Saturday, August 28, 2010

நவீனத்துவத்தின் கோமாளி






ஆகச் சிக்கலானதும் குரூரமானதுமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, ஓர் நகைச்சுவை நடிகரின் இருப்பு பலநிலைகளிலும் தேவையான ஒன்று. பல்வேறு கட்டங்களில் மனஅழுத்தத்தோடு உழன்றுகொண்டிருக்கும் மக்களை தங்களது நடிப்பின் மூலம் சந்தோஷப்படுத்தி, மனச்சிக்கல்களில் இருந்து மீட்கும் ஒரு மீட்பராக நகைச்சுவை நடிகர் செயல்படுகிறார். இந்தப் போக்கை நாம் வரலாற்றின் பக்கங்களை புரட்டுவதன் மூலம் உணரமுடியும்.
காலம் எனும் நீண்ட அலகில் அவர்கள் விகடகவி, கட்டியங்காரன், கோமாளி எனத் தொடர்ந்து பயணித்து இன்றைய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் என அடையாளப் படுத்தப்படுகிறார்கள். நாடகமோ கூத்தோ அல்லது திரைப்படமோ எதுவாக இருந்தாலும் ஓர் நகைச்சுவை நடிகரின் பாத்திரம் தவிர்க்க முடியாததும் நிராகரிக்க முடியாததுமாகும்.
மேற்கண்ட காரணங்களைக் கொண்டுதான் நாம் நடிகர் வடிவேலுவின் இடம் திரைப்படங்களில் எவ்வாறு உருப் பெருகிறது, எந்த அரசியலைப் பேசுகிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியும். என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் எனும் இரு நகைச்சுவை நடிகர்களுக்கு பின்பு தனது உடல் மொழியைப் பெரிதும் பயன்படுத்திய ஒரே நடிகர் என்று வடிவேலுவைக் குறிப்பிட்டுச் சொல்ல நமக்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. சாதாரண வெகுஜன ரசனைக் கொண்ட பார்வையாளன் கூட மேற்கண்ட முடிவுக்கு சுலபத்தில் வந்துவிட முடியும். மேலும் எனது நோக்கம் இங்கு வடிவேலுவின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்வது என்பதும் அல்ல. அவர் ஓர் நடிகர் என்ற முறையில், தன் நடிப்பில் எப்படி தொடர்ந்து அழகியலையும், வளர்ச்சியையும் தக்க வைத்தப்படி இயங்குகிறார்?. இன்றைய சமூகத்தில் நீக்கமற விரவிக் கிடக்கும் மனச்சிக்கல்களை தனது நடிப்பின் மூலம் எவ்வாறு விசாரணை செய்கிறார் என்பதை ஒரு ரசிகனாக நின்று சிறிய அளவில் ஆராய முற்படுவதற்காகவே இக்கட்டுரை. எல்லா நகைச்சுவை நடிகர் மேலும் எனக்கு அன்பும் ஈர்ப்பும் உண்டு. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் அந்த இடத்தை இட்டு நிரப்பி இருக்கின்றனர். அதில், கவுண்டமணி, செந்தில், விவேக், போன்றவர்களுக்கும் இடம் உண்டு. இவர்களையும் தாண்டி எப்படி வடிவேலு இக்காலத்தின் கலைஞனாக இருக்கிறார், அவரின் நடிப்பு எவ்வகைப்பட்டது, அவர் ஏற்கும் பாத்திரத்தின் வகைகள், அப்பாத்திரங்களின் மூலம் அவர் நிகழ்த்தும் உரையாடல்கள் வழி வெளிப்படும் அரசியல் அகியவற்றையும் பற்றியே எவ்வித மனசாய்வும் இன்றி எழுத விரும்புகிறேன்.
வடிவேலுவின் நகைச்சுவைப் பாத்திரங்களையும், அக்காட்சிகளையும் விவாதிப்பதற்கு முன்பாக உலகம் முழுவதுமாக தற்போது நடைமுறையில் இருக்கும் நடிப்பின் வகைகளையும், நகைச்சுவையின் வகைகளையும் அறிந்து கொள்வதன் மூலம் வடிவேலுவின் இடத்தை காட்சி ஊடகங்களின் பரப்பில் வைத்து பொருத்திப் பார்க்க வசதியாக இருக்கும்.




