுல விருப்பம் இல்லயா?”. அவள் ஏதும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். மீண்டும் அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்: “ நா கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டியா?”. அவள் மெல்லிய குரலில் அவனிடம் சொன்னாள்: “ சட்டுனு கேட்டா என்ன சொல்றது?”. அவளின் இந்த பதில் அவனுக்கு உள்ளூர சந்தோஷத்தையும் கிளர்ச்சியையும் அளித்தது.மறுபடியும் அங்கே கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. மீண்டும் அவனே கேட்டான்: “நேரம் ஆவுதில்ல.சட்டுனு சொல்லேன்”. அவள் தலை கவிழ்ந்தபடி அவனிடம் கேட்டாள்: “யாராவது வந்துட்டாங்கனா?” என வார்த்தையை இழுத்தாள். அவளின் இந்த கேள்வி அவனுள் காமத்தின் தீயை படரவிட்டது. அவளும் தயாராகவே இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் இனி உரையாடல்கள் இங்கு பயனற்றவை என நினைத்து செயல்பாட்டில் இறங்கத் தொடங்கினான். வைக்கோல் மீது அவளை தள்ளி இறுக்கி அணைத்தான். வளையல்கள் உடையும் சத்த்த்தைக் கேட்க முடிந்தது.அவள் சிணுங்கியபடியே கேட்டாள்:”என்ன காஞ்ச் மாடு கம்புல பூந்த மாதிரி ஆட்டம் போடற? வூட்ல உண்டாகி இருக்காளா?”. “ஆமா .சொகத்த அனுபவிச்சி ரொம்ப நாளாவது”, என்றான். ”அதான பாத்தேன்” எனக் கூறி அவளும் அவனை இறுக்கி முத்தமிட்டாள். அடர்ந்த இருளை போன்று காமமும் அவர்கள் மீது மெல்ல படர்ந்தது.
பட்டியின் சுவற்றிலிருந்த பல்லி ஒரு முறை கத்தி ஓய்ந்தபோது அவன் புரண்டு படுத்தான்.அவள் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டிருக்கும் போதே பால் கறப்பதற்காக கொட்டாகாரமூட்டு சுப்பரமணி பால் சொம்போடு உள்ளே நுழைந்தவர் இருவரையும் பார்த்தார். ஏதும் கேட்காமல் வந்தவழியே திரும்பச் சென்றார். இருவரது உடம்பும் பயத்தால் வெளிறி நடுங்க ஆரம்பித்தது.
“இதுக்குதான் நான் அப்பவே சொன்னேன். ஈஸ்வரா என்ன ஆகப்போவுதோ. என் ஊட்டுகாரனுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் கண்டம் துண்டமா வெட்டிடுவான்” என அவள் பயத்தால் உளற ஆரம்பித்தாள். “உனக்கு மட்டும் தான் பிரச்சனையா எனக்கு இல்லயா? எனக்கும் தான் கொழந்தை குட்டிங்க இருக்கு” என்றான். சற்று நேரம் அங்கு மயான அமைதி நிலவியது.பிறகு அவனே அவளிடம் பேசினான்: “ ஒன்னும் பிரச்சனை வராது. அப்படி எதாவது வந்தா நாம இல்லனு சொல்ல வேண்டியதுதான்.” சொல்லிவிட்டானே தவிர அவனுக்கு உள்ளூற நடுக்கமாகவே இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு இருவரும் ஒருவர் பின் ஒருவராக பட்டியிலிருந்து வெளியேறினர். தெருவில் இன்னும் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நாலைந்து நாய்கள் குரைத்துக்கொண்டே பள்ளத்தெரு நோக்கி ஓடின.
முதல்நாளிரவு பட்டியில் நடந்த சங்கதியை தெருமுனை டீகடையில் அனைவரும் உற்சாகத்துடன் பேசிக்கொண்டனர். ஏற்படப் போகும் பிரளயத்தை உணராது ஷண்முகம் வீட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். செய்தி ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு நவுட்டுகாரமுட்டு அஞ்சலை மூலம் ஷண்முகத்தின் மனைவியை அடைந்த போது மணி எட்டாகியிருந்தது. அவன் பட்டியில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான். சாணியை வாறிக்கொட்டிவிட்டு வைக்கோல் கொண்டுவந்து போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது வீட்டில் பாத்திரங்கள் இறைந்துகிடந்தன. அம்மா ஒரு மூலையிலும் மனைவி ஒரு மூலையிலுமாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். பிள்ளைகள் ஏதும் விளங்காமல் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய பையனை பிடித்து அவன் மனைவி பளார் பளார் என கன்னத்தில் அறைந்தாள்.பையன் வலி தாங்க முடியமால் துடித்ததைக் கண்ட இவன் கோபத்தோடு அவளைப்பார்த்து கேட்டான்: “ ஒனக்கு என்ன புத்திகித்தி கெட்டு போச்சா. கொழந்தய போட்டு ஏன் மாடு மாதிரி அடிக்கற?” அவன் கேள்வியை அவள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அவள் பேசாதது அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான்.அவள் பெருஞ்சீற்றத்தோடு அவனைப் பார்த்து கை நீட்டி கேட்டாள்: “ஒரு பொம்பளையைக் கை நீட்டி அடிக்கறயே நீ எல்லாம் ஒரு ஆம்பளையா?” கேட்டு முடித்து அவன் முகத்தை நோக்கிக் காறித்துப்பினாள்.அவளுடைய வார்த்தைகள் அவனுள் கூர்மையான ஊசியைப் போல இறங்கின.அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.அவளை இழுத்துப் போட்டு அடி அடியென அடித்தான்.”புள்ளத்தாச்சிக் காரின்னு கூட பாக்காம போட்டு இப்படி அடிக்கறியே பாவி” என கத்திக் கொண்டே அவனுடைய அம்மா ஓடிவந்து தடுத்தாள்.அவளையும் எட்டி உதைத்தான். ”அடிடா... நல்லா அடி, நா செத்தா தான அவகூட தெனத்துக்கும் படுக்க முடியும்?” என்று அவன் மனைவி கேட்ட கணத்தில் அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது.அவனுக்கு நா வறண்டு போனது. பதற்றமும் பயமும் அவனைக் கவ்விக்கொண்டது.