
பஸ்ஸை விட்டு அவர்கள் இறங்கியதுமே அவன் கேட்ட முதல் கேள்வி “கண்டாச்சிபுரம் ரொம்ப மாறிடிச்சி இல்ல” என்பது தான். அவன் கேள்வியை ஒருவரும் பொருட்படுத்தவில்லை. பேருந்திலிருந்து தங்களது உடமைகளை இறக்குவதில் அவர்களது கவனமிருந்தது. அண்ணாசிலை கீழே செல்லாயி வீட்டு கண்ணன் டீகடை போட்டிருந்தார். கடைத் தெரு ஜனங்களின் நடமாட்டம் இருந்து கொண்டிருந்தது. ஒட்டம்பட்டு வழியாக திருக்கோவிலூருக்கு செல்லும் கடைசி பேருந்து நின்று கொண்டிருந்தது.
கொண்டு வந்திருந்த பெட்டிகளை இறக்கியான பின் அவர்கள் செல்லாயி கடைக்கு டீ குடிக்கச் சென்றனர். தேனீர் குடித்துக் கொண்டே அவன் டீ கடை காரரைப் பார்த்து கேட்டான். “இங்க இருந்த நாவமரத்த வெட்டிட்டாங்களா?” அதற்கு கடைகாரர் ஆதங்கத்துடன் “ஆமாங்க... ரோட்ட அகலப்படுத்தறமுன்னு நாவ மரத்த வெட்டிட்டாங்க” என்றான். அவனுக்கு வருத்தமாக இருந்தது. வேகமாக டீ யை குடித்து தன்னுடைய டிரங்க் பெட்டியை தூக்கிக் கொண்டு மெல்ல நடக்கத் தொடங்கினான். இன்னும் அவர்கள் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அவன் தனியே புறப்படுவதை பார்த்த நாடக கம்பெனி மேனேஜர் “என்ன சுப்ரமணி நீ பாட்டுக்கு தனியா கௌம்பிட்ட?” என்று கேட்டார். அதற்கு அவன், “ஆமா நீங்க பொட்டிக்காரர் வந்தா தான் வருவீங்க, நின்னு இட்டுட்டு வாங்க, நா மெதுவா நடந்து போறேன்” என்று கூறிவிட்டு இடுப்பில் சுற்றியிருந்த பீடிகட்டிலிருந்து ஒன்றை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.
சிவன் கோயிலை நெருங்க நெருங்க இலுப்பை பூவின் வாசனை அவனுள் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. வாசனையை அவன் ஆழ்ந்து இழுத்தான். கோபுரத்திலிருந்த புறாக்கள் சிறகுகளை அடித்தபடி இலுப்பை மரம் நோக்கிச் சென்றன. கோயில் அருகில் உள்ள அடிகுழாயில் ஒருவர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். நாடகக் கொட்டகையை நெருங்க நெருங்க இலுப்பையின் வாசனை அவனுக்கு அம்சவேணியை ஞாபகப்படுத்தியது. ஒருசில நிமிடம் அவன் சிவன் கோவில் முகப்பு விளக்கையே உற்றுப்பார்த்தான். அவன் நினைவலைகள் மெல்ல பின்நோக்கி சுழலத் தொடங்கின. அப்போது சகடை கொட்டகை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு நாய் அவனைப் பார்த்துக் குறைக்கத் தொடங்கியது.
“சைலேன்ஸ்,, சைலேன்ஸ்” என்று கட்டியக்காரன் சொன்னதும் மந்தவெளியில் திரண்டுடிருந்த கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. நாடகம் பார்க்க வந்த சிலர் மேடைக்கு முன்பாக பாயைப் போட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக குழல்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அவற்றைச் சுற்றி நிறைய பூச்சிகளும் வண்டுகளும் பறந்து கொண்டிருந்தன. காத்தாயி வீட்டு சோமு டீ கடை போட்டிருந்தார். தூங்கிக்கொண்டிருந்தவர்களை பக்கத்திலிருந்து எழுப்பிவிட்டனர். கூட்டத்தில் இன்னும் சலசலப்பு நீடித்தது. மீண்டும் கட்டியக்காரன், “சைலேன்ஸ், சைலேன்ஸ்” என்று சொல்லி, “இன்னைக்கு நடக்க இருக்கிற நாடகத்தின் பெயரைச் சொல்லப்போகிறேன், கவனமாக கேளுங்க” என்று பீடிகை போட்டான். தபேலா வாசிப்பவர் சிறு சுத்தியால் டங்டங்கென தபேலாவை தட்டி சரி செய்து கொண்டிருந்தார். மீண்டும் கட்டியக்காரன் கூட்டத்தைப் பார்த்து ஒலிவாங்கி முன்வந்து கூறத் தொடங்கினான், “இன்றைக்கி நடத்தக் கூடிய நாடகத்தின் பெயர் ராமர் பட்டாபிஷேகம் அல்லது ராவண வதம்.” இன்னொரு முறை கூறினான். “ராமர் பட்டாபிஷேகம் அல்லது ராவண வதம்.” மேலும் அவன் கூட்டத்தைப் பார்த்து, “பெரியோர்களே, தாய்மார்களே, இளைஞர்களே, பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களே, நடத்தக்கூடிய நாடகம் அருமையான நாடகம், அதில் ஏற்படும் சொற்குற்றம், பொருட்குற்றம், ஆகிய குற்றங்களைப் பொறுத்து, எங்களது நாடகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமென அம்மன் நாடக மன்றத்தின் சார்பாக உங்கள் பாதங்களைத் தொட்டுக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறி, “நாட்டுக்கு சேவை செய்ய
நாகரீக கோமாளி வந்தேனுங்க....
