
இயல்பிலேயே நம் பண்டைத் தமிழர் எதிர்கால நீர்த்தேவைகள் குறித்த தொலைநோக்கோடுகூடிய பார்வையைக் கொண்டிருந்தனர் என்பதை நமது இலக்கியங்கள் மற்றும் வரலாற்று நூல்களின் வழி அறிய முடிகிறது. தங்களின் வாழ்க்கைக்கு தேவையான நீர்த்தேவைகளை அவர்கள் ஏரி, குளம் மற்றும் கிணறுகளின் மூலமே பூர்த்தி செய்துகொண்டனர். மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் மேற்கண்ட நீர்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டதை தமிழகத்தின் உட்புறக் கிராமங்களுக்குச் சென்று கவனித்தால் இப்போதும் உணர்ந்துகொள்ள முடியும்.
கிராமப் பொருளாதாரம் பெரிதும் விவசாயம் சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக கால்நடைகள் சார்ந்ததுமாகும். ஆகவேதான் நம்முன்னோர்கள் ஊரைச் சுற்றிலும் குளங்களையும் சிறு குட்டைகளையும் அமைத்தனர். மழைநீரை முழுவதும் குளங்களிலும் ஏரிகளிலுமே அவர்கள் சேமித்தனர். கிராமப் பொருளாதாரத்தைக் குறித்து ஆன்மநேயத்தோடு இந்தியாவில் சிந்தித்தவர்கள் இருவரே. ஒருவர் மகாத்மா காந்தி. மற்றொருவர் பெருந்தகை ஜே.சி.குமரப்பா ஆவார். அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்களை கொண்டவர்கள் கூட அவர்களின் கிராமப் பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகளை எளிதில் புறந்தள்ள முடியாது.தன் வாழ் நாள் முழுக்க கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே இந்தியப் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அமையவேண்டும் என்றும் அதுவே இயல்பானதும் சரியானதுமாகும் என்றும் ஜே.சி.குமரப்பா தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்ததை நமது தொலைநோக்கற்ற அரசியல் தலைவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தவே இல்லை. அவர்களின் நோக்கமெல்லாம் மிகப் பெரிய அணைகளின் மீதும், பெருந் தொழிற்சாலைகளின் மீதும் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதும் கிராம நீர்த்தேவைகளின் ஆதாரங்கள் குளங்களும் ஏரிகளுமே என்று ஜே.சி.குமரப்பா தன் ஒற்றைக் குரலில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அக்கிராமங்களின் தண்ணீர்த் தேவையைப் பொருத்து குளங்களும் ஏரிகளும் ஏற்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது எனும் செய்திகளை ஆவணங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. இப்போதைக் காட்டிலும் கடுமையான பஞ்சத்தையும் வறட்சியையும் நம் முன்னோர்கள் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அப்போது அவர்களை அச்சிக்கல்களில் இருந்து மீட்க பெரிதும் உதவியது நீர் ஆதாரங்களின் மீது அவர்கள் கொண்டிருந்த அக்கறையே. முன்னோர்களின் வழிகாட்டுதல்களையும் வாழ்வியல் முறைகளையும் நவீனத்துவத்தின் பேரால் தொடர்ந்து அலட்சியம் செய்து வரும் தமிழ்ச்சமூகம் இப்போது தண்ணீர் பற்றாக்குறை எனும் பிரச்சனையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எளிய சூத்திரத்தையே நம் முன்னோர்கள் கையாண்டனர்.அவை, மழைக்காலங்களில் மழைநீரை ஏரிகளிலும் குளங்களிலும் சிறிதும் சேதாரமின்றி சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொண்டதுதான்.கிராமப் புறங்களில் இன்றும் ‘சர்க்கார் கிணறு’ எனும் சொற்றொடர் புழங்குவதை ஆழ்ந்து நோக்கினால் அதன் பின் இயங்கும் நம் முன்னோர்களின் இயற்கை சார்ந்த பார்வையை, அக்கரையை உணரமுடியும். ஆனால் நமது முன்னோர்கள் பொது கிணறுகளை வெட்டினார்களே தவிற வீடுகள் தோரும் கிணறுகளை வெட்டவில்லை. ஆனால் இன்று ஆழ்துளை கிணறுகளே இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதன் காரணமாகவே நிலத்தடி நீர்மட்டம் வேக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. கிராமப் புறங்களில் கூட ஐநூறு அடி வரை பூமியை துளைத்தெடுக்கும் கொடூரம் நடக்கிறது. ஆனால் தண்ணீரைத் தான் காண முடியவில்லை. நகர் புறங்களில் நிலத்தடி நீர் மட்டத்தின் நிலை இன்னும் அபாயகரமான நிலையில் உள்ளது. பல்வேறு இடங்களில் கடல் நீர் உட்புகுந்துவிட்ட அவலத்தையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.மேற்கண்ட அவலங்கள் எவையும் ஒரே நாளில் ஏற்பட்டு விடவில்லை என்பதுதான் ஆகப் பெரிய துக்கம்.