தலைசுற்றுவதைப் போன்று உணர்ந்தவன் அப்படியே சக்தியற்றவனாகத் தரையில் அமர்ந்தான்.” ஏன் இப்ப அடிக்க வேண்டியதுதான, பொட்டையாட்டம் ஏன் உக்காந்துட்ட” என்ற அவளின் வார்த்தைகள் அவனது இதயத்தைக் குத்தி ரணமாக்கின.பேச வார்த்தைகள் அற்றவனாக அவனிருந்தான்.இது நாள்வரை பொத்திப் பாதுகாத்து வந்த தன் அந்தரங்கத்தை தன் அம்மாவின் முன்னிலையில் அவள் நெருப்பிட்டுப் பொசுக்கி விட்டாளே என மனதிற்குள்ளாகவே புழுங்கினான்.சுவற்றில் ஆடிக்கொண்டிருந்த கடிகாரத்தின் பெண்டுல சத்தம் கர்ணகொடுரமாக இருந்த்து.அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் என்ன பிரச்சனை நடக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியாமல் பிள்ளைகள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தனர். யாரும் எதுவும் பேசிக்கொள்ள முடியாதபடி சூழல் இறுக்கமாகவே இருந்த்து. பின் மெல்ல எழுந்து நடந்து தெருத் திண்ணையில் கிடந்த நார்க்கட்டலில் படுத்துக்கொண்டான் அவன்.இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்ற பயம் அவனைக் கவ்விக்கொண்டது.தெருவில் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் செல்லும் சத்தம் கேட்டது.
“அம்மாக்கண்ணு தூக்கு மாட்டிகினாளாம்” என்று தெருவில் யாரோ கத்திக்கொண்டு ஓடியபோது அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. ”கடவுளே அவளுக்கு ஒன்னும் ஆயிடக்கூடாது” என மனதிற்குள் வேண்டிக் கொண்டான். ஆனாலும் பயம் அவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. தெருவில் சிலர் இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டிருந்தனர். யாரையும் கேட்க முடியாத இக்கட்டான நிலை. அவளுக்கு என்ன ஆனதோ என தெரிந்துகொள்ளும் பொருட்டு திண்ணையை விட்டு கீழே இறங்கினான். அப்போது வாலிவீட்டு ராமனாதன் அந்த பக்கமாக இருந்து வந்து கொண்டிருந்தார். அவர் முகம் வெளுத்திருந்தது. அவருடைய பார்வை இவனை ஆழ ஊடுருவி துளைத்தது. அவர் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என நினைத்துக் கொண்டு அவரிடம் கேட்டான்: “அம்மாக்கண்ணுக்கு என்னாச்சி, ஒரே சத்தமா இருக்குதே?”. அவர் கைகளை உயரே தூக்கிக் காட்டியபடி சொன்னார்: ” போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடுத்துபா. அவளுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான்” என்று அவர் சொல்ல சொல்ல அவனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று அறுபட்டு வீழ்வதை உணர்ந்தான்.எல்லாவற்றுக்கும் தானே காரணம் என நினைக்க நினைக்க மண்டை வெடித்துவிடும் போல இருந்தது அவனுக்கு. வேதனையில் துடிக்கும் அவனைப் பார்க்க அவருக்கு சங்கடமாக இருந்தது. அவனை ஆறுதல் படுத்தும் விதமாக அவர் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் சாவுதான்னு முடிவெடுத்தா ஊருல பாதி ஜனத்தொகை இருக்காதே” என்று நிறுத்தி அவனை ஒரு முறைப் பார்த்துவிட்டு சொன்னார்: “ இப்ப இருக்கிற நிலயில நீ அங்க போக வேணாம். அவ புருஷங்காரன் வைக்கிறனா தீக்கிறனா பார்னு சத்தம் போட்டுகினு இருக்கான்”. அவர் இப்படி சொன்னது அவனுக்கு மேலும் பயத்தை அதிகப்படுத்தியது. சூழல் மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டு வருவதை உணர்ந்தவன் மாரியம்மன் கோயில் தெருவழியாக கழனி நோக்கி நடந்தான். தெரு முனை டீகடையில் இருந்தவர்கள் அவனை பார்த்த விதம் அவனுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது.வேக வேகமாக நடந்து கிணற்று மேட்டை அடைந்தான். பம்ப் செட் அறைக்கு முன் புறம் நிழலுக்காக போடப்பட்டிருந்த கீற்று கொட்டகையின் எறவானத்தில் வைத்திருந்த சாவியை எடுத்து பம்ப் செட் அறையை திறந்தான். உள்ளே சென்று வலது புற மாடத்தில் பருத்திக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து முழுவதுமாக குடித்தான். மருந்தின் வாடை அவனுக்கு குமட்டலை ஏற்படுத்த வயிற்றைக் கலக்கிக் கொண்டு வாந்தி வந்தது.மோட்டார் கொட்டகைக்கு வெளியில் வந்து எடுத்தான். அதன் பின்னரும் வாந்தி வருவதைப் போல உணர்ந்தவன் வெளியில் வந்து பருத்திச் செடியிலிருந்த இரண்டு மூன்று சிறிய பருத்தி காய்களை பறித்து வாயில் போட்டு மென்று விழுங்கினான்.குமட்டல் சற்று குறைந்திருந்தது. மீண்டும் உள்ளே சென்று மருந்து பாட்டிலை மூடி முன்பிருந்தது போலவே வைத்து விட்டு பம்பு செட்டைப் போட்டான். கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு பனம் பாயை எடுத்து கீழே போட்டு படுத்துக் கொண்டான். அங்கு இந்நேரம் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறதோ என்று எண்ணியவன் எப்படி பார்த்தாலும் இப்பிரச்சினைக்கு நாம் தான் காரணம், ஆக நாமே தான் முடித்து வைக்க வேண்டும் என்றும் மனதிற்குள் சொல்லிக்கொண்டான். அருந்திய மருந்து மெல்ல அதன் பணியைத் தொடங்கிய போது அவனுக்கு மயக்கம் வருவதைப் போன்று உணர்ந்தான்.கண்கள் செருக ஆரம்பித்தன.
