Wednesday, August 11, 2010

குழந்தை அறிவுஜீவிகள் எனுங்கொடுங்கனவு


“நாளைக்கு மழை பேஞ்சிச்சு பாரு” என்று பேசும் மழலை மாறாத குழந்தைகளை ஒரு குழந்தை விஞ்ஞானியாகவோ அல்லது குழந்தை சாதனையாளராகவோ ஒவ்வொரு பெற்றோரும் மாற்றிவிடத் துடிக்கிறோம். குழந்தைப் பருவத்திலேயே உருவாகும் கம்பியூட்டர் மற்றும் கணக்கு புலிகளைப் பார்க்கும் போது ஆச்சர்யத்திற்கு மாறாக பயமும் அவமானமுமே எற்படுகின்றது.
குறைந்த பட்சம் ஒரு குழந்தையை குழந்தையாகவே நடத்தத் தெரியாத அசாதாரண சூழலில் நாம் வாழ்வதாகத் தோன்றுகிறது. நாமும் சிறிது காலம் குழந்தையாக இருந்திருக்கிறோம் என்பதை நாம் கவனத்தில் கொள்வதே கிடையாது. இது சார்ந்து எழுதும்போது என் தந்தையை பெருமையாக நினைக்கத் தோன்றுகிறது. பல விஷயங்களில் இன்று அவரோடு எனக்கு முரண்பட்ட கருத்து நிலவும்போது கூட மேற்கண்ட ஒரு விஷயத்தில் அவரை இப்போதும் உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு சந்தர்பத்தில் கூட அவர் என்னை படி என்று சொன்னதே கிடையது. மேலும் ஐந்தாம் வகுப்பிற்கு பின்பே நான் படிக்க ஆரம்பித்தேன் என்பதையும் இதனுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள முடியும்.உண்மையில் அப்போதுதான் நான் ரசித்துப் படித்தேன் என்று சொல்லலாம். ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வாழையடி வாழை எனும் நாடகத்தை இப்போதும் என்னால் நினைவு கூறமுடியும். அந்தளவிற்கு அந்நாடகத்தை ரசித்துப் படித்தேன். பின்னர் என் நண்பர்களோடு சேர்ந்து அதை நாடகமாகவும் நிகழ்த்தினோம்.நான் படித்தப் பள்ளி மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலில் அமைந்த பள்ளியாகும். அன்று எனக்கு தமிழ் பாடம் எடுத்தவர் திரு. துரை.தஷ்ணாமூர்த்தி எனும் ஆசிரியர். இப்போதும் அவர் எனக்கு அளித்த சுதந்திரத்திற்காக பிரியத்தோடு அவரை வணங்கத் தோன்றுகிறது.ஆறாம் வகுப்பிற்கு பின்புதான் நான் ஓரளவிற்கு பொருள் உணர்ந்து படிக்க ஆரம்பித்தேன். கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல தான் நான் அறிவை விருத்தி செய்து கொண்டேன். ஆங்கில இலக்கணத்தை முழுவதுமாக நான் எதிர் கொண்டது பத்தாம் வகுப்பில் தான். ஏறக்குறைய கிராமம் சார்ந்த என் தலைமுறை மாணவர்களின் வளர்ச்சி படிநிலை இப்படியாகத்தான் இருந்திருக்கும்.
பிள்ளைப் பிடிப்பவனைப் போன்று, தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வாகனங்கள் வராத காலம் அது. தொன்னூறுகளுக்கு முன்பான காலகட்டம் குழந்தைகளை விளையாட, சுதந்திரமாக இயங்க அனுமதித்த அற்புதமான கால கட்டம். மேலும் அப்போது விளையாட தெருக்கள் இருந்தன. நிறைய குழந்தைகளும் இருந்தன.இன்று தெருக்களும் இல்லை. உடன் விளையாட பிள்ளைகளும் இல்லை. பள்ளிகளில் விளையாடுவதற்கு இடம் சிறிதும் ஒதுக்காமல், கான்கரீட் கட்டிடங்கள் வானளாவிய அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய இன்றைய தனியார் பள்ளிகள் நவீனச் சிறைச்சாலைகளின் இன்னொரு முகமாகவே விளங்குகின்றன. பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் காலையில் படுக்கையை விட்டே எழவே தயங்குகின்றனர். முரண்டும் பிடிக்கின்றனர். அவர்களின் அளவுக்கதிகமான அதிகாலைத் தூக்கம் மனஅழுத்தத்தின் பரிசாகும்.
இளம் வயதிலேயே ஓர் எதிர்காலத் தலைமுறையை மன அழுத்தத்தோடு உருவாக்குவதன் மூலம் சூழலில் என்ன விதமான வளர்ச்சியை, மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் நாம்? பத்து வயதில் எம்.எஸ்.ஸி முடித்து, பதினைந்து வயதில் பி.எச்.டி முடித்து, ஒரு பெரிய நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலையில் அமரலாம். ஆனால் இதுவெல்லாம் குழந்தை எனும் அடிப்படையான ஆளுமை வளர்ச்சியை விற்றோ அல்லது அடகு வைத்தோ பெறப்பட்டதாகும். அதுபோன்ற விதிவிலக்கான குழந்தைகளை அளவோடு உற்சாகப்படுத்துவதே சூழலுக்கு நல்லதென்று தோன்றுகிறது. ஒருபோது அவர்கள் நமது முன்மாதிரிகள் ஆகமுடியாது. காலத்தின் தேவையும் அதுவல்ல. தெருவில் விளையாடி, கதைகேட்டு கழனியில் நிலக்கடலையும், எலியும் சுட்டுச் சாப்பிடுபவர்களே நமது கவனத்திற்குரியவர்கள் ஆவர். அவர்களின் பார்வையில் இருந்து தான் நாம் இன்றைய கற்றல் கற்பித்தலை விரித்தெடுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்றைய நம்முடைய தலையாய பிரச்சனையே, குழந்தைகள் குழந்தைகளாக இல்லாமல் வயது வந்தவர்களைப் போன்று உருமாறிக் கொண்டிருப்பதுதான்.