பாட்டு பாடி ஆட்டமாட
அழகான கோமாளி வந்தேனுங்க.....”
பாட ஆரம்பித்தான். ஆர்மோனியக்காரர் அப்பாடலை உரக்க பாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தோதாக தபேலா காரரும், தாளம் போடுபவரும் வாசித்தனர். பாடிக் கொண்டே கட்டியக்காரன் மேடையின் ஓரத்திற்கு சென்று திரையை விலக்கி பார்த்தான். அடுத்து வரும் பெண் வேஷம் தயாராக இருந்தது. முகச்சவரம் செய்துகொள்ள தயாராகி கொண்டிருந்தார் நங்காத்தூர் சுப்பரமணி. அம்மன் நாடக மன்றத்தின் ஆஸ்தான திருமால் அவதாரம் அவரே. அரிதாரத்தை பூசிக்கொண்டு மேடையில் நின்றாரென்றால் நிஜ ராமனே வந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் தோற்று ஓடி விடுவான். குரல் கனீர் கனீர் என ஒலிக்கும். அடவு வைத்து ஆடக்கூடிய ஒரு சிலரில் அவரும் ஒருவர். கண்ணாடியைப் பார்த்து அவர் முகச்சவரம் செய்து கொண்டிருந்த போது மேடையை ஒட்டி போட்டிருந்த கீற்று கொட்டகையை நீக்கியபடி ஆசூரார் பாலு, “சுப்ரமணி... சுப்ரமணி” என்று அவரை கூப்பிட்டு ஒரு எவர் சில்வர் சொம்பை கையில் கொடுத்தார். முகசவரம் செய்து கொண்டிருந்த சுப்ரமணி அவர் கொடுத்த எவர் சில்வர் சொம்பை வாங்கி தன் பெட்டி அருகே வைத்து மூடினார்.
மேடையில் கட்டப்பட்டிருந்த திரைக்கு பின்புறம் இருந்து, “சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு” என்று பாடிக் கொண்டே திரையை நீக்கியபடி அரியலூர் தண்டபாணி பெண் வேஷமிட்டு மேடைக்கு வந்து வளைந்து நெளிந்து மிகவும் கவர்ச்சியாக ஆடினார். அவ்வேடத்திற்கு தோதாக கட்டியக்காரனும் பலவித காம சேஷ்டைகளை செய்து கொண்டிருந்தான். கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது. சிறுவர்கள் கைதட்டி சிரித்தனர். ஆவூராமுட்டு பாண்டியன் வேகமாக நடந்து மேடையில் ஏறி பெண் வேடமிட்டிருந்தவரின் மார்புமீது பத்து ரூபாய் நோட்டை குண்டூசியால் குத்திவிட்டு வந்தான். தென்னண்ட வீட்டு ராமு அருகில் அமர்ந்திருந்த செங்குறிச்சியாரை சீண்டி “நாடகம் எப்படி சீர்கெட்டுப் போச்சு பாத்தியா?” என்றார். அதற்கு அவர், “ஆமா என்ன பன்றது பொன்ரங்கம் பொம்பல வேஷம் போட்டுக்கினு வந்தாக்க அப்படியே கண்ல ஒத்திக்க தோனும்,.ம் அதுலாம் ஒரு காலம்பா” என்று ஆதங்கப்பட்டார். அதற்கு ராமுவே, மீண்டும் “என்ன செய்யறது பா எல்லா நாடகக் காரங்களும் தான் ரெக்காடான்ஸ் ஆடரவங்களா மாறிட்டாங்களே” என ஆதங்கந்தோடு சொன்னார்.
முகசவரம் செய்து முடித்தவுடன் சுப்பரமணி தன் பெட்டிக்கு அருகில் மூடிவைத்திருந்த சொம்பை எடுத்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பிளாஸ்டிக் டம்பளரில் கொஞ்சம் ஊற்றி குடித்தார். குமட்டிக் கொண்டு வந்தது அவருக்கு. உடனே ஊறுகாய் பொட்டலத்தை பிரித்து நாக்கில் தடவிக்கொண்டு இன்னொரு மிடறு குடித்தார். தட்டிக்கு வெளியில் நின்று கொண்டிருந்த கோடியாமூட்டு சரவணன் பக்கத்தில் நின்றிருந்தவரை சீண்டி “இன்னா குடிக்கிறார் தெரியுதா?” எனக் கேட்டு, “சாராயம்” என உதட்டைப் பிதிக்கி கண்ணைச் சிமிட்டியவாறே பதிலையும் சொன்னான். சுப்ரமணிக்கு சாராயத்தின் நெடி தாங்க முடியவில்லை. மீண்டும் ஊறுகாய் பொட்டலத்திலிருந்து உறுகாயை சிறிது எடுத்து நாக்கில் தடவிக்கொண்டார். டம்ளரில் மீண்டும் கொஞ்சம் சாராயத்தை ஊற்றிக் குடித்து விட்டு தன் பெட்டி அருகில் சொம்பை மூடி வைத்தார். மிதமான போதையில் அவரது கண்கள் சுழன்றன. அந்தபோதையிலும் அவருக்கு அம்சவேணியின் ஞாபகம் வந்துபோனது வந்தததிலிருந்து அவர் எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் எங்கும் அவளின் நடமாட்டம் தென்படவில்லை. இம்முறை வழங்கமாக அவள் போடும் முறுக்குக் கடையைக்கூட காணவில்லை. எங்கு போயிருப்பாள் என்று யோசித்தப்படி இடுப்பு மடிப்பிலிருந்த பீடிக்கட்டை எடுத்து ஒன்றை உருவி பற்றவைத்தார். பெட்டியில் வைத்திருந்த கண்ணாடியை எடுத்து பார்த்துக் கொண்டே குழைத்து வைத்திருந்த அரிதாரத்தை முகத்தில் பூச ஆரம்பித்தார். மேடையில் சூரவேஷம் போட்டிருந்த கருவாட்சி கிருஷ்ணமூர்த்தி கட்டியக்காரணை சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தார். அடுத்து சுப்ரமணி தான் போக வேண்டும். வேக வேகமாக ஆடைகளை உடுத்தி தயாராக இருந்தார். மேடையில் இருந்து சூர வேஷமும் கட்டியக்காரனும் இறங்கிய பின் திரைக்கு பின்னே சென்று குரலெடுத்து,
