
விருது தொடர்பாக நாடெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளினால் நிலவும் அசாதாரண சூழலையும், அது எவ்வாறு ஓர் மக்கள் இயக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் உலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் பொருட்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து டாக்டர் எட்மண்ட் டாண்டஸ் தலைமையில் மூத்த பத்திரிக்கையாளர் குழு நம்நாட்டிற்கு வந்திறங்கியதற்கு மறுநாள் கண்டாச்சிபுரம் நகரத்தில் ஒரு பெரிய விருது வழங்கும் விழா மாண்புமிகு விருது வழங்கல் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் சுமார் இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தேழு பயனாளிகளுக்கு அமைச்சர் நின்றுகொண்டே தன் கைப்பட விருதுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். நகரமக்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர்களுக்கு இதுவரை விருது வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மிகுந்த ஆவேசத்தோடு பேசினார். இவ்விழா குறித்து தங்களின் ஐயங்களை எட்மண்ட் டாண்டஸ் குழுவினர் அவ்வூரின் முக்கிய பிரமுகரும் சா.கா.போ.கே. கட்சியின் ஒன்றிய செயலாளருமான திரு பேயத்தேவர் அவர்களிடம் கேட்டனர். மாவட்ட விருது பெறுவோர் பதிவு அலுவலகத்தில் விருது வேண்டி பதிவு செய்து சரியாக ஒன்பது ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்னும் தனக்கே விருது வழங்கப்படாததன் வருத்தத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது அவருக்கு முதன் முதலாக விருது குறித்த வழக்கை தலைமைநீதிமன்றத்தின் கவனத்திற்கு நகரமக்களின் சார்பாக கொண்டுசென்ற பரபரப்பேறிய அக்காலகட்டங்கள் மனத்திரையில் மெல்ல குமிழிட்டன. ”பதிவு மூப்பு அடிப்படையில் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறதா? கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறதே. கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள்” என்று டாண்டஸ் அவரிடம் கேட்டார். அவருடன் வந்திருந்த கொஞ்சம் உயரம் குறைந்த பத்திரிக்கையாளர் ஒலிப்பதிவு நாடாவை இயக்க தயாராக இருந்தார். பேயத்தேவரின் மனத்திரையில் அப்போராட்டக் காலங்கள் ஒருவித ஆக்ரோஷத்தோடு புரலத் தொடங்கின.
“பரந்துபட்ட எல்லைகளையுடைய நம் தாய்த்திரு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற எவருக்கும் விருது பெறும் உரிமையுண்டு” என அறிவிக்கக் கோரும் மனுமீதான விசாரணை தலைமை நீதிமன்றத்தில் தீவிரமடையத் தொடங்கியதும் கண்டாச்சிபுரம் நகர மக்கள் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு மனுசெய்தனர். அவர்களின் மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றத்தின் செயல்பாடு ஆட்சியாளர்கள் மத்தியிலும் அரசியல் நோக்கர்கள் மற்றும் ஊடகக்காரர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நீதிமன்றத்தின் இம்முடிவு பெரும் சீரழிவிற்கே இட்டுச்செல்லும் என்றும் விருது அளிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் உரிமை என்றும் அதில் நீதிமன்றம் எவ்வித்த்திலும் தலையிடமுடியாதென்றும் அரசுத் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தலைமை நீதிமன்றம் வழக்கின் தீவிரத்தை உணர்ந்து கீழ்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவழங்க மறுத்தும் வழக்கின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து வழக்கை ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றியும் கீழ்கண்ட சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
உத்தரவு விபரம்
1.இதுவரை விருது பெற்றோர் விவரம் மற்றும் அவர்களுக்கு எந்த அடிப்படையில், யார் பரிந்துரையின் பேரில் வழங்கப் பட்டிருக்கிறது?
2.விருது தேர்வு குழு யாரால், எந்த அடிப்படையில் அமைக்கப்படுகிறது மற்றும் அவர்களின் கல்வி மற்றும் பிற தகுதிகள் என்னென்ன?
3.விருதுக்கு தேர்வு செய்யும் நடைமுறை வெளிப்படையாக உள்ளதா?
4.விருதுக்கு தேர்வு செய்யப்படுவோர் அவர்களின் துறையில் செய்த சாதனைகளின் வீச்சை விருதுக்குழு தவிர்த்து கல்வியாளர்கள், அத்துறையின் அறிஞர்கள் மற்றும் அரசுசாரா கலைஞர்கள்,அறிஞர் பெருமக்கள் ஆகியோர் மூலம் ஆராயப்பட்டதா? அவ்வாறு இருப்பின் அவர்களின் பெயர்பட்டியல் மற்றும் முகவரிகள் மற்றும் அவர்களின் இயங்குதளம் குறித்த விரிவான விவர அறிக்கை
மேற்கண்ட வினாக்களுக்கு இன்னும் இரண்டுவாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் கலாசாரத்துறைக்கு உத்தரவிட்டதும் நீதிமன்றத்தில் சலசலப்பேற்பட்டது.
இருவாரங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அன்று வழக்கம் போல நீதிமன்றம் கூடியதும் முதல் வழக்காக இவ்வழக்கை எடுத்துக்கொண்டது நீதிமன்றம். தலைமைநீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தன் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதன் விவரம் பின்வருமாறு.
”மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு எப்போதுமே மக்கள் நல அரசாகவே விளங்கும். அவ்விதத்தில் மக்களின் நலன் சார்ந்து எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை விமர்சிக்கவோ ரத்து செய்யவோ மாட்சிமைமிகுந்த தலைமை நீதிமன்றத்திற்கு உரிமையும் தகுதியும் இருப்பதாக மக்கள் நல அரசு கருதவில்லை.மேலும் யார் யாருக்கு விருதுகள் அளிக்கப்படவேண்டும் என முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே இருக்கிறது என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாதென்றும் அரசு கருதுகிறது.அரசின் பிற நலத்திட்டங்களோடு விருது வழங்குவதை இணைத்துப் பார்க்க முடியாதெனவும் அது ஒருவரின் தகுதி அடிப்படையில் வழங்கப் படுவதாகும் என்றும் மாட்சிமைமிகுந்த இந்நீதிமன்றத்தின் முன் அரசு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறது. அனைவருக்கும் விருது வழங்குவது என்பது அரசின் இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுப்பது போன்றது. மேலும் மக்கள் நினைப்பதையெல்லாம் ஓர் அரசு செய்தாக வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அவ்வாறு செயல்படுவது நிச்சயம் ஓர் மக்கள் நல அரசாக இருக்க முடியாது என்றும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம். இறுதியாக அனைவருக்கும் விருது என்பது பெரிய சமூக சீர்கேட்டையும் அதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையையும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம். ஆகவே மேற்கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு அரசு சார்பில் வேண்டிக்கொள்கிறேன்”.