சிறிது நேரத்திற்கு பிறகு பருத்தி எடுக்க வேம்பி வீட்டு அகிலாண்டம் கூடையுடன் ஷண்முகத்தின் கழனிக்கு வந்து சேர்ந்த்தாள்.கீழ்த் தளை ஓரமாக நடந்து வந்து மேல் தளையில் ஏறியவளுக்கு ஆச்சரியம். மடை மாற்றப் படாமல் தண்ணீர் ஒரு பாத்தியிலிருந்து வழிந்து வேறு பாத்திகளுக்கு ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தவள் சற்று நேரம் யோசித்தாள். மடை மாற்றாமல் யார் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள் என யோசித்த படியே மோட்டார் கொட்டகையைப் பார்த்தாள். கதவு ஒருக்களித்து சாத்தியிருப்பதை கண்டவள் பம்பு செட்டை கிளப்பி விட்டுட்டு அங்கு யார் என்ன செய்கிறார்கள் என யோசித்துக் கொண்டே மோட்டார் கொட்டகையை நோக்கி நடந்தாள்.வெளியில் நின்று ”உள்ள யாரு?” என்று கேட்டாள். எந்த பதிலும் வராத்தைக் கண்டு ஒருக்களித்திருந்த கதவைத் தள்ளினாள். அங்கே வாயில் நுரை தள்ளியபடி மயங்கிக் கிடந்த ஷண்முகத்தை பார்த்தவள் பயத்தால் ஓங்கி கத்தினாள்: ”யாராவது ஓடிவாங்களேன். ஷண்முகத்துக்கு நொப்பும் நொரையும் தள்ளிகுனு கெடக்கு”. அவன் படுத்து கிடந்த விதம் அவளுக்கு பயத்தை மேலும் அதிகரித்த்து. வெளியில் வந்து மீண்டும் சத்தம் போட்டு கூப்பிட்டாள். பக்கத்து கழனியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர்.முதலில் வந்த கோடியாமுட்டு அப்பர் ஷண்முகத்தை புரட்டி படுக்க வைத்து சுவாசத்தை சோதித்தார்.அவனது வாயிலிருந்து பூச்சி மருந்தின் வாசனை வந்து கொண்டுருந்தது. சுவாசம் ஒரே சீராக வரவில்லை என்பதை உணர்ந்தவர் அவனது தொடையில் பலம் கொண்ட மட்டும் அழுந்த கிள்ளினார். அவன் உடலில் சிறு அசைவும் ஏற்படாததைக் கண்டு அவருக்கு உள்ளூர பயம் ஏற்பட்டது. அதற்குள் அக்கம் பக்கத்திலிருந்து பலரும் வந்து சேர்ந்தனர். அப்பர் பம்ப் செட் அறையை சுற்றும் முற்றும் பார்த்தார்.மாடத்திலிருந்த பூச்சி மருந்து டப்பியை பார்த்தவர் எழுந்து அதை எடுத்து திறந்து பார்த்தார்.அது காலியாக இருந்தது.அவர் கூட்டத்தை பார்த்து சொன்னார். ”ஏம்பா யாராவது ரெண்டு பேர் வாங்க.மருந்து குடிச்சிருக்கிறான்னு நெனைக்கிறேன். கட்டல்ல தூக்கினு தான் போவனும்”. அவர் அவ்வாறு கூறியதும் அங்கிருந்தவர்களுக்கு உள்ளூர பயம் ஏற்பட்டது.மூன்று பேர் அவனை கட்டலில் தூக்கிப் போட்டுக் கொண்டு வேக வேகமாக ஓடினர். கூட்டம் பின்னால் ஓடியது. வெயில் நின்று காய்ந்து கொண்டிருந்தது.