“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே,”
என பாடிய படியே திரையை விலக்கியபடி மேடைக்கு வந்தார். பெட்டி போடுபவரும், தபேலா வாசிப்பவரும் அவருடன் இணைந்து பாடலை சத்தமாகப்பாடி வாசித்தனர். சுப்ரமணியின் கால்கள் தாளத்திற்கேற்ப சக்கரமென மேடையில் சுழன்றது. வாத்தியகாரர்கள் அவரது ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து வாசித்தனர். கூட்டத்தில் சல சலப்பு ஓரளவு அடங்கியிருந்தது. அவர் பாடி முடித்து, “அடே காவலா” என கட்டியக்காரனை அழைத்தார். கட்டியக்காரன் ஷார்ட்ஸ் அணிந்து, கலர் கண்ணாடி போட்டுக் கொண்டு வந்தான். அவனைப் பாத்த்து கூட்டம் கைதட்டிச் சிரித்தது. நாட்டு நலம் பற்றி கட்டியக்காரனிடம் விசாரித்தவர். தன் மனைவி சீதா என்ன செய்கிறாள் என பார்த்து வருமாறு கூறி, திரைக்கு பின் வந்து சொம்பில் இருந்து கொஞ்சம் எற்றிக்குடித்துவிட்டு பீடியை பற்ற வைத்து ஆழ்ந்து இழுத்தார். மேடைக்கு வலப்புறம் பானையில் வைத்துக்கொண்டு குல்பி ஒஸ் விற்றுக் கொண்டிருந்தான் ஒருவன். சிறுவர்கள் சிலர் அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
நேரம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நாடகமும் வனவாசம் கட்டத்தை அடைந்திருந்தது. அடுத்தது சீதையை இராவணன் கடத்திச் செல்ல வேண்டும். சுப்ரமணி ஒவ்வொருமுறை மேடைக்கு சென்று வந்ததும் ஒரு மிடறு சாராயத்தை குடித்து விட்டு ஒரு பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டார். போதை தலைக்கேறியதும் மீண்டும் அவருக்கு அம்சவேணியின் ஞாபகம் வந்தது. முறுக்கு கடையும் போடாமல் எங்கு சென்றிருப்பாள் என மீண்டும் யோசித்தவாறே பக்கத்திலிருந்த சித்தாமூர் மூர்த்தியை கூப்பிட்டு, “எனக்கு வயித்த என்னமோ பன்னுது.. ஏரி வரைக்கும் போய் வந்துடறேன், அது வரைக்கும் பாத்து மெல்ல நகத்துங்க” என்று கூறி அம்சவேணி வீட்டை நோக்கி நடந்தார். பெட்டிக்காரர் சத்தமாக பாடியபடி வாசித்துக் கொண்டிருந்தார். குல்பி ஜஸ் காரனும் வண்டியில் கட்டியிருந்த மணியை ஆட்டியபடி விற்றுக் கொண்டிருந்தான்.
அம்சவேணியின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போதே சுப்ரமணிக்கு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கும் அவளுக்கும் இடையில் நிகழ்ந்த அந்த முதல் சந்திப்பு குறித்த சித்திரம் அவர் மனத்திரையில் குமிழிட உடல் முழுக்க ஒரு வித பரவசம் தொற்றிக் கொண்டது.

அது சித்திரை மாதம் வழக்கமாகவே தமிழ் வருஷப்பிறப்பிற்கு கற்பக வினாயகர் கோவில் திருவிழா களைகட்டும். ஆட்டம் பாட்டம் எல்லாம் கனஜோராக நடக்கும். அந்த வருடமும் இரண்டு நாள் நாடகம் நடத்துவதாக ஏற்பாடு. ஜமீன் கூடலூரைச்சேர்ந்த பந்தல் காரர் ஒரு வாரத்திற்கு முன்பே கோவிலுக்கு வடக்கே விஸ்தாரமாக பந்தல் போட்டு சென்றுவிட்டார். அதன்பிறகான மாலையில் சிறுவர்கள் பந்தலடியே கதியாக கிடந்தனர். வழக்கமாக பெரும்பாக்கம் கதிரேசன் செட்டியார் ஜமா இல்லையென்றால் செ.குன்னத்தூர் சிவாலிங்கம் ஜமா தான் தாம்பூலம் வாங்குவார்கள். அந்த வருடம் என்ன காரணமோ தெரியவில்லை. நாட்டாண்மைக்காரர் தென்பேர் அம்மன் நாடக மன்றம் என்ற புது ஜமாவுக்கு தாம்பூலம் கொடுத்தார்.