அரசின் அறிக்கையை கூர்ந்து ஆராய்ந்த நீதிபதிகள் தங்களின் கேள்விகளை அரசு வழக்குரைஞரை நோக்கி தொடுத்தனர். அவர்களின் முதல் கேள்வியே எதிர்தரப்பை மிகுந்த சந்தோஷத்திற்குள்ளாக்கியது.தலைமை நீதிபதியின் கேள்வி இவ்வாறு இருந்தது.
“ விருது அளிப்பதில் எவ்வித பாரபட்சமும் பார்க்கப் படுவதில்லை என்றும் தகுதி ஒன்றையே அளவீடாக கொள்கிறோம் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அவ்வாறிருக்க கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் நல்லாப்பளையத்தைச் சேர்ந்த திரு.உத்திராபதி என்கிற அருணாசலத்திற்கு இலக்கியத்திற்கான செம்மொழிச் சீர் தொண்டர் விருதை எப்படி அளித்தீர்கள்? அவரை யார் யாரெல்லாம் பரிந்துரை செய்தார்கள்? அவர் இலக்கியத்துக்காற்றிய பங்கு என்ன?”
நீதிபதிகள் இவ்வளவு நுணுக்கமாக கேள்விகளை கேட்பார்கள் என்று அரசு வழக்குரைஞர் எதிர்பார்த்திருக்கவில்லை. நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலுக்காக ஆவலோடு காத்திருந்தனர். தண்ணீர் புட்டியைத் திறந்து சிறிது அருந்திவிட்டு அவர் நீதிபதிகளைப் பார்த்து தனது பதிலைக் கூறத்தொடங்கினார்.நீதிமன்றம் ஆழ்ந்த அமைதியில் இருந்தது.
“ திரு.உத்திராபதி அவர்கள் அவ்விருதுக்கு பெரிதும் தகுதியானவர்தான். அவர் கானாடு காத்தான் பல்கலைக்கழகத்தில் ’தமிழ் சங்கப் பாடல்களில் மெய்யெழுத்துக்களின் தாக்கம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும், பாரிஸ் மையப் பல்கலைக் கழகத்தில் ’சிலப்பதிகாரத்தில் எதுகை மோனைகள் ஓர் ஒப்பாய்வு’ எனும் தலைப்பில் ஆய்வேடு சமர்ப்பித்து முதுமுனைவர் பட்டமும் பெற்ற ஒப்பாரும் மிக்காரும் இல்லா தமிழ் அறிஞர்.”
நீதிபதிகள் இடைமறித்து அவரிடம் கேட்டனர்: “ அவரின் பட்டங்கள் சார்ந்து எங்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் படைப்பிலக்கியத்திற்கான உயரிய விருதை அவருக்கு எந்த அடிப்படையில் வழங்கினீர்கள்? அவரின் ஆகச் சிறந்த படைப்புகள் எவை எவை?”
”அவரளவுக்கு இன்று தீவிரத்துடன் இயங்கும் படைப்பாளுமைகளைப் பார்ப்பது அரிது.அவரை கேள்விக்குள்ளாக்குவது தமிழ்த்தாயைக் கேள்விக் குள்ளாக்குவது போன்றது”.
அரசு வழக்குரைஞர் இவ்வாறு கூறியதும் நீதிபதிகளிடமும் பார்வையாளர்களிடமும் மன ஊசலாட்ட்த்தை ஏற்படுத்தியது.மீண்டும் அரசு வழக்குரைஞர் பேச ஆரம்பித்தார். நீதிமன்றம் மீண்டும் அமைதியானது.
“அவர் இதுவரை சுமார் நூற்று ஐம்பத்தேழு நூல்களைப் படைத்துள்ளார். அதில் எண்பத்தெட்டு நாவல்களும் இருபத்தியொரு சிறுகதை தொகுதிகளும் அடக்கம். அந்த அளவிற்கு நீண்டு விரிந்தது அவரின் படைப்புத் திறன். கடந்த ஆண்டு அவருக்கு விருதைத் தேடித்தந்த புத்தகம் ’சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கு சளி பிடித்ததற்கான அரசியல் காரணம்-பெண்ணிய நோக்கில் ஓர் ஆய்வு’ எனும் மிகமுக்கியமான ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட நூலாகும்”
அவரை இடைமறித்து தலைமைநீதிபதி கேட்டார்: “ இவரளவுக்கு கடந்தாண்டு வேறு யாருமே எழுதவில்லையா? அவர்கள் யார் யார்? அவர்கள் விருதுக்கு பரிசீலிக்கப் பட்டார்களா?”
“ திரு.உத்திரசாமியுடன் ஆறு பேரின் பெயர்கள் விருதுக்குழுவின் பரிசீலனையில் இருந்தது. அரசு எப்போதுமே இவ்விஷயத்தில் தலையிடுவதில்லை. கடந்த ஆண்டு இறுதிகட்ட பரிசீலணைக்கு தேர்வுபெற்ற புத்தகங்களின் விவரங்களை இதோ உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று கூறி மேசைமீதிருந்த ஒரு தாளை எடுத்து வாசித்தார்,அவை,
1.பெ.நா. சண்முகப் பாண்டியன் – ஓய்வா இருந்தா ஒரு மிஸ்டு கால் கொடுங்க
–இருபதாம் நூற்றாண்டின் புதினம்
2.நடுக்கோம்பை நாராயணசாமி – கூந்தலில் நீர்மை கொண்ட ஜக்கம்மாவின் காதல்
கதை
3.திரு (எ) கணேச செட்டியார் – முப்பதே நாளில் காவியங்களை கட்டவிழ்ப்பு
செய்வதெப்படி?
4.ஜமீன் கூடலுர் அ.வரதராசன் – அந்த பாறைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன
5.சின்னப்பையன் (எ) எத்துராசு கவுண்டர் – ராமகாதையில் அணிலின் பங்கு-ஓர் தள ஆய்வு
6.நல்லாப்பாளயம் உத்திரசாமி – கண்ணகிக்கு சளி பிடித்ததற்கான அரசியல் காரணங்கள்-
பெண்ணிய நோக்கிலான ஆய்வு
அவர் நூல்களின் பெயர்களைப் படிக்கப் படிக்க நீதிமன்றத்தில் நெடிய அமைதி கவியத்தொடங்கியது.தலைமை நீதிபதிக்கு இடப்புறம் அமர்ந்திருந்த நீதிபதி அரசு வழக்குரைஞரைப் பார்த்து கேட்டார்,
“ மேற்சொன்ன பட்டியலில் இருந்து ஒருவரை எப்படி தேர்வு செய்தீர்கள். அரசு அதில் ஏதேனும் ஆதிக்கம் செலுத்தியதா?”
