Thursday, August 19, 2010

எல்லோருக்கும் முன்பாக ஒரு நெடுஞ்சாலை நீண்டுகொண்டேயிருக்கிறது.



சற்றைக்கு முன்னர் புணர்ந்த
அவளின் கருங்கூந்தலை ஒத்திருக்குமந்த
நெடுஞ்சாலையின்
ஒருபுறம் நீங்கள்
அதற்கு நேரெதிரே மெல்ல ஊர்ந்து
வருகிறது ஓர் நத்தை
நிலைத்துப் பரவும் வெயிலைப்போல

நகரின் பிரதான நெடுஞ்சாலையைக் கடக்கிறோம்
என்ற அச்சம் சிறிதுமின்றி
மெல்ல முன்னேறுகிறது அது
ஆனால் உங்களால் அவ்வாறு இருக்கமுடிவதில்லை
பெருஞ்சீற்றத்தோடு பாய்ந்து செல்லும்
வாகனங்கள், சாலைவிதிகள்
விடைத்தகுறிகளென நிற்கும் கட்டடங்கள்
சடுதியில் கடந்து செல்லும் ஒரு
மரணவூர்தியைப்பற்றியான
பிரமிப்பில் ஆழ்ந்துபோகின்ற கணத்தில்
நாகத்தின் பிளவுண்ட நாவெனத் தோன்றுகிறது
அந்நெடுஞ்சாலை

அனைத்தையும் அலட்சியம் செய்தபடி
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அந்நத்தையிடம்
அதன் சுதந்திரம் குறித்து
பயமின்றி சாலையைக்கடக்கும் நுட்பம் குறித்து
கடக்கவேண்டியதன் தேவைகுறித்து
துவக்குகிறீர்கள்
உங்களின் விசாரணையை

அந்நத்தை தலையுயர்த்தி பேசத்தொடங்குகிறது;
கேள்வி கேட்பதைப் போன்று அவ்வளவு
சுலபமானது அல்ல ஒரு நெடுஞ்சாலையைக் கடப்பது
ஒரு பயிற்சிக்காக தீவிரத்துடன்
பழகிக்கொண்டிருக்கிறேன் நான்
இன்று
நீர்நிலையாய் இருக்கும் என் வசிப்பிடம்
நாளையும் அவ்வாறே இருக்கும் என்பது
என்ன நிச்சயம்
மேலும் இதிலெல்லாம் சுணக்கம் காட்ட முடியுமா
எனக்கேட்டு
வெயில் ஊர்கிற சாலையில் மெல்ல நகர்கிறது

யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நெடுஞ்சாலையில் சிவப்பு அணைந்து மெல்ல
மஞ்சள் ஒளிரத்தொடங்குகிறது

No comments:

Post a Comment