ஷண்முகம் மருந்து குடித்த விஷயம் ஊருக்குள் பரவிய போது அம்மாக்கண்ணுவின் சாவில் கூடியிருந்த கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு பின் இரு தரப்பு பிரச்சனையாக மெல்ல மாறிக் கொண்டிருந்தது.அம்மாக்கண்ணுவின் கணவன் அழுதழுது சோர்ந்து போய் வேப்பமர நிழலில் போடப் பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.ஊர் இரு பிரிவாக பிரிந்து அம்மாக்கண்ணுவின் சாவையும் ஷண்முகம் மருந்து குடித்ததையும் பேசிக்கொண்டது. விஷயமறிந்து ஷண்முகத்தின் மனைவியும் அவனது தாயும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓடினர்.அவர்கள் அவ்வாறு ஓடுவதைக் கண்ட ஷண்முகத்தின் குழந்தைகள் ஏதும் புரியாமல் அழுது கொண்டே பின்னால் ஓடினர். இதை பார்த்துக் கொண்டிருந்த தெரு மக்களை ஒரு வித பதற்றம் தொற்றிக்கொண்டது.
ஷண்முகத்தை மேல்வாலை இருள பூசாரியிடம் கொண்டு சென்றனர்.அவர் பரிசோதித்து விட்டு ஒரு சில மூலிகைகளை கல்லுரலில் நசுக்கி சாறு பிழிந்து அவனது வாயை திறக்கச் சொல்லி ஊற்றினார்.பூசாரி யாரிடமும் எதுவும் பேசாமல் அழ்ந்த யோசனையில் இருந்தார். பின் அப்பரை பார்த்து, “ வாழ மட்ட இருந்தா கொஞ்சம் கொண்டு வாங்க. இடிச்சு சாறு எடுத்து கொடுக்கனும்” என்று சொன்னார்.வாழை மரங்கள் எங்கெங்கு இருக்கும் என சற்று நேரம் யோசித்தவர் தன்னுடன் இன்னொருவரை அழைத்துக் கொண்டு வாசியம்மன் கோயில் பக்கத்தில் இருக்கும் மாந்தோப்புகாரர் கழனி நோக்கி சென்றார்.விஷயம் கேள்விப்பட்டு வாழைமட்டை சாறை இடித்துக் கொண்டு ஊரே திரண்டது.பூசாரி வாழைமட்டை சாற்றை உள்ளுக்கு கொடுத்து சிறிது நேரம் கழித்து மீண்டும் கொஞ்சம் பச்சிலைச் சாறைக் கொடுத்தார்.
ஷண்முகம் உடல்தேறி வெளியில் வர இரண்டு வாரகாலம் பிடித்தது.ஊரின் உருவம் முற்றாக மாறிவிட்டதைப்போன்று உணர்ந்தவன் கழனியை நோக்கி நடந்தான். இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தேறிய அனைத்து சம்பவங்களும் அவன் மனத்திரையில் ஒன்றன் பின் ஒன்றாக தோன்றிமறைந்தன. ஆசுவாசப் படுத்திக்கொள்ள நன்றாக மூச்சை இழுத்து விட்டான். அவனது உடலில் நடுக்கம் ஏற்பட்டு மெல்ல மனம் கலவரம் அடைந்தது. மோட்டார் கொட்டகைக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டு வளமோட்டுப் பாறை நோக்கி நடந்தான். வளமோட்டு பாறை பனைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கு ஏன் செல்கிறோம் என்று அவனால் உணரமுடியவில்லை. பாறைக்கும் மேற்கே பனைஓலையால் ஒரு சிறு கொட்டகை போடப்பட்டிருந்தது. அதன் அருகே அமர்ந்து சிலர் மொந்தைகளில் இருந்த கள்ளை அருந்திக் கொண்டிருந்தனர். ஷண்முகமும் கொட்டகையின் அருகில் சென்று அமர்ந்தான். இவனைப் பார்த்த சிலர் முகம் திருப்பிக் கொண்டனர். அவன் எதுகுறித்தும் கவலைகொள்ளாமல் தனக்கும் இரண்டு மொந்தை கள் வேண்டுமென்று கடைகாரரிடம் கேட்டான். கடைகாரருக்கு ஒன்றும் புரியாமல் அவனிடம் கேட்டார்: “ இன்னா ஷண்முகம் எப்பவும் இல்லாத புது பழக்கம்?”. அவரின் கேள்வி அவனை சங்கடப் படுத்தியது. இருந்தும் அவன் சோர்ந்த குரலில் அவரிடம், “மனசு சங்கடமா இருக்குதுனா அதான்...” என இழுத்தான். அவனது நிலையை உணர்ந்தவர் வேறெதுவும் கேட்காமல் கள்ளை மொந்தையில் ஊற்றி தொட்டுக் கொள்ள வறுத்த கருவாடை கொடுத்தார். மொந்தையை வாங்கி வாய் அருகே கொண்டு சென்றவன் முகத்தை சுழித்து பின் கண்களை மூடிக்கொண்டு மடக் மடக்கென குடித்தான். சிலர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். கள்ளின் குமட்டலை போக்க அவன் இலையிலிருந்த கருவாட்டை வாயில் போட்டு மென்றான். பனைமரத்தில் ஏறி கள் இறக்குபவர்களையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் பின் அடுத்த மொந்தை கள்ளையும் மடக் மடக்கென குடித்து கருவாட்டை தின்றான். லேசாக தலை சுற்றுவதைப் போல இருந்தது அவனுக்கு. காசைக் கொடுத்துவிட்டு தள்ளாட்டத்தோடு நடந்தவனை அங்கிருந்தவர்கள் பார்த்து வேடிக்கையாகச் சிரித்தனர்.