“அரசு என்பது பாரபட்சமற்ற ஓர் ஸ்தாபனம். அதற்கு மக்கள் நலன் ஒன்றே பிரதானம்.விருது யாருக்கு செல்ல வேண்டும் என்பதில் அரசு ஒருபோதும் அக்கரை கொள்வதில்லை. இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்பதை முன்கூட்டியே அறிந்த அரசு இறுதி பட்டியலில் இருந்து விருதுக்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க மூன்று கட்டங்களாக அவர்களின் திறனை ஆய்வு செய்கிறது. மேலும் தனிநபர் சார்ந்த மனச்சாய்வு அரசுக்கு எப்போதும் கிடையாது.”
அர்த்தம் புரியாமல் யோசித்த நீதிபதிகள் வழக்குரைஞரிடம் , ”எப்படி விளக்கமாக கூறுங்கள்” என்றனர்.
தொண்டையை செருமிக்கொண்டு அரசு வழக்குரைஞர் கூறத்தொடங்கினார். பார்வையாளர்கள் அவரை கூர்ந்து நோக்கினர்.
“ இறுதி தேர்வுப் பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க மூன்று முறைகளில் அவர்களின் திறனைச் சோதித்தே ஒருவரைத் தேர்ந்தெடுப்போம்.அதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்படும். பின்னர் இறுதிப் பட்டியலில் இருக்கும் அந்த ஆறு பேரும் விழாவிற்கு அழைக்கப் படுவர். அரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பியிருப்பர். அந்த ஆறு பேரை மூன்று குழுக்களாகப் பிரித்து முதலில் பகடையாட விடுவோம். பிறகு பகடையாட்டத்தில் வெற்றிபெறும் மூவருக்கு கால்களில் சாக்குப்பையை கட்டி,ஐம்பது மீட்டர் தவளை ஓட்டம் வைக்கப்படும்.மேலும் அவர்கள் தாவித்தாவி ஓடிக்கொண்டே தங்களின் நாக்கால் மூக்கைத் தொடவேண்டும்.அவ்வாறு ஓடியபடியே நாக்கால் மூக்கைத்தொட்டு வெற்றிபெரும் இருவர் இறுதியாக நடைபெறும் குலுக்கலில் கலந்துகொள்வர். விழாமேடையில் ஒரு குடத்தில் தேர்வு செய்யப்பட்ட இருவரின் பெயர்களும் துண்டுத் தாளில் எழுதப்பட்டு சுருட்டி போடப்பட்டிருக்கும். கூட்டத்திலிருக்கும் ஒருவர்(அவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்) வந்து ஒரு சீட்டை எடுப்பர். அப்போதுகூட கண்களை மூடிகொண்டுதான் சீட்டை எடுக்க அவர்கள் அறிவுறுத்தப்படுவார்கள். பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் அந்த சீட்டை மேடையில் இருப்பவர்கள் படிக்கமுடியாது. கூட்டத்திலிருந்து யார் வேண்டுமென்றாலும் வந்து சீட்டை வாங்கி பெயரைப் படிக்கலாம். படிக்கப் படும் பெயருக்குத்தான் விருது அறிவிக்கப் படும். ஒருவகையில் இது மக்களுக்காக மக்களே நடுத்தும் விழாவாகும்.இது போன்று மிகவும் வெளிப்படையாக விருதுக்கு தேர்வு செய்யும் முறை நம் நாட்டில் வேறெங்குமே நடப்பதில்லை. அந்த அளவிற்கு இந்த அரசு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கிறது.”
”ஒரு விருதை கொடுக்க இவ்வளவு கடுமையாகவா அவர்களை சோதிக்க வேண்டும்? மனித உரிமை ஆணையம் இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா?” என தலைமைநீதிபதி அரசு வழக்குரைஞரைப் பார்த்துக் கேட்டார்.
”ஒரு விருதை வழங்குவதற்கு முன் என்னென்ன அளவீடுகளில் அவர்களின் தகுதியை அளக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அரசுக்கு உண்டு. மேலும் இவ்விஷயத்தில் அரசின் செயல்பாட்டை விமர்சிக்கும் தகுதி நீதிமன்றத்திற்கு உண்டா எனவும் யோசிக்க வேண்டியுள்ளது” என அரசு வழக்குரைஞர் கூறினார்.
நீதிபதிகள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள் ஆழ்ந்த மௌனத்தோடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். நீதிபதிகளின் இருக்கைக்கு கீழ் அமர்ந்துகொண்டு மிகத் தீவிரத்தோடு நீதிமன்றப் பணியாளர் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். அப்போது தலைமை நீதிபதி அரசு வழக்குரைஞரைப் பார்த்துக் கேட்டார்.
“ விருது வழங்குவதில் இவ்வளவு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கும் உங்களின் அரசு தேர்வு செய்த இறுதி தேர்வுப் பட்டியலில் தொடர்ந்து ஐம்பத்து இரண்டு முறை எப்படி ஒருவரே இடம் பிடிக்க முடிந்தது? மேலும் கானாடுகாத்தானைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கைந்து பேர்களுக்கு மட்டும் தொடர்ந்து எப்படி விருது செல்கிறது? நடுக்கோம்பை மாவட்டம் வாழவைத்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் ஐந்து தலைமுறையாக தொடர்ந்து விருது வழங்கப் பட்டு வருகிறது என கடந்த வார ’அகத்தியர்’ பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது.நீதிமன்றம் நினைத்தால் பத்திரிக்கை செய்தியைக் கொண்டே அரசுமீது தன்னிச்சையாக வழக்கு பதிவுசெய்ய முகாந்திரம் இருப்பதை அறிவீர்களா? எந்த பாரபட்சமும் இல்லாமல் இவையெல்லாம் எதேச்சையாக நிகழ்கிறதா? அதை இந்நீதிமன்றம் நம்ப வேண்டும் என இந்த அரசு எண்ணுகிறதா?”
நீதிபதியின் சரமாரியான கேள்விகளைக் கண்டு அரசு வழக்குரைஞர் நிலைகுலைந்து போனார். ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.வழக்கின் முடிவு எப்படி இருக்கும் என்று பார்வையாளர்கள் யோசிக்கத் தொடங்கினர்.இவ்வழக்கு உண்மையில் அரசுக்கு விடப்பட்ட சவால் என நினைத்தனர் மக்கள்.சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட அரசுத்தரப்பு வழக்குரைஞர் நீதிபதிகளை பார்த்து பதில் சொன்னார்.
“தங்களின் கேள்விகளுக்கு என்னால் தன்னிச்சையாக பதிலளிக்க முடியாது. அரசின் கருத்தை அறிந்த பின்னர்தான் என்னால் எதையும் இம்மன்றத்தில் பதிவு செய்ய இயலும். ஆகவே எனக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்”
யோசித்து யோசித்து அரசுத்தரப்பு வழக்குரைஞர் பேசிய பின் தலைமைநீதிபதி அவரைப்பார்த்து பேசினார்.
