Wednesday, August 18, 2010

நம்மில் யார் தவறுகளுக்கு மிக அருகில் இருக்கிறோம்?


அகால மரணங்கள் எப்போதும் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி விடுகின்றன. சமீபத்தில் இரண்டு அகால மரணங்களில் பங்கெடுக்க வேண்டியிருந்தது. என்னளவில் எந்த மரணமும் வெறும் செய்தியாக நின்று விடுவத்தில்லை. மரணம் அடைபவரின் நெருக்கத்தைப் பொருத்து மனஅதிர்ச்சி கூடவோ குறையவோச் செய்யலாம் அவ்வளவே. கடந்த பத்தாண்டுகளில் மரணத்தைக் கடப்பது பற்றி ஒருசில கவிதைகளை எழுதி இருந்தாலும் கூட அகால மரணங்கள் எப்போதும் பீதியூட்டுவதாகவே இருக்கின்றன.

மருத்துவத்துறையில் எவ்வளவோ அரிய பெரிய கண்டு படிப்புகள் வந்தபின்பும் அகால மரணங்களின் எண்ணிக்கை குறைந்ததாகத் தெரியவில்லை. சில வேளைகளில் எண்ணிக்கை கூடவும் செய்து வருகிறது. மனிதன் மரணத்தை வெல்லக்கூடிய நிலைக்கு வெகு சமீபத்தில் இருக்கிறான் என்று நாம் மார்தட்டிக் கொண்டிருக்கும் போதே, இன்ன நோய் தான் வந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடிக்க முடியாமல் சில நோயாளிகளை நாமே கைப்பிடித்துக் கூட்டிச் சென்று மரணத்தின் வாசலில் விட்டு வருகிறோம். உண்மையில் மருத்துவத் துறையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? மருத்துவத்துறையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வளர்ச்சிகள் எத்தன்மையது என்பதை சரிவர உணர முடிவதில்லை.

ஒருவருடைய கல்லீரல் முப்பது நாட்களில் முழுவதுமாக பழுதடைந்து அதன் காரணமாய் அவர் உயிர்துறக்க வேண்டிய நிலை ஏற்படுமா? பொது மருத்துவத்தில் முதுகலை முடித்த நான்கிற்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களும், நவீன மருத்துவ நோய் அறியும் கருவிகள் இருந்தும் எப்படி அவருக்கு கல்லீரலில் பிரச்சனை உள்ளதென்று அறியாமல் விட்டனர்? தவறு எங்கிருந்து தொடங்குகிறது? ஒருவராலும் அறிகுறிகளைக் கொண்டும் மருத்துவ ஆய்வுகளைக் கொண்டும் கணிக்க முடியாமல் போனதேன்?. ”தொடர்ந்து வாந்தி வருகிறதா லிவரில் பிரச்சனை இருக்கலாம்” என்று வெகுசாதாரண மக்கள் கூட கூறுகின்றபோது முதுகலை மருத்துவம் படித்தவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள்? வழக்கம் போன்று இதுவும் தற்செயல்தானா? எதுவும் விளங்கவில்லை.

மருத்துவம் தொடர்பாக கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா எனும் நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது. அதை தவறவிட்டவர்கள் எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளம் www.jeyamohan.inல் பார்க்கலாம். அதில் ஜெயமோகனோடு மருத்துவர்கள் ஒரு எதிராளியோடு சண்டையிடுவதைப்போல காரசாரமாக விவாதிப்பதைக் காணமுடியும். எல்லாவற்றையும் கூர்ந்து நோக்கிய பின்பு ஜெயமோகனின் வாதத்திற்கே அழுத்தம் கூடுவதை உணரமுடிகிறது. பல லட்சங்கள் கொடுத்தும் நம்மால் ஓர் உயிரை மீட்க முடிவதில்லை. அந்தளவிற்கு பணத்தின் தேவை மருத்துவ உலகின் முதுகெலும்பாக மாறிவிட்டிருக்கிறது.

எந்தளவிற்கு ஆங்கில நவீன மருத்துவம் நுட்பம் நோக்கிச் செல்கிறதோ அந்தளவிற்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தத் தயங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு அளிக்கப்படும் வீரியமிக்க மருந்துகள், வேறொரு நோயை ஏற்படுத்திவிட்டே விடைபெறுகின்றன.இவ்வாறாக மனித உடல் ஒரு நடமாடும் ஆய்வகமாகவே மருத்துவர்களால் பார்க்கப்படுகிறது. எலி, முயல் குரங்களுக்கு அடுத்தபடியாக மருந்து உற்பத்தியாளர்களுக்கு கிடைத்திருக்கும் மலிவு விலையுள்ள ஒரு சோதனைப் பொருள்தான் நோயுற்ற மனிதன். நம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பார்க்கும் போது இவ்வாறு தான் யோசிக்கத் தோன்றுகிறது.