மறுநாளும் காலையிலேயே அவன் எழுந்து வளமோட்டு பாறை நோக்கி நடந்தான். முந்தின இரவு வீட்டில் நடந்த சண்டையைப் பற்றிய நினைவு அவனுக்கு வந்தது.சாப்பிட்டுவிட்டு எல்லோரும் படுத்து உறங்க ஆரம்பித்திருந்தனர்.அதீத போதை அவனுக்கு உடற்பசியைத் தூண்டியது.திண்ணையில் இருந்து எழுந்தவன் நேராக அவன் மனைவி உறங்கும் சமையலறைக்குச் சென்றான். அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்து மெல்ல அவளைச் சீண்டினான். பதரியடித்து எழுந்தவள், “என்ன வேணும்” என்றாள். ஒரு மாதிரி சிரித்துக் கொண்டே அவளை அவன் இறுக்கி அணைக்க, அவள், “சீ விடு என்னை” என அவனைப் பிடித்து தள்ளினாள். அவள் விளையாட்டிற்காக பிகு செய்கிறாள் என்றெண்ணி மீண்டும் அவளை அணைக்க கிட்டே சென்றான். தள்ளாடி தள்ளாடி அவன் நெருங்குவது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “மரியாதயா தெருவுல போயி படு. கிட்ட வராத. அப்புறம் அசிங்கமாகிடும்” என அவள் சொல்லச் சொல்ல கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு. கோபம் அவனுக்கு வெறியை உண்டாக்கியது. அவன் ஆக்ரோஷத்தோடு அவளை இறுக்கி அணைத்தான்.அவள் அவனைக் காறித் துப்பிக் கொண்டே தன் வலுவையெல்லாம் திரட்டி அவனை காலால் எட்டி உதைத்தாள். அவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். தன் ஆண்மை நசுக்கப் பட்டதாக உணர்ந்தவன் கோபம் கொப்பளிக்க அவளிடம்,” அப்ப என்னிது வேண்டாம்னா வேற எவன்து ஒனக்கு கேட்குது” எனக் கேட்டான். அதற்கு அவள் அவனிடம்,”ஒழுங்கு மரியாதையா பேசு. உன்ன மாதிரி நெனச்சிட்டயா என்னையும்” என்று கேட்டது மேலும் அவனை கோபமூட்ட அவன் ஆத்திரத்தோடு ,” எவங்கிட்ட காட்டணம்ணு தோணுதோ அவங்கிட்டயே போ. இனி ஒரு நிமிஷம் இங்க இருக்க்க் கூடாது” என சொல்லிக்கொண்டே அவளை அடிக்க கை ஓங்கிக் கொண்டு வந்தான். “இந்த அக்ரமத்தை கேக்க யாரும் இல்லயா” என கத்திக்கொண்டே அவள் அவனைப் பிடித்து தள்ளினாள். அவன் கதவில் மோதி கீழே சரிந்தான். அதற்குள் சத்தம் கேட்டு அவனுடைய அம்மா எழுந்து ஓடிவந்தாள். “சிவனே அர்த்தராத்திரியிலுமா இப்படி யாராச்சும் சண்டை போடுவாங்க” என மருமகளைப் பார்த்துக் கேட்டாள். பின் அவர்களுக்குள் சண்டை வலுத்தது. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். மறுநாள் விடியற்காலையிலேயே இனி இந்த குடிகாரனோடு வாழமுடியாது என்று அவன் மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவள் தாய் வீட்டிற்கு சென்றாள். எப்படியும் இங்கு வந்துதானேயாக வேண்டும் என்று நினைத்து அவளை தடுக்கவில்லை அவன். நாள் முழுக்க அவன் வளமோட்டு பாறையிலேயே செலவழித்தான். போதை தலைக்கேறிய நிலையில் அவன் தேம்பித்தேம்பி அழுவதைப் பார்த்தவர்கள் அவன் நிலை கண்டு வருந்தினார்கள்.அதீத போதை அவனுக்கு மேலும் தளர்ச்சியைக் கொடுத்தது.சவரம் செய்யாத முகமும் அழுக்கு படிந்த உடையும் அவனை ஒரு பைத்தியக்காரனைப் போல உருமாற்றியிருந்தது. பரிதாப்ப் பட்டு அவனுக்கு சிலர் அறிவுரைகளைக் கூறினர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலையில் அவன் இல்லாமலிருந்தான். கொஞ்சநாளில் அவன் வளமோட்டு பாறையே கதியென்று கிடக்க ஆரம்பித்தான்.