“தொடர்ந்து கொடுக்கப்படும் அனைத்து விருதுகளையும் ஒருவர் மறுக்காமல் பெற்றுக்கொள்வதும் அவ்வாறு ஒருவருக்கே தொடர்ந்து விருதை அளிப்பதை கடமையாகக் கொண்டுள்ள அமைப்புகளுக்கும் உண்மையில் ஏதோ மனச்சிக்கல் இருப்பதாக இந்நீதிமன்றம் எண்ணுகிறது. ஐந்துபேர் கொண்ட மனநல மருத்துவர்களின் குழுவை உடனடியாக அமைத்து ஒரு முறைக்கு மேல் விருது பெற்றவர் மற்றும் விருது கொடுத்தோர் ஆகியோர்களின் மனநிலையை ஆராய்ந்து விரிவான அறிக்கையை நான்கு வாரத்திற்குள் தாக்கல் செய்ய இந்நீதிமன்றம் உத்திரவிடுகிறது.” என்று கூறி வழக்கை இருவாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வழக்கின் போக்கைப் பற்றி பலவிதமாக விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.விருது சம்பந்தமாக சாதகமாகவும் பாதகமாகவும் பேச்சுகள் வந்துகொண்டே இருந்தன. வழக்கின் போக்கைத் தீவிரப் படுத்த மா.கா.தே.கா கட்சியின் பொதுச்செயலாளர் நீதிகேட்டு குமரி முதல் கோட்டை வரை பாதயாத்திரை தொடங்கினார். விருது குறித்து பொதுமக்களிடம் ஓர் புரிதலை ஏற்படுத்தவும் அதுபற்றி விமர்சிக்க அவர்களைத் தயார்படுத்தவும் இப்பாதயாத்திரை உதவும் என்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அதே நாளில் ஜே.கே.பி.யின் அகில இந்திய பொதுச்செயலாளர் டாக்டர் தன்ஞ்செய் முகோபாத்யா அவர்கள் விருது வழங்குவதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் பிரதிநிதித்துவத்தை கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தேன்கனிக்கோட்டையில் தொடங்கினார். மெல்ல அரசியல் வட்டாரத்தில் விருதுக்கானப் போராட்டம் காட்டுத்தீயைப்போன்று பரவத் தொடங்கியது. தங்களின் கட்சி சார்பில் ஏதாவதொரு கருத்தைப் பதிவுசெய்ய வேண்டிய நெருக்கடி எல்லாத்தலைவர்களுக்கும் ஏற்பட்டது.சூழலில் காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ’கூகை, பதியம், சல்லடை,ஓ,மற்றும் அது’ போன்ற பத்திரிக்கைகள் விருது குறித்தான போராட்டத்தைப் பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தன. கூகை பத்திரிக்கையில் ’மூன்றாம் உலக நாடுகளில் விருது கலாசாரம்’ எனும் தலைப்பில் டாக்டர். விரோனிகா நைரி மோல் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய விரிவான கட்டுரை கவிஞரும் சிறந்த விமர்சகருமான நுனிக்கொம்பர் அவர்களால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப் பட்டது. இதற்கெல்லாம் ஒரு படி மேலேச் சென்று சல்லடைப் பத்திரிக்கை விருது பெறுவது நமது பிறப்புரிமை என்று தலையங்கமே எழுதி சூழலின் உஷ்ணம் தணியாமல் பார்த்துக்கொண்டது. யாப்புச் சக்கரவர்த்தி பெரனமல்லூர் கோவேந்தன் இந்நிகழ்வுகளைப் பற்றி முழுவதும் இயற்சீர்வெண்டளையாலான ஆயிரத்து எழுநூறு பாக்கள் கொண்ட’விருதே விருதே நீ விலகிப்போ’ எனும் நூலை ஆளுனர் தலைமையில் மிக பிரமாண்டமாக வெளியிட்டு தன் பங்கை செவ்வனே செய்து ஆத்மத்திருப்தி கொண்டார். The cross section எனும் ஆங்கிலப் பத்திரிக்கை ’The award goes to…..?’ எனும் தலைப்பில் காரசாரமான கட்டுரையை வெளியிட்டு பிரச்சனையின் தீவிரத்தை அயல் நாடுகளுக்கும் கொண்டு சென்றது. சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்றத்தின் அவைகளில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டுமென பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையருகே சென்று கோஷங்களை எழுப்பி சபை அலுவல்களை ஸ்தம்பிக்கச் செய்தனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு முறை ஒத்திவைக்கப் பட்டு பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது. மாலையில் எதிர்கட்சித் தலைவர் தலைமையில் பெருவாரியான உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். மேலும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிடுமாறும், பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை அரசின் சார்பில் எவ்வித விருதுகளையும் அறிவிக்க வேண்டாம் என்றும் அவரைக் கேட்டுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தென்மாநிலங்களில் கலவரம் மூலக்கூடும் என உளவுத்துறை மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. வடகிழக்கு மாநிலங்களில் நாற்பத்தெட்டு மணிநேர கடையடைப்பிற்கு பாரத ஜனநாயக வாழ்வுரிமைக் கூட்டணி அழைப்பு விடுத்தது. யாரும் எதிர் பார்க்காத அளவில் இது ஒரு தேசிய பிரச்சனையாக உருமாற்றமடைந்தது. ’தேசிய முற்போக்கு நடுநிலை கடைநிலை மற்றும் விளிம்புநிலை எழுத்தாளர்கள் கூட்டமைப்பு’ பிரதமரைச் சந்தித்து இதுவரை வழங்கப் பட்ட விருதுகளையும் பட்டயங்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று மனு கொடுத்தது.பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.அனைத்து கட்சி கூட்டத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருத்து நாடாளுமன்றத்தில் அரசுக்கு சிக்கல் நேராவண்ணம் ஒரு அவசரச் சட்டத்தை பிறபிப்பது என்றும் முடிவு செய்யப் பட்ட்து.
அன்று மதியம் இரண்டு மணிக்கு அரசியல் சாசன பெஞ்ச் முன் மீண்டும் அவ்வழக்கு வந்தது.அப்போது தலைமைநீதிபதி முன் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த டாக்டர். ம.போ. பரஞ்சோதி முதலியார் அவர்கள் தன்னையும் இவ்வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஒரு மனுத்தாக்கல் செய்தார். அவரிடம் தலைமை நீதிபதி சற்று கடுமையுடன் கேட்டார்.
“ நீதிமன்றம் என்ன தபால் பெட்டியா? நினைத்த நேரத்தில் உங்களின் இஷ்டத்திற்கு மனுச்செய்ய? இவ்வழக்குக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறதென்று முதலில் சொல்லுங்கள். பிறகு முடிவு செய்யலாம், உங்களின் மனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று”
பரஞ்சோதி முதலியாருக்கு நீதிபதிகளின் கேள்வி ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் நீதிபதியைப் பார்த்து கூறத் தொடங்கினார். நீதிமன்றம் அமைதியால் சூழப்பட்டிருந்தது.