4 comments:

ஜெயன் தேவா said...

மிக அருமையான, சிந்திக்க வைக்கும் பதிவு... குழந்தைகளை குழந்தைப் பருவத்திலேயே அதி மேதாவிகளாக மட்டுமல்ல, வளர்ந்தவர்களின் மனப் பாங்கு கொண்டவர்களாகவும் பார்க்க விழைகிறது சமூகம்...ஒரு ஸீரியஸான விஷயத்தை சினிமாவும், டீவீக்களும் எவ்வளவு உதாசீனம் செய்கின்றன...

Anonymous said...

மிகவும் சரியாக உணர்ந்திருக்கிறீர்கள் ஜெயன். மிக்க நன்றி

காலபைரவன் said...

மிகவும் சரியாக உணர்ந்திருக்கிறீர்கள் ஜெயன். மிக்க நன்றி

gu said...

நண்பன் விஜிக்கு,
நான் படித்த இக்கட்டுரையில் உள்ள இரு சிறிய தவறுகளை(மொழிப் பிழை தான், கருத்துப் பிழை அல்ல) திருத்த வேண்டுகிறேன்.

1. பிள்ளைப் பிடிப்பவனைப் போன்று, தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வாகனங்கள் வராத காலம் அது. தொன்னூறுகளுக்கு .

2. இப்போதும் உயர்வாகவே எண்ணத் தோன்றுகிறது. ஒரு சந்தர்பத்தில் கூட அவர் என்னை படி என்று சொன்னதே கிடையது.

மேற்கண்டவற்றில் தொண்ணூறு, கிடையாது என திருத்தவும்.

Post a Comment