லட்ச தீபத்தன்று முதல் நாள் ஆட்டம். மக்கள் அரசமரத்தடியில் பொங்கலிட்டு வினாயகருக்கு படைத்து, ஊரைச் சுற்றிக்கொண்டு சென்றபோது செஞ்சியில் இருந்து வரும் ஜோதி பஸ்சில் சந்திரா கடை முகட்டில் வந்து இறங்கினார் நாடக மன்றத்தினர். ஆளாளுக்கு ஒரு இரும்பு ட்ரங்க் பெட்டி வைத்திருந்தினர். அதன் மீது அம்மன் நாடக மன்றம் தென்பேர் என பெயின்ட்டால் எழுதியிருந்தது. வழிகேட்டுக்கொண்டு அவர்கள் சன்னதி தெரு வழியாக நாடக கொட்டகையை அடைந்தனர். அவர்களைக் கண்டதும் சிறுவர்கள் கும்மாளமிட்டனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பெட்டியை கொட்டகையில் வைத்துவிட்டு அம்மன் நாடக மன்றம் என்று எழுதப்பட்ட திரைச் சீலையை முதலில் கட்டினர். பின்னர் மேடையின் பின்புறம் இருந்த கொட்டகையில் ஒவ்வொருவரும் தங்களது பெட்டியை திறந்து ஆடைகளை எடுத்து கயிற்றில் போட்டனர். வழக்கமாக திருக்கோவிலூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சவுண்ட் சர்வீஸ் தான் ஒளி ஒலி அமைக்கும் வேலையை ஏற்பார்கள் அந்த வருடமும் அவர்கள் தான் மேடையில் மைக்கை கட்டிக் கொண்டிருந்தனர். மந்தவெளியில் மக்கள் மெல்ல கூடக் தொடங்கினர். சிலர் பாயைப் போட்டு இடம் பிடித்தனர். சிலர் சாக்கு, இன்னும் சிலர் படுதா ஆகியவற்றை கொண்டு இடம்பிடித்தனர். கோயிலடியில் ஒரு சிறுவன் கமர்கட் விற்றுக்கொண்டிந்தான். பந்தலுக்கு மேற்கே சிலர் “பத்து வச்சா இருபது.... இருபது வச்சா.... நாப்பது” எனும் இட்டத்தை ஆடிக் கொண்டிருந்தனர். சிலர் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் அங்கும் இங்கும் புழுதியை கிளப்பியப்படி ஓடிக்கொண்டிருந்தனர். செட்டியார் வீட்டு குமார் சர்க்கார் கிணற்று ஓரம் சிறிய கடை ஒன்றை போட்டிருந்தார். அந்த கடைக்கு பக்கத்திலேயே நாப்பாளையத் தெரு பரமசிவம் ஒரு டிரம்மில் டீயை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
பத்து மணிக்கு மின்சாரம் நின்று வந்ததும் நாடகம் தொடங்கியது. ஆர்மோனியக்காரரும், தபேலாக்காரரும் சுதியை சரிசெய்து கொண்டிருந்தனர். செட்டுக்காரர் வந்து மைக்கின் முன் நின்று மைக்கை விரலால் தட்டி “ஒன்.. டு... திரி... மைக் டெஸ்டிங்” என்று இரண்டு மூன்று முறை செய்து விட்டு சென்றார்.
“வந்தனம். வந்தனம்... வந்த செனமெல்லாம் குந்தனும்” என திரைக்கு பின்னால் இருந்து கெட்டியக்காரன் பாட, அதையே உரத்தக்குரலில் பெட்டிக்காரரும் தபேலாக்காரரும் பாடி வாசித்தனர். பாடிக்கொண்டே திரையை விலக்கிக்கொண்டு கெட்டியக்காரன் பளபளக்கும் உடையில் மேடைக்கு வந்து பெட்டிபோடுவரையும், தபேலா வாசிப்பவரையும் தொட்டு வணங்கினான். மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த சிறுவர்கள் தாங்கள் வைத்திருந்த பெரிய பெரிய பொட்டலங்களை கெட்டியக்காரனிடம் கொண்டு கொடுத்தனர். அவனும் அதை ஆவலோடு வாங்கிக்கொண்டான். அந்த பொட்டலத்தில் இருந்து ஒன்றை எடுத்து பிரித்தான். பிரிக்க பிரிக்க வெறும் காகிதமாக வந்து கொண்டே இருந்தது. கூட்டம் விழுந்து விழுந்து சிரித்தது. அவனும் சளிக்காமல் பிரித்துக்கொண்டே இருந்தான். கடைசியில் அவன் எதிர்பார்க்காத நேரத்தில் பொட்டலத்திலிருந்து ஒரு தவளை துள்ளிக்குதித்து ஓடியது. கெட்டியக்காரனும் துள்ளிக்குதித்தான் கூட்டத்தில் ஒரே சிரிப்பலை. சிறுவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
“சைலேன்ஸ்.. சைலேன்ஸ்” என்று கெட்டியக்காரன் சொன்னபோது தான் கூட்டம் அமைதியானது. கூட்டத்தைப் பார்த்து அவன் பேசத் தொடங்கினான். “பெரியோர்களே தாய்மார்களே, ரசிகப் பெருமக்களே, இன்று இரவு நடத்தக்கூடிய நாடகம் கிருஷ்ணன் தூது அல்லது பதினெட்டாம் போர். மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்குங்க இன்றிரவு நடத்தக்கூடிய நாடகம் கிருஷ்ணன் தூது அல்லது பதினெட்டாம் போர்” என்று கூறி “நாடகத்தில் சொற்குற்றம் பொருட்குற்றம் மற்ற ஏனைய குற்றங்கள் இருப்பின் பொறுத்தருளவும்”என்று கூறி பாட ஆரம்பித்தான் .