சித்திரை மாத வாசியாத்தாள் கோவில் பொங்கல் இடும் திருவிழா அன்று காலையிலேயே எழுந்துவிட்ட ஷண்முகம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெருமுனையில் இருக்கும் தேநீர்கடைக்குச் சென்று, ஒரு தேநீர் சொல்லிவிட்டு விசுபலகையில் அமர்ந்தான்.எல்லோருடனும் பேசவேண்டும் என அவனது மனம் சலனப்பட்டது. ஆனால் சட்டென்று பேச முடியவில்லை. டீயைக் குடித்துவிட்டு மீண்டும் வீடுநோக்கி நடந்தான். தெருவில் நின்றுகொண்டு அம்மா யாருடனோ சண்டைப் போட்டுக்கொண்டிருப்பதை தொலைவில் இருந்தே பார்த்தவன் வேகமாக நடந்தான். அருகில் வந்தவுடன் தன் மாமியாருடன் தான் அம்மா சண்டையிடுகிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. அவனுடைய குழந்தைகள் என்ன நடக்கிறதெனத் தெரியாமல் அழுதுகொண்டிருந்தனர். எதற்காக அம்மா சண்டையிடுகிறாள் என்று அவனால் உணரமுடியவில்லை. அவர்களாகவே சொல்வார்கள் என்று சிறிது நேரம் காத்திருந்தான். அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தோன்றவில்லை.அதற்குமேலும் பொருக்க முடியாமல் அவன் அவர்களிடம் கேட்டான்: “அப்படி என்னதாம்மா பிரச்சனை?” . அவனுடைய இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழித்தாள்.ஆனால் அவனுடைய மாமியார் வாயிலிருந்து தீ கங்குகள் போல வார்த்தைகள் வந்து விழுந்தன: “கிளிய வளத்து கொறங்குகிட்ட கொடுக்கற மாதிரி எம் பொண்ண உங்கிட்ட கொடுத்தேன். அவ வாழ்க்கய நாசமாக்கிட்டயே நீ நல்ல கதிக்கு போவியா?” மாமியாரின் இந்த கேள்விக்கு அவனால் பதில் சொல்லமுடியவில்லை.அதற்குள் கூட்டம் கூடத்தொடங்கியிருந்தது. அவன்,”வாங்க எதா இருந்தாலும் உள்ள போயி பேசிக்கலாம்” என்று மாமியாரிடம் சொன்னான்.அதற்கு அவள்,”இங்க குந்தப்போட்டு ஒக்காந்து சாப்பிடவா வந்திருக்கேன், போடா பொட்டக் கமினாட்டி பேச வந்துட்டான்” என சொல்ல அவனுடய அம்மாவுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.அவள் அவன் மாமியாரைப் பார்த்து “யாரடிப் பார்த்து பொட்டயன்னு சொல்ற, செருப்பு அட்ட வுட்ரும் நாயே. உம்பொண்ணுக்கு அரிப்பெடுத்து எவன் கூடவோ ஓடனதுக்கு இவன் என்னாடி பண்ணுவான். ஆம்புளனா அப்பிடி இப்பிடினுதான் இருப்பாங்க.அந்த நாயில்ல வெந்தத தின்னுட்டு இங்கே கெடந்திருக்கனும். கொழந்தைங்கள வச்சிருக்க துப்பில்ல வந்துட்டா த்தூ” என்று காரித்துப்பிவிட்டு ,”எங்கொழந்தைகளை எங்களுக்கு பாத்துக்கத் தெரியும், ஒழுங்கு மரியாதயா ஊடு போய்ச் சேரு” என ஆத்திரத்தோடு சொன்னாள். அவன் வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு கூனிக் குறுகிப் போனான். அதற்கு மேல் அங்கு அவனால் நிற்க முடியவில்லை. தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். அப்போது அவன் மிகவும் வெறுமையாக உணர்ந்தான். வாய் விட்டு அழவேண்டும் போல இருந்தது அவனுக்கு.குழந்தைகளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு அவள் மீதான ஆத்திரம் கூடியது.மேலும் அவர்களின் எதிர்காலம் தொடர்பாகவும் அவன் மனதில் புதிய வைராக்கியம் தோன்றி மறைந்தது. அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் அவர்களை அமரச் செய்து சாப்பிட ஏதாவது இருக்கிறதாவெனப் பார்க்க அடுப்படி நோக்கி நடந்தான். தெருவில் சத்தம் அடங்கியிருந்தது. கூட்டம் களைந்து சென்றபின் அவன் அம்மா உள்ளே வந்தாள். அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஒரு புழுவைப்போல அவன் மனம் துடித்தது. தன் தாயை நிமிர்ந்து பார்க்கக்கூட முடியாமல் தெருத் திண்ணையில் வந்து அமைதியாக கண்களை மூடிப் படுத்தான்.அவன் மனத்திரையில் தொடர்பற்ற பல காட்சிகள் தோன்றி மறைந்தன. தெருத் திண்ணையில் படுத்திருந்த ஷண்முகத்துக்கு புழுக்கம் தாங்காமல் புரண்டு புரண்டு படுத்தான். அப்போதும் உறக்கம் பிடிக்கவில்லை.வெளியில் வெயில் தகித்துக் கொண்டிருந்தது.துண்டை உதறித் தோலில் போட்டுக்கொண்டு வளமோட்டுப் பாறை நோக்கி நடந்தான்.