“ஐயா நான் என் ஊரில் மனிதர்களின் கையைப் பார்த்து குறி சொல்பவனாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு வழக்கமாக என்னிடம் வரும் ஒரு பல்கலைக் கழகத்தின் நிறுவனர் அன்றும் குறி கேட்க வந்தார். அவரது ரேகைகளை ஆராய்ந்து இதைவிடவும் மிகப் பெரிய பொறுப்புக்கு செல்வார் என்று கூறினேன். நான் அவ்வாறு கூறிய அடுத்த இரண்டு நாட்களில் அவரை மிகப் பெரிய பொறுப்பு தேடி வந்தது. இது நடந்த சிலநாட்களில் திடீரென ஒருநாள் அவரின் கார் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றது.பெரிய அரண்மனை போன்று இருந்த கட்டிடங்களுக்கு முன் நான் இறக்கிவிடப்பட்டேன். அவரே நேரில் வந்து அழைத்துச் சென்றார். ஒருஅறையில் எனக்கு தங்க நிறத்திலான அங்கி மாட்டப்பட்டு மாணவர்களும் அறிஞர் பெருமக்களும் கூடியிருந்த அவையின் மேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அப்போது ஒருவர் ஒலிவாங்கியில், ஜோதிடக் கலையின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வரும் திரு. பரஞ்சோதி அவர்களின் சேவையைப் பாராட்டி அவருக்கு மதிப்புறு டாக்டர் பட்டத்தினை பல்கலையின் சார்பில் வழங்குவதில் மகிழ்வுகொள்கிறோம் என சொல்லச் சொல்ல எனக்கு மயக்கம் வருவதைப் போன்று இருந்தது”.
பரஞ்சோதி அவர்கள் இவ்வாறு கூறியதும் அவையில் அனைவரும் சிரித்தனர். நீதிபதிகளில் ஒருவர் குறுக்கிட்டு அரசு வழக்குரைஞரைப் பார்த்துக் கேட்டார்.
“டாக்டர் பட்டங்கள் இவ்வாறுதான் வழங்கப் படுகிறதா? கொஞ்சமும் யோசனையின்றி ஏன் விருதுகளையும் பட்டங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? வரும் வழியில் ஆளுயர பேனரில் ’நடுக்கோம்பையே வருக’ ’மலைக் கோட்டையே வருக’என்று எழுதப் பட்டிருந்ததே அது யார் கொடுத்த பட்டம்? அரசுக்கும் அதற்கும் தொடர்பிருக்கிறதா?
நீதிபதியின் கேள்விக்கு அரசுவழக்குரைஞர்,” அரசுக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவையெல்லாம் பட்டங்களும் அல்ல. அவர்களாகவே தங்களின் ஊர்பெயரை இவ்வாறு தங்களின் அடையாளமாக மாற்றிக் கொள்கின்றனர்” எனக் கூறினார். அதற்கு நீதிபதி,” இதையெல்லாம் உங்கள் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறதா? மேலும் பட்டாசு பாலு, தோட்டா ரவி, கஞ்சித்தொட்டி குமார், மாஞ்சா வேலு எல்லாம் அவர்களாகவே வைத்துக்கொண்ட பெயர்களா அல்லது நீங்கள் அளித்த பட்டங்களா? அரசால் அவை வழங்கப் படவில்லை என்றால் அதை ஏன் பயன்படுத்த அனுமதிக்கிறீர்கள்? என சரமாரியாக கேட்டார். அதற்கு அரசு வழக்குரைஞர்,” அரசும் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது” என்று பதில் அளித்தார். பார்வையாளர்கள் காரசாரமானா விவாதத்தை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் தலைமை நீதிபதி பரஞ்சோதி அவர்களைப் பார்த்து,” உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்” என்றனர். மீண்டும் பரஞ்சோதி கூறத்தொடங்கினார்.
”எப்படி நடந்தேன், எப்படி அந்த பட்டத்தினை வாங்கினேன் எப்படி வீடு திரும்பினேன் என்று ஒன்றுமே புரிய வில்லை. எல்லாம் வெறும் கனவுதானோ என்றும் தோன்றியது. வழிநெடுகிலும் ஜோதிட சங்கங்களின் சார்பில் எனக்கு ஆளுயரத்திற்கு டிஜிட்டல் பேனர்களை வைத்து அமர்க்களப் படுத்தியிருந்தனர். மறுநாள் காலை தினசரிகளின் செய்தியளர்கள் என்னை பேட்டிகாண என் வீட்டின் முன் திரண்டனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ’அதிர்வு’ பத்திரிக்கை ’சோழிகளால் ஆன உலகம்’ எனும் தலைப்பில் என் சுயசரிதையை எழுதக் கேட்டுக் கொண்டது. அவ்வளவாக எனக்கு எழுத படிக்க தெரியாது என்று நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் எழுதுங்கள் என்று அன்புக்கட்டளையிட்டனர்.அப்போது தான் இப்பட்டத்தின் மகிமையை நான் முழுவதுமாக உணர்ந்தேன்.அன்றிலிருந்து அப்பட்டத்தின் தகுதிக்கேற்ப என்னை நான் பலநிலைகளிலும் உயர்த்திக் கொண்டேன். அதற்காக முதலில் நான் செய்தது, டாக்டர் பட்டம் பெற்ற ஜோதிடர் என்று என் அலுவலக மாடியில் நூறு அடியில் ஒரு பேனரை வைத்ததுதான்”
அவர் சொல்லிக் கொண்டே இருக்கும் போது நீதிபதிகளுள் ஒருவர் பொறுமையிழந்தவராக பரஞ்சோதியைப் பார்த்துக் கேட்டார்: “நீங்கள் சொல்வதற்கும் இவ்வழக்குக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நீதிமன்றத்தின் நேரத்தை நீங்கள் வீணடிக்கிறீர்களா?”
அவர் பதற்றத்தோடு நீதிபதிகளைப் பார்த்து மீண்டும் கூறத்தொடங்கினார். பார்வையாளர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். அரசுவழக்குரைஞர் பரஞ்சோதியின் பேச்சையும் அதற்கு நீதிபதிகளின் எதிர்வினையையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
“ தங்களின் மன்றத்திற்கு தவறானத் தகவலைத் தறுவது என் நோக்கமல்ல. மேலும் தங்களின் மணித்துளிகள் எத்துணை முக்கியத்துவமானது என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். உயிர்பிச்சைக் கேட்டே நான் தங்களின் கதவைத் தட்டுகிறேன்.”