“நாட்டுக்கு சேவை செய்ய...
நாகரீக கோமாளி வந்தேனுங்க
ஆட்டம் ஆடி பாட்டு பாட
அழகான கோமாளி வந்தேனுங்க” என பாடி முடித்து திரைக்குபின் சென்று கம்பெனி மேனேஜரிடம் ஒரு பீடியை வாங்கி பற்ற வைத்துக் கொண்டான். அப்போது திரைக்கு பின்னால் இருந்து பழையகருவாட்சி கிருஷ்ணமூர்த்தி சூரவேஷம் போட்டுக்கொண்டு, “அண்டங்கள் ஏழும் படீர் படீர் என அலைகள் எல்லாம் குபீர் குபீரென” எனும் பாடலை கர்ஜனையோடு பாடிக்கொண்டிருந்தார்.
“ஏம்பா குடிக்க தண்ணி இருந்தா குடுங்கபா” என்று கட்டியக்காரன் கேட்டான். அதற்கு கிருஷ்ணர் வேஷம் போடும் சுப்ரமணியிடம், மேனேஜர் “ஏம்பா அங்க முறுக்கு வித்திட்டிருக்க அம்சவேணிகிட்ட போயி ஒரு ஏனத்தில் தண்ணி கொண்டு வரச் சொல்லுப்பா ” என்றார்.
அம்சவேணி என்றதுமே அவளது முகம் சுப்ரமணியின் மனத்திரையில் தைலவண்ண ஓவியமென திரண்டது. கோயில் பக்கத்தில் இருந்த மண்டபத்தில் அவர்களுக்கு உணவு பறிமாறியபோது அவள் தான் வளைய வளைய வந்தாள். நல்ல எடுப்பான தோற்றம். வசீகரிக்க கூடிய பார்வை. வளைவும் நெளிவுமான உடல்வாகு. ஒவ்வொரு பிடி சோற்றை எடுத்து வாயில் போடும் போதும் அவன் கண்கள் அவளைத் தேடியது. அவளுக்கும் அவனது பார்வை என்னவோ செய்தது. சமையல் செய்த நவுட்டுக்காரர் கூட “அம்சவேணி... அம்சவேணி..” என்று அவளையே எதற்கெடுத்தாலும் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அம்சவேணி அவளுக்கு பொருத்தமான பெயர்தான் என அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் சாதம் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் பார்க்கும் படி அங்குமிங்கும் நடந்தாள்.
“ஏம்பா சொன்னது காதுல உழல?” என்று மேனேஜர் மீண்டும் கேட்டபோது தான் சுப்ரமணிக்கு நினைவு வந்தது. “தோ போரன் அண்ணே” என்று கூறி கொட்டகையை விட்டு பந்தலுக்கு தெற்கு புறம் பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் முறுக்கு விற்றுக்கொண்டிருந்த அம்சவேணியை நோக்கி நடந்தான்.
ஒரு மரபெஞ்சில் சின்ன சின்ன சில்வர் பாத்திரங்களில் எள்ளடை, முறுக்கு ஆகியவற்றை வைத்து அம்சவேணியும் அவளது கணவனும் ஆளுக்கொரு மர ஸ்டூலில் அமர்ந்து கொண்டிருந்தனர். சுப்ரமணி வந்து, “மேனேஜர் தண்ணீ கொண்டு வரச் சொன்னார்” என அம்சவேணியைப் பார்த்து சொன்னான். அதற்கு அம்சவேணியின் கணவன் “த புள்ள தண்ணி கேக்கறாங்க பாரு, போயி ஒரு கொடம் கொண்டு வந்து கொடு” என்றான். அவள் ஏதும் பதில் சொல்லாமல் இவனைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தாள். அவளது சிரிப்பு அவனுள் காமத்தின் மொக்குகளை அவிழ்க்கத் தொடங்கின. அவள் கொட்டகையின் பின்பக்கமாக சென்று சர்க்கார் கிணற்றை சுற்றிக் கொண்டு சென்றாள். அவள் சென்ற சிறிது நேரம் கழித்து, இவன், “வயித்த கலக்கற மாதிரி இருக்குது எந்த பக்கம் போறது?” என்று அம்சவேணியின் கணவனிடம் கேட்டான். அதற்கு அவன் சாதாரணமாக, “அம்சவேணியின் பின்னடியே போங்க. வீடு எறக்கத்துல தான் ஆயிகுளம் இருக்கு” என்று கூறினான். இவன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு அம்சவேணியின் பின்னால் நடக்கத் தொடங்கினான்.