பொதுவாகவே நாம் அடிப்படைகள் சார்ந்து யோசிப்பது கிடையாது.மேலும் ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் உடனடி வெற்றிகள் மீதுதான் மோகம் அதிகம். ஆகவே எந்த அரசாக இருந்தாலும் அடிப்படை ஆதாரங்கள் என்று அழைக்கப் படும் மூல வளங்களை கண்டுகொள்வதுமில்லை. அவற்றைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்வதுமில்லை.ஆனால் நீர் ஆதாரங்களைக் காக்க பல ஆயிரங்கோடிகள் ஒவ்வோராண்டும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.அவ்வாறு ஒதுக்கப்படும் பணம் சரியான வழியில் செலவிடப் படுகிறதா என்பதை சாமானிய மக்களால் ஒருபோதும் அறியமுடியாது.மேலும் ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி மற்றும் அரசின் இன்னபிற அலுவலகங்கள் கட்ட இடம் தேவை எனும் நிலை எழும் போது ஆட்சியாளர்களின் கவனத்திற்கு ஏரிகளும் குளங்களுமே கவனத்திற்கு வருகின்றன. சமீபகாலமாக ஏரி குளங்கள் ஆக்கரிமிப்பு செய்வது அதிகரித்து வருவதாக ஓர் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஏரி குளங்களின் மீது கட்டடங்களை அசுர வேகத்தில் எழுப்பும் நமது அரசுகளின் தீவிரத்தின் மீது செயல்படும் தொலைநோக்கற்ற அரசியல் பார்வையையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.
கிராமப் புறங்களில் காணாமல் போகும் குளங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.ஒரு குளம் எப்படி காணாமல் போகும் என்று நம்மிடையே வியப்பு கலந்த ஓர் கேள்வி எழக்கூடும். ஆனால் அவை உண்மைதான். ஒவ்வொரு கிராமத்திலும் குளங்கள் மெல்ல காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன.ஒரு குளத்தை காணாமல் ஆக்க முறைப் படுத்தப் பட்ட ஒரு சில படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன. அவை, செங்கல் சூளை மற்றும் இன்னபிற தேவைகளுக்காக குளங்களைச் சுற்றி மண் அள்ளுதல்; அதன் பின் குளத்தைச் சுற்றி நாலாதிசையிலும் பாவப்பட்டுள்ள படிக்கற்களை மெல்ல பெயர்த்தெடுப்பது; இதன் தொடர்ச்சியாக குளத்தின் ஆழத்தை கொஞ்சம் கொஞ்சமாக தரைமட்டத்திற்கு உயர்த்துதல். இவ்வாறாகத்தான் ஒரு குளம் நம் எல்லோரின் கண் எதிரிலேயே தன் உருவத்தை ,இருப்பை இழந்து ஒரு சமதளமாக மாற்றப் படுகிறது. இவை அனைத்தும் ஒரே நாளில் நிகழ்த்தப் படுவன அல்ல. ஒரு தவறு நடந்துகொண்டிருக்கிறது என்கிற எண்ணம் யாருக்கும் தோன்றாமல் ஒரு குளத்தின் அழிவு நிகழ்த்தப்படுகிறது.இந்த சீரழிவுகளை முன்னின்று நட்த்துவது சாதாரண வெகுஜன மக்கள் அல்ல. அவ்வாறு செய்பவர் நிச்சயம் அந்த பகுதியின் ஏதாவது ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை. இம்மாதிரி அழித்தொழிப்புகள் அவர்களுக்கே கை வந்த கலை. மணல் திருட்டு, நில ஆக்கிரமிப்பு போன்ற செயல்பாடுகளில் மட்டும் நமது அரசியல்வாதிகள் கட்சிபேதங்களை கடந்து ஓர் அணியில் நின்று செயல்படுவதன் தேவையை மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். எப்போதுமே ஒரு சாதாரண வழிப்பறிக்காரனிடம் தன் கோரமுகத்தை காட்டும் சட்டம் மற்றும் நீதித்துறை ஒருபோதும் அம்முகத்தை கோடிகளில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளிடத்தில் காண்பிப்பது கிடையாது. மேலும் அத்துறை தனது விசுவாசத்தின் வாலை ஆட்டி அதிகாரவர்க்கத்தின் பிம்பமாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.