அதற்கு நீதிபதிகள்,” சரி தெளிவாக கூறுங்கள்” என பரஞ்சோதியிடம் சொன்னார்கள்.
“ கடந்த பத்தாம் தேதி நமது அரசு சென்ற ஆண்டுக்கான சாதனையாளர்கள் இரண்டாயிரத்து முன்னூற்று அறுபத்து நான்கு பேருக்கு ’தங்கஅன்னம்’ விருதை அறிவித்திருந்தது. அதில் ஜோதிட ஆய்வுக்காக எனக்கும் விருது அறிவிக்கப் பட்டிருந்தது. ஆரம்பத்தில் அவ்விருது எனக்கு மகிழ்ச்சியையே தந்தது. பின்னர் அரசு சார்பில் என்னைப் பற்றியும் என் ஆய்வைப் பற்றியும் சிறு சுருக்கத்தை கேட்டிருந்தனர். அதையும் ஒருபல்கலையின் ஆய்வு மாணவரைக் கொண்டு எழுதி அனுப்பினேன். பின்னர் விருதுக்கு என்னை தயார் செய்து கொள்ளும் பொருட்டு ஏற்கனவே இவ்விருது பெற்றவர்கள் இருவரைச் சந்தித்து விருது குறித்து கேட்டேன். சில சோதனைகளை நடத்திய பின்பே விருதை தருவார்கள் என்று கூறினர். இரண்டு நாட்கள் கழித்து அரசின் முதன்மைச் செயலரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், வருகிற இருபத்தி இரண்டாம் தேதி நீங்கள் உரிய ஆவணங்களுடன் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கும் மாநிலம் தழுவிய திறனறி தேர்வில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். மேலும் கீழ்காணும் தேர்வுகள் உங்களுக்காக நடத்தப் பட இருக்கின்றன. அவை
1.பார்வையாளர் ஒருவரின் ராசிக்கு கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் இருக்கும் விவரங்களும்,அவரின் கையைப் பார்த்து நீங்கள் தெரிவிக்கும் விவரங்களும் ஒரு கணிப்பொறியில் பதியப்பட்டு உண்மையின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப் படும்.
2. இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நம் அரசு ராணுவத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும் எனும் வினாவிற்கு நீங்கள் தரும் பதில் மூன்று பேர் கொண்ட பொருளாதாரா நிபுணர்களின் பதிலோடு ஒப்பீடு செய்யப் படும்.
அதன் அடிப்படையிலேயே நீங்கள் இறுதிப் பட்டியலுக்கு தேர்வு செய்யப் படுவீர்கள். மேற்கண்ட வினாக்களுக்கு தகுந்த பதிலை தந்தால் மட்டுமே உங்களுக்கு விருது உறுதிசெய்யப் படும். இல்லை எனில் நீங்கள் தகுதி நீக்கம் செயப்படுவீர்கள் என்றும் எழுதப்பட்டிருந்தது. அதை படித்ததும் எனக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அந்த செயலரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னைப்போன்ற டாக்டர் பட்டம் பெற்ற ஆய்வாளர்களை மிகக் கேவலமாக நடத்தும் இந்த அரசின் விருது எனக்கு வேண்டாம் என்று தெரிவித்தேன். அதற்கு குரலில் எவ்வித ஏற்ற இறக்கமுமின்றி அந்த செயலர் அரசு தரும் விருதை மறுக்க உங்களுக்கு எவ்வித உரிமையுமில்லை என்று கூறிவிட்டு போனைத் துண்டித்து விட்டார்.அதன் பின் நான் எவ்வளவோ முயன்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக நான் அவருக்கு விருதை மறுத்து விளக்கமாக ஒரு கடிதத்தை அனுப்பினேன். அந்த வாரத்தின் கடைசி நாளில் என் வீட்டிற்கு நான்கைந்து நபர்கள் உருட்டுக் கட்டைகளுடன் ஒரு காரில் வந்திறங்கினர். அதில் ஒருவன்,” இங்க யார்ரா பரஞ்சோதி?” என்று மூர்க்கமாக கேட்டான். நாந்தான் என்று கூறி முடிக்குமுன் அவனின் உருட்டு தடி என் மண்டையில் இறங்கியது.”தலைவரு போனாபோவுதுன்னு விருதுகுடுக்குறாரு. தேவ்டியாபையா அத வேண்டாம்னு சொல்ல எம்மா தைரியம் உனக்கு? மரியாதையா குடுக்கறத வாங்கிக்க” என்று அசிங்கமாக கத்திவிட்டு புறப்பட்டுச் சென்றனர். மாண்பமை நீதிபதி அவர்களே ஒரு விருதை நிராகரிக்க சாதரண ஓர் குடிமகனுக்கு உரிமை இல்லையா? என் உயிருக்கும் உடமைக்கும் எவ்விதமான பாதுகாப்பும் இல்லாத சூழலில் சாதாரணமானவர்களின் இறுதி புகலிடமான இந்நீதிமன்றம் தான் தலையிட்டு அடிப்படையான மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்று மூச்சு வாங்கியபடியே பேசி முடித்தார் பரஞ்சோதி. அவை அமைதியில் ஆழ்ந்திருந்தது. அரசுவழக்குரைஞர் தீவிர யோசனையில் இருந்தார். அப்போது அவரைப் பார்த்து தலைமைநீதிபதி கேட்டார்.
“இங்கு என்ன காட்டாட்சியா நடைபெறுகிறது? இதையெல்லாம் நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? உங்களின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிட்டால் என்ன ஆகும் என்று தெரிந்தே தான் இவ்வாறு நடந்து கொள்கிறீர்களா? தவறுக்கு மேல் தவறு செய்கிறீர்கள். நீதிமன்றம் என்ன செய்துவிடப் போகிறது என்று நினைக்கிறீர்களா? உங்கள் அரசின் இதயம் தசையால் ஆனதா அல்லது கல்லால் ஆனதா?”
நீதிபதியின் கேள்வியின் கடுமையை உணர்ந்த அரசு வழக்குரைஞருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் அமைதியைப் பார்த்த நீதிபதி அவரிடம் சொன்னார்.
“சர்க்காரிடம் நீங்கள் தான் எடுத்து சொல்லவேண்டும். உங்களால் முடியாவிட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். இதற்குமேல் நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. உடனடியாக இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை ஆறு வார காலத்திற்குள் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பியுங்கள். அதுவரை எல்லா விருதளிப்பு விழாக்களுக்கும் தடை விதித்து இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.”
நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை உணர்ந்த அரசு, தலைமை நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி யஷ்பால் திரிவேதி அவர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆறு வாரத்திற்குள் அறிக்கையை சமர்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. நீதிபதி யஷ்பால் திரிவேதி தலைமையிலான குழு பம்பரமெனச் சுழன்று நாடுமுழுக்க மக்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், திருநங்கைகள், திருடர்கள், கலகக்காரர்கள், வேசிகள், கந்துவட்டிக்காரர்கள் ,ஒப்பந்தக்காரர்கள், இடைத்தரகர்கள், கலைஞர்கள், மாதர்சங்கங்கள்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சியின் தலைவர்கள் ஆகியோர்களிடம் கருத்தை கேட்டறிந்தனர். ஒரு தீர்க்கமான, பிரச்சனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடிய அறிக்கையாக அது திகழ வேண்டும் என்ற முனைப்போடு அவர் அதை தயார்செய்து அரசிடம் அளித்தார். அதில் சில திருத்தங்களைச் செய்து நடைமுறைப் படுத்த அரசு ஒப்புதல் அளித்தது. பின்னர் அவ்வறிக்கையின் விவரங்களையும் அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளையும் தொகுத்து தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆயிரத்து எழுநூற்று அறுபத்து நான்கு பக்கங்கள், ஐந்து தொகுதிகள்,இருநூற்று பதிநான்கு அட்டவைனைகள் என விரியும் அறிக்கையின் சுருக்கம் இவ்வாறு இருந்தது.
“ நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்கள் மற்றும் மக்கள் தொகைக்கும் அளிக்கப்படும் விருதுகளின் எண்ணிக்கைக்கும் இடையேயான மிகப் பெரிய வித்தியாசங்களை கவனத்தில் கொண்டு இக்குழு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு வழங்குகிறது.
1.அமைச்சரவையில் கலாசாரத்துறையின் கீழ் செயல் பட்டுவரும் இத்துறையை பிரித்து ‘விருது தேர்வுகள் மற்றும் வழங்குதல் துறை ‘ எனும் தனி அமைச்சகத்தை ஏற்படுத்தவேண்டும்.இதன் தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக ‘மாவட்ட விருது பெறுவோர் பதிவு அலுவலகம்’ தொடங்கி, விருது வேண்டுவோர் முதலில் தங்களை பதிவு செய்துகொள்ள வழிவகை செய்ய ஆவண செய்யப்பட வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு உடனே தனித்த எண்ணுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை வழங்கப் படவேண்டும். இவற்றை கண்காணித்து மேற்பார்வையிட துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத நிலையில் மாவட்ட அளவில் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.இந்த பதிவு மூப்பு அடிப்படையிலேயே விருது தேர்வுப் பட்டியல் தயார் செய்யப் படவேண்டும். மேலும் அந்த பட்டியலின் அடிப்படையிலேயே விருதுகளையும் வழங்க வேண்டும். தவிர்க்க இயலாத விசேஷ நேரங்களில் மட்டும் ‘நேரடி எழுத்துத் தேர்வு’ மூலமோ அல்லது ‘தட்கால்’ முறையின் மூலமோ பெறவும் வழிவகை செய்து கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக இம்முறைகளில் வழங்கப் படும் விருதுகள் எக்காரணங்களைக் கொண்டும் இருபத்தைந்து சதவீதங்களுக்கு மிகைப் படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
2. விருது வழங்குவதில் அரசு கண்டிப்பாக இடஒதுக்கீட்டை பின்பற்றியே ஆகவேண்டும். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் விருது வழங்கப் பட்டால் மட்டுமே அனைத்து நிலைமக்களுக்கும் விருது பரவலை உறுதி செய்ய இயலும்.
3. கண்டிப்பாக ஆண்டிற்கு இருமுறை மட்டுமே விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டும்.அவை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களாக இருக்கலாம். அடிக்கடி நடக்கும் விருது வழங்கும் விழாக்களால் அரசுக்கு ஏற்படும் வீண்செலவினங்கள் இதன் மூலம் கட்டுப் படுத்தப்படும்.
4.கிராம, ஒன்றிய, வட்ட ,மாவட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப விருதுகள் ஒதுக்கீடு செய்யப் படவேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்குள்ளும், நேரடி எழுத்துத் தேர்வு மூலம் அல்லது தட்கால் முறை மூலம் ஆறு மாத காலத்திற்குள்ளும் விருது அளிக்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும்.
5.விருது கொடுப்பதும் பெறுவதும் பெரிதும் மனநலம் சார்ந்த பிரச்சனை என்பதால், மனநல மருத்துவர்களின் அறிக்கை அவசியமாகிறது. ஆகவே ஒரு ஒன்றியத்திற்கு ஐந்து மனநல மருத்துவர் பணியிடங்களை உடனே அரசு ஏற்படுத்திட வேண்டும்.
6. கண்டிப்பாக விருது வழங்கும் நிகழ்வுகள் அனைத்தும் ஒற்றை சாளர முறை மூலமே நட்த்தப் பெறவேண்டும். நேரடியாக விருது பெற இயலாதவர்களுக்கு மட்டுமே மருத்துவ சான்றின் பேரில் அரசு பதிவு அஞ்சல் மூலம் விருதுகளை அனுப்பிவைக்கலாம்.
7.நம் சமூகம் எழுத்தறிவில் இன்னும் பின்தங்கி இருப்பதால் விருது பெறும் நிகழ்வில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அங்கு பின்பற்றப் படவேண்டிய உடல் முக பாவனைகளை எவ்வாறு வெளிப் படுத்த வேண்டும் என்பதையும் அறிந்துகொள்ள ஏதுவாக அரசின் சார்பில் மூன்று மாத குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை நடத்தலாம். மேலும் விருது பெறும் போது மேடையில் நடந்து செல்வதை, வாங்கும் போது எத்தனை டிகிரி குனிந்து வங்குகிறார்கள் என்பதை நுட்பமாக அளவிட அயல்நாடுகளில் இருந்து கருவிகள் வாங்குவதற்கு பன்னாட்டு ஒப்பந்தப் புள்ளிகளை கோரலாம்.
8.வழங்கப் பட இருக்கும் விருதுகளின் தலைப்புகளை பிரபல நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அனைவரும் பார்க்கும் விதமாக வெளியிட வேண்டும்.பதிவு மூப்பு மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் விருதின் தலைப்புகள் ஒதுக்கீடு செய்யப் படவேண்டும். மேலும் விருதுகளின் தலைப்புகளை எண்கணித அமைப்பின் மூலம் மாற்றி அமைத்துக் கொள்ள மூன்று முறைகள் மட்டுமே அனுமதிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
9.எதிர்காலத்தில் விருது வேண்டி பதிவு செய்து கொள்ள இணையம், செல்பேசி ஆகியவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு பரிசீலிக்கலாம். மேலும் நடமாடும் விருது பதிவு அலுவலகத்தை ஏற்படுத்தி விருது பெறுதலை பரவலாக்கினால் சமூக அடிப்படை கட்டுமானத்தை இன்னும் வலுவுள்ளதாக மாற்றி அமைக்கலாம்.