கூட்டம் நாடகத்தில் ஆழ்ந்திருந்தது. மேடையின் முன்புறம் சில சிறுவர்கள் அப்படியே மண்ணில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். மைக்கில் கட்டியக்காரன் “கற்பக வினாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த எல்ஜசி ஏஜெண்டாக பணிபுரிகின்ற குருநாதன் என்கின்ற அண்ணார் அவர்கள் பப்பூனாக நடிக்கும் கல்பட்டைச் சார்ந்த சரவணன் ஆகிய எனக்கு ரூபாய் பத்தை அன்பளிப்பாக வாரி வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்க்கும் என் சார்பிலும், விழுப்புரம் மாவட்டம், அதே வட்டத்தைச் சார்ந்த தென்பேர் கிராமம் ஸ்ரீஅம்மன் நாடக மன்றத்தாரின் சார்பிலும், வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் கூறிக் கொண்டிருந்த போது, பின்னால் யாரோ வருவதை உணர்ந்த அம்சவேணி திரும்பிப் பார்த்தாள். சுப்ரமணி வருவதை அறிந்ததும் அவளது மனதிலும் காமத்தின் தித்திப்பு மெல்லிய கீற்றென தோன்றி மறைந்தபோது அவனைப் பார்த்து அவள், “இந்த இருட்டுல எங்க கௌம்பிட்டீங்க?” என்றாள். “வயித்த கலக்குற மாதிரி இருக்குது அதான்” என்று கூறி தயங்கித் தயங்கி அங்கேயே நின்றான். அவள், “அதோ தெரு எறக்கத்துல ஆயிகுளம் இருக்குது” என்று அவனிடம் கூறிக்கொண்டே உள்ளே சென்றாள். இவன் கைலியை அவிழ்த்து கட்டிக்கொண்டு அவள் வீட்டு எறவானத்தைப் பிடித்தப்படி நின்று கொண்டிருந்தான். உள்ளில் ஒரு குண்டு பல்பு எரிந்து கொண்டிருந்தது. நடையிலிருந்து அவள் தெருவைப்பார்த்தாள். இவன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கு கேட்கும் விதமாக, “அதுக்குள்ளயா போயிட்டு வந்துட்டீங்க?” எனக் கேட்டாள். இவன் ஒரு மாதிரிச் சிரித்தான். ஒரு எவர் சில்வர் குடத்தில் தண்ணீரை கொண்டு வந்து திண்ணையின் கீழ் வைத்தாள். சிறிது நேரம் இருவரும் மாறிமாறி பார்த்துக் கொண்டனர். நடு நிசி அவர்களுக்கிடையிலான தொலைவை மெல்ல இல்லாமல் செய்து கொண்டிருந்தது. அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, அவள் மீண்டும் உள்ளுக்கு சென்றாள். சுற்றுமுற்றும் பார்த்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் பின்னாலேயே சென்றான். இவன் உள்ளே வருவதை அறிந்தவள் “யோவ் அப்படியே ஓடியாராதே. கதவை சாத்திட்டு வா” என்று திடுதிப்பென கூறுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனது மனம் பலவித கணக்குகளை சடுதியில் போட்டு அழித்தது. பயமாகவும் இருந்தது அவனுக்கு. ஒருவித நடுக்கத்தோடே கதவைச் சாத்திவிட்டு மெல்ல நடந்து வந்து அவளை இறுக்கி அணைத்தான். “தொரைக்கு நாங்களே கூப்பிடனும்” என்று தலையில் மெதுவாக கொட்டினாள். அவன் அவளது காது மடல்களை மெல்ல கடித்தான். அவள் உடம்பிலிருந்து வீசிய மட்டமான பவுடர் வாசனை மேலும் அவனுள் ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டு சுவற்றில் பல்லி ஒருமுறை கத்தி முடித்தபோது அவள் தண்ணீர்க் குடங்கள் வைக்கப்பட்டிருந்த பக்கம் தலையை வைத்து படுத்தாள். அவன் கையைப் பிடித்து அவள் இழுத்தாள். இருவரது சுவாசங்களிலும் உஷ்ணம் ஏறியிருந்தது. அவள் அவனது உதட்டைக் கவ்வி நீண்ட முத்தம் ஒன்றை கொடுத்தாள். பின் அவன் அவளுக்குள் எதையோ ஆழ்ந்து தேடினான். அவளும் அவன் தேடலுக்கு ஒத்துழைத்தாள். எங்கும் சூழ்ந்திருந்த இருட்டு அவர்களை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவர்கள் எழுந்து இடையை உடுத்திக் கொள்ளும் போது தெருவிளக்கு கம்பத்தின் கீழ் படுத்திருந்த நாய் ஊலையிட்டது. தோட்டத்திற்கு சென்று வந்தபின் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு தெருவிற்கு வந்து குடத்தை தூக்கிக்கொண்டு “யோவ் செத்த நேரம் கழிச்சி வா” எனக் கூறி விட்டு நடந்தாள். இவன் தெருத் திண்ணையில் அமர்ந்து ஒலி பெருக்கியில் வரும் குரலைக் கொண்டு யார் மேடையில் நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை மனத்திரையில் ஓட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடந்த பின், துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு மெல்ல நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அதற்குள் அவள் தண்ணீரை கொண்டு வந்து வைத்து விட்டு, முறுக்கு விற்கும் இடத்திற்கு சென்று தன் கணவன் அருகில் நின்று கொண்டிருந்தாள். வேஷம் பூசும் கொட்டகைக்குள் நுழையும் போது அவளைத் திரும்பி பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெல்லியதாக சிரித்தாள்.