அந்த வருடத் தொடக்கத்தில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தான்.அன்றும் வழக்கம் போல வெயில் கொளுத்தியது.அனல் காற்றே எங்கும் வியாபித்திருந்தது. ஒரு மரத்தில் கூட இலைகளின் அசைவைக் காணமுடியவில்லை.மனம் சந்தோஷமாக இருப்பது போல உணர்ந்தவன் குடிக்க நினைத்து வளமோட்டு பாறை நோக்கி நடந்தான்.அவ்வளவாக குடிப்பதில்லை என்றாலும் முற்றாக குடியை அவன் விட்டுவிடவில்லை. எப்படியும் நிறுத்திவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வான். வெயிலின் உக்கிறத்தால் பனந்தோப்பில் கூட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது.அவர்களைப் பார்த்தவுடன் ஷண்முகத்திற்கு மனம் பாரமாகத் தோன்றியது.வாழ்க்கையை அதன் போக்கில் அணுக நினைத்தது தவறோ என்றும் தான் இதுவரை சரியாக எதையும் அணுகவில்லையோ என்றும் மாறி மாறி யோசித்தான்.வளமோட்டுப் பாறையேறி தெற்கு நோக்கி கீழாக இறங்கி தோப்புக்குள் நுழைந்ததும் அவன் முகத்தில் குளிர்ந்த காற்று படருவதை உணர்ந்தான்.கள் சேந்தும் பானைகளுடன் சிலர் மரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர்.இறக்கியவுடனே கள்ளை குடித்துவிடவேண்டும் எனும் ஆர்வத்தில் சிலர் மரத்தின் கீழே காத்துக் கொண்டிருந்தனர்.இன்னும் சிலர் கொட்டகையின் அருகில் அமர்ந்து அங்கு விற்றுகொண்டிருந்த கள்ளை மொந்தைகளில் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.நெருக்கடிகளில் இருந்து மீள, குடித்தே ஆகவேண்டும் என்று உணர்ந்தவன் கொட்டகையை நோக்கி நடந்தான்.கடைக்காரரிடம் மூன்று மொந்தை கள்ளையும் தொட்டுக்கொள்வதற்காக அவித்த முட்டையையும் வாங்கிக் கொண்டு வடக்கு புறமிருந்த ஒரு மரத்தடிக்கு சென்றான்.மிதியடிகளை கீழே கழற்றி போட்டு அதன் மீது அமர்ந்து மொந்தையில் இருந்த கள்ளை அப்படியே எடுத்து மடக் மடக் என பாதியளவு குடித்து மொந்தையை கீழே வைத்துவிட்டு முட்டையில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.அப்போதும் அவன் மனத்திரையில் தொடர்பற்ற பல காட்சிகள் தோன்றி மறைவதை உணர்ந்தவன் மீதியிருந்த கள்ளை எடுத்து முழுவதுமாக குடித்தான்.கண்களில் மெல்ல சிவப்பு ஏறத்தொடங்கியிருந்தது.லேசாக தலை சுற்றுவது போல உணர்ந்தவன் தொட்டுக் கொள்ள முட்டையை எடுக்கப் போனவன் பின் பக்கம் சிலரின் பேச்சு சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான். கொட்டாகாரமுட்டு சுப்ரமணி சிலருடன் நடந்து வந்துகொண்டிருந்தார்.வெகுநாட்களுக்கு பிறகு அவரை பார்க்க நேர்ந்த்தில் ஷண்முகத்தின் மனதில் பயமும் ஆத்திரமும் ஒரு சேரத் தோன்றியது. ஆனாலும் கண்டும் காணாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். சுப்ரமணியும் அவனை காணாதது போல கடந்து சென்றார்.சுப்ரமணியும் அவருடன் வந்தவர்களும் கொட்டகையின் அருகே சென்று அமர்ந்தனர். அதில் ஒருவர் மட்டும் எழுந்து சென்று கடைக்காரரிடம் மொத்தமாக ஒரு பானைக் கள்ளை வாங்கிவந்து பிளாஸ்டிக் ஜக்கில் ஊற்றி அனைவருக்கும் கொடுத்தார்.
சுப்ரமணியத்தின் வருகையும் வெயிலின் தாக்கமும் ஷண்முகத்தை இன்னும் அதிகமாகக் குடிக்கத் தூண்டியது. அவன் தள்ளாடியபடி கொட்டகை நோக்கி நடந்தான்.அங்கு சுப்ரமணி தன் சகாக்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு கள்ளை குடித்துக் கொண்டிருந்தது மேலும் ஷண்முகத்தை உஷ்ணப்படுத்தியது.அவரைப் பார்த்து அவன் காறித்துப்பினான்.எச்சில் முகத்தில் பட்டுத் தெரித்த நொடியில் அவர் கோபத்தோடு எழுந்து ,”பொண்டாட்டிய ஊர் மேயவுட்டுட்டு வந்து குடிக்கிற நாயி நீ, எம்மேல காறித்துப்புறயா” என அசிங்கமாகத் திட்டிக் கொண்டே அவனை கீழே பிடித்துத் தள்ளினார்.இவர்களின் சண்டையை விலக்க யாரும் முயற்சிக்காமல் கள்ளைக் குடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர். இன்னும் சிலர் போதையில் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை பரிகாசத்துடன் ரசித்துக் கொண்டிருந்தனர். அவர் பிடித்து தள்ளியதில் கொட்டகைப் பக்கமாக விழுந்தான். அவன் அந்தரங்கம் தாக்கப் பட்டதால் கோபம் கொப்பளித்தது.தன்னுடைய இந்த நிலைக்கு இவர் தான் காரணம் என்று நினைத்தான். இத்தனை நாட்கள் மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்திருந்த இயலாமைகள் மொத்தமும் பெருங்கோபமாக உருமாறி அவர் மேல் குவிந்தது.கீழே விழுந்த ஷண்முகத்தை சட்டைசெய்யாமல் சுப்ரமணி அவர்களுடன் அமர்ந்து தள்ளாடியபடியே கள்ளைக் குடித்துக் கொண்டிருந்தார். அவர் மீதான் கோபம் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் அவன் தன் பலத்தையெல்லாம் திரட்டி தள்ளாடி தள்ளாடி எழுந்து கொட்டகையைப் பார்த்தான். எறவானத்தில் சாணைத் தீட்டப்பட்டு பளபளவென இருந்த பாலை சீவும் கொடுவாளைப் பார்த்தான். அடுத்த நொடி அவனுக்கு ஆக்ரோஷம் பொங்கியது.பெருங்கோபத்தோடு கொடுவாளை எடுத்துக் கொண்டு தள்ளாடி தள்ளாடி நடந்து சுப்ரமணியின் பின்புறமாகச் சென்று வலுகொண்ட மட்டும் ஓங்கி கழுத்தைப் பார்த்து வெட்டும் வரை யாரும் கவனிக்காமல் போதையின் பிடியில் உளரியபடி இருந்தனர். சுப்ரமணியின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட அவர் அமர்ந்திருந்த வாக்கிலேயே தரை நோக்கிச் சரிந்தார்.எல்லோர் மீதும் ரத்தம் பட்டுத்தெரித்தது. நடந்து முடிந்த பயங்கரத்தின் தீவிரம் புரிந்து அனைவரும் உறைந்தனர். தன்னிலிருந்த குரோதம் முழுவதுமாக வடிந்த வெறுமையில் ஷண்முகம் தேம்பித் தேம்பி அழுதான்.