நம் சமூகத்தில் கடவுளுக்கு நிகராக மருத்துவர்கள் பார்க்கப்படுகிறார்கள். அவ்வாறு பார்க்கப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நம்முடைய மருத்துவர்கள் அவசியம் உணர்ந்தாக வேண்டிய தருணம் இது. சில மருத்துவர்கள் கடவுளுக்கு வெகு அருகிலேயே இருப்பதையும் காண முடிகிறது. அவர்களை விட்டு விடுவோம். ஒரு நோயாளி என்பவனின் மனநிலை பல்வேறுபட்ட தளங்களில் பல நபர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவனது குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற நிறுவனங்கள் அவனோடு பிணைக்கப்பட்டுள்ளன. ஆக அவனுக்கு அளிக்கப்படும் மருத்துவம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமானதாகவே பொருள் கொள்ளப்படும். அந்த நம்பிக்கையில் தான் ஒருவன் மருத்துவர் ஒருவரைத் தேடி வருகிறான். எல்லா நோயாளிகளும் திரும்ப வீட்டிற்கு வருவோம் எனும் திடமான நம்பிக்கையோடுதான் மருத்துவமனை வாசலை மிதிக்கின்றனர். அந்த நம்பிக்கை நிச்சயம் பொருட்படுத்த வேண்டிய ஒன்று தானே?
இன்றைய காலகட்டத்தில் பணம் பெரிய பிரச்சனை அல்ல. குறிப்பாக நோயுற்றவர்கள் கடன் வாங்கியாவது நல்ல மருத்துவம் செய்து கொண்டு மீண்டுவிடவே ஆசைப்படுகின்றனர். அவர்களின் இந்த ஆசை பல்வேறு நிலைகளில் மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கின்றது. அனைத்தையும் பொருட்படுத்த வேண்டிய ஓர் இடமே மருத்துவருடையது. அவரே கர்த்தர்; அவரே மீட்பார் என்ற நம்பிக்கையோடு வரும் நோயாளிகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டிய பொருப்பும் கடமையும் நிச்சயம் அவருக்கு இருக்கின்றது. இது மருத்துவர்கள் மீதான விமர்சனம் அல்ல. அகால மரணங்கள் தோற்றுவிக்கும் மனநெருக்கடிகளில் இருந்து மீள ஒரு சராசரி மனிதன் மேற்கொள்ளும் சிறு எத்தனமே. இறுதியாக ஒரே ஒரு காட்சியை மட்டும் நாம் நம் மனக்கண் முன் கொண்டு வருவோம். ”மருத்துவம் பொய்த்து தாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்ற நிலையில் அந்நோயாளியின் மனநிலை எவ்வாறு இருக்கும்?” வேறெப்படியும் இக்கட்டுரையை எனக்கு முடிக்கத் தோன்றவில்லை.
குறிப்பு: நண்பரும் ஓவிய ஆசிரியருமான திரு.சு.ராஜவேலுவின் அகால மரணம் ஏற்படுத்திய மனநெருக்கடிகளைக் கடக்கவே இக்கட்டுரையை எழுதவேண்டிய தேவை ஏற்பட்ட்து.

5 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல கட்டுரை..

காலபைரவன் said...

மிக்க நன்றி

Asadha said...

Modern medicine is a negation of health. It isn't organized to serve human health, but only itself, as an institution. It makes more people sick than it heals. ~ Ivan Illich

WordsBeyondBorders said...

"மருத்துவம் பொய்த்து தாம் இறந்து கொண்டிருக்கிறோம் என்ற நிலையில் அந்நோயாளியின் மனநிலை எவ்வாறு இருக்கும்?"

மரணத்தின் தருவாயில் Simon Bolivar மனவோட்டமாக Marquez கூறியுள்ளது இது (The general in his labyrinth)


He examined the room with the clairvoyance of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began
to listen to the radiant voices of the slaves singing the six o' clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again.

Ajay

Vadamally said...

Ondrum kaiyalagathavan verum aathangathai mattume velippadutha iyalum. perumbalum nam naatil appadi patta makkale vazhgirargal.

Intha maruthuvargalai naam evvaru azhaipadhu. Pana Noyaligal endru azhaipathe sariyaga irukkum

Post a Comment