இரண்டாம் நாள் மட்டும் அவர்கள் மூன்று முறை கூடினார்கள். இரண்டாம் முறை சகடை கொட்டகை இருட்டிலும் மூன்றாவது முறை சர்க்கார் கிணற்று ஓரத்திலும் அவர்கள் ஒதுங்கினர். மூன்றாம் முறை அவளை புணர்ந்த போது அவள் அவனை எலும்புகள் நொறுங்கும் படி இறுக்கி அனைத்தாள். தலைமுடியை இறுக்க பிடித்துக் கொண்டு அவனுக்கு தோதாக இயங்கினாள். கிரக்கத்தின் பிடியில் இருந்தவள் அவன் காதில், “சத்தியமா நா இதுவரை இப்படி அனுபவிச்சதே கெடையாதுயா” என்றாள். அவள் வார்த்தைகள் அவனுள் வேகத்தைக் கூட்டியது. கடைசியில் அவனை அருகில் அழைத்து இறுக்கி அணைத்து, உச்சந்தலையில் அழுத்தமாக ஓர் முத்தத்தை தந்தாள். அவனுக்கு அவளை அங்கேயே விட்டு செல்ல விரும்பமில்லை, எப்படியாவது தன்னுடன் அழைத்து சென்றுவிட வேண்டும் என எண்ணி “நாம எங்கியாவது போயிடலாமா? ”என்று அவளிடம் கேட்டான். அவ்வார்த்தைகளை கேட்காதவளைப் போன்று அவன் பிடிக்குள்ளாகவே இருந்தாள் அவள். இருட்டு அவர்களுக்கு தைரியத்தையும் சுதந்திரத்தையும் அளித்தது. ஒரு பெண் தன் பையனைத் தூக்கி தோளில் போட்டு, பாயை உதறி சுருட்டிக் கொண்டு சன்னதி தெரு நோக்கி நடந்தாள். மழவந்தாங்கல் ரகோத்தமக்கவுண்டர் காளி வேடமிட்டு மேடையில் நடித்துக் கொண்டிருந்தார். மடத்து திண்ணையில் அமர்ந்து கொண்டு சிலர் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும் அவன் கேட்டான். அவள் அவனையே உற்றுப் பார்த்தாள். பின் உடைகளை சரிசெய்து கொண்டு எழுந்து உட்கார்ந்தவள் “நெஜமாவா?” என்றாள். அவன் ஆமாம் என்பது போல தலையாட்டினான். அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. கம்பத்தடியில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து தேநீர் அருந்த சென்றனர். மீண்டும் அவனே அவளிடம் கேட்டான், “ஏன் எம்மேல் நம்பிக்கை இல்லையா? கூத்தாடிதானேன்னு பாக்கறீயா?”. “ச்சே அப்படிலாம் யோசிக்கல” என்று சொன்னாள். “வேற எப்படி யோசிக்கிற”. “அவரயும் கொழந்தைகளையும் பத்தி யோசிச்சேன்” என்று அவள் சொன்னபோது தான் அவனுக்கு தன் சின்ன மகன், “அப்பா ஆட்டமாடிட்டு திரும்ப வரக்குல எனக்கு கவுரு கட்ற ஷீவும் ஜாமின்ரி பாக்சும் வாங்கிட்டு வாப்பா” எனச் சொன்னது மனத்திரையில் தோன்றி மறைந்தது. அவளை விட்டுச் செல்லவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. “எங்கூட வந்தா மகாராணியாட்டம் உன்ன பாத்துக்குவேன்” என்று அவளது கை விரல்களை வருடிய படியே சொன்னான். அதற்கு அவள் “எனக்கும் இசையாதான் இருக்கு. ஆனா அதுலாம் சரிபட்டு வறாதுயா” என்றாள். அவன் “ஏன் சரிப்பட்டு வராது?” என்று திரும்பக் கேட்டான். அவள் தீர்க்கமாகச் சொன்னாள். “சரிப்பட்டு வராதுனா வராதுதான்.” பின் நீண்ட நேரம் இருவருக்கும் இடையில் அமைதி நிலவியது. பெட்டிக்காரர் “செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” என்ற பாடலை வாசித்துக் கொண்டிருந்தார். நிலவு உச்சியில் நிலை கொண்டிருந்தது. சர்க்கார் கிணற்றோரம் இருவர் நின்றபடி புகைத்துக் கொண்டிருந்தனர். நாப்பாளையத் தெரு பரமசிவம் ட்ரம்மை சாய்த்து டீ பிடித்துக் கொண்டிருந்தான். மூச்சை நன்கு இழுத்து விட்டபடியே அவள் “நா எங்கயும் ஓடிர மாட்டேன். நீ எப்பவேனா இங்க வரலாம். அவருக்கும் புள்ளைகளுக்கு ஆக்கி போடவாவது ஒரு ஆள் வேணுமில்ல” என்று சொன்னாள். அவளின் வார்த்தைகள் அவனுள் ஒரு வித அதிர்வை ஏற்படுத்தியது. பிறகு எதுவும் அவனுக்கு பேசத் தோன்றவில்லை. சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் “நான் போவனும்” என்றான். “என்ன கோபமா?” என்றாள் அவள். “அதுலாம் ஒன்னுமில்லை” என்று சொன்ன படியே எழுந்து நாடகக் கொட்டகையை நோக்கி நடந்தான்.
“இந்நேரத்துல எங்க கௌம்பிட்டீங்க நங்காத்தூராரே?” என்று சகடைமேல் உட்கார்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த செங்குறிச்சார் கேட்டவுடன் தான் சுப்ரமணி பழைய நினைவுகளில் இருந்து மெல்ல மீள ஆரம்பித்தான். ஒருகணம் நின்று பின்னால் திரும்பிப்பார்த்தான். நாடகம் நடந்து கொண்டிருந்தது. பெட்டிச் சத்தமும் தபேலா சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தன. சர்க்கார் கிணற்று மீது சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அம்சவேணியின் வீட்டை நெருங்க நெருங்க சிவன் கோயில் அருகிலிருந்த இலுப்பை மரத்திலிருந்து பரவிய இலுப்பை பூவின் வாசனை அவன் மூக்கை துளைத்து.
