Sunday, August 08, 2010

அவர்களைச் சந்தோஷமாக இருக்கவிடுவோம்-சிறு குறிப்பு


ஒரு எழுத்தாளனாய் தொடக்க நிலை மாணவர்களின் இன்றைய நிலை என்னை தொடர்ந்து கவலை கொள்ளச் செய்கிறது. எவ்வளவோ மாற்றங்களுக்கு பிறகும் மாணவர்கள் சுதந்திரத்திற்கு ஏங்குபவர்களாகவே இருப்பதை உணர முடிகிறது. சனி, ஞாயிறு விடுமுறை எனும்போது அவர்களது முகத்தில் தோன்றும் உற்சாகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இதுநாள் வரை ஒருபோதும் வகுப்பறைச் சூழலில் அவர்களின் இந்த உற்சாகத்தை நான் கண்டது கிடையாது.
நிச்சயம் மாணவர்கள் ஏதோவொரு சொல்லமுடியாத மன அழுத்தத்தோடு இருப்பதை உணரமுடிகிறது. அவர்களை ஓரளவிற்கு சந்தோஷமாக வைத்திருக்க நிகழ்த்துக்கலைகளால் முடியும் என நினைக்கிறேன். நிச்சயம் இசையும் நாடகமும் அவர்களை அவர்களுக்கே அடையாளம் காட்ட உதவும் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் நாடகம் என்பதே ஒருவிதத்தில் ஆளுமை வளர்ச்சி தொடர்புடையது என்பதால் தொடக்க நிலைப் பள்ளிகளில் நாடகத்தை கட்டாயம் ஓர் பாடமாக வைப்பதே கற்றலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் நாம் செய்ய வேண்டிய அவசிய பணியாகும்.
நாடக பங்கேற்பு மாணவர்களுக்கு சகலவிதமான திறன்களையும் அளிக்கும் என எத்தனையோ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் உற்றுநோக்கினால் நாடகத்தில் பங்கெடுத்த மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் எல்லாவகையிலும் மேம்பட்டதாகவே இருக்கும் என எண்ணுகிறேன். அரசின் சார்பில் கலை இலக்கியங்களுக்காக செலவழிக்கப்படும் தொகை முழுக்க மனிதவள மேம்பாட்டிற்காக செலவழிக்கப்படுவதாகவே உணரப்படவேண்டும். அந்த உணர்வே மொழியையும் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இதுவே மிகவும் உகந்த காலம். கல்விச்சாலைகளை மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கெடுக்கும் நாடகக் கூடமாக்கி அவர்கள் மேலும் சுதந்திரத்தை உணர நம்மால் இயன்றதைச் செய்வோம்.

2 comments:

மரதமிழன் said...

Nice one... But please take necessary steps to implement this one

mahavihedhan said...

through the ages our children are depressed in family,school and the society...really they can be enjoyed in atleast in school if your idea is fulfilled...

Post a Comment