10.தந்தை/ தாய் இறந்து விட்டால் அவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுகளை அவர்களின் இரத்த சொந்தங்கள் தங்களின் பெயர்களுக்கு மாற்றிக்கொள்ளத் தக்க வகையில் சட்டத்தில் போதிய திருத்தம் செய்ய நடவடிக்கைகள் உடனே தொடங்கப் படவேண்டும்.
11.விருது தொடர்பான போராட்டங்களில் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சிலைகளும் மணிமண்டபங்களும் அமைத்தல், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விருது வழங்குதல் ஆகியவற்றுக்கு ஆவண செய்ய வேண்டும்.மேலும் போராட்டக் காலங்களில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
12.விமானம்/ரயில்/பேருந்துகளில் விருது பெற்றவர்களுக்கு தனி இருக்கைகளும், பயணச் சலுகைகளும் அளிக்கவேண்டும்.மேலும் விருது பெற்றவர்களின் பிரச்சனையைப் பேசித் தீர்க்க ‘மாநில விருதுபெற்றோர் நல வாரியம்’ ஒன்று அத்துறையின் அமைச்சர் தலைமையில் தொடங்கப் படவேண்டும்.
13.ஏற்கனவே வழங்கப் பட்ட விருதுகளுக்கு எப்பிரச்சனையும் நேரா வண்ணம் முன்தேதியிட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் அனைத்து விருதுகளையும் முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.
14.ஒரு சில விருதுகளை பெற யாரும் ஆர்வம் காட்ட முன் வரவில்லை எனில் அவ்விருதைப் பெறுவோர்க்கு மேலுமொரு விருது சிறப்புத் திட்டத்தின் கீழ் பரிசாக வழங்கப் படும் எனும் சலுகை அளிக்கப்பட வேண்டும்.
15.ஒருவிருதை ஒருவர் மூன்று முறை மட்டுமே நிராகரிக்க முடியும்.நான்காவது முறை நிச்சயம் அவர் விருதை பெற்றேதீர வேண்டும் என்று அடிப்படை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
16.விருது வழங்களுக்காக ஒதுக்கீடு செய்யப் படும் நிதி முழுவதுமாக அத்துறையின் செயல்பாட்டுக்கே செலவிடப் படவேண்டும். ஏனெனில் விருதளிப்பு என்பது ஓர் கலாச்சார நிகழ்வு. ஆகவே அத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப் படும் நிதி வேறெந்த காரணங்களுக்காகவும் வேறு துறைக்கு மாற்றப்படாமல் இருக்க உத்தரவாதம் அளிக்கப் படவேண்டும்.”
அறிக்கையை வாசித்த நீதிபதிகள் ஆழ்ந்து யோசித்தனர். எதிர் தரப்பு வழக்கறிஞரிடம்,”இது தொடர்பாக ஏதேனும் பேச விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். “அரசு இந்த அறிக்கையை எவ்வித மாற்றமும் செய்யாமல் நடைமுறைப் படுத்தவேண்டும். அதுவே எங்கள் தரப்பின் எதிர்பார்ப்பு ஆகும்” என்று கேட்டுக் கொண்டார். அரசு வழக்குரைஞர் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.பார்வையாளர்களும் அமைதியாக மன்றத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.அப்போது தலைமைநீதிபதி ஓர் இடைக்காலத் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.
“வழக்கின் தீவிரத்தை உணர்ந்து அரசு ஓய்வு பெற்ற நீதிபதியின் அறிக்கையை அப்படியே செயல்படுத்திட வேண்டும்.அனைத்தும் ஒழுங்காக நடைபெறுகிறதா என்பதை எல்லா நிலைகளிலும் கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப் படவேண்டும்.மேலும் இக்குழுவின் அறிக்கை சார்ந்து எடுக்கப் பட்ட மேல் நடவடிக்கைகளின் தொகுப்பை ஓர் அறிக்கையாக எட்டு வார காலத்திற்குள் நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யப்படவேண்டும்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைந்த அக்குழுவின் அறிக்கையை அப்படியே நடைமுறைப் படுத்துவதாக நீதிமன்றத்தில் அரசு மனுத்தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அனைத்து போராட்டங்களும் படிப் படியாக முடிவிற்கு வந்தன.தலைவர்கள் தங்கள் உண்ணாவிரதங்களை பழரசம் அருந்தி முடித்துக் கொண்டனர்.எதிர் கட்சித் தலைவர் நேரில் வந்து தன் ஆதரவை பிரதம அமைச்சருக்கு தெரிவித்தார்.இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பத் தொடங்கியது.
இடைக்காலத்தீர்ப்பு என்னவோ நேற்றுதான் வழங்கப் பட்டது போன்று இருந்தது பேயத்தேவருக்கு.காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்து விடுகிறது என்று யோசித்துக் கொண்டே அவர் போராட்டக் காலங்களை விவரிக்க விவரிக்க ,எட்மண்ட் டாண்டஸ் குழுவினர் அச்செய்திகளை கணினியில் பதிவு செய்து கொண்டிருந்தனர்.தட்டச்சு சத்தம் தான் அவரை பழைய நினைவுகளில் இருந்து பிடுங்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.விருது குறித்த போராட்ட செய்திகளையும் மக்கள் இயக்கமாக நடைபெற்ற அந்நிகழ்வுகளையும் உலகின் அனைத்து மூலைகளுக்கும் டாண்டஸ் குழுவினர் உடனுக்குடன் தீவிரத்தோடு கொண்டு சென்றனர்.கோடை வெயில் உக்கிரத்தோடு காய்ந்த அன்று அவர்கள் தங்களின் புறப்பாட்டிற்குத் தயாராகிக் கொண்டே, செய்தியின் கடைசி பகுதியை கணிணியில் பதிவு செய்துகொண்டிருந்தனர். அப்போது போராட்டத்தின் போது இருந்த சூழலின் தாக்கம் சிறிதும் குன்றாமல் செய்தி சேகரிப்பதில் இயங்கிய எட்மண்ட் டாண்டஸ் குழுவினருக்கு பத்திரிக்கையாளர் பிரிவில் அவ்வாண்டுக்கான சாதனை விருதான ‘தங்க அன்னம்’ அறிவிக்கப் பட்டிருப்பதாக தொலைக் காட்சியில் ஓர் செய்தி அறிக்கை ஓடிக்கொண்டிருந்தது. எட்மண்ட் டாண்டஸ் திரும்பி பேயத்தேவரை பார்த்தார். அந்த பார்வைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருப்பதாகத் தோன்றியது. பேயத்தேவர் துண்டை உதறித் தோலில் போட்டுக்கொண்டு ‘தேவ்டியா பசங்க’ என்று முனகிக் கொண்டே கழனியைப் பார்த்து நடக்கத் தொடங்கினார்.
No comments:
Post a Comment