அம்சவேணியின் வீட்டில் பூட்டு தொங்கியது. உள்ளேயும் எந்த விளக்கும் எரிவதாக தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீண்டும் நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அம்சவேணியைப் பற்றி யாரிடம் கேட்பது என்றும், அப்படிக் கேட்டால் யாராவது தப்பாக அர்த்தப் படுத்திக் கொள்வார்களோ என்றும் அவன் மனதில் எண்ணற்ற கேள்விகள் தோன்றி மறைந்தன. பின் டீகடை நோக்கி சென்றவன் “ஏம்பா.. ஒரு டீ கொடு” என்று பரமசிவத்தைப் பார்த்து கேட்டான். “நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே கொண்டு வந்திருப்பேன்னே” என்று பவ்யமாக அவன் சொன்னான். இரண்டு மூன்று மிடறு தேனீரை குடித்ததும் டீ கடைக்காரனிடம் அம்சவேணியைப் பற்றி கேட்கலாமா என்ற எண்ணம் தோன்றியது. தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்துக் கொள்வானோ என்றும் யோசித்தான். டீயை முழுவதும் குடித்து முடித்த பின் மெல்ல அவனிடம் சுற்றி வளைத்து கேட்டான்.
“ஏம்பா இந்த வருஷம் யாரும் முறுக்கு கடை போடலியா?”
“அம்சவேணி இருந்தா போட்டிருக்கும், வேற யாருங்க போடுவா? ” என்றான் அவன்.
இவன் வெகு சாதாரணமாகக் கேட்டான் “அம்சவேணி எங்கயாவது எருக்கு கீருக்கு போயிக்கா?”
“அட அந்த கதய ஏஞ்சார் கேக்கறீங்க, சேலத்திலிருந்து கெணறு வெட்ட வந்த ஒரு செட்டியாரு கூட அது ஓடிபோச்சுங்க” என்றான்.
பாம்பை மிதித்தது போல உணர்ந்தான் இவன். அடுத்து என்ன கேட்பது என்று தெரியவில்லை. அவளுடனான நினைவுகள் அனைத்தும் தன்னுடைய வண்ணங்களை மெல்ல உதிர்க்கத் தொடங்கியிருந்தன. மலத்தை மிதித்த உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. தனக்கு ஏன் அவ்வாறு தோன்ற வேண்டும் என்றும் அவன் யோசித்தான். நாடக மேடையில் காளி, வேப்பிலையைக் வாயில் வைத்தபடி உக்கிரமாக ஆடிக்கொண்டிருந்தது. கடையியதிலிருந்து இதற்காகவே வரவழைக்கப்பட்ட பம்மை உடுக்கைகாரர்கள் வேக வேகமாக வாசித்தனர்.
“சரி வரம்பா” என்று இவன் டீ கடைகாரரிடம் கூறிவிட்டு, நாடகக் கொட்டகை நோக்கி நடந்தான். அம்சவேணியின் முகம் அவனை அலைகழித்தப்படியே இருந்தது. அந்த சேலத்து செட்டியாரை ஒரே ஒருமுறை அந்த கணத்தில் அவனுக்கு பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவனிடம் இருந்திருக்க வேண்டும், அது தான் அம்சவேணியை அவனுடன் அழைத்து சென்றிருக்கும் என்றும் யோசித்தான். சற்று முன்பு தோன்றிய மனநிலைக்கு முற்றிலும் தொடர்பற்ற வேறொரு மனநிலையில் அவன் கொட்டகை நோக்கி நடந்தான். அப்போது “அம்சவேணி பின்னாடியே போங்க, தெரு எறக்கத்துல தான் ஆயி குளம்” என்று கூறிய அம்சவேணியின் கணவனது குரல் அவன் காதோரம் ஒலித்து மெல்ல தேயத்தொடங்கியது.
4 comments:
“அவரயும் கொழந்தைகளையும் பத்தி யோசிச்சேன்” என்று அவள் சொன்னபோது தான்
முதல் முறை படிக்கும் போதே இந்த வரிகள் என்னை ஈர்த்தன. மனித மனதுதான் எத்தகையது, கணவனுக்கு தெரியாமல் உறவு வைத்துக்கொண்டிருக்கும் போதே கணவனை விட முடியாத எண்ணம்,
ஒன்றோடு ஒன்று முரண்படும் உணர்சிகளை compartmentalise நன்றாக செய்வதை காட்டுகிறது.
மனித மனங்களின் மகோன்னதங்களையும் கசடுகளையும் இதுபோன்ற தருணங்களில் தான் மிகச் சரியாக உணர முடியும் என நினைக்கிறேன் அஜய். இந்தக் கதை எனக்கும் மிகவும் பிடித்த கதைதான்,
The intrinsic feelings of a woman enjoying free sex with a unknown person is portrayed with the conscience of the author very lucidly. spontaneous mistakes in life find a natural vent with a pricking.
vazhkaipriya
" அவர்கள் எழுந்து இடையை உடுத்திக் கொள்ளும் போது தெருவிளக்கு கம்பத்தின் கீழ் படுத்திருந்த நாய் ஊலையிட்டது.
கடையியதிலிருந்து இதற்காகவே வரவழைக்கப்பட்ட பம்மை உடுக்கைகாரர்கள் வேக வேகமாக வாசித்தனர். "
மேற்கண்டவற்றில் உடையை, ஊளையிட்டது, கடையத்திலிருந்து, பம்பை என மாற்றவும்.
நண்பா, உன் கதை கூறும் திறன் மிகவும் அருமை.
மேலும் கதாப்பாத்திரங்கள் கண்டாச்சிபுரத்தையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சார்ந்தவையாக உள்ளதால் , சம்பவம் உண்மைப் போல தோன்றுகிறது.
Post a Comment