தெருவில் நாய்கள் அதிக சத்தத்தோடு குறைத்துக் கொண்டு ஓடியபோது ஷண்முக முதலியாருக்கு கடந்த கால நிகழ்வின் தொடர்பு அறுந்த்து.அவையெல்லாம் நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆயினும் இப்போதும் உடம்பு படபடப்பதை உணர்ந்தவர் புரண்டு படுத்தார்.இந்தமுறை யார் என்ன செய்தாலும் பட்டியை காப்பாற்ற முடியாதென அவரது உள்மனம் தொடர்ந்து அவருக்கு கூறிக்கொண்டே இருந்தது.அந்த சிந்தனைகளில் இருந்து விடுபடமுடியாமல் தவித்தவர் மெல்ல எழுந்து ஒரு சுருட்டை பற்றவைத்து இழுத்தார்.சிறிது நேரம் தெருவையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தவர் மீண்டும் கட்டிலில் படுத்துக்கொண்டார்
ஊருக்குள்ளிருந்து வந்த பெரும் சத்த்த்தைக் கேட்டு ஷண்முக முதலியாருக்கு லேசாக விழிப்பு வந்தது.சத்தம் மேலும் அதிகரிக்கவே தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு சத்தம் கேட்கும் திசை நோக்கி நடந்தார். மணியகாரர் தெருவில் தான் பெரும் கூச்சலும் சத்தமும் கேட்டது.பட்டிக்கு தான் ஏதோ ஆபத்து என உணர்ந்தவர் இனம் புரியாத வலியால் துடித்தார். அதற்குமேல் அவரால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை.பள்ளத்தெருவில் இருந்து திரும்பி மெல்ல மணியம் தெருவிற்குள் நுழைந்து பட்டித்தெருவைப் பார்த்தவருக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது. எந்திரங்களின் உதவியுடன் பட்டியை இடித்து வாறிக்கொண்டிருந்தனர் சிலர். நாட்டாரும் அகிலாண்டமும் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருந்தனர். என்ன செய்தும் அவர்களால் அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அகிலாண்டம் ஆத்திரத்தில் ஒன்றிய செயலாளரைப் பார்த்து, போங்கடா நீங்களும் ஒங்க கேடு கெட்ட அரசியலும்” என்று கத்தினாள். அதை அவன் கேட்கமுடியாதபடி எந்திரத்தின் சத்தம் ஓங்கி ஒலித்தது. அடர்ந்த அவ்விரவிலும் இடிபாடுகளில் இருந்தெழும் புழுதி வானில் வென்மேகமெனத் திரண்டது.மக்கள் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். பாதுகாப்பிற்காக நிறைய காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். ஒன்றிய செயலாளர் அங்கு நின்றுகொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளருடன் என்னவோ பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் விஷயம் பரவி கூட்டம் சேரத்தொடங்கியது.ஷண்முக முதலியாரால் ஒன்றும் பேச முடியவில்லை.அப்படியே குள்ளு வாத்தியார் வீட்டுத் திண்னையில் அமர்ந்தவர் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டார்: “பாவிங்களா வெள்ளக் காரன்கிட்ட இருந்து கூட காப்பாத்திட்டோம்.உங்க கிட்ட இருந்து முடியலயேடா”. அவருக்கு மூச்சு வாங்கியது.சுருட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டு மெல்ல நடந்தார். இடிபாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.
பட்டி இருந்த இடம் சமப் படுத்தப்பட்டு பட்டித்தெருவையும் மணியம்தெருவையும் இணைத்து சாலைப் போடப்பட்டது. பட்டி இருந்த இடத்தில் ஒரு சிறு பூங்கா ஏற்படுத்தப்பட்டு புதிய நகர் உதயமானது.நாளடைவில் பட்டித்தெரு எனும் பெயர் மெல்ல வழக்கொழிந்து அந்த ஒன்றிய செயலாளர் சார்ந்த கட்சித்தலைவரின் பெயரால் அழைக்க அறிவுருத்தப்பட்டது.

No comments:

Post a Comment