நடிப்பின் வகைகளாக இன்று உலகம் முழுவதுமாக அறியப்படுவன ; மெத்தட் ஆக்டிங் (method acting) இதை கண்டுபிடித்தவர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எனும் அரங்கக்கலை நிபுணர். அதற்கடுத்து மெய்ஸ்னர் டெக்னிக் (meisner technique) இதை வளர்த்தெடுத்தவர் ஸான்போர்டு மெய்ஸ்னர் ஆவார். இதில் முன்னது, நடிப்பை அந்நடிகனுக்குள்ளிருந்தே மெல்லக் கொணர்வதாகும். உதாரணமாக ஒரு சோகக்காட்சியில் நடிக்க வேண்டுமாயின் அந்நடிகனின் வாழ்வில் நிகழ்ந்த மிக நெருக்கமானவர்களின் மரணத்தையோ அல்லது துயர நிகழ்ச்சிகளையோ யோசிக்கச்செய்தும் உள்வாங்கச் செய்தும் தேவையான உணர்ச்சிகளை / பாவங்களை வெளிக்கொணரும் முறையாகும். இவ்வகை நடிப்பை சிறப்புற கையாள்பவர்களாக ஆன்ஜிலான ஜூலி, டேனியல் டே லெவிஸ், மர்லின் மன்றோ, பால் நியூமேன், அல் பாசினோ, ராபர்ட் டிநிரோ, போன்றோர்களை குறிப்பிடலாம்.
ஆனால் மெய்ஸ்னர் டெக்னிக் என்பது முற்றிலும் மெத்தட் ஆக்டிங் வகையில் இருந்து மாறுபட்டதாகும். இதில் நடிப்பு முறையென்பது பெரும்பாலும் உடற்பயிற்சி மற்றும் சக நடிகனோடு கொள்ளும் உரையாடல்கள் மூலம் தேவைப்படும் நடிப்பை பெறுவதாகும். மெல்ல மெல்ல சிக்கலான தொடர் பயிற்சியின் மூலம், அந்நடிகளின் திறனை மேன்மை படுத்தும் முறையாகும். இம்முறையில் சக நடிகன் வெளிப்படுத்தும் அசைவு(movement)மற்றும் உணர்ச்சிகள் (emotions) ஆகியவற்றுக்கு பதிலாக / மாற்றாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றும் அசைவுகளில் இருந்து தேவையான நடிப்பை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவை தவிர ராபர்ட் ஹோகனின் கோதே (GOTE) எனும் வகையும், நடன இயக்குனர் மேரி ஓவர்ஸியின் நடிப்பு முறையும் குறிப்பிடப்படவேண்டிய நடிப்பு முறைகளாகும். நடிப்பு என்பது ஒரு பிறவிக்கலை என்ற ஓர் எண்ணம் நம்மிடம் உண்டு. ஆனால் மேற்கண்ட நடிப்பு பயிற்சிகள் மூலம் உலகின் ஆகச் சிறந்த நடிப்புகளை வெளிப்படுத்திய நடிகர்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
மேற்கண்ட நடிப்பு வகைகளின் ஊடே வடிவேலுவின் நடிப்பை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு சில விளக்கங்களை நாம் பெற முடியும். நிச்சயம் வடிவேலுவிற்கு திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஸ்டேனிஸ்லாவ்ஸ்கியைப் பற்றியோ மெய்ஸ்னர் பற்றியோ நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரை அறியாமலேயே அவர் மேற்கண்ட இருமுறைகளையும் பயன்படுத்தியிருக்கக்கூடும். பிறவிக்கலைஞன் எனும் தகுதி ஒரு எல்லை வரையே கலை இலக்கியத்தில் ஒருவனுக்கான இடத்தை அடைய உதவும். அதைத் தாண்டுவதென்பது, அவன் மேற்கொள்ளும் தொடர் பயிற்சி மற்றும் அது தொடர்பான வாசிப்பு சார்ந்தே சாத்தியப்படும். எப்போதும் விதிவிலக்குகள் பொது நியதிகள் ஆகா.
ஆக நடிக்க வருவதற்கு முன்பு தனது கிராமம் சார்ந்த வடிவேலுவின் ஆழ்ந்த உற்றுநோக்கல்களே பின்னாளில் அவரின் கதா பாத்திரங்களை மெருகூட்டப் பயன்பட்டிருக்கக் கூடும் எனும் முடிவிற்கு மேற்கானும் கருத்துகளின் மூலம் வந்து சேரமுடிகிறது.
-தொடரும்

1 comment:

VELU.G said...

அருமையான பதிவு

Post a Comment