
இளம் பிராயத்தில் எங்களுக்கு ஆசிரியராக, சக தோழனாக விளங்கியவை பாறைகளே. சிறிதும் பெரிதுமான பாறைகளுக்கு மத்தியில் தான் எங்கள் வாழ்க்கை ஆரம்பமானது. சிறு செடிகளான கொஞ்சியும் முட்டியும் பூக்கவும் காய்க்கவும் செய்த காலங்களில் ,உடன் சேர்ந்து நாங்களும் வளர்ந்திருக்கிறோம். செங்குத்தான பெரும் பாறைகளில் மயிர்கூச்செரியும் வகையில் போட்டிபோட்டுக்கொண்டு மலையேற அப்போது நிறைய நண்பர்களிருந்தனர். ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் செய்யச் சொன்ன போதெல்லாம் ,பயந்து பள்ளிக்கு செல்லாதிருந்த எங்களை தன் ஆழ்ந்த மௌனத்தோடு தடுத்தாட்கொண்டவையும் பாறைகளே. சுனையின் தண்ணீர் அருந்திவிட்டு, வங்குகளில் படுத்துறங்கிய அக்காலங்கள் மெல்ல நிறமிழக்க ஆரம்பித்துவிட்டன.பாறைகளின் குளுமையை உணர்ந்தவனுக்கு தன் காதலியின் ஸ்பரிசம் கூட நிச்சயம் இரண்டாம் பட்சமாகவே தோன்றக்கூடும்.
சப்பாத்தியிலும் கள்ளியிலும் தான் எங்கள் காதலை நாங்கள் முதன் முதலில் பதியப் பழகினோம். காரைச்செடியின் முள்ளெடுத்து அவள் பெயரை எழுதிய தருணங்கள் இப்போதும் அப்படியே மனதில் இருக்கின்றன. உறவுமுறைகள் குறித்து, சாதிமதங்கள் குறித்து மூன்றாம் வகுப்பு படித்த எங்களுக்கு அப்போது எந்த தீர்மானங்களும் இருந்திருக்கவில்லை.
காதலும்,கள்ளக்காதல்களும் மலையும் மலைசார்ந்த நிலத்தின் அடையாளமாக மாறிய பின் எவ்வளவோ கேடுகளை, எண்ணற்ற சதிகளை, மீளவேமுடியாத துரோகங்களை பாறைகள் எப்போதும் போல அமைதியாகவே பார்த்துக்கொண்டிருந்தன. பல்வேறு சுய இன்பங்களையும் வெவ்வேறு புணர்ச்சிகளையும் சிறு சலணமுமற்று கவனித்துக் கொண்டிருந்த பாறைகளின் பேரமைதி சிலநேரங்களில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தவும் செய்தன.
விடுமுரை தினங்களில் ஒரு சில்வர் தூக்கில் கூழையோ சோறையோ போட்டுக்கொண்டு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வோம். மாடுகளை மேயவிட்டுவிட்டு மலைகளின் வங்குகளிலும், குகைகளிலும் அப்பா அம்மா ஆட்டத்தை விளையாட்த் தொடங்குவோம். சிலர் பகலிலேயே நிலாக்கும்பல் விளையாடுவர்.வெயிலின் சிறுரேகைகூட படாத அவ்விடங்களில் தான் காமம் தன் சிமிழ் திறந்து அதன் வாசனையை நுகர கற்றுக்கொடுத்தது.தங்கள் காதலிகளுக்கு எதையாவது பரிசளித்து விடவேண்டும் எனும் நோக்கத்தில் கொஞ்சிப்பழம், முட்டிப்பழம் மற்றும் சூரைப்பழங்களை போட்டி போட்டுக்கொண்டு பறிப்பதில் எங்களுக்குள் சண்டை மூளும். நண்பர்கள் பகைவர்களாவோம். சூரியன் மெல்ல கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சரியத் தொடங்கும்போது பகைமை மறந்து மாடுகளைத் தேடுவோம்.
காடையும் கௌதாரியும் சிறு செடிகளுக்குள்ளாக ஓடித்திரியும். படமெடுத்தாடும் நாகங்கள் பாறைச் சந்துகளே கதியெனக் கிடக்கும். குரங்குகள் சூரைப்பழத்தையும் ஆலம்பழத்தையும் திண்பதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஒருநாள் இரண்டு மூன்று வாகனங்களில் சிலர் பாறைகளை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பிறகு பெரிய எந்திரங்கள் வந்திறங்கின. பாறைகளை அறுக்கவும் உடைக்கவும் முடியும் என்பதை அப்போதுதான் நாங்கள் காண நேர்ந்தது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பாறைகள் அறுத்தெடுக்கப்பட்டு தொலைதூர நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. எந்திரங்களின் சப்தம் ஓயாது கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆனால் எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்காமல் என் பிள்ளைகள் வரவேற்பறையில் அமர்ந்துகொண்டு டிஸ்கவரி சேனலில் மலைகளைப் பற்றிய விவரணப் பட்த்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு குரங்குகள் வந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. ஒருநாள் உள்ளறையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். என் இரண்டாவது மகள் அழுதுகொண்டே உள்ளே ஓடிவந்தாள். என்ன நடந்தது என்று அவளிடம் கேட்டேன். அவள் தேம்பிக்கொண்டே ,”எங்கிட்ட இருந்து குர்குரேவை குரங்கு புடிங்கிகிச்சி” என்றாள். நான் தெருவிற்கு வந்து பார்த்தேன். குர்குரேவை ஒவ்வொன்றாக எடுத்து குரங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த்து.
பிறகொரு நாள் என் நண்பன் வீட்டில் துணி துவைக்கும் எந்திரத்தில் தோதாகப் படுத்துக்கிடந்த நாகத்தை அடிக்க ஊரே கூடியது.எல்லா ஜீவராசிகளுக்கும் இருப்பிடம் என்பது அவசியம் தானே?.
1 comment:
மனதைப் பாறையாக கனக்க வைக்கிறது.... இனி என்ன கதறியும் இந்த உலகைக் காப்பாற்ற முடியும் என்று தோன்றவில்லை நண்பா....
Post a Comment