பச்சப்புள்ளாக் குளம், ஆயிகுளம், வண்ணாங்குளம், ஆண்டாசெட்டி குளம், வெள்ளக் குளம் போன்ற பெயர்களைத் தாங்கி ஒரு கிராமத்தின் அடையாளமாகவும், அக்கிராமத்தின் வரலாற்றுச் சுவடுகள் சிலவற்றை தன்னகத்தே கொண்டிருக்கின்ற குளங்களின் இன்றைய நிலை கேள்விக்குறியதாகவும் பீதியுண்டாக்குவதாகவும் உள்ளன .சராசரியாக கிராமப் புறங்களில் உள்ள குளங்களின் நீள அகலங்கள் அறுபது மீட்டராகவும் நாற்பது மீட்டராகவும் இருக்கின்றன. ஆழம் குறைந்தது இரண்டு மீட்டரில் இருந்து மூன்று மீட்டர்களாக உள்ளது. மேற்கண்ட அளவில் ஒரு குளத்தை வெட்ட இன்று பல லட்சங்களை செலவிட வேண்டியிருக்கும் என்ற பிரக்ஞை சிறிதும் இன்றி நாம் குளங்களை எவ்வித குற்றவுணர்வுமின்றி தூர்த்து கொண்டிருக்கிறோம். எவற்றையும் கண்டுகொள்ளாமல் அரசும் ஒரு பார்வையாளராகவே இருக்க விரும்புகிறது. பல ஆயிரம் கோடிக்கு கீழ் செய்தாக வேண்டிய எந்தவொரு திட்டச் செலவையும் கற்பனை செய்துப் பார்க்க கூட அரசு விரும்புவதில்லை. நீர் நிலைகளைக் காக்க கோடிகளில் ஒதுக்கீடு செய்யும் இச்சூழலில் ஒவ்வொரு ஆண்டும் சில குளங்கள் காணாமல் போவதை நாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பத்து குளங்கள் இருந்த ஒரு கிராமத்தில் இன்று ஆறு குளங்களே பயன்பாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய சீர்கேடு? இவற்றையெல்லாம் அரசு எவ்வாறு சீர்செய்யப் போகிறது? அவ்வாறு செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொலைநோக்கோடு இருக்குமா என்பன போன்ற ஐயங்கள் நம்முன் பேருரு கொள்வதை தவிர்க்க முடியவில்லை. நம்முடைய ஐயங்களை களையவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு.
கோட்டை கொத்தளமும் கொடிமரமும் நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கோ அல்லது அதைவிட கூடுதலாகவோ மக்களும் மாக்களும் குடிக்கவும் அன்றாடம் புழங்கவும் தண்ணீர் தரும் குளங்களும் ஏரிகளும் அவசியம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய மனம் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவர்கள் நாம். மிகப் பெரிய திட்டங்களின் மீது காட்டும் அக்கரையை அரசு கிராமப் புறங்களில் உள்ள நீர்நிலைகள் மீதும் காட்ட வேண்டும். குறிப்பாக நீர் ஆதாரங்களாக உள்ள ஏரி குளங்கள் மீதும் காட்டவேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஏரி குளங்கள் சீர் செய்யப் படுவதாகக் கூறி அரசு உண்மைநிலையை உணராமல் இருப்பது இன்னும் மோசமான சூழலையே ஏற்படுத்தும். இவ்விஷயத்தில் சிறிதும் மெத்தனம் காட்டாமல் அரசு, கிராமங்கள் உள்ள நீர்நிலைகளை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமே மக்கள் மற்றும் மாக்களின் தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.”முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்க்கு இறை என்றே வைக்கப் படும்” எனும் குறளின் ஆழத்தையும் பொருளையும் அரசு உணரவேண்டிய சரியான தருணம் இதுவே.
3 comments:
குளங்களின் அடிப்படை மழை நீரை சேமித்து மழை இல்லாத காலப்பகுதிகளில் பாவிப்பது. இதற்கு முன்னர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் எல்லாரையும் மழை நீரை சேமிக்கும்படி வேண்டுதல் வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் இதை எவ்வளவு தூரம் முன்னெடுத்தார்கள் என்று தெரியவில்லை...
உங்கள் வலைப்பதிவில் தமிழ்மணம் பதிவுப் பட்டையை இன்னும் இணைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதை இணைத்தீர்கள் என்றால் உங்கள் பதிவைப் பகிர்து கொள்வது இன்னமும் இலகுவாக இருக்கும்
எவ்வளவோ முயற்சித்தும் என்னால் தமிழ்மணம் பதிவுப் பட்டையை இனைக்க முடியவில்லை.
Post a Comment